மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

குமரித்தேன்.... தோட்டக்கலை துறையின் புதிய முயற்சி!

தேன் பாட்டில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
தேன் பாட்டில்கள்

சிறப்பு

தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கடந்த டிசம்பர் 29-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்... `குமரித்தேன்’ என்ற பெயரில் தமிழக அரசால் அறிமுகம் செய்யப் பட்டுள்ள தேன் தற்போது விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளது. இந்த மாவட்டத்தில் அமைந்திருக்கும் பேச்சிப்பாறையில் செயல் படும் தேனீ மகத்துவ மையத்தில் இது உற்பத்தி செய்யப்பட்டு சந்தைப்படுத்தப் படுகிறது.

தேன் உற்பத்திக்கும் கன்னியாகுமரி மாவட்டத்துக்குமான உறவு என்பது நீண்ட நெடியது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் தேன் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் 2,000 டன் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக, மார்த்தாண்டம் தேன் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை செய்யப் படும் ‘மார்த்தாண்டம் தேன்’ உலக அளவில் புகழ்பெற்றது. இந்நிலையில்தான் தற்போது தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள குமரித்தேன் கவனம் ஈர்க்கிறது.

தோட்டக்கலை மையம்
தோட்டக்கலை மையம்

இதுகுறித்து அறிந்துகொள்ள பேச்சிப்பாறையில் செயல்படும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் மையத்துக்கு நேரில் சென்றோம். கிராம்பு, ஜாதிக்காய், மிளகு உள்ளிட்ட மலைப்பிரதேசப் பயிகளின் கன்றுகள் மற்றும் வீட்டுத்தோட்டங்களுக்குத் தேவையான கன்றுகளை உற்பத்தி செய்யும் இந்த மையமானது, தற்போது தேன் உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. இதற்காக இந்த மையத்தின் வளாகத்தில் `தேனீ மகத்துவ மையம்’ என்ற பெயரில் தனிப்பிரிவு செயல்படுவது குறிப்பிடத்தக்கது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தமிழகத்திலேயே பேச்சிப் பாறையில் மட்டும்தான் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது.

இம்மையத்தின் செயல்பாடுகள் மற்றும் குமரித்தேன் உற்பத்தி குறித்த தகவல்களை விரிவாகப் பகிர்ந்துகொண்ட கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜான், “தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் 2017-18-ம் நிதியாண்டில் பேச்சிப்பாறை தேனீ மகத்துவ மையம் தொடங்கப்பட்டது. இங்கு தேன் உற்பத்தி செய்து நவீன முறையில பதப்படுத்தி விற்பனை செய்வது மட்டுமல்லாமல், இப்பகுதியில் உள்ள விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய தேனையும் கொள்முதல் செய்கிறோம். அதேசயமம், உற்பத்தியாளர்கள் தங்கள் தேனை இங்கு கொண்டு வந்து குறைந்த செலவில் பதப்படுத்தி, எடுத்துச் செல்லவும் வாய்ப்பளிக்கிறோம். மேலும், தேனீ வளர்ப்பு, தேன் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்கும் எங்கள் மையத்தில் பயிற்சி அளிக்கிறோம். தேனீக்களையும் தேனீப் பெட்டிகளையும் விற்பனை செய்கிறோம்.

தேன் பாட்டில்களுடன் ஷீலா ஜான்
தேன் பாட்டில்களுடன் ஷீலா ஜான்

இந்த மாவட்டத்தில் ரப்பர் மரங்கள் அதிக அளவில் உள்ளன. ரப்பர் மரத்தில் துளிர் விடும்போது பூக்கள் பூக்கும். அதிலிருந்து கணிசமான அளவு தேன் கிடைக்கிறது. மேலும், வாழை, மலர்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. பெரும்பாலான வீடுகளில் வாழை, மா, பலா உள்ளிட்ட மரங்களும்... ரோஜா, மல்லிகை, செண்டி உள்ளிட்ட பூச்செடிகளும் இருப்பதால், தேன் உற்பத்தி சிறப்பாக நடைபெறுகிறது. இதனால்தான், தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களைவிட இந்த மாவட்டத் தில் தேனீ வளர்ப்பு அதிக அளவில் நடைபெறுகிறது. இந்தப் பகுதி விவசாயிகள் மத்தியில் தேனீ வளர்ப்பை மேலும் ஊக்கப்படுத்த வேண்டும். ஏற்கெனவே இங்கு தேன் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்குத் தொழில்நுட்ப ரீதியாக முறையான பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு `தேனீ மகத்துவ மையம்’ இங்கு தொடங்கப்பட்டது. தேனீ வளர்ப்புக்கான தொழில்நுட்ப பயிற்சி அளித்தல், தேன் பதப்படுத்தும் நவீன இயந்திரம் மூலம் உள்ளூர் தேன் உற்பத்தியாளர்களின் தேனை பதப் படுத்திக் கைப்படாமல் பாட்டிலில் அடைத்துக் கொடுப்பது ஆகிய பணிகளிலும் இந்த மையம் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே தேன் உற்பத்தி மற்றும் விற்பனையில் இந்த மையம் ஈடுபடத் தொடங்கியது.

தேனீக்கள்
தேனீக்கள்

குமரித்தேனின் தனித்துவம்

தேன் உற்பத்தியாளர்கள் பெரும் பாலும் விறகு அடுப்பைப் பயன் படுத்திதான் தேனை பதப்படுத்து வார்கள். அதனால் தொழில்நுட்ப ரீதியாகப் பல பின்னடைவுகளைச் சந்திக்கிறார்கள். ஆனால், எங்கள் மையத்திலோ, நவீன இயந்திரம் மூலம் சீரான வெப்பநிலையில் பதப்படுத்து வதால், இங்கு உற்பத்தி செய்யப்படும் தேன், இயல்பான மணம் மற்றும் சுவையோடு நீண்ட நாள்களுக்குத் தரம் இழக்காமல் இருக்கிறது.

இந்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 306 தேனீ பெட்டிகள் மூலம் 506 கிலோ தேன் உற்பத்தி செய்திருக்கிறோம். இந்தப் பகுதியில் உள்ள தேன் உற்பத்தியாளர்களிடமிருந்தும் தேன் கொள்முதல் செய்து, பதப்படுத்தி பல்வேறு மாவட்டங்களில் உள்ள தோட்டக்கலைத்துறை விற்பனை நிலையம் (அவுட்லெட்) மூலம் விற்பனை செய்துள்ளோம். இதுவரைக்கும் 1,160 கிலோ தேன் நாங்கள் விநியோகம் செய்திருக்கிறோம்.

தேன் வடிக்கட்டும் இயந்திரம்
தேன் வடிக்கட்டும் இயந்திரம்

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் உழவர் சந்தை, கன்னியாகுமரி சுற்றுச்சூழல் பூங்கா மூலமாகவும் விற்பனை செய்து வருகிறோம். மொத்த விற்பனை மூலம்... ஒரு கிலோ தேன் 300 ரூபாய், அரைக்கிலோ 150 ரூபாய், கால் கிலோ 80 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்கிறோம். அவர்கள் சில்லறை விலையில் ஒரு கிலோ 350 ரூபாய், அரைக்கிலோ 175 ரூபாய், கால் கிலோ 90 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறார்கள். முன்பு ஹனி என்ற பெயரில் விற்பனை செய்து வந்தோம்.

தேன் தரத்தை அறியும் இயந்திரம்
தேன் தரத்தை அறியும் இயந்திரம்

கடந்த டிசம்பர் மாதம் 29-ம் தேதி நாகர்கோவிலில் நடைபெற்ற தேசிய அளவிலான தேன் உற்பத்தி பயிற்சிப் பட்டறையின்போது, தமிழகத் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பேச்சிப்பாறை தேனீ மகத்துவ மையத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் தேனுக்குக் ‘குமரித்தேன்’ எனப் பெயர் சூட்டினார். இந்தப் பகுதி விவசாயிகள் மத்தியில் தேன் உற்பத்தியை ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டங்களையும் இந்த மையம் மூலம் செயல்படுத்தி வருகிறோம். மாடல் பீ நர்சரி(Model Bee Nursery) என்ற திட்டத்தின் கீழ் இந்தப் பகுதி விவசாயிகளுக்கு இதுவரை 200 தேனீ பெட்டிகள் மானிய விலையில் வழங்கப் பட்டுள்ளன. இந்த ஆண்டு 400 பெட்டிகள் கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம்’’ எனத் தெரிவித்தார்.

பேக்கிங் இயந்திரம்
பேக்கிங் இயந்திரம்

இந்த மையத்தின் மற்ற செயல்பாடுகள் குறித்து நம்மிடம் பேசிய இதன் நிர்வாக அலுவலரான அருண்குமார்,

‘‘தேன் உற்பத்தியாளர்கள் வழக்கமாக அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதற்குள் மற்றொரு பாத்திரத்தில் தேன் வைத்து சூடாக்கி பதப்படுத்துவார்கள். அதில் மிகவும் குறைவாள அளவு தேனைத் தான் பதப்படுத்த முடியும். ஆனால், இந்த மையத்தில் உள்ள தேன் பதப்படுத்தும் ஆலையில் ஒரே சமயத்தில் 300 கிலோ தேனைப் பதப்படுத்தலாம். இதன் மூலம் சுகாதாரமான முறையில் தரமான தேன் கிடைக்கும். பதப்படுத்தப்பட்ட தேனை கைப்படாமல் பாட்டிலில் அடைத்து பேக்கிங் செய்வதற்கான நவீன இயந்திர வசதியும் இங்குள்ளது.

அருண்குமார்
அருண்குமார்

தேனீ மகத்துவ மையத்தின் முதன்மையான நோக்கம், லாபம் ஈட்டு வதல்ல. ஆனாலும்கூட கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கு உற்பத்தி செய்யப் பட்ட தேன் மற்றும் தேனீக்கள் விற்பனை மூலமாக 5,92,000 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இனிவரும் நாள்களில் தேன் உற்பத்தி மற்றும் விற்பனையின் அளவை அதிகப்படுத்தத் திட்ட மிட்டுள்ளோம். தேன் உற்பத்தியாளர்கள் தங்களுடைய தேனை எங்களுடைய மையத்தில் பதப்படுத்திக்கொள்ள அழைப்பு விடுத்து வருகிறோம்’’ எனத் தெரிவித்தார்.

தொடர்புக்கு,
செல்போன்: 99942 23496

8,000 ரூபாய் முதலீடு போதும்!

``தேனீ வளர்ப்பதற்கான ஒரு பெட்டியின் விலை 800 ரூபாய். ஒரு பெட்டிக்கான தேனீ பூச்சிகளின் விலை 800 ரூபாய். தேனீப் பெட்டிகளில் உள்ள சட்டகத்தில் சேகரமாகியுள்ள தேனைப் பிரித்தெடுப்பதற்கான உபரகணங்கள், தேன் எடுக்கும்போது தேனீக்கள் கொட்டாமல் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான கவச உடை உட்பட அனைத்துக்கும் சேர்த்து 8,000 ரூபாய் முதலீடு செய்தால் போதும்.

ஒரு பெட்டியிலிருந்து ஆண்டுக்கு 6 - 8 கிலோ தேன் உற்பத்தியாகும். ஒரு கிலோ தேன் உற்பத்தி செய்வதற்கு... மழைக்காலத்தில் தேனீகளுக்குச் சர்க்கரை பாகு வைப்பது உள்ளிட்ட பராமரிப்புகளுக்கு 170 ரூபாய், நவீன முறையில் பதப்படுத்த 15 ரூபாய், தேனை பாட்டிலில் அடைத்து லேபிள் ஒட்டுவதற்கு 15 ரூபாய் என எல்லாம் சேர்த்து 200 ரூபாய் செலவாகும். மொத்த விற்பனை மூலம் ஒரு கிலோ தேனுக்கு 300 ரூபாய் விலை கிடைக்கும்’’ என்கிறார் அருண்குமார்.

தேன் பாட்டில்கள்
தேன் பாட்டில்கள்

அசல் தேனைக் கண்டுபிடிப்பது எப்படி?

கலப்படம் இல்லாத அசல் தேனைக் கண்டறியவும், தேனின் தரத்தைப் பரிசோதிக்கவும் பேச்சிப்பாறை தேனீ மகத்துவ மையத்தில் தர பரிசோதனைக்கூடம் அமைய உள்ளது. தேனில் கலப்படம் இருக்கிறதா என்பதை சாதாரண சில சோதனைகள் மூலம் வீட்டிலேயே கண்டறியலாம்.

கலப்படம் இல்லாத தேனை தண்ணீரில் விட்டால் அது அடியில் தனியாகத் தங்கிவிடும். கலப்படத் தேன் என்றால், அது தண்ணீரில் கலந்துவிடும். நெருப்பைப் பற்ற வைத்தால் நல்ல தேன் உடனே எரியும். சர்க்கரை கரைசல் கலக்கப்பட்டிருந்தால் நெருப்பு பற்றாது. ஒரு காகிதத்தில் தேனை விட்டு அடிப்பகுதியைப் பார்த்தால் ஈரம் கசியாமல் இருந்தால் அது நல்ல தரமான தேன். ஈரம் கசிந்தால் கலப்படத் தேன் என்பதைக் கண்டறியலாம்.

தேனீப்பெட்டி
தேனீப்பெட்டி

புகை தேனீக்களுக்குப் பகை

தேன் ஊற்பத்தி தொழிலில் புதிதாக ஈடுபட விரும்புகிறவர்களுக்கு முக்கியமான ஆலோசனைகளை வழங்கும் அருண்குமார், ‘‘ஒரு பெட்டிக்கும் மற்றொரு பெட்டிக்கும் 2 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். தோட்டத்திலும், நாம் வசிக்கும் வீட்டைச்சுற்றியும் தேனீப்பெட்டிகள் அமைக்கலாம். ஆனால், அதேசமயம் மனிதர்களால் தேனீப் பெட்டிக்கு எந்த ஒரு தொந்தரவும் ஏற்படக் கூடாது. மேலும், விறகு அடுப்பு மற்றும் வேறு எந்த வகையில் அதிக அளவில் புகை உருவாகி, தேனீப் பெட்டிகளுக்குள் சென்றுவிடக் கூடாது.

தேன் எடுக்கும்போது தங்களை நெருங்கும் தேனீக்களை விரட்ட உற்பத்தியாளர்கள் அதிக அளவில் புகையைப் பரவச் செய்கிறார்கள். இது தவறான வழிமுறையாகும். தேன் எடுக்கும்போது தேனீக்களால் மனிதர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்க, இதற்கென பிரத்யேக கவச உடைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தலாம். தேனீப் பெட்டிகள் அமைக்கும் இடம், தண்ணீர் தேங்காத மேடான பகுதியாக இருப்பதும் அவசியம்’’ என்கிறார் அருண்குமார்.