காந்த கருவி, சேட்டிலைட் பதிவு, கோழி கிராமம்; விவசாயிகளின் இதயத்தில் இடம்பிடித்த குன்றக்குடி கே.விகே!

சேவை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமைந்துள்ளது குன்றக்குடி... இங்கு, தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கி வரும் வேளாண் அறிவியல் நிலையம், இம்மாவட்ட விவசாயி களுக்குப் பல வகைகளிலும் சேவை யாற்றி வருகிறது. வறட்சி மாவட்டமான சிவகங்கையில், முதன்முதலாகத் துல்லிய பண்ணையத் திட்டத்தில் சொட்டுநீர்ப் பாசனத்தை இந்த நிலையம்தான் அறிமுகம் செய்தது. மேலும், ஏராளமான விவசாயிகள் சொட்டுநீர்ப் பாசனத்துக்கு மாறுவதற்கு இந்நிலையத்தின் விஞ்ஞானிகள் தொடர் முயற்சிகளையும் மேற்கொண் டார்கள்.
2015 - 2022 வரையிலான இந்த ஏழே ஆண்டுகளில் இந்நிலையம், மாநில மற்றும் தேசிய அளவில் 47 விருதுகளை வாங்கிக் குவித்திருக் கிறது, முத்தாய்ப்பாக, மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் சார்பில் நீர் மேலாண்மைக்காக வழங்கப்படும் ‘தேசிய வாட்டர் மிஷன்’ விருதைப் பெற்றுப் புருவம் உயர வைத்திருக்கிறது.
வேளாண்மை மற்றும் கால்நடை சார்ந்த ஏராளமான பயிற்சிகளை நடத்தி வருவதோடு... தேசிய பால் வள தினம், உலக மண்வள தினம், சர்வதேச மீன்வள தினம், முட்டை தினம் உள்ளிட்ட முக்கிய நாள்களில் விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையிலான கருத் தரங்கங்களையும் இந்நிலையத்தினர் நடத்தி வருகிறார்கள். பயிற்சிகள், கருத் தரங்குகள் உட்பட, கடந்த ஓராண்டில் மட்டும் 150-க்கும் அதிகமான நிகழ்ச்சிகளை இந்நிலையம் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதன் செயல்பாடுகள் குறித்து விரிவாக அறிந்துகொள்ள ஒரு பகல்பொழுதில் இந்நிலையத்துக்கு நேரில் சென்றோம். இதன் வளாகத்தில் ஆங்காங்கே ஆடுகளும் கோழிகளும் மேய்ந்துகொண்டிருந்தன. சிறிது தூரம் நடந்து சென்றோம். தென்னை நாற்றங்கால், பரண்மேல் ஆடு வளர்ப்பு, புறக்கடை கோழி வளர்ப்பு, அசோலா வளர்ப்பு என இன்னும் பலவிதமான செயல் விளக்க மாதிரி திடல்கள் அமைக்கப்பட்டிருந்தன.
நம்மிடம் பேசிய இந்நிலையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் செந்தூர்குமரன், ‘‘வேளாண் அறிவியல் நிலையம் அமைக்கக் குறைந்தபட்சம் 50 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என்பது மத்திய அரசின் விதிமுறை. இம்மாவட்ட விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு... நாங்கள் நிலம் தருகிறோம் என்று தாமாக முன்வந்து 50 ஏக்கர் நிலத்தைக் கொடுத்திருக்கிறார், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். அதைத் தொடர்ந்து... தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதி உதவியோடு 1996-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்துக்கான வேளாண் அறிவியல் நிலையத்தைக் குன்றக்குடியில் தொடங்கியது.

இந்நிலையம், ஆரம்பிக்கப் பட்டதிலிருந்தே விவசாயிகளின் தேவை அறிந்து பல்வேறு சீரிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வேளாண்மை, கால்நடை, தோட்டக்கலை, மீன்வளம், மண்ணியல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் உருவாக்கப்பட்டு விஞ்ஞானிகள் பணிபுரிந்து வருகிறார்கள். குறிப்பாக, 2007-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தத் துறைகள் அனைத்துமே பல்வேறு புதிய முயற்சிகளில் இறங்கி வெற்றி கண்டுள்ளது.
2007-08-ம் ஆண்டுத் தமிழகம் முழுக்க அனைத்து மாவட்டங் களிலும், தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் (NADP) கீழ் சொட்டுநீர்ப் பாசன திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், சிவகங்கை மாவட்டம் இத்திட்டத்தில் இடம்பெறவில்லை. சொட்டுநீர்ப்பாசனம் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத காலகட்டம் அது. சில காரணங்களால் சொட்டு நீர்ப் பாசன பைலட் திட்டத்தில் இம்மாவட்டம் விடுபட்டுப்போனது.
இந்நிலையத்தின் விஞ்ஞானிகள் ஒன்று சேர்ந்து இந்தத் திட்டத்தின் தலைமை அதிகாரியான முனைவர் வடிவேலுவிடம் ‘எங்க மாவட்டத் துக்கும் கொடுங்கள்... கண்டிப்பா இந்தத் திட்டத்தை விவசாயிகளிடம் கொண்டு போய்ச் சேர்க்கிறோம்’ என வேண்டுகோள் விடுத்தோம். முதல்கட்ட சோதனை முயற்சியாக 20 ஹெக்டேர் பரப்பளவில் மட்டும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதி கிடைத்தது.

சிவகங்கை மாவட்டத்தின் சில பகுதிகளில் நன்கு தண்ணீர் வசதி யுடன் செழிப்பாக விவசாயம் செய்யும் முன்னோடி விவசாயி களிடம் இத்திட்டத்தை நாங்கள் கொண்டு சென்றிருந்தால், உடனடி யாக ஆர்வத்துடன் அவர்கள் செயல்படுத்தியிருப்பார்கள். ஆனால், இதுபோல் செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தண்ணீர்த் தட்டுப்பாடு நிறைந்த வறட்சியான பகுதிகளில் இத்திட் டத்தைக் கொண்டு செல்ல முயன் றோம். அப்பகுதிகளில் தொடர்ச்சியாக விழிப்புணர்வு கூட்டங்களை நடத்திக்கொண்டே இருந்தோம். கடும் சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. ‘இதுக்கு பேருதான் சொட்டுநீர்ப் பாசனமா, இந்த ஒயரை வச்சு நாங்க என்ன பண்றது, சொட்டுச் சொட்டா தண்ணி கொடுத்தா, எந்தக் காலத்துல பயிர் வளர்ந்து, மகசூல் கொடுக்குறது. அதுக்குள்ளார பயிர் கருகியே போயிடும். இதெல்லாம் சும்மா பேச்சுக்குதான் நல்லா இருக்கும். நடைமுறைக்கு ஒத்து வராது’ என விவசாயிகள் கோபப்பட்டு, விழிப்புணர்வு கூட்டங்களில் இருந்து வெளிநடப்பு செய்தார்கள்.
முதல் மூன்று கூட்டங்கள் தோல்வியில் முடிந்தது. ஆனாலும், நாங்கள் பின்வாங்கல. இந்நிலையத்தின் விஞ்ஞானிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து விவசாயி களின் வீடுகளுக்கே சென்று, இந்தத் திட்டத்தில் உள்ள நுணுக்கங்களையும் தொழில்நுட்பத்தையும் விளக்கி பேசினோம்.

ஒரு சில விவசாயிகள் அதை உள்வாங்கிக்கொண்டு சொட்டுநீர்ப் பாசனத்தைச் செயல்படுத்த முன் வந்தார்கள். குறிப்பாக, ராமன் என்ற விவசாயி, முதற் கட்டமாக 20 விவசாயிகளைத் திரட்டி ‘சாலை கிராமம் துல்லிய பண்ணைய விவசாயிகள் சங்கம்’ என்ற சங்கத்தை ஏற்படுத்தினார். ஆரம்பத்தில் 20 விவசாயிகளுக்கு இந்தத் திட்டத்தைக் கொண்டு போய்ச் சேர்த்தோம்.
ஆழ்துளைக் கிணற்றில் இருந்து நேரடியாகப் பாசனம் செய்யப்படும் பயிருக்கும், சொட்டுநீர்ப் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்பட்ட பயிருக்குமான வேறுபாட்டைக் கண்கூடாக உணர்ந்தார்கள். சொட்டுநீர்ப் பாசனத்தில் தண்ணீர் சிக்கமானதோடு, மகசூல் அதிகம் கிடைத்தது. குறிப்பாக, மிளகாய், பருத்தி உள்ளிட்ட பயிர்களில் அதிக பலன் தெரிந்தது.
இந்நிலையத்தின் விடாமுயற்சிக்கு நிறைவான பலன் கிடைத்தது. ராமன், கணேசன், சித்திரவேல், சிங்கராயர் உள்ளிட்ட விவசாயிகளின் ஒத்துழைப் பால், மற்ற விவசாயிகளும் இதில் ஆர்வம்காட்டத் தொடங்கினார்கள். தேசிய வேளான் அபிவிருத்தித் திட்டத்தின் (NADP) கீழ், அடுத்தகட்டமாக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 50 - 70 ஹெக்டேர் பரப்பில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க அனுமதிக்கப்பட்ட நிலையில்... சிவகங்கைக்கு 100 ஹெக்டேர் பரப்பில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க அனுமதி கிடைத்தது.

சிவகங்கை மாவட்டத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அடியெடுத்து வைத்து, இன்று மாவட்டம் முழுவதும் சென்று சேர்ந்ததில் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் பங்கு மிகவும் அதிகம்” என்று சொன்னவர், இந்நிலையத்தின் மற்ற செயல்பாடுகள் குறித்து விவரித்தார்.
‘‘முன்பு இப்பகுதிகளில் மாடுகளுக்கு உரிய நேரத்தில் சினைப்பிடிப்பதில் பிரச்னை இருந்தது. அப்போது காரைக்குடி ஆவின் நிலையத்தின் பால் கொள்முதல் இலக்கு ஆண்டுக்கு 1 லட்சம் லிட்டர். ஆனால் 33,000 லிட்டர்தான் பால் வரத்து இருந்தது. மாடுகளுக்குச் சினை ஊசி போடுவதற்கான 3 மாத பயிற்சியைக் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஆவினோடு இணைந்து நடத்தினோம். குறிப்பாகப் பட்டதாரி இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்தோம். அடுத்தடுத்த ஆண்டுகளில் கன்றுகளின் எண்ணிக் கையும், பாலின் கொள்முதல் அளவும் பல மடங்கு அதிகரித்தது.

இம்மாவட்டத்தில் சிவகங்கை, காளையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகமாக இருப்பதால் விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இதற்குத் தீர்வு காண எங்களுடைய வேளாண் அறிவியல் நிலையம், பல்வேறு முயற்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. ஹரியானா மாநிலம் கர்னலில் உள்ள உப்பு நீருக்கான ஆராய்ச்சி நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, உப்புத் தண்ணீரை தாங்கி வளரக்கூடிய நெல் ரகங்களான, சி.எஸ்.ஆர் 36, சி.எஸ்.ஆர் 44, சி.எஸ்.ஆர் 46 ஆகிய ரகங்களைத் தேர்வு செய்து வயல்வெளி சோதனைத் திட்டத்தின் மூலம் சில விவசாயிகளின் நிலங் களில் பயிரிட்டுப் பார்த்தோம்/ அந்த ரகங்களும் தாக்குப்பிடிக்கவில்லை. உகாண்டா உள்ளிட்ட சில நாடுகளில் நிலத்தடிநீரில் உள்ள உப்புத்தன்மை யின் வீரியத்தைக் குறைக்க, காந்த கருவியைப் பயன்படுத்துகிறார்கள். குழாயின் வழியாகத் தண்ணீர் வெளியேறக்கூடிய பகுதியில் அதைப் பொருத்திவிட்டால், போதும். நிலத்தடி நீரில் உள்ள உப்புத் தன்மை யின் வீரியத்தைக் குறைத்து, பயிர் சாகுபடிக்கு ஏற்றதாக மாற்றி விடும். அந்தத் தொழில்நுட்பத்தை இங்கு அறிமுகம் செய்து வெற்றி கண்டோம். வெவ்வேறு ஆண்டு களில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர்களாகப் பதவி வகித்தவர்கள், இம்மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அக்கருவி பல விவசாயிகளுக்கும் கிடைக்கச் செய்தனர். காந்தக் கருவி கிடைக்கப் பெற்ற விவசாயிகள் நிலத்தடி நீர் மூலமே பலவிதமான பயிர்களையும் வெற்றிகரமாகச் சாகுபடி செய்து வருகிறார்கள்.
2016-17-ம் ஆண்டு நிலவிய கடும் வறட்சியின் காரணமாக இந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர்கள் கருகின. ஆனால், அந்த விவசாயிகளுக்குப் பயிர் இன்ஷூரன்ஸ் இழப்பீட்டுத் தொகை முழுமையாகக் கிடைக்கவில்லை. பயிர்கள் ஆரம்பநிலையிலேயே கருகியதால் குறைவான தொகை தான் தர முடியுமென இன்ஷூரன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். ஆனால், யதார்த்தநிலை என்ன வென்றால், பெரும்பாலான விவசாயி களுக்கு, பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்குச் சில வாரங்களே உள்ள நிலையில்தான் வறட்சியின் காரணமாகப் பயிர் கருகியது.

அதை நிரூபிக்க, வேளாண் பல்கலைக்கழகத்தின் துணையோடு செயற்கைக்கோள் பதிவுகள் மூலம் துல்லியமான ஆதாரங்களைத் திரட்டி, மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தோம். அதைப் பயிர் இன்ஷூரன்ஸ் நிறுவன தலைமை அதிகாரி ஏற்றுக் கொண்டார். 152 வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு 74 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப் பட்டது’’ எனத் தெரிவித்தவர், இந்நிலையத்தில் அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்துப் பேசினார்.
‘‘விவசாயிகள் பொருளாதார மேம்பாடு அடைய வழிகாட்டும் வகையில்... ஒருங்கிணைந்த பண்ணையம், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு உள்ளிட்ட பயிர்களை வழங்கி வருகிறோம். இப்பயிற்சி களில் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் உள்ள விவசாயிகள் பங்குப்பெற்று பயனடைந்து வருகிறார்கள். நெல், வாழை, காய்கறிகள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் உள்ளிட்ட அனைத்து விதமான பயிர்களுக்கும் விவசாயிகள் இந்நிலையத்தில் தொழில்நுட்ப ஆலோசனைகள் பெற்று வருகிறார்கள். பயிர்கள் எந்த ஒரு பூச்சி, நோய்த்தாக்குதல் என்றாலும் எங்களைத் தொடர்பு கொள்கிறார்கள். இந்நிலையத்தின் விஞ்ஞானிகள் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

வறட்சி தாங்கி வளரக்கூடிய தென்னை ரகங்கள்
இம்மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். 5 ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியின் காரணமாகச் சுமார் 8,000 தென்னை மரங்கள் காய்ந்து போயின. இழப்பைத் தடுக்க, ஒரு நாளைக்கு தென்னைக்கு 80 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இனி வரும் காலங்களில் அந்தளவுக்குத் தண்ணீர் கிடைக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது. அதனால்தான், வறட்சி தாங்கி வளரக்கூடிய தென்னை ரகங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளோம்.
கேரள மாநிலம் காசர்கோடில் செயல்படும் தென்னை ஆராய்ச்சி நிலையத்துடன் சேர்ந்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம். வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய தென்னை ரகங்களை 14 நாடுகளிலிருந்து கொண்டு வந்து, அதன் நாற்றுக்களை 10 ஏக்கரில் நட்டு, வயல்வெளி ஆய்வில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக, கொட்டாம்பட்டியில் 10 ஏக்கர் நிலத்தைத் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் கொடுத்திருக்கிறார். குறைந்த அளவு தண்ணீரைக் கொடுத்து வயல் வெளி ஆய்வு நடக்கிறது. அந்த மரங்கள் எல்லாம் தற்போது காய்ப்புக்கு வரத் தொடங்கியுள்ளன. காசர்கோடு விஞ்ஞானிகளோடு இணைந்து முன்னெடுக்கப்படும் இத்திட்டம் 15 ஆண்டுக் கால ஆராய்ச்சித் திட்டம். எதிர்காலத்தில் குறைந்த தண்ணீரில் அதிக மகசூல் கொடுக்கும் தென்னங்கன்றுகளை அதிக அளவில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குவதே மத்திய மரப்பயிர் (தென்னை) ஆராய்ச்சி நிலையத்தின் நோக்கம். இந்த ஆராய்ச்சிப் பயணத்தில் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையமும் இணைந்து எதிர்கால நீர்த் தேவையை அறிந்து பயணிக்கிறது. அதன் மூலம் மேலும் தென்னை விவசாயம் செழிக்கும்’’ என்றார் நம்பிக்கையுடன்.
தொடர்புக்கு,
வேளாண்மை அறிவியல் நிலையம்,
குன்றக்குடி,
தொலைபேசி: 04577 264288.

கோழி கிராமம்
‘‘சிவகங்கை மாவட்டத்தின், சில வட்டாரங்களில் நீர் ஆதாரம் மிகவும் குறைவாக உள்ளது. அதுபோன்ற கிராமங்களைத் தேர்வு செய்து, கால்நடை வளர்ப்பை அதிகமாக ஊக்கப்படுத்தி வருகிறோம். அந்த வகையில்தான் முப்பையூர் என்ற கிராமத்தை தேர்வு செய்து அப்பகுதி விவசாயிகளுக்குப் புறக்கடை கோழி வளர்ப்பு முறையில் சொல்லிக்கொடுத்தோம். இன்று அந்தக் கிராமத்தில் உள்ள அனைவரும் கோழி வளர்க்கின்றனர். அதனால் முப்பையூர் கிராமம், தற்போது கோழி கிராமம் என அழைக்கப்படுகிறது’’ என்கிறார் முனைவர் செந்தூர்குமரன்.
மண்புழு உரம் தயாரிப்பு
அரளிக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி சீதாலெட்சுமி, ‘‘10 வருஷத்துக்கு முன்னாடி குன்றக்குடி கே.வி.கே-ல மண்புழு உரம் தயாரிப்புப் பயிற்சி எடுத்துக்கிட்டேன். அடுத்த சில மாதங்கள்லயே மண்புழு தயார் பண்ணி விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். சந்தைப் படுத்துறதுக்கும் உதவிகள் செஞ்சாங்க. நர்சரிகளுக்கு டன் கணக்குல மண்புழு உரம் கொடுத்துக்கிட்டு இருக்கேன். சென்னை, கோயம்புத்தூர்னு வெளிமாவட்டங்களுக்கும் மண்புழு உரம் அனுப்பிக்கிட்டு இருக்கேன். இதுமூலமா எனக்கு நிறைவான வருமானம் கிடைச்சுக்கிட்டு இருக்கு’’ என்றார்.

தென்னையைக் காப்பாற்றிய மூடாக்கு
சிங்கம்புணரியைச் சேர்ந்த விவசாயி தியாகராஜன், “வறட்சியால எங்க பகுதியில நிறைய தென்னை மரங்கள் பட்டுப்போக ஆரம்பிச்சது. அந்த நேரத்துல, கே.வி.கே-வோட வழிகாட்டுதல்கள்தான் எங்களுக்குக் கைகொடுத்துச்சு. மண்ணுல ஈரப்பதத்தைத் தக்க வைக்க சில தொழில்நுட்பங்களைச் சொல்லிக் கொடுத்தாங்க. குறிப்பா, தென்னை மட்டைகளை மூடாக்கா போடச் சொன்னாங்க. அதைச் செஞ்சதுனாலதான் என்னோட தோட்டத்துல இருந்த தென்னை மரங்கள் காப்பாத்தப்பட்டுச்சு’’ என்றார்.