கடந்த சில மாதங்களாக, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கனக்கான பனை மரங்கள் வெட்டப்பட்டு, திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சாயத் தொழிற்சாலைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. செங்கல் காலவாய்களுக்காகவும் அதிகளவில் பனை மரங்கள் வெட்டப்படுகின்றன. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களில் உள்ள பனை மரங்களை திருட்டுத்தனமாக வெட்டி எடுத்துச் செல்வதோடு மட்டுமல்லாமல். விவசாய நிலங்களில் உள்ள பனை மரங்களை, ஒரு மரத்துக்கு 200 ரூபாய் வீதம் விலை கொடுத்து வியாபாரிகள் வாங்கிச் செல்கிறார்கள். சுற்றுச்சூழலுக்கு பல வகைகளிலும் பெரும் துணையாக உள்ள பனை மரங்களைப் பாதுகாக்க தமிழக அரசு சிறப்பு திட்டங்களையும், கடுமையான சட்டங்களையும் உருவாக்க வேண்டும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய கீரின் நீடா அமைப்பினர், ``பொதுவாக பனை மரங்கள் பயிரிடப்படுவதில்லை. இது புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம் ஆகும். பனைகள் இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சி அடைந்து பெரிய மரங்களாக வளரத் தொடங்குவதற்கு 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இயற்கையாக உருவாகி தானாக வளர்ந்த பனை மரங்கள் லட்சக்கணக்கில் இருந்தன. இவற்றில் பெரும்பகுதி, செங்கல் சூளைக்காக வெட்டப்பட்டன. எஞ்சியுள்ள மரங்களுக்கும் தற்போது மிகப்பெரும் ஆபத்து தொடங்கியுள்ளது. விவசாயிகளில் சிலர், தங்களது விளைநிலங்களில் 40 - 50 ஆண்டுகளாக வளர்ந்து நின்று கொண்டிருக்கும் பனை மரங்களின் அருமையை உணராமல், வெறும் 200 ரூபாய்க்காக வெட்ட அனுமதிக்கிறார்கள். இது கொடுமையிலும் கொடுமை. இதே நிலைமை தொடர்ந்தால் தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் உள்ள பனை மரங்களுக்கும் ஆபத்து ஏற்படும்.
பனை தமிழ்நாட்டின் மாநில மரமாகும். பனை மரத்தில் மொத்தம் 34 வகைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடி பனை மரங்கள் உள்ளன. ஒரு பனை மரத்திலிருந்து ஒரு வருடத்துக்கு பதநீர் 180 லிட்டர், பனை வெல்லம் 25 கிலோ, பனஞ்சீனி 16 கிலோ, தும்பு (மிதியடி பிரஸ் தயாரிக்கப் பயன்படுகிறது) 11.4 கிலோ, ஈக்கு 2.25 கிலோ, விறகு 10 கிலோ, ஓலை 10 கிலோ, நார் 20 கிலோ அளவுக்கு கிடைக்கிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு காலத்தில் விவசாயம், கைத்தறிக்கு அடுத்தபடியாக பெரிய அளவில் வேலை வாய்ப்பைக்கொண்டதாகவும் பனைத்தொழில் விளங்கியது. 1985-86-ம் ஆண்டில் தேசிய அளவில் 6.94 லட்சம் வேலை வாய்ப்பையும் தமிழ்நாட்டு அளவில் 5.87 லட்சம் வேலை வாய்ப்பையும் பனைத் தொழில் வழங்கியிருக்கிறது. இதில் பனைத் தொழிலாளர்கள் வெல்லம் காய்ச்சும் பெண்கள், தும்புக் கைவினைஞர்கள், வியாபாரிகள் ஆகியோர் அடங்குவர். இளம் மரங்கள் நீங்கலாக பனையேறத் தகுந்த எல்லா மரங்களையும் பயன்படுத்தினால் தமிழகத்தில் மட்டும் 10 லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பை உருவாக்கலாம்.
மிக ஆழத்தில் உள்ள நிலத்தடிநீரை பனைமரங்களின் வேர்கள் மேலே கொண்டு வந்துவிடும் தன்மை கொண்டது. இதன் வேர்கள் நிலத்தடி நீரை தனக்குள் சேமித்தும் வைக்கும். அசுத்தமான தண்ணீரை சுத்திகரிப்பு செய்து, நன்னீராக மாற்றித் தரக்கூடிய மிகவும் உன்னதமான பணியையும் பனை மரத்தின் வேர்கள் செய்கின்றன. மண் அரிப்பையும் இவை தடுப்பதால்தான், பல்வேறு நீர்நிலைகளின் ஓரங்களில் நம் முன்னோர்கள் பனை மரங்களை உருவாக்கி வைத்தனர். இவை புயல் தடுப்பு வேலியாகவும் பயன்படுகின்றன. பனை மரங்கள் அழித்தொழிப்பால், நிலத்தடி நீருக்கு மிக மோசமான தட்டுப்பாடு தமிழ்நாட்டில் உருவாகும் அபாயம் உள்ளது. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பனை மரங்கள் விறகுக்காக முழுவதும் வெட்டப்படுவதும் அழிக்கப்படுவதும் வேதனை தரக்கூடிய ஒன்றென சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் நியாயமான கவலையைத் தமிழ்நாடு அரசு அவசர அவசியம் கருதி பனைமரங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இயற்கையின் கற்பகத்தருவாக விளங்கிவரும் பனை மரங்களை அழிப்பதும் சேதப்படுத்துவதும் கடும் தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டம் இயற்றுவது இன்றியமையாதது. பனை மர வளர்ப்பை பொதுமக்களிடையே ஊக்குவிக்கவும், ஏற்கெனவே உள்ள பனை மரங்களை பொதுமக்கள் பாதுகாக்கவும், தமிழக அரசு சிறப்புத் திட்டங்களை வகுக்க வேண்டும். குறிப்பாக, விவசாய நிலங்களில் உள்ள பனைகள் வெட்டப்படாமல் பாதுகாக்க, சம்பந்தப்பட்ட விவசாயிக்கு, ஆண்டுக்கு ஒரு பனை மரத்துக்கு 50 ரூபாய் வீதம் ஊக்கத்தொகை கொடுக்க முன்வர வேண்டும். இதற்கு அரும்பாடுபட்டு வரும் சுற்றுச்சூழல் தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகளைத் தமிழக அரசு ஊக்கப்படுத்தி, துணை நிற்க வேண்டும்’’ எனத் தெரிவிக்கிறார்கள்.
இது தொடர்பாக, தமிழ்நாட்டில் உள்ள மற்ற சுற்றுச்சூழல் அமைப்புகளையும் ஒருங்கிணைந்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்களைச் சந்தித்து மனு கொடுக்க, கிரீன் நீடா அமைப்பினர் முடிவு செய்திருக்கிறார்கள்.