நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஒரே நேரத்தில் விதை விதைக்கலாம்; உரமும் தூவலாம்! - 30,000 ரூபாயில் அசத்தலான கருவி!

விதைப்புக் கருவியுடன் பிரதாப்குமார், ராஜகுமார்
பிரீமியம் ஸ்டோரி
News
விதைப்புக் கருவியுடன் பிரதாப்குமார், ராஜகுமார்

கருவி

மானாவாரி நிலத்தில் விதைகளைத் தனியாகவும், உரத்தைத் தனியாகவும் தூவி வருகின்றனர் விவசாயிகள். இதனால், வேலையாட்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் கூடுதல் செலவும் ஆகிறது. இதைத் தீர்க்கும் வகையில், ஒரே நேரத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் விதைகள், உரம் இடும் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர் இரண்டு பொறியியல் மாணவர்கள்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ள தோப்புரெட்டிபட்டியைச் சேர்ந்தவர்கள் ராஜகுமார் மற்றும் பிரதாப்குமார். பி.இ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துள்ள இந்த இருவர்தான், ‘ஒரே நேரத்தில் விதைப்பு மற்றும் உரமிடும் கருவி’யைக் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய ராஜகுமார், “கோவில்பட்டியில இருக்க நேஷனல் இன்ஜினீயரிங் காலேஜ்லதான் நாங்க ரெண்டு பேரும் போன வருஷம் பி.இ முடிச்சோம். நாங்க பாரம்பர்யமான விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவங்க. ஸ்கூல், காலேஜ்ல படிக்கும்போதே கிடைக்குற நேரத்துல விவசாய வேலைகளைச் செய்வோம். இந்தப் பகுதி முழுமையும் மானாவாரி விவசாயம்தான். இந்த விவசாயத் துக்கு வேலையாள் பற்றாக்குறை அதிகம்.

விதை மற்றும் உரம் நிரப்பும் பணியில்
விதை மற்றும் உரம் நிரப்பும் பணியில்

பாரம் ஏற்ற ஆட்கள் தேவையில்லை

அதைச் சரிசெய்ய என்ன செய்யலாம்னு யோசிச்சோம். முதலில், ‘டிராக்டர் ரியர் லோடர்’ என்ற இணைப்புக் கருவியைக் கண்டுபிடிச்சோம். டிராக்டர், டிராலி, லாரியில ஜே.சி.பி, வேலையாட்கள் உதவியில்லாம தொழுவுரம், தானியங்களை இதன் மூலம் எளிமையா ஏற்ற முடியும். அதோட, குழிகள்ல மண், தொழுவுரம், இலைதழை களையும் நிரப்பலாம். நிலத்தையும் சமன்படுத்தலாம். ஒரே நேரத்தில 400 கிலோ எடையை அதிகபட்சமா 11 அடி உயரம் வரைக்கும் உயர்த்தி, ஏற்ற முடியும். இந்த இணைப்புக்கருவியைத் தயாரிக்க, ‘நியூ ஜென்’ (NewGen Innovation and Entreprenership Centre) என்ற மத்திய அரசின் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தில் எங்கள் கல்லூரியில் உள்ள கிளையின் மூலம் ரூ.2,50,000 நிதியுதவி பெற்று வடிவமைச்சோம்.

உரப்பெட்டி... விதைக்குடுவை

ரெண்டாவதா விதை, உரத்தை ஒரே நேரத்தில நிலத்தில் இடும் வகையில ஒரு கருவியை வடிவமைக் கணும்னு திட்டமிட்டு டிராக்டர்ல இணைப்புக்கருவியா, ‘Multicrop Seed cum Fertilizer Planter’ என்ற கருவியைத் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்திலிருந்து ரூ.2 லட்சம் நிதியுதவி பெற்று வடிவமைச்சோம். இந்தக் கருவியை டிராக்டருடன் இணைந்த டிரில்லருடன் இணைக்கணும். இந்தக் கருவியின் மேல் பகுதியில், செவ்வக வடிவ உரம் நிரப்பும் பெட்டி இருக்கும். அதுல உரத்தை நிரப்பலாம். 125 கிலோ கொள்ளளவுள்ள இந்தப் பெட்டியில் 100 கிலோ வரை உரம் நிரப்பலாம். அதற்குக் கீழே ஒரு ஜான் இடைவெளியில இருக்க, 5 குடுவைக்குள் விதைகளை நிரப்பணும். ஒவ்வொரு குடுவையும் தலா 7 கிலோ கொள்ளளவு கொண்டது. இதில் 5 கிலோ விதைகளை நிரப்பலாம்.

விதைப்புக் கருவியுடன் பிரதாப்குமார், ராஜகுமார்
விதைப்புக் கருவியுடன் பிரதாப்குமார், ராஜகுமார்

பயறுவகைப் பயிர்களை விதைக்கலாம்

மக்காச்சோளம், நிலக்கடலை, பருத்தி, சூரியகாந்தி, உளுந்து, பாசிப்பயறு விதைகள் விதைக்க இந்தக் கருவி மிகவும் சிறந்தது. டிராக்டர் முன்னோக்கிச் செல்லச் செல்ல இக்கருவியில் உள்ள ‘கிரவுண்ட் வீல்’ என்ற அமைப்பின் மூலம் இக்கருவி செயல்படுகிறது. குறிப்பிட்ட இடைவெளியில் விதைகள் விழ இது உதவி செய்கிறது. சாய்வு விதை அளவீடு (Inclient Seed Mettering) என்ற சிஸ்டத்தைப் பயன்படுத்தியிருக்கோம். இந்த சிஸ்டம், ஓர் இடத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் விதைகள் விழுவதையும், ஒன்றுக்கு மேற்பட்ட விதைகள் விழாமல் இருப்பதையும் உறுதி செய்கிறது” என்றார்.

7 பேர் வேலையைச் செய்யும்

இதன் பயன்கள் குறித்து விளக்கிய பிரதாப்குமார், “ஒரே நேரத்தில் 5 வரிசையில விதைகளை விழச் செய்யலாம். வரிசைக்கு வரிசை 12 முதல் 18 இன்ச் இடைவெளி வரையிலும், விதைக்கு விதை 5 முதல் 15 இன்ச் என்ற இடைவெளி வரையிலும் நடலாம். விவசாயிகள் தேவைப்படும் இடைவெளியைச் செட் செய்துகொள்ளலாம். ஒரு ஏக்கருக்கு 15 முதல் 60 கிலோ வரை (தேவைப்படும் அளவில் விழும்படி) உரத்தை நிலத்தில் தூவ முடியும். விதை, உரத்தை ஒரு முறை நிரப்பிவிட்டால், டிராக்டரை நிறுத்தாமல் 3 ஏக்கர் வரை விதைக்கலாம். இது போன்ற விதைப்புகளுக்கு ஒரு ஏக்கருக்கு 7 பேர் வரை தேவைப்படும். இந்தக் கருவியைப் பொறுத்த வரையில் டிராக்டரை இயக்குபவர் ஒருவர் மட்டுமே போதும்.

ஒரு ஏக்கருக்கு ஒன்றரை லிட்டர் டீசல் போதும்!

விதை, உரத்தைக் குறிப்பிட்ட இடைவெளியில், குறிப்பிட்ட நேரத்துக்குள் விழச் செய்ய முடியும். ஒரே நாளில் ஒருவர், அதிகபட்சமாக 15 ஏக்கர் வரை விதைக்க முடியும். அதிக ஈரப்பதமுள்ள நிலத்தில்கூட இந்தக் கருவியை இயக்கி விதைக்க முடியும். ஒரு ஏக்கருக்கு ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் டீசல் வரைதான் செலவாகும். இந்த இயந்திரத்தின் விலை ரூ.30,000. இந்தக் கருவியை விவசாயிகள், ஒரு ஏக்கருக்கு ரூ.1,000 முதல் 1,200 வரை இதை வாடகைக்கு விட்டும் உபரி வருமானம் பெறலாம்” என்று விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, ராஜகுமார், செல்போன்: 94863 32861, பிரதாப்குமார், செல்போன்: 70104 93611