
உழவு, விதைப்புக்கு உதவும் சைக்கிள் கருவி மகாராஷ்டிரா விவசாயியின் எளிய கண்டுபிடிப்பு!
‘தேவையே கண்டுபிடிப்புகளின் பிறப்பிடம்’ என்று சொல்வார்கள். அதுவும் சவால்கள் நிறைந்த விவசாயத்தில் தினம் தினம் புதிய கண்டுபிடிப்புகளின் தேவை இருந்துகொண்டே இருக்கிறது. அந்தக் கண்டுபிடிப்புகளைப் பற்றிப் பேச இருக்கிறது இந்தத் தொடர்.
இந்தியாவில் விவசாயம் மற்றும் அதுசார்ந்த கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து, அங்கீகரிக்கும் பணிகளைச் செய்து வருகிறது குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள ‘நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பு.
இந்தியா முழுவதும் உள்ள விவசாயக் கண்டுபிடிப்பாளர்கள் பற்றிய விவரங்கள், தொழில் நுட்பங்கள், புள்ளி விவரங்கள் ஆகியவற்றை எல்லாம் மிகச் சிறப்பாகச் சேகரித்து வைத்திருக் கிறது அந்த அமைப்பு.
சின்னச் சின்ன கருவிகள்
பாசனம், அறுவடை, களை போன்ற சின்னச் சின்ன வேலைகளுக்கு எளிய கருவிகள் இருந்தால் வசதியாக இருக்கும் என்று விவசாயிகள் நினைப்பது வாடிக்கை.

இப்படிப்பட்ட கருவிகளை வாங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களால், பெரும்பாலான விவசாயிகள் பல நேரங்களில் கருவிகளைப் பயன்படுத்துவதையே விட்டுவிடுகிறார்கள். இன்னும் சிலரோ, தங்கள் தேவைக்கும் வசதிக்கும் ஏற்றக் கருவிகளை அவர்களே வடிவமைத்துக் கொள்கிறார்கள். அப்படிச் சின்னச் சின்ன கருவிகளைக் கண்டுபிடித்து விவசாயத்தில் வெற்றி பெற்ற விவசாயிகளின் பட்டியலை அந்த அமைப்பில் பார்த்தபோது, பிரமித்துப்போனேன். அவர்கள் கண்டுபிடித்த கருவிகளைப் பற்றி எழுதத் தோன்றியது.
ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு ஐன்ஸ்டின், ஒரு நியூட்டன், கிரகாம்பெல் தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ளாமலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களையும் அவர்களின் கண்டு பிடிப்புகளையும் மிகச் சிறப்பான முறையில் கண்டறிந்து, அவர்களின் கண்டுபிடிப்புகளை ஆவணப்படுத்தி, ஆகச்சிறந்த பதிவுகளாக மற்ற விவசாயிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதற்கு ‘நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன்’ ஒரு கலங்கரை விளக்காக இருந்து வருகிறது.
கோபால் பிஷே
அந்தப் பட்டியலிலிருந்த ஒரு விவசாய விஞ்ஞானிப் பற்றித்தான் இங்கே பார்க்கப் போகிறோம். அவருடைய பெயர் கோபால் பிஷே (Gopal Bhise). மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந் தவர். நான் முதன்முறை அவரைச் சந்தித்தபோது அவருக்கு வயது அறுபதுக்கு மேல் இருக்கும். சாதாரணமாக நம் கிராமங்களில் பார்க்கும் வழக்கமான ஒரு விவசாயி போலத்தான் இருந்தார். படிப்பு பத்தாம் வகுப்பு. பணிக்குச் செல்ல விரும்பவில்லை. தங்களுக்குச் சொந்தமான இரண்டு ஏக்கருக்கும் குறைவான நிலத்தில் விவசாயம் செய்வதுதான் பிழைப்புக்கான வழி. நல்ல மழை பெய்து, தண்ணீர் இருக்கும்போதுதான் விவசாயம் செய்ய முடியும். மற்ற நாள்களில் அடுத்தவரின் நிலங்களுக்குக் கூலி வேலைக்குச் செல்வார். அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், தன்னுடைய நிலத்தை விற்று விட்டு அருகில் இருக்கும் ஜாலேகான் மாவட்டத்துக்குக் குடிபெயர்ந்து போய் விடலாம். அங்கு ஏதாவது ஒரு தொழில் செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்று எண்ணினார். அதன்படி, தன் நிலத்தை விற்றுவிட்டு, செந்தூர்னி என்ற கிராமத்தில் குடியேறினார். அங்கு சுமார் 2 ஏக்கர் நஞ்சை நிலத்தை விலைக்கு வாங்கினார். அங்கு அவர் வாங்கிய நிலம், நல்ல பண்பட்ட நிலம். ஆனால், நல்ல மழை பெய்தால்தான் விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை. அப்போது அவரிடம் நிலத்தைச் சீர்திருத்த மாடுகள்கூட இல்லை. அவரும், அவரின் மனைவி மைனா பாய் இருவரும் சேர்ந்து நிலத்திலிருந்த கல் கரடுகள், முள் புதர்களை அகற்றிப் பண்பட்ட நிலமாக மாற்றினார்கள்.
விவசாயம் செய்ய அந்த இடத்தில் கிணறு தோண்ட வேண்டியிருந்தது. கிணற்றைத் தோண்டும்போது மண்ணை எடுத்து வெளியில் கொட்டுவதற்கு மாடுகள் தேவைப்பட்டன. அதற்காகப் பக்கத்து ஊரிலிருந்த ஒருவரிடம் காளைகளை வாடகைக்குக் கேட்டிருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் மாடுகள் கிடைக்க வில்லை. அதனால் மிகவும் சிரமப்பட்டார்கள். இந்நிலையில், ஒருநாள் காலையில் தேநீர்க் கடைக்குச் சென்றுகொண்டிருக்கும்போது, 75 கிலோ எடையுள்ள 4 கோதுமை மூட்டை களை ஒரு சைக்கிளில் வைத்து ஒரு நபர் மிதித்துக்கொண்டு வருவதைப் பார்த்து இருக்கிறார்.

300 கிலோ எடையுள்ள இந்தச் சுமையைச் சைக்கிளில் சுலபமாகக் கொண்டு வர முடிகிறதே என்று நினைத்தவருக்கு ஒரு புதிய சிந்தனை மனதில் தோன்றியது. இதைப்போல் ஒரு சைக்கிளை அல்லது ஒரு வாகனத்தை நாம் வயல் வேலைகளுக்குப் பயன்படுத்த கண்டுபிடித்தால் என்ன? என்று யோசித்தார்.
பழைய இரும்பு சாமான்கள் விற்கும் காயலான் கடைக்குச் சென்று தனக்குத் தேவையான பொருள்களை வாங்கி, ஒரு வாகனத்தை உருவாக்க முடிவு செய்தார். தினமும் காயலான் கடைக்குச் சென்று ஒரு ‘ஹேண்டில் பார்’, சைக்கிள் ‘செயின்’, சக்கரம் என ஒவ்வொரு பொருளாக வாங்கினார். அவற்றை ஒவ்வொன்றாகப் பொருத்தி ஒரு வாகனமாக வடிவமைக்கப் போராடினார். அவரின் அந்தச் செயலைப் பார்த்த கிராம மக்கள், ‘இது வெட்டி வேலை, பணத்துக்கும் நேரத்துக்கும் கேடு’ என்று கேலி பேசினார்கள். ஆனால், அதைப் பற்றிக் கவலைப்படாமல், தனது முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு ஒரு வழியாக மனதில் நினைத்த வாகனத்தை உருவாக்கிவிட்டார். அதை வயலை உழுவதற் கும் விதைகளை விதைப்பதற்கும் பயன் படுத்தினார்.
ஒரு சைக்கிள் ஹேண்டில் பார், ஒரு சக்கரத்தைக் கொண்டு கருவியை வடிவமைத்து விட்டார். மனித மனம் ஆசைப்படுவதைச் சரியான நேரத்தில், சரியான முறையில், சரியான திசையில், மூளையைப் பயன்படுத்திச் செய்தால் நிச்சயம் வெற்றியை அடையலாம் என்பதற்குக் கோபால் பிஷே சிறந்த உதாரணம். தான் கண்டுபிடித்த அந்தக் கருவிக்கு ‘கிரிஷி ராஜா’ என்று பெயர் வைத்தார். தன்னுடைய ‘எலக்ட்ரீசியன்’ நண்பரின் மூலம் அந்தக் கருவிக்கு ஒரு மோட்டாரைப் பொருத்தினார். இப்போது அந்தக் கருவி கைகளால் இயக்குவதைக்காட்டிலும் வேகமாகச் செயல்பட ஆரம்பித்தது.

கிரிஷி ராஜா
‘எங்களைப்போல் மாடுகள் வாங்க வசதி இல்லாதவர்களும், ‘டிராக்டர்’, ‘பவர் வீடர்’ போன்ற வாகனங்களை வாங்கி உழவு செய்ய முடியாதவர்களுக்கும் இந்தக் ‘கிரிஷி’ ராஜா எந்திரம் மிகப்பெரிய வரப்பிரசாதமாகத் திகழ்கிறது’ என்கிறார் கோபால் பிஷே. கிரிஷி ராஜா கருவியின் முன்பக்கம் சைக்கிளின் முன்பக்கம் போன்று தோற்றமளித்தாலும் அதன் பின்பகுதியில் உழவு செய்வதற்கான உபகரணங்களையும், விதைகளை விதைப் பதற்கான உபகரணங்களையும் இணைத்து வெற்றி கண்டிருக்கிறார். சைக்கிளின் பின் பகுதியில் உபகரணங்களை இணைக்கும்போது அதில் ‘பிளேடு’ மற்றும் கம்பி போன்றவை பயன்படுத்துவோரின் கால்களை வெட்டி விடாமல் இருக்க, சில பாதுகாப்பு வழிமுறை களையும் அமைத்திருக்கிறார். இந்தக் கருவியின் விலை 1,200 ரூபாய்தான். அதைக்கொண்டு ஒரு சிறு விவசாயி தன்னுடைய நிலத்தை உழவு செய்திட முடியும்.
எல்லாவிதமான நிலப்பரப்புகளுக்கும் ஏற்ற வகையில் உறுதியாகவும் சிறப்பாகவும் செயல்படும் வகையில் வடிவமைத்து இருக்கிறார். ஆரம்பத்தில் கேலி பேசியவர்கள், இப்போது அவரைப் பார்த்து ஆச்சர்யப் படுகிறார்கள். அவருடைய மகன், மருமகன் இதைச் சர்வசாதாரணமாக ஓட்டிச் செல்கிறார்கள். பல விவசாயிகள், இந்தச் சைக்கிள் கருவியைத் தயாரித்துக் கொடுக்குமாறு கேட்டு வாங்கிச் செல்கிறார்கள்.

இப்போது அவருக்கு வயது 71. இந்த கொரோனா சூழலிலும் மனம் தளராமல் மகிழ்ச்சியோடு உழைத்துக்கொண்டிருக்கிறார். சிறிய முதலீட்டில் தயாரிக்கப்படும் இந்தக் கருவி, விவசாயத்தில் உழவு செய்வதற்கும், களை எடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. வட மாநிலங்களில் பல விவசாயிகள் இதைப் பயன்படுத்துகிறார்கள். நம் ஊர் விவசாயிகளும் இந்தக் கருவியைப் பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால், நம்மில் பலருக்கும் இப்படிப்பட்ட தேவைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.
‘வயது மூப்பின் காரணமாக என்னால் இப்போது இந்தக் கருவியைத் தயாரித்துக் கொடுக்க முடியவில்லை. யாராவது வந்து ஆலோசனை கேட்டால் அவர்களுக்கு நான் சொல்லத் தயாராகவே இருக்கிறேன். இதைச் செய்வது மிகவும் எளிமையானதுதான். இது ஒன்றும் ‘ராக்கெட் சயின்ஸ் கிடையாது’ என்கிறார் விவசாய விஞ்ஞானி கோபால் பிஷே.
தொடர்புக்கு,
National Innovation Foundation (NIF) - India,
Autonomous Body of Department of Science and Technology,
Gandhinagar - 382650. Gujarat.
Tel: + 91 2764 261137
Mobile: +91-8511167451
Web : www.nif.org.in
- கண்டுபிடிப்போம்

இவரைப் பற்றி
எம்.ஜே.பிரபு... பத்திரிகையாளர், இயற்கை விவசாயி. ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் ‘பார்மர்ஸ் நோட் புக்’ என்று ஒவ்வொரு வியாழக்கிழமையும் வேளாண் செய்திகள் அடங்கிய ஒரு பகுதி வரும். அந்தப் பகுதியை பல ஆண்டுகளாக எழுதி வந்தவர். இந்தியா முழுவதும் பல மாநில விவசாயிகளையும் நேரடியாகச் சந்தித்துப் பேட்டி எடுத்து, அவர்களைப் பற்றி எழுதியவர். அரசு வேளாண் அமைப்புகள் பலவற்றைப் பற்றியும் எழுதியிருக்கிறார். தற்போது ‘கிரீன் காஸ் பவுண்டேஷன்’ என்ற அமைப்பைத் தொடங்கி, பாரம்பர்ய விதைகள் பரவல், இயற்கை விவசாயம் என்று செயல்பட்டு வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த மொறப்பாக்கம் கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். வேளாண் செயல்பாடுகளுக்காகக் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரிடமிருந்து விருதுகள் பெற்றிருக்கிறார்.