Published:Updated:

தடையை மீறி 42 பனைமரங்களை வெட்டி தலைமறைவான நபர்; வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை!

வெட்டப்பட்ட நிலையில் பனைகள்
News
வெட்டப்பட்ட நிலையில் பனைகள்

தூத்துக்குடியில் அரசின் தடை உத்தரவை மீறியும், மாவட்ட ஆட்சியரின் அனுமதி இன்றியும் 42 பனை மரங்களை வெட்டியவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Published:Updated:

தடையை மீறி 42 பனைமரங்களை வெட்டி தலைமறைவான நபர்; வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை!

தூத்துக்குடியில் அரசின் தடை உத்தரவை மீறியும், மாவட்ட ஆட்சியரின் அனுமதி இன்றியும் 42 பனை மரங்களை வெட்டியவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வெட்டப்பட்ட நிலையில் பனைகள்
News
வெட்டப்பட்ட நிலையில் பனைகள்

`பனைமரம்’, தமிழகத்தின் மாநில மரம் என அங்கீகரிக்கப்பட்டு போற்றப்படுகிறது. உச்சி முதல் அடி வரையிலான அனைத்து பாகங்களும் பலன் அளிப்பதால்தான் பனைமரத்தை `பூலோகத்தின் கற்பகத்தரு’ என்கிறார்கள். 2018-ம் ஆண்டு கணக்கின்படி தமிழகத்தில் 5.10 கோடி பனை மரங்கள் மட்டுமே இருப்பதாக கூறபட்டது. ஆனால், அதிகமாக வெட்டப்பட்டதால் அவற்றின் எண்ணிக்கை தற்போது பாதியாகக் குறைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

வெட்டப்பட்ட பனை மரம்
வெட்டப்பட்ட பனை மரம்

டெல்டா மாவட்டங்களில் `கஜா’ புயலின் தாக்கத்தில் அத்தனை மரங்களும் வீழ்ந்து கிடக்க, பனைமரங்கள் மட்டுமே கம்பீரமாக நின்றன. பனைமரத்தின் சிறப்பு அறியப்பட்டதாலும், விழிப்புணர்வு ஏற்பட்டதாலும் இளைய தலைமுறையினரே கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் பரவலாக கண்மாய், குளத்துக்கரைகளில் பனைவிதையை ஊன்றி வைத்து வருகின்றனர். பனைமரத்தை வெட்டக்கூடாது, பனையைக் காக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமில்லாமல், பல தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டில், ``தமிழர்களின் வாழ்வோடும், மொழியோடும், வளத்தோடும், ஒன்றுபட்டு, மழை ஈர்ப்பு மையம், நீர் நிலைகளின் காவலன் என அழைக்கப்படும் பனைமரத்தினை வேரோடு வெட்டி விற்கவும், செங்கல் சூளைகளுக்குப் பயன்படுத்தும் செயலினைத் தடுக்கப்படும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனைமரங்களை வெட்ட நேரிட்டால் மாவட்ட ஆட்சித்தலைவரின் அனுமதி பெற வேண்டியது கட்டாயம்” என அறிவிக்கப்பட்டது.

ஜெயக்குமார் - மாவட்ட எஸ்.பி
ஜெயக்குமார் - மாவட்ட எஸ்.பி

இந்த அறிவிப்பு பனைத்தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் அனைவரின் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பல மாவட்டங்களில் பனைவிதைகள் நட்டு வைப்பது அதிகரிக்கத் தொடங்கின.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி பகுதியிலுள்ள முத்தையாபுரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பனை மரங்களை அரசு அனுமதியின்றி வெட்டப்பட்டுள்ளதாக அப்பகுதியினர் சூரங்குடி காவல் நிலையத்தில் தகவல் கூறியுள்ளனர். இதையடுத்து, சூரங்குடி காவல் நிலைய போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, உரைக்கிணறு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் 42 பனை மரங்களை மாவட்ட ஆட்சித்தலைவரின் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக வெட்டியுள்ளது தெரியவந்துள்ளது.

வெட்டப்பட்ட நிலையில் பனைகள்
வெட்டப்பட்ட நிலையில் பனைகள்

இது குறித்து பெரியசாமிபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து பனை மரங்களை வெட்டிய செல்வராஜ் என்பவரை தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி பனை மரங்கள் வெட்டப்பட்டால், சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.