மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஜி.டி. நாயுடு!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

ரு தடவை கோயம்புத்தூரில் நடந்த கருத்தரங்குக்குப் போயிருந்தேன். மதியமே நிகழ்ச்சி முடிஞ்சுப்போயிடுச்சு. இரவு 10 மணிக்குத்தான் ரயில். அதுவரையிலும் உபயோகமா நேரத்தைப் பயன்படுத்துவோமென்று அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி.நாயுடு (கோ. துரைசாமி நாயுடு என்பதன் சுருக்கம்தான் ஜி.டி.நாயுடு) கண்காட்சி வளாகத்துக்குப் போனேன். அந்தக் கண்காட்சிக் கூடத்தைப் பார்த்து வியந்தேன். ஜி.டிநாயுடுனு பெயரைக் கேட்டாலே ரெண்டு சம்பவங்கள் நினைவுக்கு வரும். அவற்றைப் பற்றி இப்போதுள்ள இளைய தலைமுறைக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு.

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தோட பெயரை 1990-ம் ஆண்டு, ‘ஜி.டி.நாயுடு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்’னு மாத்தினாங்க. விவசாய கண்டுபிடிப்புகளில் பல புதுமைகளைச் செய்த, அந்தப் படிக்காத மேதையின் பெயரைச் சூட்டியதால் பல்கலைக்கழகம்தான் பெருமை அடைந்தது. ஆனா, அடுத்த இரண்டு ஆண்டுகளில், அதாவது 1992-ம் ஆண்டு, ஜி.டி.நாயுடு பெயரை நீக்கிட்டு மீண்டும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்னு மாத்திட்டாங்க. பல்கலைக்கழகப் பக்கம்கூட எட்டிப்பார்க்காத ஜி.டி.நாயுடு, பலவிதமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி சாதனை படைச்சிருக்காரு. அரசியல், அவர் பெயரில் ஒட்டிக் கொண்டிருந்த சாதி, படித்துப் பெறாத பட்டங்கள்னு அந்த ‘கிராமத்து விஞ்ஞானி’யின் பெயர் நீக்கத்துக்கு காரணமாகச் சொன்னாலும், அது வரலாற்றுப் பிழைதான். நிற்க.

மண்புழு மன்னாரு: சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஜி.டி. நாயுடு!

அடுத்த சம்பவம், ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார்’, ஜி.டி நாயுடுவை முதலில் பார்த்த நிகழ்ச்சியைப் பலமுறை சுவைபடப் பகிர்ந்திருக்கிறார். நம்மாழ்வார் தனது கல்லூரி காலத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தால், சிரித்துச் சிரித்து வயிறு வலிக்கும். ஜி.டி.நாயுடுவைப் பற்றி, பசுமை விகடன் இதழில் ‘நான் நம்மாழ்வார் பேசுகிறேன்’ என்ற தனது வாழ்க்கை வரலாற்றில் பதிவு செய்துள்ளார் நம்மாழ்வார்.

அதன் ஒரு பகுதியை இங்கு பார்ப்போம்...

‘‘மூன்றாவது ஆண்டில் படித்துக் கொண்டிருந்தபோது, கோயம்புத்தூருக்குப் பெருமை சேர்த்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்தார். அதுகுறித்து அறிவிப்பு தந்த எங்கள் பேராசிரியர் பாண்டுரங்கன், தான் ஜி.டி.நாயுடு தொழிற்கூடத்தில் மோட்டார் தொழில் பயிற்சி பெற்றதைப் பெருமையாகச் சொன்னார். ஜி.டி.நாயுடு எங்கள் கல்லூரிக்கு வந்தபோது பாண்டுரங்கன் முதல் வரிசையில் இடம் பிடித்திருந்தார். ஆனால், பாண்டுரங்கன் பற்றி நாயுடு சொன்னதுதான், வேடிக்கையான விஷயம்.

மண்புழு மன்னாரு: சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஜி.டி. நாயுடு!

ஜி.டி.நாயுடு பேச ஆரம்பித்தார். ‘இந்தியா பெரிய விவசாய நாடு. இங்கு விவசாயம் பின்தங்கியுள்ளது. விஞ்ஞானிகளாக ஆகப்போகும் நீங்கள் தொண்டாற்ற நிறைய வாய்ப்புகள் உள்ளன. இதோ... என் முன்னே உட்கார்ந்து இருக்கிறானே பாண்டுரங்கன்... இவனைப்போல் இருக்காதீர்கள். இவன் வேளாண் கல்லூரியில் படித்த காலத்தில், கோடை விடுமுறையில் என்னிடம் மோட்டார் தொழில் பற்றிக் கற்றுக்கொள்ள வந்தான்.

‘நீதான் வேளாண் கல்லூரியில் படிக்கிறாயே... உனக்கு மோட்டார் தொழில் பற்றிய கல்வி எதற்கு, இது இன்னொருவனுக்குக் கிடைக்கிற வாய்ப்பைத் தடுத்ததாக ஆகாதா’ என்று நான் இடங்கொடுக்க மறுத்தேன். இவன் உடனே, தொகுதி எம்.பி-யை அழைத்துக்கொண்டு வந்தான். ‘இனி நான் வேளாண் படிப்பை விட்டுவிடப் போகிறேன். மோட்டார் தொழிலில்தான் முற்றிலுமாக இறங்கப் போகிறேன்’ என்று சொல்லி என்னிடம் எப்படியோ பயிற்சியில் சேர்ந்துவிட்டான். ஆனால், இப்போது வேளாண் பட்டதாரியாக மாறி வேளாண் கல்லூரியில் வந்து அமர்ந்திருக்கிறான். இதுபோல அடுத்தவரது வாய்ப்பைப் பறிப்பதாக உங்கள் வாழ்க்கை அமைந்து விடக்கூடாது’ என்று நாயுடு பேசியதும், பலரது பார்வை... அண்ணாமலைப் பல்கலைக்கழக விரிவாக்கத்துத்துறை தலைவரும் பேராசிரியருமான பாண்டுரங்கன் பக்கம் திரும்ப... அவர் அசடு வழிந்தார்.

தொடர்ந்து பேசிய ஜி.டி.நாயுடு, ‘விஞ்ஞானியாக வேண்டுமானால், விஞ்ஞான மனப்பான்மை நமக்குத் தேவை. நம் நாட்டில் ஏராளமான பொருள்கள் உள்ளன. அவற்றின் பயன்பாடுகளை நாம் அறிந்திருக்கவில்லை. இதோ என்னுடன் வந்திருக்கிற ஜெர்மன்காரனைப் பாருங்கள். இவனோடு சேர்ந்து சுற்றுவதில் சங்கடம் உள்ளது. இவனுக்கு நமது கருவேலமர விதையை அனுப்பித்தான், நான் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த கருவேலமரங்கள் ஏராளமாக நிற்கின்றன. கருவேலமரம் இல்லாத இடமாகப் பார்த்து இவனை அழைத்துக்கொண்டு வருகிறேன். ‘இவ்வளவு மலிவாகக் கிடைக்கிற இந்த விதையை நமக்குக் கொடுத்து நாயுடு அதிகம் சம்பாதிக்கிறானே’ என்று வெள்ளையன் நினைத்துவிடக் கூடாது என்பதற்காக கருவேலமரம் இல்லாத இடமாக அழைத்து வருகிறேன்’’ என்று விகடமாகப் பேசியதில் கூட்டத்தில் சிரிப்பு அலை மோதியது.

ஜி.டி. நாயுடு
ஜி.டி. நாயுடு

ஜி.டி நாயுடு, தான் ஆராய்ச்சி மனப்பான்மை உள்ளவர் என்பதற்கு, ஓர் எடுத்துக்காட்டை முன் வைத்தார். அவர் பலமுறை வெளிநாடு சென்று வந்திருக்கிறார். அப்படி ஒருமுறை சென்று வந்தபோது, மேஜையறையில், ஒரு கைத்துப்பாக்கி இருந்திருக்கிறது. அதைச் சோதித்துப் பார்க்க எண்ணியவர், வீட்டின் கொல்லைப்புறத்திலிருந்த ஒவ்வொரு வாழைமரத்தையும் துப்பாக்கியால் சுட்டுத் துளையிட்டு இருக்கிறார். பிறகு, ஒரு மரத்தின் துளையில் ரசாயன உரம், இன்னொரு மரத்தின் துளையில் ரம்பத்தூள், இன்னொரு மரத்தின் துளையில் களிமண், இன்னொரு மரத்தின் துளையில் மாட்டுச் சாணம் என வைத்து, அனைத்து மரங்களின் துளைகளையும் அடைத்திருக்கிறார். அதன் பிறகு மரங்களின் வளர்ச்சியைக் கண்காணித்து வந்திருக்கிறார். ஆனால், மரங்களின் வளர்ச்சி பற்றிய முடிவை அவர் யாரிடமும் சொல்லவில்லை’’ விஞ்ஞானிகள், கேட்டு அறிபவர்களாக இருக்கக் கூடாது; சோதித்து அறிபவர்களாக இருக்க வேண்டும்’’ என்பதுதான் அந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் கருத்து.

மனிதர்களுடைய புரதத் தேவையைப் பெருமளவில் நிறைவு செய்யும் துவரை, இந்தியாவில் மிக முக்கியமான உணவு. இது பெரும்பாலும் மானாவாரியாகத்தான் விளைவிக்கப்படுகிறது. அதனால், மழை கிடைக்காத காலங்களில் விளைச்சல் குறைந்துவிடும். அப்போது துவரை இறக்குமதி செய்யப்படுவதால், அதன் விலை உயர்ந்துவிடும். அதை யோசித்துப் பார்த்த ஜி.டி. நாயுடு, ஒரு துவரை மரத்தைக் கண்டுபிடித்திருக்கிறார். ‘செடியாக இருந்தால்தானே மழையை எதிர்பார்த்து விதைக்க வேண்டும். அதை மரமாக்கிவிட்டால், மழையில்லா காலத்தில் விளைச்சல் குறையும், மற்றபடி மரம் அழியாது’ என்பது நாயுடுவின் கருத்து. பல உழவர்களது நிலங்களில் வரப்பு ஓரங்களில் ‘ஜி.டி. நாயுடு துவரை’ குடியேறியிருந்தது.

எங்கள் கல்லூரி மாணவர்கள் கல்விச்சுற்றுலா போயிருந்தபோது, கோவையில் ஜி.டி.நாயுடு விடுதியில் தங்குகிற வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தொழிற்கூடத்தின் வளாகம் முழுவதும் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டது. பல இடங்களிலும் சுவர்களில் விதவிதமான அறிவிப்புகள் ‘பளிச்’ எனத் தென்பட்டது. ‘குப்பைத் தொட்டி தவிர, தரையில் குப்பையைப் போடுபவர்கள் ஒரு வாரம் முழுவதும் வளாகம் முழுவதையும் சுத்தம் செய்ய வேண்டும்’ என்பது ஓர் அறிவிப்பு.

அடுத்த அறிவிப்பு ‘பி.ஏ படிப்புக்கு நான்காண்டு காலம் (இப்போது என்றால் பி.இ படிப்பையும் இந்த வரிசையில் சேர்த்திருப்பார்) எதற்காக? இளமையைப் பறிகொடுத்து, பெற்றோர் பணத்தைச் செலவழிப்பது எதற்காக? நான்காண்டுப் படிப்பை என்னால் பதினெட்டு மாதங்களில் கற்றுக்கொடுக்க முடியும்’ என்பது.

பெற்றோர்களுக்கான ஓர் அறிவிப்பும் இருந்தது. ‘இந்த நாட்டில் இளைஞர்களைக் கெடுப்பவை... சினிமா, அரசியல், பத்திரிகை, பெற்றோர் ஆகிய நான்கும்தான்’’ இந்த அளவில் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் சொல்லியதை முடிப்போம்.

“இவர் தமிழகத்திற்கு ஒரு நிதி. இவரது புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்”- ஈ.வே.ரா பெரியார்.

“நாயுடுவின் அறிவை நம் சமுதாயம் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவருடைய கண்டுபிடிப்புகள் ஓர் அளப்பரிய மதிப்புடைய கருவூலங்கள்”-அறிஞர் அண்ணா.

“கோயம்புத்தூர் மக்கள் தங்களுடைய கல்வியிலும் முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் நாயுடுவைக் கண்டு பெருமைகொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மனிதருடன் வசிக்க நாம் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கார் சர்.சி.வி.ராமன். இப்படி அந்தப் படிக்காத மேதையின் பெருமையைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அடுத்த இதழில் ஜி.டி.நாயுடுவின் விவசாயக் கண்டுபிடிப்புகள், பத்திரிகையாளர் சாவியின் பார்வையில் ‘ஜி.டி நாயுடு’, அப்பள வாழைக் கொடுத்த அதிசய விளைச்சல்... போன்றவை பற்றிப் பார்ப்போம்.