மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: பட்டறிவுப் பாடம் சொன்ன விவசாயி!

நம்மாழ்வார்
பிரீமியம் ஸ்டோரி
News
நம்மாழ்வார்

மாத்தியோசி

‘ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்

பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்கம் தொடுத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்’

‘‘மழையைப் பத்தியும், அதோட பயன்பாட்டையும் என்ன அருமையா நம்ம பொண்ணு பாடி வெச்சிருக்கு பாருய்யா...’’ என்று ஒரு மழைநாளில் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார், வெங்காய பக்கோடாவை ருசித்துக்கொண்டே ஆண்டாள் பாசுரத்தைச் சுவைபடப் பாடியது இன்றும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

வாதநாராயண மரம்
வாதநாராயண மரம்

2007-ம் ஆண்டு, ஜனவரி 26-ம் தேதி கோவையில் நடைபெற்ற பசுமை விகடனை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் நம்மாழ்வார் பேசிய கருத்துகள் சிந்திக்கவைத்தன.

‘‘இயற்கை விவசாயம் செய்பவர்களை, விஞ்ஞானத்துக்கும் தொழில்நுட்பத்துக்கும் எதிரானவர்களாகப் பார்க்கும் சூழ்நிலை உள்ளது. உண்மையில், இயற்கை விவசாயம் செய்பவர்கள்தான் அறிவியலறிந்த விஞ்ஞானிகளாகவும், தொழில்நுட்பத்துக்கு ஆதரவானவர்களாகவும் இருக்கிறார்கள்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டு மென்றால், தினமும் பல் துலக்கினால் சுகாதாரமாக இருக்கலாம் என்பது அறிவியல். பல் துலக்குவதற்கு வேப்பங்குச்சியைப் பயன் படுத்துகிறோமா, ரசாயனம் கலந்திருக்கும் பசையைப் பயன்படுத்துகிறோமா என்பது தொழில்நுட்பம்.

இப்போது `ஈகாலஜி’ என்று சொல்லப்படும் உயிர்ச்சூழல் பன்மயம் அதிகமாகப் பேசப்படுகிறது. இது இந்த மண்ணுக்குப் புதிய விஷயம் அல்ல. எங்கள் பாட்டி, வெள்ளிக்கிழமை விரதம் முடிக்கும்போது ஒரு உருண்டைச் சோற்றைக் ‘கா... கா... கா...’ என்று கத்தி, காக்கைகளுக்கு வைப்பார். இதை கவனிக்கும் ஒரு காக்கை வந்து ‘கா...கா...’ என்று கத்தி மற்ற காக்கைகளை அழைக்கும். எல்லாக் காக்கைகளுக்கும் சில பருக்கைச் சோறு கிடைக்கும். தின்று முடிக்கும் காக்கைகள், எங்கள் தோட்டத்துக் காய்கறிச் செடியில உட்கார்ந்து, அவற்றிலுள்ள பூச்சி, புழுக்களைப் பிடித்துத் தின்னும். அடுத்து மரத்தடியிலிருந்த மாட்டின் மேல் உட்கார்ந்து, மாட்டுக்குத் தொந்தரவு கொடுக்கும் உண்ணிகளைப் பிடித்து உண்ணும்.

கடைசியாக, அவை போட்ட எச்சம் தோட்டத்துக்கு உரமாக மாறும். அந்த எச்சத்திலிருந்து பின்னாளில் ஒரு வேப்ப மரம் முளைக்கும். வேப்ப மரத்துக்கு அடியில் நானும் எங்கள் அப்பாவும் கயிற்றுக்கட்டிலில் படுத்துக்கொண்டு கதை பேசுவோம். அந்தக் கட்டிலுக்குத் தேவையான மரச்சட்டத்தை எங்கள் புங்கமரத்திலிருந்து வெட்டுவோம். கட்டிலுக்குத் தேவையான கயிற்றை வயலில் விளைந்த புளிச்சக்கீரைச் செடியிலிருந்து நாராக எடுப்போம். அதை நானும் அப்பாவும் பாட்டுப் பாடிக்கொண்டே கயிறாகத் திரிப்போம்.

பக்கத்து வீட்டு மாமா வந்து கயிற்றைக் கட்டிலில் பின்னிக் கொடுப்பார். கட்டிலுக்குத் தேவையான மரச்சட்டத்தை எங்கள் ஊர் ஆசாரியே வடிவமைப்பார். இதற்குக் கூலியாக ஆண்டுதோறும் இரண்டு மரக்கால் நெல் கொடுப்போம். இப்போது சொல்லுங்கள், உயிர்ச்சூழல் என்பது இந்த மண்ணில் காலங்காலமாக இருந்து வருவதுதானே! இப்படிப் பல்லுயிர்ச் சூழலுடன் வாழ்வதுதான் தமிழ் மக்களின் நாகரிகம்...’’ என்று கடினமான உயிர்ச்சூழல் பாடத்தை எளிமையாகப் புரியவைத்தார். ஒருமுறை சேலத்திலிருந்து சென்னைக்கு அவருடன் பயணம் செய்தபோது, ‘‘ஐயா, ஆத்தூர் பக்கத்துல வண்டி வந்திடுச்சா?’’ என்று கேட்டார். ``எப்படித் தூங்கிக் கொண்டிருந்தவர், கண்ணைத் திறக்காமல் சொல்கிறீர்கள்?’’ என்று கேட்டேன். ``இதுக்கு எதுக்குய்யா கண்ணைத் திறக்கணும்... மூக்கு திறந்திருந்தா போதுமே... மரவள்ளிக்கிழங்கு ஆலைகளோட கழிவு துர்நாற்றம்தான் மூக்கை துளைச்செடுக்குதே... இந்தப் பகுதியோட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு மரவள்ளிக்கிழங்கு ஆலைகள்தான் காரணம்’’ என்றார்.

நம்மாழ்வார்
நம்மாழ்வார்

இப்போது ஆத்தூர் வழியாகப் பயணம் செய்தால், மூக்கைத் துளைக்கும் துர்நாற்றம் வீசுவது ஓரளவு குறைந்திருக்கிறது. சூழல் கட்டுப்பாடுகளை அரசு அங்கு இறுக்கமாகச் செயல்படுத்திவருவதை உணர முடிகிறது. மரவள்ளிக்கிழங்கு ஆலை பற்றிப் பேசிய நம்மாழ்வார், ஆத்தூர் பகுதி விவசாயிகளின் பாரம்பர்ய அறிவைச் சிலாகித்து பேசத் தொடங்கினார். ‘‘ஒருமுறை பெரம்பலூர் - ஆத்தூர் சாலையில் பயணம் செய்தேன். வயல்களோட வரப்பைச் சுற்றியும் வாதநாராயண மரங்களை நட்டு வெச்சிருந்தாங்க. இதை எதுக்குப் பயன்படுத்துவாங்கனு மண்டைக்குள்ள கேள்வி ஓடிக்கிட்டிருந்துச்சி. ஆத்தூர் பக்கமா வரும்போது, ஒரு வயலில் வாதநாராயண இலை, கிளைகளை வெட்டிபோட்டு மிதிச்சிக்கிட்டிருந்தாங்க. வண்டியை விட்டு கீழே இறங்கி, `எதுக்குய்யா இதைப் பயன்படுத்துறீங்க?’னு கேட்டேன்.

‘‘இயற்கை விவசாயம் செய்பவர்கள்தான் அறிவியல் அறிந்த விஞ்ஞானிகளாகவும், தொழில்நுட்பத்துக்கு ஆதரவானவர்களாகவும் இருக்கிறார்கள்.’’

‘நெல் வயலுக்கு வாதநாராயண இலை, கிளைகளைப் போட்டு நடவு செய்தா பயிர் செழிப்பா வளரும். பூச்சி, பொட்டும் அண்டாது. இந்த மரக்கிளைகளைச் சேத்துல போட்டு அமுக்கிவிட்டா, கடினமான மண்ணையும் பொலபொலப்பாக்கிடும். வளம் குறைந்த வயலும் வளமாகிடும். காலங்காலமா இதைச் செய்துக்கிட்டிருக்கோம்’னு அந்த உழவர் தன்னுடைய பட்டறிவைப் பகிர்ந்துகிட்டாரு.

மண்ணின் பௌதீகத் தன்மையை அறிந்து, அதை வளப்படுத்தும் பசுந்தழை உர நுட்பம் இந்த மண்ணுல ஆயிரக்கணக்கான ஆண்டுகளா இருக்கு. ஆனா, `உழவர்களின் அறிவைவிட வெளிநாட்டுக்காரன் சொல்லிக்கொடுத்த கடன் வாங்கின அறிவுதான் சிறந்தது’னு விஞ்ஞானிகள் கூட்டம் சொல்லிக்கிட்டு திரியுது. அதைத்தான் பல்கலைக்கழகத்துலயும் பாடமா வெச்சிருக்காங்க. வயல்வெளியே பல்கலைக்கழகம்; விவசாயிகளே பேராசிரியர்கள்னு புரிஞ்சிக்கக்கூடிய காலம் வரும்போதுதான், விவசாயத்துக்கும் நாட்டுக்கும் நல்லது நடக்கும்.

மகாத்மா காந்தியடிகள், `இந்தியாவோட ஆன்மா கிராமத்துலதான் இருக்கு’ன்னு சொன்னாரு. ஆன்மா மட்டுமில்ல, அறிவும்கூட கிராமத்துலதான் இருக்கு. இந்த விஷயம் தெரிஞ்ச பிறகும்கூட, கிராமத்தைப் புறம் தள்ளிவிட்டு நகரத்தை முன்னிலைப்படுத்துறாங்க. நகரம் கிராமத்தைச் சார்ந்து இருக்கக்கூடிய அமைப்பாகத்தான் இருக்கணும். கிராமத்தை உறிஞ்சி வாழும்படியா இருக்கக் கூடாதுய்யா.

‘உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து’

‘உழவைவிட்டுவிட்டுப் பிற தொழில்களைச் செய்வோரையும் உணவுப் பொருள்களைத் தந்து தாங்குவதால், உழுதொழில் செய்வாரே உலகத்தாருக்கு அச்சாணி’னு திருவள்ளுவர் எவ்வளவு தெளிவா சொல்லியிருக்காரு’’ என்று திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் பயணித்தபடியே ஞானப்பாடம் சொல்லிவிட்டு, கோழித்தூக்கத்துக்கு (குறைந்த நேரம் தூங்குவது) தாடியைத் தடவிவிட்டபடி தயாரானார் நம்மாழ்வார்.