மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: ஆகாவலியும் அப்பள வாழையும்!

வாழை
பிரீமியம் ஸ்டோரி
News
வாழை

மாத்தியோசி

ண்மையில் கோயம்புத்தூரில் நடந்த அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சிக்குப் போயிருந்தேன்.

கொங்கு மண்டலத்துல உள்ள முன்னோடி இயற்கை விவசாய நண்பர், உணவகத்துக்குக் கூட்டிக்கிட்டுப்போனார்.

‘‘ஜி.டி.நாயுடு பத்தி, நீங்க எழுதியிருந்ததைப் படிச்சேன். அந்த மாமேதையை நம்ம நாடு மதிக்காமபோனதுங்கிறது வருத்தமாத்தான் இருக்கு. சின்ன வயசுல, எங்க அப்பாவோடு ஜி.டி.நாயுடுவைப் பார்க்க போயிருக்கேன். தன்னோட விவசாயக் கண்டுபிடிப்புகளைப் பத்தி, ஆசை ஆசையா நாயுடு சொன்ன காட்சி, இன்னும் என் கண் முன்னாடி நிக்குது. நாங்க கிளம்பும்போது, ஜி.டி.நாயுடு, எங்க அப்பாவுக்கும், அவர்கூட வந்த விவசாயிகளுக்கும் சில விதைகளைக் கொடுத்து, நிலத்துல விதைக்கச் சொன்னாரு. ஆனா, எங்க அப்பாவும், அவரோட விவசாய நண்பர்களும் ‘அவன் கிடக்கறான்... ஆகாவலி’னு கொங்கு வட்டார வசவு வார்த்தையைச் சொல்லிட்டு, அந்த விதைகளைச் சாக்கடையில தூக்கிப்போட்டதை என் கண்ணாலப் பார்த்தேன். அவர் வாழ்ந்த காலத்துல சுத்தி இருந்தவங்களே, மதிக்காதபோது, அரசாங்கம் எப்படி மதிச்சிருக்கும்’ எனக் கனமான தகவலைச் சூடான காபியைக் குடித்தபடியே சொன்னார், அந்த முன்னோடி விவசாயி.

 ஜி.டி.கோபால்
ஜி.டி.கோபால்

ஒருமுறை ஜி.டி.நாயுடுவின் புதல்வர் ஜி.டி.கோபால், தன் தந்தை பற்றி மனம் திறந்துப் பேசியிருந்தார்... ``அப்பா பல அரிய கருவிகளை வடிவமைச்சிருந்தாலும், அதுக்கான அங்கீகாரம் அரசுத் தரப்புல இருந்து கிடைக்காது. ஏதாவது ஒரு முட்டுக்கட்டை விழுந்துக்கிட்டே இருக்கும். உதாரணத்துக்கு... அது 1945-ம் வருஷம். அப்போ எங்களுக்குச் சொந்தமா 600 பஸ்கள் ஓடிக்கிட்டு இருந்ததுச்சு. ஆனா, அதைப் பராமரிக்க, பயிற்சி பெற்ற மெக்கானிக்குகள் இல்லை. அப்பா யோசிச்சார். அமெரிக்காவுக்குப் போனார். ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்களையெல்லாம் பார்வையிட்டார். அவங்க மெக்கானிக்குகளை எப்படி ட்ரெயின் பண்றாங்க, அதுக்கு என்னென்ன பண்றாங்கனு தெரிஞ்சுக்கிட்டார். இங்கே வந்ததும் கோயம்புத்தூர்ல ஒரு பாலிடெக்னிக் இன்ஸ்ட்டியூட்டை ஆரம்பிச்சார். அதுக்கு வரி கட்டச் சொன்னது அரசாங்கம். `என்னோட பஸ் தொழிலை லாபகரமா நடத்தணும்னா, அதுக்கு மெக்கானிக்குகள் வேணும். புது மெக்கானிக்கு களை உருவாக்குறதுக்குத்தான் இந்தப் பாலிடெக்னிக்’னு எவ்வளவோ சொல்லி போராடிப் பார்த்தார் அப்பா. ஆனா, தொடர்ந்து வரிகட்டச் சொல்லி வற்புறுத்திக்கிட்டே இருந்தது அரசாங்கம். இப்படி அப்பா புதுசா எதைச் செஞ்சாலும் `இன்கம் டாக்ஸ் வெரிஃபிகேஷன் சர்ட்டிஃபிகேட் வாங்கணும்’பாங்க. அதுக்கு அரசுக்கு வரி கட்டணும். இந்தப் பிரச்னையாலேயே அப்பா நொந்துபோனார். இந்தக் காரணத்தினால்தான் அப்பா உருவாக்கிய ரேஸர் (Rasant razor), பிளேடு (Super-thin shaving blade) அமெரிக்காவுக்குப் போச்சு. இதை அமெரிக்காவுக்கு இலவசமாகவே கொடுத்துட்டார் அப்பா.

இப்படி அப்பா எதைக் கண்டுபிடிச்சாலும், அதுக்கு லைசென்ஸ் கிடைக்கிறது சிக்கலாக இருந்தது. `லைசென்ஸ் தர மாட்டீங்கன்னா, நான் செஞ்ச பொருளை நானே உடைக்கப்போறேன்’னு ஒரு புரட்சியைச் செஞ்சார். சென்னை மூர்மார்க்கெட் பக்கத்துல ஒரு கூட்டம் நடந்தது. அண்ணா, ராஜாஜி, பெரியார் எல்லாம் அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தாங்க. ஆயிரக்கணக் கானோருக்கு முன்னால அப்பா, தன்னோட கண்டுபிடிப்புகளை, அவர் வடிவமைச்ச பொருள்களை எல்லாம் ஒவ்வொண்ணா உடைச்சார்.

கார், எலெக்ட்ரானிக் பொருள்கள், ஆட்டோமொபைல் சாதனங்கள்னு அவர் உடைக்க உடைக்க, அத்தனை பேரும் வேதனையோடு பார்த்துக்கிட்டு இருந்தாங்க. பரிசோதனை பண்ணி, அவர் கண்டுபிடிச்ச ஒவ்வொரு முதல் பொருளையும் அவர் உடைச்சார். அதில் முக்கியமான ஒண்ணு, 100 ரூபாய் ரேடியோ. மேடையில் இருந்து பெரியார் எவ்வளவோ தடுத்துப் பார்த்தார். அண்ணா, `இதையெல்லாம் நாயுடு அவருக்காகச் செய்யலை. நாட்டுக்காகத்தானே செஞ்சார். உடைக்கட்டும். அப்போதான் அந்த வலி மத்தவங்களுக்குப் புரியும்’னு சொல்லிட்டார். இது நடந்தப்போ, நான் சின்னப் பையன். அந்தக் கூட்டத்துக்கு நானும் போயிருந்தேன்.

மண்புழு மன்னாரு: ஆகாவலியும் அப்பள வாழையும்!

அப்பாவுக்கு ரேடியோன்னா உயிர். காலையில இருந்து ராத்திரி தூங்கப்போகிற வரைக்கும் ரேடியோகூடவேதான் இருப்பார். இயந்திரத்தோட பழகிப் பழகி அதோட ஒவ்வோர் அசைவும் அவருக்கு அத்துபடி ஆகிடுச்சு. காலையில பஸ் ஸ்டாண்டுக்குப் போவார். ஒவ்வொரு பஸ்ஸும் ஸ்டார்ட் ஆகும்போது அதிலிருந்து வருகிற சத்தத்தைக் கவனிச்சுக் கேட்பார். `இதுல ஃபேன் பெல்ட் போயிடுச்சு. இந்த ட்ரிப் போயிட்டு வந்ததும் மாத்திடுங்க’னு சொல்வார். அவ்வளவு நுணுக்கம் தெரிந்தவர்.

விவசாயத் துறையிலும் அப்பாவுக்கு ஆர்வம் அதிகம். செடிகளில் புதுசு புதுசா என்னென்னவோ செஞ்சு பார்த்தார். அப்பவே கலப்பினப் பயிர்களைப் பற்றி ஆராய்ச்சி செஞ்சார். பப்பாளி, சோளம், பருத்தி, துவரை எனப் பல பயிர்களை ஆய்வு செஞ்சார். ஒரே ஒரு பருத்திச் செடியிலேயே ஒரு சின்னச் சாக்கு அளவுக்குப் பருத்தி வளர்ற மாதிரி செஞ்சு காண்பிச்சார். ஆனா, பருத்தியில் தரம் இல்லை. அதை இன்னும் டெவலப் பண்ண வேண்டியிருந்தது. மேற்கொண்டு இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து வளர்த்து எடுங்கனு சொல்லி, அதை விவசாயக் கல்லூரிக்குக் கொடுத்துட்டார். அப்போ விவசாயக் கல்லூரி, மத்திய அரசு வசம் இருந்தது. பிறகு மாநில அரசிடம் வந்தது. அப்பாவோட கலப்பினப் பயிர் ஆராய்ச்சி அப்படியே நின்னுபோச்சு. அவர் செஞ்சதை வளர்த்தெடுத்திருந்தா, இப்போ வெளிநாட்டிடம் விதைகளுக்காகக் கையேந்தி நிற்கிற நிலைமை நமக்கு வந்திருக்காது.

மண்புழு மன்னாரு: ஆகாவலியும் அப்பள வாழையும்!

அப்பா தொடர்பான நிறைய விஷயங்கள் கற்பனைனு சொல்றவங்களும் இருக்காங்க. ஆனா, 1945-50 காலகட்டத்திலேயே `எனர்ஜி கன்சர்வேஷன்’ என்கிற புதுமையை எல்லாம் பரிசோதிச்சு பார்த்தவர் அப்பா. அது பஸ் ஸ்டாண்டில் கேட் மாதிரி வடிவமைக்கப்பட்டிருக்கும். வரிசையா ஒவ்வொருத்தரா அந்த வழியாகப் போகும்போது, அதில் மாட்டியிருக்கும் பம்பு சுத்தும்.

அதில் இருந்து ஆற்றல் (எனர்ஜி) கிடைக்கும். அந்த மெஷின்ல நானே விளையாடியிருக்கேன். அப்பாவைப் பற்றிச் சொல்ல எத்தனையோ இருக்கு’’னு ஜி.டி நாயுடு மகன் நெகிழ்ந்து குறிப்பிட்டுள்ளார்.

போத்தனூரில் 40 ஏக்கர் பரப்பளவில் விவசாய ஆய்வுப் பண்ணை ஒன்றை அமைத்தார். நோபல் பரிசுபெற்ற சர்.சி.வி.ராமன், பொறியியல் மாமேதை விஸ்வேஸ்வரய்யா உள்படப் பல அறிஞர்கள் அங்கு வந்து சென்றிருக்கின்றனர். ஒரு காலத்தில் கோவை, ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் போத்தனூர் பண்ணையினையும் பார்த்து அதிசயத்துள்ளனர்.

‘‘போத்தனூரில் 40 ஏக்கர் பரப்பளவில் விவசாய ஆய்வுப் பண்ணை ஒன்றை அமைத்தார். நோபல் பரிசுபெற்ற சர்.சி.வி.ராமன், பொறியியல் மாமேதை விஸ்வேஸ்வரய்யா உள்படப் பல அறிஞர்கள் அங்கு வந்து சென்றிருக்கின்றனர். ’’

அதாவது, பூசணிக்காய் அளவுக்குப் பெரிதாகக் காய்க்கும் பப்பாளி, 1,000 பழங்கள் கொண்ட வாழைத்தார், விதைகளில்லா நார்த்தங்காய், விதைகளில்லா ஆரஞ்சுப் பழம் எனப் பலவற்றை உருவாக்கினார். அவரது அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என்று ஜெர்மானியர்கள் பெயர் சூட்டி கெளரவித்தனர். ஆனாலும், இந்திய அரசாங்கம் வழக்கம்போல அவரைக் கண்டுகொள்ளவே இல்லை. ஜி.டி.நாயுடு வளர்த்த துவரைச் செடி ஒரு மரமாகவே வளர்ந்து, அது ஆண்டு முழுவதும் விளைச்சலைக் கொடுத்துள்ளது.

மண்புழு மன்னாரு: ஆகாவலியும் அப்பள வாழையும்!

ஜி.டி.நாயுடுவின் நெருங்கிய நண்பரும் பத்திரிகையாளருமான சாவி, நாயுடு பத்தி நிறைய எழுதியிருக்கார். அதில், ‘அப்பள வாழை’ தகவல் முக்கியமானது. சாவி அவர்கள், இதுகுறித்துச் சொல்வதைக் கேட்போம். ‘‘ஜி.டி.நாயுடுவின் இல்லத்திருமணத்துக்குப் போயிருந்தேன். திருமணம் தடபுடலாக நடந்தது கொண்டிருந்தது. சமையல் எப்படி நடக்கிறது என்று பார்க்கலாம் வாருங்கள்... என்று என்னையும் சமையல் கூடத்துக்கு அழைத்துச் சென்றார். ராஜா வீட்டுத் திருமணம்போல, பெரிய பெரிய பாத்திரங்களில் சமையல் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. எல்லாவற்றையும் விசாரித்துப்படியே வந்து கொண்டிருந்தவர், ஓர் இடத்தில் அப்படியே உறைந்து போய் நின்றார். அங்கு அப்பளத்தை, பொரித்து, அடுக்கிக் கொண்டிருந்தனர். ‘அப்பளத்தைப் பொரித்தவரை போதும்’ என்று சத்தமாகச் சொல்லிவிட்டு, ஏற்கெனவே பொரித்து வைத்திருந்த அப்பளத்தை அப்படியே, தோட்டத்துப் பக்கம் எடுத்துச் சென்று, சுக்கு நூறாக உடைத்து, அதில் தண்ணீரையும் ஊற்றினார். இந்தக் காட்சியைப் பார்த்த எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், ஜி.டி.நாயுடு அடுத்த சில நிமிடங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பி, விருந்தினர்களைக் கவனிக்கத்தொடங்கினார்.

ஒருமுறை வெளியூர் பயணம் சென்றபோது, அப்பளம் செய்யும் இடத்தை அவர் பார்த்திருக்கிறார். சுகாதாரமற்ற முறையில் அப்பளம் தயாரிக்கப்படுவதால், அன்று முதல் அப்பளம் சாப்பிடுவதை நிறுத்தியுள்ளார். அவரது குடும்ப நிகழ்ச்சிகளிலும் அப்பளம் கூடாது என்று உறுதியாக இருந்தார். ஆனால், எப்படியோ, அந்த நிகழ்ச்சியில் அப்பளம் வந்து நுழைந்துவிட்டது. அதை நாயுடு தடுத்தி நிறுத்தனார். இந்த நிகழ்ச்சி முடிந்து, சில மாதங்கள் கழித்து, கோயம்புத்தூர் சென்றிருந்தேன். அங்கு சொல்லும்போது, அவரது வீட்டில் ஒரு வேளையாவது எனக்கு விருந்து வைப்பார். அப்படி விருந்து உண்ணும்போது, வாழைப்பழத்தைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னார். அந்தப் பழம், அருமையான சுவையுடன் இருந்தது.

மண்புழு மன்னாரு: ஆகாவலியும் அப்பள வாழையும்!

‘என்ன ரகம் என்று சொல்லுங்கள் என்றார்’ வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால், எங்கள் பகுதியில் விளையும் வாழையின் பெயரைச் சொன்னேன். ‘இதைச் சுவைப்பவர்கள், தங்கள் பகுதியில் விளையும் பழத்தின் சுவையைத்தான் சொல்கிறார்கள். ஆனால், இது புது ரகம். உங்களுக்கு நினைவிருக்கிறதா? எங்கள் குடும்பத் திருமணத்தின்போது, அப்பளங்களை நொறுக்கிப்போட்டேன் அல்லவா, அந்த அப்பளங்களை ஊற வைத்து, ஊசி மூலம் வாழை மரங்களுக்குள் செலுத்தினேன். அதன் பிறகு நடந்ததுதான் இந்த அற்புதம். விதவிதமான ருசியில் வாழை மரங்கள் காய்க்கின்றன...’ என நாயுடு சொன்னார். எதையும் ஆய்வுடன் பார்க்கும் பழக்கம் அவருக்கு உண்டு. அதனால்தான், பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகிறார்’’ எனச் சாவி தனது நூலில் பதிவு செய்திருக்கிறார்.

இப்படி ஜி.டி.நாயுடு பத்திச் சொல்வதற்கு ஏராளமான சங்கதிகள் உண்டு. வாழும் வரை பல்துறை விஞ்ஞானியாக வாழ்ந்தவர் நம்ம ஊர் ஜி.டி.நாயுடு.