
மாத்தியோசி
கடந்த குடியரசு தினத்தின்போது தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பைவிட, விவசாயிகள் டிராக்டர் பேரணியில் நடைபெற்ற கலவரம் பற்றிய வீடியோக்களைத்தான் அதிக பேர் பார்த்துள்ளனர். இந்தச் செய்தியைக் கேட்டபோது டால்ஸ்டாய் எழுதிய ‘புத்துயிர்ப்பு’ (Resurrection) நாவல்தான் நினைவுக்கு வந்தது. இந்த நாவலுக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கும் தொடர்பு உள்ளது.
இளைஞர் ஒருவர் தன் உறவினர் வீட்டுக்கு விருந்தினராகச் செல்கிறார். அங்குள்ள பண்ணையில் அழகிய இளம்பெண்ணைப் பார்க்கிறார். அவரைத் திருமணம் செய்வதாக ஆசைகாட்டி, இச்சையைத் தீர்த்துக் கொள்கிறார். அதன் பின்பு அந்தப் பெண்ணின் வாழ்க்கை திசை மாறிவிடுகிறது. நகரத்தில் விலைமாதுவாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, கொலை குற்றத்துக்காகக் கைது செய்யப்படுகிறார். இளம் வயதில் அந்தப் பெண்ணின் வாழ்க்கை தடம் மாறக் காரணமாக இருந்த இளைஞன் இப்போது நீதிபதியாக உள்ளார். எதிர்பாராதவிதமாக அவரிடமே விசாரணைக்கு அழைத்து வரப்படுகிறாள். அவளின் வழக்கை விசாரிக்கும்போது, நடுங்கி விடுகிறார் நீதிபதி. ‘இளமை வேகத்தில் தான் செய்த தவற்றால் ஒரு பெண்ணின் வாழ்க்கை இப்படிக் கொடூரமாக மாறிவிட்டதே’ என வருந்துகிறார். அந்தப் பெண்ணுக்கு உதவி செய்கிறார். குற்றம் செய்த நீதிபதியின் ஆத்ம சோதனையைப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்த நாவல்.
சரி, இந்தக் கதைக்கும், விவசாயிகள் போராட்டத்துக்கும் என்ன சம்பந்தம் என்று தானே கேட்கிறீர்கள்?
1898-ம் ஆண்டு 12,000 டவுகபர்ஸ் (Dukhobors) விவசாய மக்கள் ரஷ்யாவில் இருந்து கனடா நாட்டுக்கு விரட்டி அடிக்கப் பட்டன. இவர்கள் கப்பலில் பயணம் செய்ய பணம் தேவைப்பட்டது. இதற்காகத்தான் டால்ஸ்டாய் புத்துயிர்ப்பு நாவலை எழுதினார்.
ஒரு வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்துக்குச் சென்ற டால்ஸ்டாய், டவுகபர்ஸ் மக்கள் மீது ரஷ்ய அரசு வெறுப்புணர்வுடன் நடந்து கொண்டதைக் கண்டார். இதன் பிறகு, அந்த மக்களுக்கு ஆதரவாக எழுதவும் பேசவும் ஆரம்பித்தார். அதன் பிறகே, இந்த மக்களின் அறவழிப்போராட்டம் உலகுக்குத் தெரிந்தது.
‘‘விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக எழுதப்பட்ட இந்த நாவல் உருவான பின்புலம் குறித்துப் பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கியது. அதன் பிறகுதான், புத்துயிர்ப்பு நாவல் உலகம் முழுக்கக் கொண்டாடப்பட்டது.’’
ரஷ்யாவின் தெற்குப் பகுதிகளில் வாழ்ந்த விவசாயிகள், உருவாக்கிய கிறிஸ்துவ மதத்தின் கிளைப்பிரிவுதான் டவுகபர்ஸ். அன்பும் கருணையும்தான் மனித வாழ்வுக்கு அடிப்படை. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுள் இருக்கிறார். எனவே, அவரை வெளியில் தேட வேண்டாம்… என்று கூட்டுப்பண்ணைகள் அமைத்து விவசாயம் செய்து அமைதியுடன் வாழ்ந்து வந்தார்கள்.

இன்று நாம் பேசும் தற்சார்பு பொருளா தாரத்துக்கு முன்னோடியாக இருந்தனர். தங்களுக்குத் தேவையான காய்கறிகளையும் உணவுப் பொருள்களையும் நிலத்திலிருந்து பெற்றுக்கொண்டனர். நெசவு செய்து உடைகளை அணிந்துகொண்டனர். மண் வீட்டில் வசித்தார்கள். ஆணும் பெண்ணும் சமம். விரும்பியவர்கள் இணைந்து வாழ்க்கை நடத்தலாம். மாமிசம் உண்ணக் கூடாது. மாட்டுப்பால் கன்றுகளுக்குத்தான், மனிதர்கள் குடிக்கக் கூடாது என்று வாழ்ந்து வந்தார்கள்.
ஒருநாள் ரஷ்ய அரசு டவுகபர்ஸ் மக்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டது. பல ஆண்டுக் காலமாக அரசுக்கும் அவர்களுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்தது. தங்களுக்குத் தேவையான சாலை வசதி, மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகளை அந்த மக்களே ஏற்படுத்திக்கொண்டார்கள். தொலைபேசி இணைப்பகம் அமைத்து, கூட்டுப்பண்ணைகளுக்குத் தொலைபேசி வசதியை உருவாக்கி வைத்திருந்தார்கள். கடுமையான உழைப்பாளிகளான இந்த மக்கள், அத்தியாவசிய தேவைக்கும் ஆடம்பரத்துக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து வாழ்ந்தார்கள். தங்களின் நலனுக்காக அரசாங்கத்தின் உதவியை எதிர்ப்பார்க்கவில்லை. ரஷ்யாவுக்குள்ளே தனி நாடுபோல வாழ்ந்து வந்தார்கள்.
இவர்களுக்கு நெருக்கடி கொடுக்கவே, அந்த மக்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என அரசு அறிவித்தது.
சக மனிதனை அன்புடன் நேசிப்பதுதான் வாழ்வியல் அறமாகக் கொண்ட டவுகபர்ஸ் மக்கள், ராணுவத்தில் சேர்ந்து போர் செய்வதை வெறுத்தார்கள். தங்களின் எதிர்ப்பை அகிம்சை வழியில் அமைதியுடன் தெரிவித்தார்கள். அரசு ஊழியர்கள், அமைதிப் பூங்காவாக இருந்த கூட்டுப்பண்ணைகளில் இருந்த ஆண்களையும் பெண்களையும் அடித்துக் கொடுமைப்படுத்தினார்கள். பெண்களை மானபங்கப்படுத்தினார்கள். ராணுவத்தில் சேர மறுத்த ஆண்களை ஊர் நடுவே நிற்க வைத்து சவுக்கால் அடித்தார்கள். குடியிருப்பில் இருந்த உணவுப் பொருள்களைத் தரையில் கொட்டி வீணடித்தார்கள். இந்தக் கொடுமையை எதிர்த்து ஒருவர்கூட வாய் திறக்கவில்லை. கிறிஸ்துவப் போதனையின்படி ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை மட்டும் காட்டவில்லை. தன்னை அடித்த ரஷ்ய வீரரின் தாகம் தணிக்கத் தண்ணீரும் உணவும் கொடுத்து உபசரித்தார்கள். அரசு கட்டவிழ்த்துவிட்ட வன்முறையைப் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டனர். ஒரு கட்டத்தில் நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு செல்லும்போதுதான், டால்ஸ்டாய் இந்த மக்களைப் பற்றி அறிந்துகொண்டார்.
தான் வாழ்நாள் முழுவதும் எழுதி வந்த அன்பும் அறமும் கொண்ட வாழ்க்கையை உண்மையாகவே வாழ்ந்து வந்த மக்களைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் நெகிழ்ந்துபோனார் டால்ஸ்டாய். அந்த மக்களின் காவலனாக மாறிப்போனார். இன்றும் கனடாவில் வாழும் இந்த மக்களின் வழித்தோன்றல்கள் ‘டால்ஸ்டாய்’க்கு சிலை வைத்து வணங்கி வருகிறார்கள்.
டால்ஸ்டாய் இந்த மக்களைப் பற்றி எழுதத் தொடங்கிய பிறகுதான், தற்சார்புடன் புதிய வாழ்க்கை முறையில் வாழ்ந்த டவுகபர்ஸ் மக்கள் பற்றிய தகவலே உலக மக்களுக்குத் தெரிந்தது.

அரசின் ஆணையை மதிக்கவில்லை என்பதால், சுமார் 12,000 டவுகபர்ஸ் மக்கள், கனடா நாட்டுக்குத் தஞ்சம் புகுந்தார்கள். அவர்களுக்கு உதவி செய்ய எழுதப்பட்ட நாவலான புத்துயிர்ப்பு ஆரம்பத்தில் அதிக கவனம் பெறவில்லை. தற்சார்புடன் வாழ்ந்த விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக எழுதப்பட்ட இந்த நாவல் உருவான பின்புலம் குறித்துப் பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கியது. அதன் பிறகுதான், புத்துயிர்ப்பு நாவல் உலகம் முழுக்கக் கொண்டாடப்பட்டது. பின்பு திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.
டவுகபர்ஸ் மக்களைப்போல உலகின் பல பகுதிகளில் சிறு, சிறு குழுக்கள் தற்சார்புடன் வாழ்ந்து வருகிறார்கள். இப்படிபட்டவர்கள் தமிழ்நாட்டிலும்கூட உள்ளனர். அதைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் பேத்துப்பாறைக்கு அருகில் உள்ளது சோலைப் பள்ளி. தத்துவ ஞானியும் மாற்றுக் கல்விச் சிந்தனையாளருமான ஜே. கிருஷ்ணமூர்த்தியின் கல்விமுறையை முன்மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப் பட்டிருக்கிறது இந்தப் பள்ளி.
பெயர்தான் பள்ளி. ஆனால், அங்கு தனி உலகமே உள்ளது. கண்களுக்கு எட்டிய வரை பசுமை விரிந்துள்ளது. மாணவர்களும் ஆசிரியர்களும் கூட்டு வாழ்க்கை வாழ்கிறார்கள். தங்களுக்குத் தேவையான காய்கறிகளை மாணவர்களே பயிரிட்டுக் கொள்கிறார்கள். சுழற்சி முறையில் சமையல் செய்வதும் மாணவர்கள்தாம். சூரிய ஒளி மின்சாரம், சாண எரிவாயு மூலம் எரிபொருள் தேவையைப் பூர்த்திச் செய்துகொள்கிறார்கள். தண்ணீர் சுத்திகரிப்பு மையம், தண்ணீரிலிருந்து மின்சாரம் தயாரித்தல், மரச்சாமான்கள் செய்யும் பட்டறை, பொதுச் சமையலறை, நாடகப் பயிலரங்கு அறை, இரும்புப் பட்டறை, இசை அரங்கம், பொது அரங்கம் அத்தனையும் உள்ளது சோலைப் பள்ளியில்.
“குழந்தைகளை மகிழ்ச்சியாக இயற்கை யாகப் பயில்வதற்கான சூழலை உருவாக்கி யுள்ளோம். இதன் மூலம் அறிவும் ஆற்றலும் கொண்ட மக்களை உருவாக்க முடியும். இதற்காக மாணவர்களும் ஆசிரியர்களும் கூடி இயங்கும் குழு வாழ்க்கையை வாழ்கிறோம். அனைவரும் குழுவாக அமர்ந்து சாப்பிடுவதி லிருந்து தொடங்குகிறது எங்கள் கல்வி முறை” என்று மாணவர்கள் இயற்கை முறையில் பயிரிட்ட கேரட் துண்டைக் கடித்துச் சுவைத் துக்கொண்டே சொன்னார் சோலைப் பள்ளி யின் நிறுவனர் ப்ரெயின் ஜென்கின்ஸ்.