மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: முளைப்பாரியும் தொடிப்புழுதியும்!

முளைப்பாரி விழா
பிரீமியம் ஸ்டோரி
News
முளைப்பாரி விழா

மாத்தியோசி

யணமும் மனிதர்களும்தான் எனது சிறகுகள். அப்படிச் சமீபத்தில் சென்ற பயணம் நம்பிக்கையைத் துளிர்க்க வைத்தது. உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமம் தமிழ்நாட்டில் உள்ள இயற்கை விவசாயிகளுக்கு முக்கியமான தலம். ஆன்மிகப் பணிகளைத்தாண்டி இயற்கை விவசாயம், பாரம்பர்ய விதைகள் வங்கி எனப் பல சமூகப் பணிகளை முனைப்புடன் செய்து வருகிறது. கடந்த 11 ஆண்டுகளாகச் சத்தமில்லாமல் ‘முளைப்பாரி விழா’வை நடத்தி வருகிறது. அண்மையில் நடந்த முளைப்பாரித் திருவிழாவுக்குப் போயிருந்தேன்.

முளைப்பாரி விழாவில்...
முளைப்பாரி விழாவில்...

உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டாரத்திலிருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரியைச் சுமந்தபடி, பொங்கல் வைத்து ஆனந்தம் பொங்க பவனி வந்த காட்சி அற்புதமாக இருந்தது.

‘‘விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் மக்களுக்கு நம்பிக்கையை விதைக்கிறதுதான் இந்த விழாவோட நோக்கம். முளைப்பாரித் திருவிழாவில் ஆன்மிகமும் அறிவியலும் கலந்துள்ளது. ஆடி மாதம் முளைப்பாரியில் வைத்துள்ள தானியங்களில் எவை நன்றாக வளர்ந்துள்ளதோ, அவைதான் அந்த ஆண்டு சூழ்நிலைக்குச் சிறப்பாக வளரும் என்பது அறிவியல் சொல்லும் உண்மை. இதைத்தான் நம் முன்னோர்களும் பின்பற்றினார்கள். காலப்போக்கில் அதைக் காற்றில் விட்டுவிட்டோம். மீண்டும் அதற்குப் புத்துயிர் கொடுத்துள்ளோம்’’ என்றார் ஆசிரமத்தில் உள்ள அக்ஷ்ய க்ருஷி கேந்திராவின் இயக்குநர் யதீஸ்வரி ஆத்மவிகாசப்பிரியா அம்பா.

 நூல் வெளியீட்டு விழாவில் முனைவர்.அரு.சோலையப்பன்
நூல் வெளியீட்டு விழாவில் முனைவர்.அரு.சோலையப்பன்

‘‘போன வருஷம் கடுமையான வறட்சி. எப்படி விவசாயம் செய்யப்போறோம்னு ஒரு நடுக்கம் இருந்துச்சி. நம்பிக்கையோடு முளைப்பாரி வெச்சி விழாவுக்கு வந்தேன். என்னோட முளைப்பாரி போலவே மத்தவங்க முளைப்பாரியிலும் உளுந்து நல்லா முளைச்சிருந்துச்சி. ஆசிரமத்து மாஜி, அம்பாங்களும் உளுந்து விதைக்கலாம்னு சொன்னாங்க. உளுந்து விதைச்சோம். அதுக்கு ஏத்தபடி மழை பெய்ஞ்சிது. நல்ல மகசூலும் கிடைச்சிது...’’ என மகிழ்ச்சி பொங்கப் பேசினார் முளைப்பாரியுடன் பொங்கல் வைத்து, மாவிளக்கு ஏந்தியபடி வந்த பெண்.

‘‘போன வருஷம் முளைப்பாரியில் உளுந்து நன்றாக முளைத்துள்ளதைப் பார்த்தவுடன், அதை விதைக்கும்படிக் கிராமத்துப் பெண்களிடம் சொன்னோம். கூடவே, தமிழக வேளாண்மைத் துறை சார்பில் இலவசமாக உளுந்து விதைகளை விவசாயிகளுக்குக் கொடுத்தார்கள் ஆஸ்ரமத்தினர். இயற்கையின் கருணையால் உளுந்து நல்லபடியாக விளைந்தது. நல்ல விலையும் கிடைத்தது. அந்த மகிழ்ச்சிதான் முளைப்பாரி எடுத்து வரும் பெண்களின் முகத்தில் பூத்துள்ளது’’ என்று அனுபவத்தைச் சொன்னார் கேந்திராவின் இணை இயக்குநர் சத்யப்ராணா மாஜி. ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டுள்ள இடத்தில் தள்ளு முள்ளு கிடையாது. எல்லாம் ராணுவ கட்டுப்பாடுபோல நேர்த்தியாக நடந்து கொண்டிருந்தது. தங்களுக்கு எந்த வேலையும் இல்லை என்பதால், பந்தோபஸ்துக்கு வந்த போலீஸ்காரர்கள் ஆஸ்ரமத்தின் மரத்தடியில் பந்தவாகப் பழரசம் குடித்துக் கொண்டிருந்தனர்.

‘‘முளைப்பாரி எடுத்து வரும் பெண்கள் ‘உளுந்து நல்லா விளைஞ்சிது’ன்னு சொல்றாங்க. இந்த ஊர் பெயர் உளுந்தூர்பேட்டைதானே. பெயரிலேயே உளுந்து இருக்கே. உளுந்து நன்றாக விளைந்தபடியால்தான், அந்தப் பெயர் வைத்திருப்பார்கள்னு நினைக்கிறேன் ஜி’’ எனப் பளீரென்று சொன்னார் க்ருஷி கேந்திராவின் பொது மேலாளர் சிவக்குமார். சட்டென்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ‘‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’’ என்று சொன்ன தொல்காப்பியர் நினைவுதான் எனக்கு வந்தது.

மண்புழு மன்னாரு: முளைப்பாரியும் தொடிப்புழுதியும்!

அடுத்துச் சொல்லப்போவதும்கூட, ஒரு நிகழ்ச்சியில் நடந்த தகவல்தான். சில மாதங்களுக்கு முன்பு, காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகில் உள்ள தெய்வசிகாமணியின் (இறையழகன்) தமிழ்ப் பண்ணையில் ‘உழந்தும் உழவே தலை’ என்ற நூலின் வெளியிட்டு விழா நடைபெற்றது. கல்பாக்கம் அணுசக்தி மையத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற முத்து சொக்கலிங்கம் எழுதிய நூலை மூத்த வேளாண் விஞ்ஞானி முனைவர் அரு.சோலையப்பன் அவர்களின் செங்கைப் பதிப்பகம்தான் அந்த நூலை வெளியிட்டிருந்தது. குழந்தைகளுக்கான அந்த நூலை அடியேன்தான் வெளியிட்டேன். அந்த நிகழ்வில்,

‘தொடிப்புழுதி...’ என்று அரு.சோலையப்பன் திருக்குறளுக்கு விளக்கம் சொன்னதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டுப்போனேன். முதலில் தமிழ் அறிஞர்கள், இந்தக் குறளுக்கு என்ன விளக்கம் சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

‘‘தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்

வேண்டாது சாலப் படும்.’’

மு.வரதராசன் விளக்கம்:

ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடாமல் அந்த நிலத்தில் பயிர் செழித்து விளையும்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

உழுத மண்ணை, ஏறத்தாழ 35 கிராம் புழுதி, 8.75 கிராம் புழுதி ஆகும்படி காயவிட வேண்டும். பிறகு, அந்த நிலத்தில் பயிர் செய்தால் ஒரு கைப்பிடி அளவு எருவும் இடாமலேயே அந்தப் பயிர் நன்கு விளையும்.

மண்புழு மன்னாரு: முளைப்பாரியும் தொடிப்புழுதியும்!

‘‘திருவள்ளுவருக்கு வேளாண்மை நுட்பங்கள் எந்த அளவு தெரிந்துள்ளன என்பதை, இந்தக் குறள் மூலம் அறிந்து கொள்ளலாம். ஒரு பலம் புழுதியைக் கால் பலம் ஆகுமாறு உழுதால், மண்ணில் நடக்கும் மாற்றம் அற்புதமானது. அதாவது, நன்றாக உழவு செய்யும் நிலத்தில் காற்றில் உள்ள தழைச்சத்தை நிலைநிறுத்தும் பாக்டீரியா பல்கி பெருகும். இதனால், தழைச்சத்து உரம் வேண்டாம். அடுத்து, நம் மண்ணில் பயிர்களுக்குக் கிடைக்காத வகையில் மணிச்சத்து உள்ளது. இதைப் பயிர்களுக்கு மாற்றிக் கொடுக்கும் பணியைப் பாஸ்போ பாக்டீரியா செய்கிறது. எனவே, மணிச்சத்தும் தேவைப்படாது. சாம்பல் சத்தும் நம் நிலத்தில் உள்ளன. இதை எடுக்க ‘பொட்டாஷ் சாலுபிளைசிங்’ (Potassium-Solubilizing Bacteria (KSB) என்ற பாக்டீரியா தேவை. இதுவும்கூடத் திருவள்ளுவர் சொல்வதைப் போலத் தொடிப்புழுதியாக உழும்போது மண்ணில் உருவாகிவிடும்.

இதனால்தான், நன்றாக உழவு செய்யும் நிலத்தில் எருவிடத் தேவையில்லை என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சொல்லி வைத்துள்ளார்’’ என அரு. சோலையப்பன் தமிழையும் வேளாண் அறிவியலையும் இணைத்து நயம்படச் சொன்னார்.