மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: மரங்களைக் காத்த - பழந்தமிழர்களும் ஆப்பிரிக்க தேவதையும்!

மேரி ஜோசபைன்
பிரீமியம் ஸ்டோரி
News
மேரி ஜோசபைன்

மாத்தியோசி

னந்த விகடன் அலுவலகமே, ஒரு பல்கலைக்கழகம் போலத்தான். தினமும் ஏதாவது விழா, விருந்தினர் வருகை, சொற்பொழிவு... என நடந்துகொண்டிருக்கும். அப்படித்தான் ஒருமுறை பாவலர் அறிவுமதி ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். ஆங்கில வார்த்தைகள் கலக்காமல் திரைப்படப் பாடல்கள் இயற்றுவதைக் கொள்கையாகக் கொண்டுள்ள அண்ணன் அறிவுமதியின் தமிழ் ஆர்வத்தைத் தமிழ்கூறு நல்லுலகம் நன்கு அறியும். அன்று நிகழ்ச்சியில் அவர்,

“ ‘மரம் சா மருந்தும் கொள்ளார்’

-கணியன் பூங்குன்றனார், நற்றிணை -226

‘என் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்கான மருந்து அதோ

அந்த மரத்தில்தான் இருக்கிறது என்றால்...

அந்த மரத்திலிருந்து நான்கைந்து பூக்களைப் பறித்துச்

சாறு காய்ச்சி குடிப்பதனால்

என் உடலில் இருக்கிற நோய்

நீங்குமானால்

அந்த மரத்திலிருந்து நான்கைந்துப் பூக்களைப் பறிக்கச்

சம்மதிப்பேன்

அந்த மரத்திலிருந்து நான்கைந்து இலைகளைப்

பறித்துச் சாறு காய்ச்சி குடிப்பதனால்

என் உடலில் இருக்கிற நோய்

நீங்குமானால்

அந்த மரத்திலிருந்து நான்கைந்து இலைகளைப்

பறிக்கச் சம்மதிப்பேன்.

அந்த மரத்தை வெட்டி... கொன்று... அதன்

பிறகுதான் அந்த மரத்திலிருந்து மருந்தை எடுத்து

நான் குடித்து

என் நோயை நீக்கிக்கொண்டு

நீண்ட காலம் உயிர் வாழ வேண்டும்

என்கிற சூழல் வருமானால்...

நான் என்னைச் சாகவிடுவேனே’ இது ஆனந்த விகடன் இதழில், ‘தங்கத் தமிழ்’ என்ற பெயரில் நான் எழுதிய உரை.

மண்புழு மன்னாரு: மரங்களைக் காத்த - பழந்தமிழர்களும் ஆப்பிரிக்க தேவதையும்!

தமிழ் மக்கள் இயற்கையை நேசித்தவர்கள்; நேசிப்பவர்கள். நம் தமிழ்மொழியே இயற்கை மொழிதான். நம்முடைய சங்க இலக்கியங்களில் இயற்கையைப் பற்றி ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதை நம் இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை நம்முன் நிற்கிறது’’ எனப் பொறுப்புடன் பேசினார்.

‘‘மண்ணில் குழி எடுத்து, அதில் மரக்கன்று ஒன்றை நட்டு, தண்ணீர் ஊற்றி வளர்க்காவிட்டால், இந்த உலகில் நீங்கள் எதையுமே செய்யவில்லை என்றுதான் சொல்வேன்.’’

மரத்தை வெட்டுவதைவிட, என் உயிர் போனாலும் போகட்டும் என்று பல்லுயிர் காத்து வாழ்ந்த பழந்தமிழர் மண்ணில்தான், மரங்களை வெட்டி, சாலை அமைக்கத் துடிக்கும் அரசியல்பிழைப்போரும் வாழ்கிறார்கள். ஆனால், இருண்ட கண்டம் என்று சொல்லும் ஆப்பிரிக்காவில் உள்ள கென்யாவில் வாழ்ந்த ஒரு ஆப்பிரிக்க தேவதை மரங்களுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பசுமை வரலாற்றை உருவாக்கிச் சென்றிருக்கிறார்.

அமெரிக்காவுக்குப் பட்டப்படிப்புப் படிக்கக் கென்யாவிலிருந்து கிளம்பிச் செல்லும்போது மேரி ஜோசபைன் என்கிற பெயரோடு அங்கே போனவர், தன்னுடைய மண்ணின் பெயரான வங்காரி மாத்தாய் என மாற்றிக்கொண்டு தாய்நாடு திரும்பினார். 1940-ம் ஆண்டு, ஏப்ரல் 1-ம் தேதி கென்யாவின் நெய்ரி மாநிலத்திலிருக்கும் இஹிதே எனும் மிகச்சிறிய கிராமத்தில் பிறந்தார் வங்காரி மாத்தாய்.

மேரி ஜோசபைன்
மேரி ஜோசபைன்

‘கிகுயூ’ எனும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். 1964-ல் பள்ளிப்படிப்பை முடித்த நேரத்தில் அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னெடியின் ஸ்காலர்ஷிப் கிடைக்க, அமெரிக்காவில் அறிவியல் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து அறிவியலில் மேற்படிப்பையும் அங்கேயே முடித்தார். பின்னர் 1971-ம் ஆண்டு ஜெர்மனிக்குச் சென்று பி.ஹெச்டி முடித்து டாக்டர் பட்டம் பெற்றார். அன்றைய நாளில் கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே பெண் வங்காரி மாத்தாய் மட்டுமே.

வெளிநாடுகளில் தனக்குக் கிடைத்த வேலையையும் பணத்தையும் துறந்துவிட்டு, மீண்டும் தன் நாட்டிற்கே திரும்பியவர் 1977-ம் ஆண்டு ‘கிரீன் பெல்ட் மூவ்மென்ட்’ (Green Belt Movement) எனும் அமைப்பைத் தொடங்கினார். பசுமையாகச் செழித்த ஆப்பிரிக்க நாட்டின் வளங்களை வல்லரசு நாடுகள், ஒரு பக்கம் கொள்ளையடித்துக்கொண்டிருந்தன. அதை எதிர்த்துப் போராடியபடியே, இருக்கும் வளங்களைக் காக்கவும், புதிதாக மரங்களை நட்டு வளர்க்கவும் மறுபக்கம் போராடினார்.

அறிவுமதி
அறிவுமதி

மரத்தை வெட்டினால் பணம் என அரசாங்கம் சொல்லியபோது மரத்தை நட்டால் பணம் என மாற்றி யோசித்தார். வீடு வீடாகச் சென்று மக்களிடம் பேசினார். ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி ஆகியோர் இரண்டு மரக்கன்றுகள் நட வேண்டும் என ஆரம்பித்த இயக்கம், இருபத்தைந்து ஆண்டுகளில் நான்கு கோடி மரங்களை வளர்த்து, உலகைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.

2002-ம் ஆண்டு நடந்த கென்யா நாட்டு தேர்தலில் போட்டியிட்ட வங்காரி மாத்தாய் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிவாகை சூடினார். கென்ய நாட்டின் சுற்றுச்சூழல் இணை அமைச்சர் பதவியும் தேடி வந்தது. நாளும் இவரது ‘பசுமை’ பணிகள் விரிவடைந்த வண்ணம் இருந்தது. இதன் காரணமாக அவருக்கு 2004-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. இந்தப் பரிசுப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண்மணியும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நோபல் பரிசு பெற்றுக்கொண்டு, வங்காரி மாத்தாய் ஆற்றிய உணர்ச்சிமிக்க உரை, சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் இப்போதும் பிரபலம்.

‘‘அன்பு நிறைந்தவர்களே...

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றதன் மூலம் இந்த உலகின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாகக் கருதி மகிழ்கிறேன். நோபல் விருது பெறும் முதல் ஆப்பிரிக்கப் பெண்மணி என்கிற அடிப்படையில் கென்யா மக்களின் சார்பிலும், ஆப்பிரிக்கா கண்ட மக்களின் சார்பிலும், உலகின் சார்பிலும் இந்த விருதை ஏற்றுக் கொள்கிறேன். பெண்களும் பெண் குழந்தைகளும் இந்தச் சமயத்தில் அதிகம் என் கவனத்தில் இருக்கிறார்கள். பெண்கள் தங்கள் குரல்களை உயர்த்தவும் தலைமைத்துவத்தில் மேலும் அதிக இடத்தைக் கோரவும் இது அவர்களை ஊக்கப்படுத்தும் என்று நம்புகிறேன். இளைஞர்களும் முதியவர்களுமாக நிறைந்துள்ள எங்கள் நாட்டின் ஆண்களுக்கும் இந்த அங்கீகாரம் பெருமையைத் தரும். தங்களது கனவுகளைத் துரத்தும் இளைஞர்களுக்கு என் வாழ்வு ஊக்கத்தைக் கொடுக்கும் எனக் கருதுகிறேன்.

மண்புழு மன்னாரு: மரங்களைக் காத்த - பழந்தமிழர்களும் ஆப்பிரிக்க தேவதையும்!

1977-ம் ஆண்டு நான் பசுமைவெளி இயக்கத்தை (Green Belt Movement) தொடங்கியபோது, கிராமப்புறப் பெண்களின் மூலத் தேவைகளாக இருந்த விறகுகள், சுத்தமான குடிநீர், சரிவிகித உணவு, உறைவிடம், வருமானம் ஆகியவற்றின் பற்றாக்குறைகளைச் சமாளிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஆப்பிரிக்காவில் பெண்களே குடும்பத்துக்கு முக்கியமான பொறுப்பாளர்களாக இருந்தார்கள். பருவத்தில் நிலத்தை உழுது, குடும்பத்துக்கு உணவு உற்பத்தி செய்வதில் முக்கியப் பங்கு வகித்தார்கள்; வகிக்கிறார்கள்.

இயற்கை பாதிக்கப்படும்போது, அதன் முதல் தாக்கம் பெண்களுக்குத்தான் வந்து சேர்ந்தது. அந்தச் சமயத்தில் எங்களுடன் இணைந்து களப்பணி செய்த பெண்கள், முன்புபோல அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை என்று கவலைகொண்டனர். இதற்குக் காரணம், அவர்களது சுற்றுச்சூழல் தொடர்ந்து மோசமாகப் பாதிக்கப்படுவதுடன் உணவுப்பயிர்களுக்கு மாற்றாக வணிக ரீதியிலான விவசாயத்தின் அறிமுகமும்தான். சிறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களின் விலையைப் பன்னாட்டு வணிக நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. இதனால், விவசாயிகளுக்கு வருமானம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் அழியும்போது, அது சுரண்டப்படும்போது அது சரிவரக் கையாளப்படாதபோது, நமது வாழ்க்கைத்தரத்தைப் பாதிப்பதோடு வருங்காலச் சந்ததியினரின் வாழ்க்கைத் தரத்தையும் சேர்த்தே சேதப்படுத்துகிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம்.

மண்புழு மன்னாரு: மரங்களைக் காத்த - பழந்தமிழர்களும் ஆப்பிரிக்க தேவதையும்!

வறுமைக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. இன்று தங்களுடைய உணவுக்காக மரங்களை வெட்டி வாழ்கிறார்கள் மக்கள். இன்றைய உணவிற்காக மரங்களை வெட்டுவதால், அடுத்தநாள் உணவு கிடைக்காமல் போகிறது என்பதுதான் இயற்கை சொல்லும் பாடம். அந்த எளிய மனிதர்களின் பசியைத் தீர்த்தால் போதும். ஆனால், பெரும்பாலும் வறுமையிலிருப்பவர்கள்தான் இயற்கையை அழிப்பதாகச் குற்றம் சாட்டுகிறார்கள். உண்மையில் கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசாங்கங்களும்தான் இயற்கையைச் சுரண்டி சூரையாடுகிறார்கள்” என்ற அவரின் அனல் கக்கும் உரை அமேசான் காடு எரிந்துகொண்டிருக்கும் இந்தக் காலத்துக்கும் பொருத்தமாகவே இருக்கிறது.

“மண்ணில் குழி எடுத்து, அதில் மரக்கன்று ஒன்றை நட்டு, தண்ணீர் ஊற்றி வளர்க்காவிட்டால், இந்த உலகில் நீங்கள் எதையுமே செய்யவில்லை என்றுதான் சொல்வேன். மரக்கன்றுகளை நடவு செய்து நாம் வளர்க்கும்போது, நமக்குள் நம்பிக்கையை வளர்க்கிறோம், மரங்கள் வளர வளர நம் லட்சியம் ஒருநாள் வெல்லும் என்ற தன்னம்பிக்கை பிறக்கும்.

இது என் வாழ்வில் நான் கண்ட உண்மை. மரங்களை நாம் வளர்த்தால், நம்மையும் நம் வருங்காலத் தலைமுறையினரையும் அவை வளர்க்கும்...’’ என்று சூழலைக் காக்க தன் வாழ்நாளை அர்ப்பணித்த வங்காரி மாத்தாய், 2011-ம் ஆண்டு, இதே செப்டம்பர் மாதம் 25-ம் தேதி இயற்கையுடன் கலந்தார், இந்த ஆப்ரிக்க தேவதை!