
மாத்தியோசி
ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.
-அவ்வையார்
‘‘வயிறே... இன்று உணவு கிடைக்கவில்லை. ஒருநாள் மட்டும் உண்ணாமல் இரு என்று சொன்னால் இருக்கமாட்டேன் என்கிறாய். இன்று நிறைய உணவு கிடைத்திருக்கிறது. இரண்டு நாளைக்கும் சேர்த்து உண்டு கழி என்று சொன்னாலும் கேட்பதில்லை.

இதனால் துன்பம்தான் ஏற்படுகிறது. உன்னோடு வாழ்தல் சிரமத்தைக் கொடுக்கிறது’’ என அவ்வையார் பாட்டி, உணவின் முக்கியத்துவத்தைக் கிண்டலாக இப்படிப் பாடியிருக்கிறார்.
அவ்வையார் காலந்தொட்டு ஆண்ட்ராய்டு காலம் வரை மட்டுமல்ல; எல்லாக் காலத்திலும் மண்ணில் வாழும் மனிதர்களுக்கு உணவு அவசியம். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ‘‘அடுத்தப் பத்து ஆண்டுகளில் நாம் பயன் படுத்தும் பல தொழில்நுட்பங்களும், கருவி களும் காணாமல் போகும். அதே சமயம் உணவுத்தொழில் மட்டும் விரிந்து வளரும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். உணவு சம்பந்த மான தொழில்துறை இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமில்லை. காரணம், உலகில் அதிக வயிறுகள்(மக்கள்) கொண்ட நாடுகள் வரிசை யில் நமக்கு இரண்டாவது இடம் உள்ளது.

சமீபத்தில் சென்னையில் இந்தியத் தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry-CII) ஏற்பாடு செய்திருந்த ‘ஃபுட் புரோ-2019’ கண்காட்சிக்குப் போயிருந்தேன்.
ராஜ விருந்துக்குப் போகும்போது, வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு போக வேண்டும் என்று சொல்வார்கள். அதாவது மன்னர்கள், பிரபுக்கள், நாட்டின் உயர்பதவியில் உள்ளவர்கள் விருந்துக்கு அழைத்தால், முக்கிய விருந்தினர்கள் எதைச் சாப்பிடுகிறார்களோ, அதைத்தான் நாமும் சாப்பிட வேண்டும். அவர்கள் சம்பிரதாயத்துக்குக் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு வைத்துவிட்டால், நாமும் அந்த உணவை வைத்துவிட வேண்டும். இதனால்தான், ராஜ விருந்துக்குப் போகும் முன்பு சாப்பிட்டுவிட்டு போக வேண்டும் என்று சொல்கிறார்கள்.

ஆனால், உணவுக் கண்காட்சிக்குப் போகும்போது, கொலைபசியில் போனால்தான், அங்கு சிறப்பான சம்பவங்கள் நடக்கும். ஒருமுறை கண்காட்சியின் உள்ளே நுழைந்தவுடன் விதவிதமான ஐஸ்கிரீம், பிரியாணி, பழச்சாறு, காபி... என்று தங்கள் நிறுவனம் தயாரித்துள்ள உணவுகளைக் காட்சிப்படுத்தி வைத்துவிட்டு, அதைப் பார்வையாளர் களுக்கு அன்புடன் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். இலவசமாகத் தருகிறார்களே, சுவை குறைவாக இருக்குமோ என்று நினைத்துக்கொண்டு சுவைத்துப்பார்த்தால், நட்சத்திர உணவு விடுதிகளில் கிடைக்கும் உணவு சுவைபோல இருந்தது. அட, அந்த ஐந்து நட்சத்திர ஓட்டல் காபிபோல உள்ளதே..? என்று காபி இயந்திரம் அரங்கில் இருந்தவர்களிடம் கேட்டோம்.
‘‘பலபேர் சுவைத்தார்கள். ஆனால், நீங்கள்தான் நுணுக்கமாக ருசித்துள்ளீர்கள். எங்கள் இயந்திரத்தில்தான், அந்த நட்சத்திர ஓட்டலில் காபி தயாரிக்கிறார்கள்’’ என்று சொல்லிவிட்டு, அடுத்த பார்வையாளருக்குச் சூடான காபியை ஆவி பறக்க தயாரித்துக் கொடுத்தார். அங்கு அன்பாகக் கொடுத்த காபியின் விலை 500 ரூபாய்க்குமேல் இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பெரிய பெரிய நிறுவனங்கள் மட்டுமல்ல, பாரம்பர்ய உணவுகளை மதிப்புக்கூட்டி விற்பனை செய்பவர்களுக்கும் அரங்குகள் அமைத்திருந்தார்கள். இயற்கை வழி விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட உணவுகளுக்கு ஏக வரவேற்பு உள்ளதைக் கண்குளிரப் பார்க்க முடிந்தது. சிறுதானிய உணவுகளுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டிருந்தது. மிகவும் நேர்த்தியாகப் பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படும் கம்பு, சோளம்... போன்ற சிறுதானியங்கள் உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏதோ, வெளிநாட்டுக்காரர்களுக்கு ஞானம் வந்து இதைச் சாப்பிடுவதாக நினைக்க வேண்டாம். எல்லாம், நம் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்கள்தான், நம் உணவுப்பொருள்களை வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.
‘‘சிறுதானியங்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பு நிறையவே உள்ளன. கடந்த மாதம் ஒரு விவசாயி, சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு இரண்டையும் சவுதி அரேபியாவுக்கு ஏற்றுமதி செய்தார். உரிய ஆவணங்கள் இல்லை என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள். விசாரித்துப்பார்த்ததில் ஓர் அதிர்ச்சிகரமான உண்மை தெரிந்தது. அதாவது, அந்த விவசாயி தன்னுடைய சிறுதானியங்கள் பாக்கெட் மீது ‘ஆர்கானிக்’ முறையில் விளைவிக்கப் பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இயற்கைமுறையில் விளைவிக்கப்பட்டதற்கான ‘ஆர்கானிக் சான்றிதழ்’ அவரிடம் இல்லை. இதனால், அவரது பொருள்கள் திருப்பி அனுப்பப் பட்டுள்ளன. நம் நாட்டில் சிறுதானியங் களுக்கு ரசாயன பூச்சிக்கொல்லி, உரங்கள் பயன்படுத்துவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இந்தத் தகவல் வெளிநாட்டில் உள்ள அதிகாரிகளுக்குத் தெரியாது. நாம் உண்மையாக இருந்தாலும், உரிய ஆவணங்கள் அவசியம். வெளிநாடு களுக்கு உணவுப்பொருள்களை ஏற்றுமதி செய்யும் விவசாயிகள் ஆர்கானிக் சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டும் அதைக் குறிப்பிடவும். சான்றிதழ் பெற்ற இயற்கை வழி விவசாயிகள், ‘நேச்சுரல்’ என்று குறிப்பிடலாம். இதனால், சிக்கல் ஏற்படாது. குறிப்பாகச் சிறுதானியங்களை ஏற்றுமதி செய்பவர்கள் இதைப் பின்பற்றலாம்’’ என்று இந்த அனுபவ பாடத்தைக் கட்டாயம் எழுதுங்கள் என்று கைகளைப் பிடித்தபடிச் சொன்னார், ஏற்றுமதி அமைப்பில் பணியாற்றும் நண்பர்.
‘‘நாட்டுக்கோழிகளை உண்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், சந்தையில் விற்பனை செய்யப்படும் நாட்டுக்கோழிகள் அத்தனையும் நாட்டுக்கோழிகள் அல்ல. நாட்டுக்கோழிகள்போலத் தோற்றம் கொண்டவை’’ என்றார் கோயம்புத்தூரில் நாட்டுக்கோழிப் பண்ணை நடத்திவரும் நண்பர். கொஞ்சம் புரியும்படிச் சொல்லுங்கள் என்றேன்.
‘‘சாம்பார் என்ற அற்புத உணவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ‘கோலன் கேன்சர்’ (பெருங்குடல் புற்றுநோய்) வராது என்று கண்டுபிடித்துள்ளார்கள்.’’
‘‘நாட்டுக்கோழிகள் இயற்கையான சூழ்நிலையில் வளர்க்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் தினமும் 5 மணி நேரமாவது மேய்ச்சலில் இருந்தால்தான், நாட்டுக்கோழிக்கு உண்டான தகுதிகளை அவை பெறும்’’ என்று நாட்டுக்கோழி வளர்ப்பு ரகசியத்தைச் சொன்னார். கண்காட்சியின் ஒரு பகுதியாகப் பாரம்பர்ய உணவு குறித்த கருத்தரங்கும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. உள்ளே எட்டிப்பார்த்தோம்.
‘‘நம் விவசாயிகள் இயற்கை விவசாயத்தைப் பின்பற்ற வேண்டும். நம் பாரம்பர்ய உணவுகளுக்கு நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளது. நமது வீடுகளில் பல நூறு ஆண்டுகளாக முறையாகச் சமைக்கப்படும் சாம்பார் என்ற அற்புத உணவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ‘கோலன் கேன்சர்’ (பெருங்குடல் புற்றுநோய்) வராது என்று கண்டுபிடித்துள்ளார்கள்.
ஏனென்றால் நம்முடைய சாம்பாரில் மஞ்சள்தூள் சேர்த்துத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், இந்த வகையான புற்றுநோய் நமக்கு வருவதில்லை. விவசாயிகள் விளைபொருள்களை உற்பத்தி செய்வதில் மட்டுமல்ல, அதை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதிலும் கவனத்தைச் செலுத்த வேண்டும். இதற்குத் தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவுப் பதனத் தொழில்நுட்பக் கழகம் உதவி செய்கிறது. அதை நம் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று அக்கறையுடன் பேசினார், பாரம்பர்ய உணவு கருத்தரங்கு தலைவர் பத்மசிங் ஐசக். பாரம்பர்ய உணவுக் கருத்தரங்கு முடிந்தவுடன் உணவுக் கண்காட்சிக்குச் சவால்விடும் வகையில், கேழ்வரகு களி, கம்பு, சோளரொட்டி, இளநீர் பாயசம்... என்று பாரம்பர்ய உணவு வகைகளின் விருந்து காத்திருந்தது.