மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு : விரைவில்... இயற்கை வேளாண் கொள்கை!

மாத்தியோசி
பிரீமியம் ஸ்டோரி
News
மாத்தியோசி

மாத்தியோசி

ண்மையில் இரண்டு கூட்டங்களில் கலந்துகொண்ட தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறேன். இரண்டிலும் பேசியவர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். அவர்கள் பேசியதிலிருந்து கடினமான சூழ்நிலைகளில் தங்கள் நிர்வாகத் திறமையை அவர்கள் எப்படிப் பயன்படுத்தினார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. முதல் கூட்டம்... அர்பன் திங்கர்ஸ் கேம்பஸும், தி மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி இணைந்து, ‘சென்னையில் குடிநீரை உருவாக்கும் நற்செயல்’ என்ற பெயரில் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தன.

சென்னை குடிநீர் வாரியத்தின் செயல் இயக்குநர் பிரபுசங்கர் ஐ.ஏ.எஸ்ஸின் உரை சிந்திக்கவைத்தது. ‘‘இந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட தண்ணீர்ப் பஞ்சத்தைச் சுட்டிக்காட்டி பலரும் பேசினார்கள். குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்கப் பலவிதங்களில் முயன்றோம்.

இதுவரை எடுக்காத முயற்சிகளைக்கூட, இந்த முறை மேற்கொண்டோம். கல்குவாரிகளிலிருந்து தண்ணீர் எடுத்தோம். தண்ணீரே எடுக்காமலிருந்த ரெட்டை ஏரியிலிருந்துகூடத் தண்ணீரை எடுத்து, சென்னை மக்களுக்குக் கொடுத்தோம். சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்த விவசாயிகளும்கூடத் தண்ணீர் கொடுத்து சென்னை மக்களின் தாகம் தீர்த்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட வீராணம் ஏரியிலிருந்து நீர் கொண்டு வந்து கொடுத்தோம்.

பிரபுசங்கர், ககன்தீப்சிங்
பிரபுசங்கர், ககன்தீப்சிங்

இந்தியாவிலுள்ள முக்கியமான நகரங்களில் வற்றாத ஜீவநதிகள் உண்டு. டெல்லி, கொல்கத்தா... போன்ற நகரங்கள் நதிக்கரைகளில்தான் அமைந்திருக்கின்றன. இந்த நகரங்களில் தண்ணீர்ப் பிரச்னை அவ்வளவாக உருவாவதில்லை. ஆனால், சென்னை நிலைமை வேறு. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சின்ன சின்ன கிராமங்களாக இருந்தவை, இப்போது பெரும் நகரமாக உருவாகியுள்ளன. பருவம் தவறும்போது, தண்ணீர்த் தட்டைப்பாட்டைச் சமாளிப்பது சவால் நிறைந்த பணி.

தண்ணீரின் அருமையை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு உருவாகாமலிருக்க தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறோம். இந்த இக்கட்டான நேரத்தில் ‘குடிநீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்காமல், என்ன வேலை செய்கிறீர்கள்?’ என்றெல்லாம் பலர் எங்களைக் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். சிலர் பாராட்டினார்கள். எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு பணிகளைச் செய்துகொண்டிருக்கிறோம்.

மாத்தியோசி
மாத்தியோசி

சிங்கப்பூரைத்தான் சிறந்த நகரத்துக்கு ஒப்பீடாகச் சொல்வார்கள். சென்னை மாநகர், சிங்கப்பூரைவிட சிறப்பான நீர் மேலாண்மையை மேற்கொண்டு வருகிறது என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார் பணிவு நிரம்பிய குரலில்.

ண்மையில் `எழுமின்’ (தி ரைஸ் - The Rise) அமைப்பு நடத்திய மூன்றாம் உலகத் தமிழ்த் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு, சென்னை நுங்கம்பாக்கம் மகளிர் கிறித்துவக் கல்லூரியில் நடந்தது. அந்தக் காலத்துக் கல்யாணம்போல மூன்று நாள்கள் நடந்தது.

இயற்கை விவசாயம், பாரம்பர்ய உணவு, சித்த மருத்துவம் உள்ளிட்ட தலைப்புகளில் வல்லுநர்கள் பேசினார்கள். `விவசாயத்திலுள்ள வாய்ப்புகளும் சவால்களும்’ என்ற தலைப்பில் பேசுவதற்காக, தமிழ்நாடு வேளாண் உற்பத்தி ஆணையரும் அரசு முதன்மைச் செயலாளருமான ககன்தீப்சிங் பேடி, ஐ.ஏ.எஸ் மீசையை முறுக்கிவிட்டபடியே அரங்கில் நுழைந்தார்.

அந்த நேரம் ஒரு பேச்சாளர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தை மேற்கோள்காட்டி மேடையில் பேசிக்கொண்டிருந்தார். பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த ஒருவர், ‘‘தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மூன்று நாள்கள் சுற்றி வந்தேன். அங்கிருந்த விஞ்ஞானிகள் எந்தத் தகவலையும் சரியாகக் கொடுக்கவில்லை. வேளாண் பல்கலைக்கழகமும் சரியில்லை; வேளாண்துறையும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை’’ என்று அனல் கக்கும்படி விமர்சனம் செய்துகொண்டிருந்தார்.

மேடையேறிய, ககன்தீப்சிங் பேடி, ‘‘ஐயா, உங்கள் விமர்சனத்தை வரவேற்கிறேன். குறைகளைப் பற்றிப் பேச்சு வந்தால்தான் அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க முடியும். நீங்கள் சுட்டிக்காட்டியவற்றைச் சரிப்படுத்த முயல்கிறேன். என் தமிழ் கொஞ்சம் சுமார்தான். பொறுத்துக்கொள்ளுங்கள்’’ என்றார் தெளிவான தமிழில்.

தமிழ்நாட்டில் நடந்துவரும் வேளாண்மைப் பணிகளைப் பற்றி விவரிக்கத் தொடங்கினார்.

‘‘அதிக விளைச்சல் எடுத்தமைக்காக தமிழ்நாடு மூன்று முறை `கிரிஷி கர்மான் விருது’ பெற்றிருக்கிறது. ஐந்து லட்சம் விவசாயிகள் உழவன் செயலியைத் தங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். விவசாயத் திட்டங்கள் குறித்து எளிதாக அதில் தெரிந்து கொள்ளலாம். சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க வேளாண் துறை அலுவலகங்ளுக்கு அலைய வேண்டியதில்லை. உழவன் செயலி மூலம் உட்கார்ந்த இடத்திலிருந்தே வேலைகளை முடித்துவிடலாம். சொட்டுநீர்ப் பாசனக் கருவிகளை ஐந்து ஏக்கருக்குள் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் மானியமாகக் கொடுத்துவருகிறோம். இந்த ஆண்டு 1,200 கோடி ரூபாயை இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கியிருக்கிறோம். நாட்டிலேயே சொட்டுநீர்ப் பாசனத்துக்கு அதிக தொகை அளித்திருக்கும் மாநிலம் தமிழ்நாடுதான்.

‘‘விவசாயத் திட்டங்கள் பற்றித் தெரிந்துகொள்ள வேளாண்துறை அலுவலகங்களைத் தேடி அலைய வேண்டியதில்லை. உழவன் செயலி மூலம் உட்கார்ந்த இடத்திலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.”

உழவன் செயலியில் உங்கள் பகுதி வேளாண் அலுவலர் யார், எப்போது கிராமத்துக்கு வருவார் போன்ற விவரங்கள் இருக்கின்றன. வேளாண்மைத்துறைத் திட்டங்கள் விவசாயிகளுக்கு சென்று சேருவதில் குறைபாடுகள் ஏற்பட்டாலும் இந்தச் செயலி வழியாகத் தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக அந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்.

நாட்டிலேயே முதன்முறையாக ஒப்பந்தப் பண்ணையச் சட்டத்தைத் தமிழ்நாட்டில் உருவாக்கியிருக்கிறோம். இந்தச் சட்டம் விவசாயிகளைப் பாதுகாக்கத்தான்...’’ என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் அரங்கத்தில் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். உடனே அவர் கைக்கு மைக் சென்றது. ‘‘டாடா, பிர்லா, அம்பானிகளுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வழங்கவும், விவசாயிகளின் உரிமையைப் பறிக்கவும்தானே இந்தச் சட்டம்?’’ என்று கேட்டார் அந்தச் சமூக ஆர்வலர்.

‘‘உங்கள் கேள்விக்கு நன்றி. தமிழ்நாடு அரசு எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாகத்தான் இருக்கும். ஒப்பந்தப் பண்ணையச் சட்டம் என்பது கட்டாயம் கிடையாது. விருப்பமுள்ள விவசாயிகள் இதில் இணைந்து பயன்பெறலாம். விலை குறையும்போதும், விலை ஏறும்போதும் விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது, வாங்கும் வியாபாரிகளும் ஏமாற்றக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில்தான் இந்தச் சட்டத்தை உருவாக்கியிருக்கிறோம்’’ என்றார் ககன்தீப் சிங்.

‘‘ஒப்பந்தம் செய்த பிறகு வியாபாரிகள் ஏமாற்றிவிட்டு ஓடினால் என்ன செய்வீர்கள்?’’ என்று கேட்டார் ஒரு பெண் வழக்கறிஞர்.

‘‘மேடம் இந்தக் கேள்வியைக் கேட்டதற்கு வாழ்த்துகள். ஒப்பந்தத்தை மீறும் நிறுவனம் அல்லது வியாபாரிகள்மீது அந்தப் பகுதியிலுள்ள உதவி ஆட்சியரிடம் முறையிடலாம். உடனடியாக நிவாரணம் தேடித் தர சட்டம் துணைபுரியும். இன்னும் இந்தச் சட்டத்தை எப்படியெல்லாம் வலுவாக்கலாம் என்பதற்கான விதிமுறைகளை உருவாக்கிவருகிறோம். இங்கு கேட்கப்படும் கேள்விகள், எங்களைச் செழுமைப்படுத்திக் கொள்ள உதவும் என்ற நம்பிக்கை எங்களுக்கிருக்கிறது’’ என்றவர் ‘‘தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மைக் கொள்கையை உருவாக்கியிருக்கிறோம். அதை விரைவில் வெளியிடவிருக்கிறோம்.

இயற்கை விவசாயத்தை நோக்கி வேகமாகத் தமிழ்நாடு செல்ல அந்தக் கொள்கை உதவும். எல்லாவற்றிலும் முன்னோடியாக இருக்கும் தமிழகம் இயற்கை விவசாயத்திலும் எல்லா மாநிலங்களுக்கும் வழிகாட்டும்’’ என்று ககன்தீப்சிங் பேடி சொல்லி முடித்தபோது அரங்கு கைத்தட்டலால் அதிர்ந்தது.