மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு : பாரம்பர்ய மீன்களை பயமுறுத்தும் ஆப்பிரிக்க மீன்!

மாத்தியோசி
பிரீமியம் ஸ்டோரி
News
மாத்தியோசி

மாத்தியோசி

சென்னை மெரினா கடற்கரை அருகிலுள்ள ஐஸ்ஹவுஸ் பகுதியில் நண்பருடன் நடந்துகொண்டிருந்தேன். சாலை ஓரங்களில் கருவாடுகளைக் காய வைத்திருந்தார்கள்.

கடலில் பிடிக்கப்பட்டவை கடும் வெயிலில், வித விதமாகக் காய்ந்துகொண்டிருந்தன. எங்களின் பேச்சு மீன்கள் பக்கம் திரும்பியது. மீன் உணவுப் பிரியரான நண்பர், ‘`மீன்களைப் பற்றிச் சுவையான தகவலைச் சொல்லுங்கள்’’ என்றார். ``சொல்லப்போவது சுவையானதல்ல; சூடானது. தற்போது அறிவுஜீவிகள் பேசிவரும் முக்கியமான ஒரு தகவலைச் சொல்கிறேன்.

ஜிலேபி
ஜிலேபி

தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டிருக்கும் 150 பாரம்பர்ய மீன் இனங்களில் ‘ஜிலேபி’ என்ற மீன் இனத்துக்கு இடம் கிடையாது. நம் ஊர் மக்கள் ‘ஜிலேபி கெண்டை’ என்று அழைக்கும் இந்த மீனின் தாயகம் ஆப்பிரிக்கா என்றால் நம்பித்தான் ஆக வேண்டும். `திலேபியா’ (Tilapia) என்பதுதான் இதன் உண்மையான பெயர். திலேபியாதான் நம் மக்களின் பேச்சுவழக்கில் `ஜிலேபி’யாக மாறியது. இந்த மீனின் வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம்.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் `மொசாம்பிக் திலாப்பியா’ என்ற மீன் வகையை இந்தோனேஷியாவுக்குக் கொண்டு சென்றிருக் கிறார்கள். அங்கிருந்து மலேசியா, இலங்கை, அடுத்து இந்தியாவுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

20-ம் நூற்றாண்டின் மத்தியில் எகிப்து நாட்டு மன்னர் நைல் நதியிலிருந்த திலேபியா இன மீனை ஜப்பானின் அரசருக்கு அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார். இந்த மீன் குஞ்சுகள் தாய்லாந்து மன்னருக்கு வழங்கப்பட்டன. இஸ்ரேலிலிருந்து `ஆரியஸ் திலேபியா’ என்ற வகை வட அமெரிக்கா, தென் அமெரிக்காவுக்கும், பிறகு ஐரோப்பாவுக்கும் சென்று சேர்ந்தது. ஆசிய நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கும் நுழைந்தது. இப்படியாக திலேபியா மீன், உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.

`1952-ம் ஆண்டு ஆப்பிரிக்காவிலிருந்து அதிகாரபூர்வமாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது’ என்று வரலாறு சொல்கிறது. தமிழ்நாட்டுக்கு 1960-ம் ஆண்டுவாக்கில் வந்திருக்கிறது. 1957-62-ம் ஆண்டு காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், மீன்வளத்துறை அமைச்சராகவும் பதவிவகித்தார் லூர்தம்மாள். கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த இவருக்கு மீன் வளர்ப்பை மேம்படுத்துவதில் ஆர்வம். எனவே, தமிழ்நாட்டில் மீன் வளர்ப்பை நவீனப்படுத்தக் களமிறங்கினார்.

1959-ம் ஆண்டு வெள்ளிக்கெண்டை மீனைச் சீனாவிலிருந்தும், புற்களை விரும்பிச் சாப்பிடும் புல் கெண்டை மீனை ஜப்பானிலிருந்தும் இறக்குமதி செய்தார். இத்துடன் லூர்தம்மாள் விட்டிருக்கலாம். அடுத்து செய்ததுதான் தமிழ்நாட்டிலுள்ள மீன்களுக்கு சோதனையை ஏற்படுத்தியது. ‘பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது’ என்பார்களே அப்படித்தான் நடந்தது, இந்த விஷயத்தில்.

மண்புழு மன்னாரு : பாரம்பர்ய மீன்களை பயமுறுத்தும் ஆப்பிரிக்க மீன்!

அந்தச் சமயத்தில் மீன்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் பயிற்சிகள் மாநிலம் முழுவதும் வழங்கப்பட்டன. மீன்களுக்கு உணவாக ஜிலேபி மீன்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார் லூர்தம்மாள். ஜிலேபி மீன்கள் அதிக அளவில் குஞ்சு பொரித்துக்கொண்டே இருப்பதால் இந்த ஏற்பாட்டைச் செய்தார். இன்றும் ஜிலேபி மீனை ‘லூர்தம்மாள் மீன்’ என்று தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அழைப்பதைப் பார்த்திருக்கிறேன். லூர்தம்மாளின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் அந்தந்தப் பஞ்சாயத்து பி.டி.ஓ மூலம் கிராமந்தோறும் மீன் குஞ்சுகள் வழங்கப்பட்டன. இவர்கள் ஏரி, குளம், கண்மாய் எனத் தண்ணீர் கண்ணில்பட்ட இடங்களில் ஜிலேபி மீனைப் பரப்பினார்கள். அதன் விளைவுகளை இப்போது அறுவடை செய்துகொண்டிருக்கிறோம்.

ஒரு பக்கம், `இந்த மீன் வளர்ப்பு மூலம் நல்ல லாபம் கிடைக்கிறது’ என்று மீன்வளத்துறையினர் சொல்லிக் கொண்டிருந்தாலும், இந்த மீன் மூலம் ஏற்பட்டுவரும் பாதிப்புகளையும் கட்டாயம் கணக்கில்கொள்ள வேண்டும். ஆம், நீக்கமற நம் நீர்நிலைகளை ஆக்கிரமித்துக்கொண்ட இந்த மீன்கள், நம் பாரம்பர்ய மீன்களுக்கு எதிரிகளாக மாறிவிட்டன.

நீர்நிலைக்குத் தக்கபடியும், இடத்துக்குத் தக்கப்படியும் வாழ்ந்த அயிரை, கெளுத்தி, குரவை போன்ற நம் மீன் இனங்களை இந்த ஆப்பிரிக்க மீன்கள் உண்டு விழுங்கின.

`நம் நாட்டு மீன்களுக்கு உணவாகும்’ என்று கொண்டுவரப்பட்ட ஜிலேபி, தமிழ்நாட்டு மீன்களைத் தின்று கொழுத்தது. இதனால், நம் மண்ணுக்குச் சொந்தமான மீன்கள் அருகிவருகின்றன.

இவை நம் மீன்களின் முட்டைகளைத் தேடித் தேடித் தின்கின்றன. நீரில் எது கிடைத்தாலும் அதைக் கபளீகரம் செய்துவிடுகின்றன. நம் மண்ணுக்குச் சொந்தமான கெண்டை மீன் இனங்கள் பூச்சி புழுக்களை உண்ணும். விரால், ஆரால் போன்றவை பிற உயிரினங்களின் அழுகிய பகுதிகளை உணவாகக்கொள்ளும். அயிரை உள்ளிட்ட மீன்கள் பாசியை உண்டு வாழும். ஒவ்வொரு வகை மீனும் அதற்கான உணவை மட்டுமே உண்ணும்.

மாத்தியோசி
மாத்தியோசி

`இதைத்தான் உண்ண வேண்டும்’ என்ற கட்டுப்பாடுகள் இல்லாத இனம் ஜிலேபி. துர்நாற்றம் வீசும் அழுக்குகளையும் மலத்தையும்கூட அது விட்டுவைப்பதில்லை. தன் இனத்தைத் தவிர, வேறு எந்த ரகச் சிறிய மீன்களைக் கண்டாலும் அடுத்த நொடியே அவை ஜிலேபி மீன்களுக்கு இரையாகிவிடும். அதிவேகமாக இனவிருத்தி செய்து, குறுகிய காலத்திலேயே நீர்நிலையில் தன்னுடைய இன மீன்கள் மட்டும் வாழும் பகுதியாக மாற்றிவிடும். வெளியிலிருந்து கொண்டு வரப்படும் எந்த உயிரினமும் இந்த மண்ணில் வாழும் உயிர்களுக்கு எதிர்த்திசையில்தான் செல்லும். அதற்கு ஜிலேபி மீனும் விதி விலக்கு அல்ல...’’ என்று பேசிக்கொண்டே கடற்கரை மணலில் நடக்கத் தொடங்கினோம்.

‘‘மீன்களுக்குள்ளும் இவ்வளவு அரசியலா... அதுவும் நான் விரும்பி உண்ணும் ஜிலேபி மீன், நீர்நிலைகளில் இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதைக் கேட்கும்போதே அச்சமாக இருக்கிறது...’’ அந்த நண்பர் சொல்லி முடித்தார். அப்போது, கடற்கரையிலுள்ள மீன் வறுவல் கடைகளிலிருந்து மூக்கைத் துளைக்கும்படி மணம் வீசிக்கொண்டிருந்தது.