
மாத்தியோசி
ஊரடங்கு சமயத்தில் ஜூம் வீடியோ அழைப்பு மூலமாக வந்தார் அண்டை வீட்டு நண்பர்.
‘‘பயனுள்ள வழியில் பொழுது போக்க ஏதாவது வழியிருந்தால் சொல்லுங்கள்... அதன் மூலம் வருமானம் கிடைத்தாலும் மகிழ்ச்சிதான்’’ என்று கேட்டார்.
``அப்படியென்றால் சீனாவிலிருந்து தொடங்குகிறேன்’’ என்று சொல்லி முடிப்பதற்குள், ‘‘ஐயோ... சீனாவா’’ என மனுஷன் அலறினார். “பயப்பட வேண்டாம். இது நல்ல தகவல்தான்” என்று ஆறுதல் கூறிவிட்டுப் பேசத் தொடங்கினேன்.

தங்கம், பிளாட்டினம், வைரம் ஆகியவற்றைப்போல `வண்ண மீன்கள்’ எனப்படும் அலங்கார மீன்களும் விலை உயர்ந்தவைதான். `அலங்கார மீன்’ என்றவுடன், ஏதோ வானத்திலிருந்து இந்த வகை மீன்கள் வந்தன என்று நினைத்துவிட வேண்டாம். இவையும் நீர்நிலைகளில் சேகரிக்கப்பட்டவைதான். உலகம் முழுக்க 600 வகையான அலங்கார மீன்கள் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இவற்றில் இந்தியாவில் மட்டும் 100 வகைகள் இருக்கின்றன என்றால், `இவை இயற்கை நமக்குக் கொடுத்திருக்கும் கொடை’ என்றுதான் சொல்ல வேண்டும்.
உலக அளவில் அலங்கார மீன் வளர்ப்பை முதலில் அறிமுகப்படுத்தியது சீனா. அலங்கார மீன் வளர்ப்புப் பிரியர்கள் தேடித் தேடி வாங்குவது தங்க மீனைத்தான். இந்த மீன் சீனாவிலிருந்துதான் உலகம் முழுக்கச் சென்றது. `உலகப் புகழ்பெற்ற பயணி மார்கோபோலோதான் தங்க மீன்களை உலகின் மற்ற பகுதிகளுக்கு அறிமுகப் படுத்தியவர்’ என்கிறார்கள்.

`டிராகன் மீன்’ என்றும் `ஆசிய அரோவனா மீன்’ (Arowana) என்றும் அழைக்கப்படும் இந்த வகைதான் உலகில் மிகவும் விலை உயர்ந்த மீன்.
இதுவும்கூடச் சீனாவின் அறிமுகம்தான். `இன்றைய தேதியில் சில ஆயிரம் ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய்க்கு ஒரு மீனை விற்பனை செய்கிறார்கள்’ என்றால் நம்பித்தான் ஆக வேண்டும். அப்படி என்ன அதில் இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள்... வாஸ்து, அதிர்ஷ்டம்... என இந்த மீன் வளர்ப்புக்குப் பின்னால் பல சங்கதிகள் உள்ளன. சீனர்கள் நம்மை விட வாஸ்து விஷயத்தில் வெறியர்கள். இந்த மீனை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரப்பிவிட்டார்கள். வாஸ்துவில் நம்பிக்கைகொண்டவர்களின் வீடுகளில் அலங்கார மீன்தொட்டி இருப்பதைப் பார்க்கலாம். இப்போது உணவகங்களிலும்கூட வாஸ்து மீன்கள் இடம்பெறத் தொடங்கிவிட்டன. என்னைப்போல மீன்களின் கதைகளை அறிந்தவர்கள், தொட்டியிலுள்ள மீன்களின் வகையைப் பார்த்தே அவர்களின் செல்வநிலையைக் கணக்குப் போட்டுவிடுவோம். இப்படி நம்பிக்கை சார்ந்து மீன் வளர்ப்பது ஒரு பக்கமிருந்தாலும், அலங்கார மீன் வளர்ப்பு மூலம் மட்டும் மாதத்துக்கு லட்சக்கணக்கில் வருமானம் பார்ப்பவர்களை நேரில் பார்த்திருக்கிறேன். மீன் வளர்ப்புக்கு வருவதற்கு முன்னர் அவர்களின் வாழ்க்கை சொல்லிக்கொள்ளும்படி இருந்ததில்லை. ஆனால், இன்று கப்பல் போன்ற அதி நவீன கார்கள் அவர்களின் வீடுகளில் நிற்கின்றன.
இந்திய அளவில் அலங்கார மீன் வளர்ப்பில் முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடு. அதுவும் தருமமிகு சென்னைக்கு அருகிலுள்ள கொளத்தூர் பகுதிதான் அலங்கார மீன் வளர்ப்புக்கான முக்கிய இடம். பல ஆண்டுகளுக்கு முன்னர் மாதவரம் பால் பண்ணைப் பகுதியிலிருந்த தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின், மீன் வள விரிவாக்க மையத்தில் நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவுக்குச் சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்தேன். அந்த மையத்தின் தலைவராக இருந்த முனைவர் ஃபெலிக்ஸ், இப்போது தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தப் பயிற்சி வகுப்பை முன்னின்று நடத்திய பேராசிரியர் ராவணேஸ்வரன் மீன் வளர்ப்பவர்களுக்கான வழிகாட்டி; மீன் வளர்ப்பு பற்றி இரவு 12 மணிக்கு அழைத்தாலும் அலுத்துக்கொள்ளாமல் ஆலோசனை சொல்வார். அந்த நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோதுதான் `அலங்கார மீன்களுக்கு இவ்வளவு வாய்ப்பிருக்கிறது’ என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சரி, விஷயத்துக்கு வருவோம்.
`கொளத்தூர் பகுதியிலுள்ள நிலத்தடி நீர், அலங்கார மீன் உற்பத்திக்கு உதவியாக இருக்கிறது’ என்கிறார்கள். ஆம், அலங்கார மீன்களுக்கு ஆர்.ஓ தண்ணீர், கார்ப்பரேஷன் தண்ணீர், குளோரின் தண்ணீர் இவையெல்லாம் ஆகாது. நிலத்தடி நீர் மட்டுமே ஏற்றது. அலங்கார மீன்களைப் பொறுத்தவரை குட்டி போடுபவை, முட்டையிடுபவை என இரண்டு வகைகள் உள்ளன. பொதுவாக மீன் வளர்ப்பு விரும்பிகள் அதிகம் விரும்புவது, ‘கோய் கார்ப், மோலி, கப்பீஸ், ஏஞ்சல், டைகர், கோல்டு ஃபிஷ்’ என்று அழைக்கப்படும் ‘தங்க மீன்’, ‘பைட்டர்’ உள்ளிட்டவைதான். இவற்றில், ‘மோலி’, `கப்பீஸ்’ இனங்கள் தவிர்த்து மற்றவை முட்டையிடும் வகையைச் சார்ந்தவை.
இனப்பெருக்க மீன்களை மட்டும் பிரித்தெடுத்து, முட்டையிடுதல் முதல் சிறு மீனாவது வரை பராமரிப்போர், பண்ணைக்குட்டைகள் அமைத்து சிறு மீன்களை வளர்த்து விற்போர், சிறு மீன்களை வாங்கித் தொட்டிகளில்விட்டு பெரிய மீனாக்கி விற்போர், மொத்தச் செயல்பாடுகளையும் செய்வோர் எனப் பல நிலைகளில் மீன் வளர்ப்போர் இருக்கிறார்கள்.
மீன் இட்ட முட்டைகள் வெடித்து, குஞ்சுகள் வெளிவரும். அதன் பிறகு சிறு புழுக்களை உணவாகக் கொடுத்து, மீன் குஞ்சுகள் சிறிது வளர்ந்த பிறகு, பண்ணைக் குட்டைகளில் 45 நாள்கள் வளர்க்க வேண்டும். அதற்காகவே மீன் குஞ்சுகளை கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கிறார்கள். இந்த நிலையில், ஒரு மீன் குஞ்சின் விலை 10 பைசா முதல் 1 ரூபாய் வரை இருக்கும். இங்கிருந்து வாங்கப்படும் சிறு மீன்களுக்கு ஏரி, குளங்களில் கிடைக்கும் சிறிய புழுக்கள், பாசிகள் போன்றவை உணவாகக் கொடுக்கப்படுகின்றன.
இவற்றில் `டாப்னியா’ என்ற சிறு புழுக்களை மீன்கள் விரும்பி உண்ணும். இது கடற்கரையிலுள்ள கழிமுகப் பகுதிகளில்தான் கிடைக்கும். இப்போது இந்தப் புழுக்களை வளர்த்துக் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். புழுக்களை உண்டு ஓர் அங்குலம் வரை வளர்ந்த மீன்கள் மீண்டும் ஆந்திரா, கர்நாடகா பண்ணைகளிலிருந்து கொளத்தூருக்கு வந்து சேரும்.
இவை தொட்டிகளில் இட்டு விற்பனை செய்யப்படுகின்றன. கொளத்தூரில் ஒரு மீனை 1 ரூபாய்க்கு வாங்கி, அதை அலங்கார மீன் கடைகளில் குறைந்தபட்சம் 5 ரூபாய் முதல் விற்பனை செய்கிறார்கள். கொளத்தூரிலிருந்து மீன்களை வாங்கி நாடு முழுதும் விற்பனை செய்பவர்கள் இருக்கிறார்கள். சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளுக்கும் இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அலங்கார மீன் வளர்ப்பின் இதயமாக இருக்கும் கொளத்தூர் பகுதியின் மேல் அரசு கூடுதல் கவனம் செலுத்தி, அலங்கார மீன் வளர்ப்பை ஊக்கப்படுத்தினால் நிச்சயம் இன்னும் ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். அலங்கார மீன் வளர்ப்பின் தலைநகராகச் சென்னைப்பட்டினம் உருவாகவும் வாய்ப்பிருக்கிறது...’’ என்று பல தகவல்களையும் பகிர்ந்துகொண்டேன். ‘‘அலங்கார மீன் வளர்ப்பில் இவ்வளவு வாய்ப்புகள் இருக்கின்றனவா... கேட்க கேட்க ஆச்சர்யமாக இருக்கிறது. இன்னும்கூட இதைப் பற்றிச் சொல்லுங்கள்...’’ என்று ஆர்வமாகக் கேட்டார் நண்பர்.
அதை அடுத்த இதழில் பார்ப்போம்.