
மாத்தியோசி
“சினிமாதான் நம்ம நாடு நல்லா இருக்கிறதுக்கும் காரணம்; கெட்டுப்போறதுக்கும் காரணம், சார்.
‘நாங்க விவசாயம் செஞ்சு கஷ்டப்பட்டது போதும். நீயாவது படிச்சி வேற வேலைக்குப் போப்பா’னு முன்னாடியெல்லாம் சினிமாவுல வசனம் வரும். இதைப் பார்த்துப் பார்த்தே விவசாயம்ன்னா, கஷ்டமான தொழில்ங்கிற விஷ விதையை விதைச்சாங்க. அதனால விவசாயம் வேணாம்னு, சொந்த நிலத்தை வித்துட்டு, பட்டணம் பக்கம் வந்தவங்க ஏராளம், ஏராளம். அதே சினிமாக்காரங்கத்தான், ‘விவசாயி’க்கு ஜே... விவசாயம் போல ஒரு தொழில் இல்லைன்னு படம் எடுத்துக் கொண்டாடுறாங்க’’ என்று வாட்ஸ்அப் அழைப்பில் வந்த நண்பர் பொங்கி தீர்த்தார்.

ஒரு நாட்டைப் பற்றிய வரலாற்றை அறிந்துகொள்ள இலக்கியங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள் அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்வார்கள். அந்த வரிசையில் இப்போது, சினிமாவும் சேர்ந்துவிட்டது. நமக்குப் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ, சினிமா என்பது உலகின் வலுவான தகவல் தொடர்பு சாதனம். அந்தக் காலத்தில் கீற்றுக்கொட்டகையில் படங்களைப் பார்த்தோம். இந்தப் பெருந்தொற்று நேரத்தில் சினிமா தியேட்டர்கள் மூடியிருந்தாலும், ஓ.டி.டி என்ற ஊடகத்தின் மூலம் இப்போது நம் கைகளில் தவழும் ஸ்மார்ட் போனிலேயே படங்கள் பார்க்கும் வசதி வந்துவிட்டது. ஆக, ஊடகம் மாறினாலும், சினிமாவுக்கான மவுசு இருந்துகொண்டேதான் இருக்கிறது. பெருந்தொற்று கொடுக்கும் மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க, யூடியூபில் படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை கூடி வருகிறது எனக் கூகுள் புள்ளிவிரம் சொல்கிறது.
புராணப்படங்களின் யுகம் முடிந்து சமூகத் திரைப்படங்கள் உருவாக்கப்படும்போது, கிராம வாழ்க்கை, பண்ணையார், விவசாயம்... போன்றவற்றை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. இப்படித்தான் 1957–ம் ஆண்டு ‘மக்களைப் பெற்ற மகராசி’ படத்தில் ‘மணப்பாறை மாடுகட்டி’ பாடல் இடம்பெற்றது. இந்தப் பாடலை எழுதிய மருதகாசி விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர். விவசாயம் செய்தவர். அதே ஆண்டு வெளிவந்த ‘எங்க வீட்டு மகாலட்சுமி’ என்ற திரைப்படத்தில், ‘நம்ம நாட்டுக்குப் பொருத்தம், நாமே நடத்தும் கூட்டுப்பண்ணை விவசாயம், பட்ட பாட்டுக்கு தகுந்த ஆதாயம்’ என்று ஒரு பாடல் வரும். இதில் உள்ள பொதுவுடமை சிந்தனையைப் பார்க்கும் பலரும், ‘பட்டுக்கோட்டையார் நல்லா எழுதியிருக்காருப்பா..!’ எனச் சபாஷ் போடுவார்கள். ஆனால், இந்தப் பாடலை எழுதியவர் உடுமலை நாராயணக் கவி. சோவியத் ரஷ்யாவில் இருந்த கூட்டுப்பண்ணைப்போல, தமிழ்நாட்டிலும் கூட்டுப்பண்ணைகள் உருவாக வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார்.
‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாந்
தொழுதுண்டு பின் செல்பவர் என்றே சொல்லும்
பழுதற்ற வள்ளுவன் பைந்தமிழ் நீதி வழி சென்று
மாண்பால் உயர்ந்த நாடு நமது தாய்நாடு......
நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும்
கூட்டுப் பண்ணை விவசாயம்
பட்ட பாட்டுக்குத் தகுந்த ஆதாயம் உண்டு
பழைய கொள்கைகளை விடுவது ஞாயம்
காட்டையும் மேட்டையும் தோட்டந் தொடிகள்
கழனிகள் செய்வது திறமை
அதனாலே கட்டாயம் நீங்கும் வறுமை
அவ்வைப் பாட்டியும் பாட்டால் பாடிப்
பெருமை பாராட்டிய தொழில் முறைமை-இது
பரம்பரையாய் நமக்குரிமை தமிழ்
ஒத்தைக் குடித்தனம் பத்துக் காணியில்
உழுது பாடுபட முடியாது
ஒரு பத்துக் குடித்தனம் நூறு காணியில்
பாங்காய் உழுவது தான் தோது
பாளையக்காரர் ராஜாதி ராஜா பதவிகள் பறக்கின்றபோது
நம்ம பட்டாக்கள் மிட்டா மிராசுகள்
ஜம்பம் கட்டாயமாய்ப் பலிக்காது...
நாளுக்கு நாளாக் காலம் மாறுது நடப்பதை
நெனச்சா நடுக்கமாகுது ஆளை ஏய்க்க இனி முடியாது
மக்கள் ஆட்சியில் சுயநலம் கூடாது நம்ம
புருஷன் பெண்டாட்டி புள்ளே குட்டிங்க
உருப்படிக் கணக்கையும் போட்டுக்கணும்
சரிசமமாக விகிதாச்சாரப்படி சாப்பாட்டு செலவுக்கும்
வாங்கிக்கணும் வரும்படி தன்னை அதிகமாக்கிக்கணும்
வகைத் தொகையான செலவுஞ் செய்யணும்
உலகம் நம்மைக் கண்டு நடக்கவே
உண்மையோடு நாம் உழைக்கணும்
உயிர் பிழைக்கணும்…’
இந்த ஒரு பாடலை கேட்டாலே, அன்று இருந்த விவசாயிகளின் நிலையை அறிந்து கொள்ளமுடியும். தனியார் நிறுவனத்தில் உயர்பதவியில் உள்ள நண்பர் ஒருவர், எப்போது பார்த்தாலும், ‘நம்ம நாட்டுக்குப் பொருத்தம், நாமே நடத்தும் கூட்டுப்பண்ணை விவசாயம், பட்ட பாட்டுக்கு தகுந்த ஆதாயம்’ என்று இந்தப் பாடல் வரிகளை, முணு முணுத்துக்கொண்டிருப்பார்.
ஒரு கட்டத்தில் தன் சேமிப்பைத் திரட்டி, சில நண்பர்களுடன் சேர்ந்து, நிலம் வாங்கி விவசாயம் செய்யத் தொடங்கிவிட்டார். இதுதான், சினிமாவின் வீச்சு.
“1957-70-களில் வெளிவந்த சினிமா படங்களை உற்றுக்கவனித்தால் ஒரு விஷயம் கண்ணுக்குப் புலப்படும். இந்தக் காலகட்டங்களில் ஒரு இடத்திலாவது கட்டாயம் உணவு சாப்பிடும் காட்சியை வைத்திருப்பார்கள். விதவிதமான உணவுகளை நடிகர்கள் ருசிக்கும் காட்சியைப் பார்க்கவே, அப்போது சினிமாவுக்குச் சென்றவர்கள் உண்டு.
காரணம், அந்தச் சமயத்தில் நாடு முழுக்க உணவுப் பற்றாக்குறை இருந்தது. இதனால், சினிமாவில், உணவு சாப்பிடும் காட்சியை வைத்து, மக்களின் பசியைச் சினிமா கற்பனையாகத் தீர்த்துவைத்தது’’ என எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.

1967-ம் ஆண்டுப் பசுமைப் புரட்சி நாடு முழுக்கப் பரவியிருந்த நேரம். அரசும் மக்களும் விவசாயம், விவசாயம் என்று பேசிக்கொண்டிருந்த நேரத்தில், ‘விவசாயி’ திரைப்படம் வெளிவந்தது. படல், காட்சிகள் , கதை... என எல்லாவற்றிலும் விவசாயத்தின் மேன்மைகளைச் சொல்லும்விதமாக அமைந்தன. ‘கடவுளென்னும் முதலாளி... கண்டெடுத்த தொழிலாளி விவசாயி...’ என்ற பாடல் இப்போது ஒலித்தாலும் உணர்ச்சி வசப்படப்படக்கூடியவர்கள் உள்ளார்கள். இந்தப் பாடலில் எம்.ஜி.ஆர் டிராக்டர் மூலம் உழவு ஓட்டுவார். படம் முழுக்கப் பல காட்சிகளில் அவர் ஓட்டிய டிராக்டர், 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் திருச்சி மாவட்டம், குமுளூர் வேளாண் கல்லூரியில் உள்ள பண்ணையில் நன்றாக ஓடிக்கொண்டிருந்ததை 2007-ம் ஆண்டுப் பார்த்தேன்.
இந்தத் திரைப்படம் வெளிவந்த பிறகுதான், விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்கி உழவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் செயல்வடிவம் கொண்டது. பெரிய விவசாயிகள் வீட்டு வாசலில் டிராக்டர் நிற்பதைப் பெருமையாக நினைக்கத் தொடங்கினார்கள். இதனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உழவுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த மாடுகள் அடிமாடுகளாக மாறின. ஒரு கட்டத்தில் உழவு என்றால், டிராக்டர்தான் என்ற நிலை உருவாகிவிட்டது. டிராக்டரின் பயன்பாடு முழுமையாகத் தேவைப்படாத விவசாயிகள்கூட, கடன் வாங்கி டிராக்டர் வாங்கினார்கள். பிறகு பொருளாதார சிக்கலில் சிக்கிக் கொள்கிறார்கள்.
டிராக்டர் மூலம், வரப்பு அமைத்தல், விதைப்பு, அறுவடை... என 30-க்கும் மேற்பட்ட பணிகளுக்குப் பயன்படுத்த முடியும். ஆனால், நடைமுறையில் உழவு செய்யவும், பாரம் சுமக்கவும் மட்டுமே பயன்படுத்திக் கொண்டுள்ளோம். நமக்கு ஓயாமல் உழைத்து, இயற்கை உரம் கொடுத்த மாடுகளையும் விரட்டிவிட்டு, கையில் உள்ள கருவியையும் முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் உள்ளோம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு புனேவில் உள்ள பிரபல டிராக்டர் நிறுவனத்துக்குச் சென்றிருந்தபோது, டிராக்டர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் (Artificial intelligence) இயங்குவதைப் பார்த்தேன். எத்தனை வகைப் பணிகளை, அந்த டிராக்டர் செய்யும் என்பதை, டிராக்டரில் உள்ள டிஜிட்டல் திரையில் ஒளிர்ந்தன. டிராக்டர் ஒரு நிலத்தைச் சுற்றிவந்தால், அது எத்தனை ஏக்கர் நிலம் என்பதைத் துல்லியமாகக் காட்டியது. உழவு செய்யும் அளவுக்கு நிலத்தில் போதுமான அளவுக்கு ஈரப்பதம் உள்ளதா? என்பது போன்ற தகவல்களைக் கொடுத்தது. இந்த டிராக்டரை விவசாயி கையில் உள்ள ‘ஸ்மார்ட் போன்’ மூலம் இயக்க முடியும்.
சரி, சினிமா கதைக்கு வருவோம்.
‘விவசாயி’ படம் வெளிவந்த காலகட்டத்தில், அரசாங்க வேலையைக் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ‘‘சொந்த நிலத்தை உழுது, சுதந்திரமாக விவசாயம் செய்வதைக் காட்டிலும், அரசாங்க உத்தியோகம் பெரிதில்லை’’ எனப் பட்டதாரிகள், வயலில் இறங்கி வேலை செய்தார்கள். இன்றும் கூட ஊருக்கு இரண்டு பேர், ‘அரசு வேலை வேண்டாம்’ என்று சொல்லியவர்கள் உண்டு. கடந்த பதினைந்து ஆண்டுகளில் விவசாயத்தைப் பெருமைப்படுத்தும் படங்கள் வரத்தொடங்கிவிட்டன. அச்சு, தொலைக்காட்சி... போன்ற ஊடகங்களும் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளன. பெருந்தொற்றும், விவசாயத்தை நோக்கிச் செல்ல வழி அமைத்துக் கொடுத்துவிட்டது. மீண்டும், அந்த ‘விவசாயி’ காலம் வந்துவிட்டது. என்ன அப்போது, அரசு வேலையை வேண்டாம் என்றார்கள். இப்போது ஐ.டி கம்பெனி வேலையை வேண்டாம் என்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.