மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு : இயற்கை விவசாயத்தைப் போற்று! ‘சூரரைப் போற்று’ சொல்ல மறந்த கதை!

சூரரைப் போற்று
பிரீமியம் ஸ்டோரி
News
சூரரைப் போற்று

மாத்தியோசி

தீபாவளிக்குச் சில தினங்களுக்கு முன்பே எந்தப் பக்கம் திரும்பினாலும் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். கதையைக் கேட்டபோது, குறைந்த விலையில் விமானச் சேவை வழங்கிய ஏர் டெக்கான் நிறுவனத்தின் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை கதை என்று சொன்னார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு ‘சிம்பிளி ஃபிளை’ (Simply Fly) என்ற தனது நூல் வெளியீட்டு விழாவுக் காகச் சென்னை வந்திருந்த கேப்டனைச் சந்தித் திருக்கிறேன். நூல் வெளியீட்டு விழாவில் அவர் பேசியவை இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டுள்ளன. “அடிப்படை யில் நான் இயற்கை வழி விவசாயம் செய்த விவசாயி. குறைந்த செலவில் நல்ல விளைச்சல் எடுப்பதுதான் இயற்கை விவசாயத்தின் அடி நாதம். அதைத்தான் விமானம் நிறுவனம் தொடங்கியபோதும் செய்தேன். யாரும் எதிர் பார்க்காத வகையில் விமானக் கட்டணத்தைக் குறைத்து கொடுக்க முடிந்தது’’ என்றார்.

மண்புழு மன்னாரு : இயற்கை விவசாயத்தைப் போற்று!  ‘சூரரைப் போற்று’ சொல்ல மறந்த கதை!

ராணுவ அதிகாரி, இயற்கை விவசாயி, விவசாய ஆலோசகர், சொட்டுநீர்ப் பாசன முகவர், ஹோட்டல் உரிமையாளர், பங்குச்சந்தை ஆலோசகர், சட்டமன்ற வேட்பாளர் (பி.ஜே.பி), ஹெலிகாப்டர் நிறுவனத்தின் தலைவர், விமான நிறுவனத்தின் தலைவர் எனப் பல தொழில்களைச் செய்த அனுபவங்களைச் சொன்னார். விவசாயத்தைப் பற்றிப் பேசும்போது, அவர் வேறு மாதிரியான மனிதராகத் தெரிந்தார். விழா முடிந்ததும், ‘கேப்டன்... உங்கள் பண்ணைக்கு வந்து பார்க்கலாமா?’ என்று கேட்டேன்.

“நீங்கள் எப்போது வேண்டு மானாலும் கர்நாடக மாநிலம் ஹஸனுக்கு அருகில் உள்ள என் பண்ணைக்கு வரலாம். பண்ணையில் உள்ளவர்கள் அனைத்துத் தகவல்களும் கொடுப்பார்கள். இப்போது சரக்கு விமான நிறுவனம் தொடங்குவதில் மும்முரமாக உள்ளேன். அதனால், பண்ணைக்கு உங்களை நானே அழைத்துச் செல்ல முடியாது; மன்னிக்கவும்’’ என்றார்.இந்தச் சந்திப்புக்குப் பிறகு, அவரை மறந்தே போனேன். அவரைப் பற்றிய திரைப்படம் வந்ததும், 500 பக்கங்கள் கொண்ட சிம்பிளி ஃபிளை ஆங்கிலப் புத்தகத்தை மீண்டும் படிக்கத் தொடங்கினேன். தீபாவளிக்கு முதல் நாள் படிக்க ஆரம்பித்தேன்; கடைசிப் பகுதியைப் படித்து முடித்தபோது, தீபாவளி முடிந்திருந்தது. ‘‘எந்த வேலையை எடுத்துக்கொண்டாலும் சன்னதம் வந்தவர்போல, தீவிரமாகச் செயல்படுவேன். அந்த வேலையை முடிக்காமல், வேறு எதையும் செய்ய மாட்டேன்’’ எனப் புத்தகத்தில் சொல்லியிருப்பார். அதை அந்தப் புத்தகத்தைப் படிப்ப வருக்கும் கடத்தியிருந்தார்.ஆசை, கோபம், மகிழ்ச்சி, தன்னம்பிக்கை, நம்பிக்கை துரோகம், வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம்… என எல்லாவற்றையும் கடந்து, ‘ஒரு சராசரி மனிதன் சாதனையாளர் ஆனார்’ என்பதுதான், அவரது வாழ்க்கை சொல்லும் பாடம்.விவசாயம் செய்பவர்களுக்கும் இனி விவசாயம் செய்ய இருப்பவர்களுக்கும் கேப்டன் கோபிநாத் அந்த நூலில் சொல்லியுள்ள அனுபவங்கள் நிச்சயம் வழிகாட்டியாக இருக்கும். இதோ, கேப்டன் கோபிநாத் பேசுகிறார்…

சூரரைப் போற்று
சூரரைப் போற்று

“கர்நாடக மாநிலம் ஹஸனிலிருந்து 23 கி.மீ தொலைவில் உள்ள கொரூரில் பிறந்தேன். ஆரம்பக் கல்வியைக் கன்னட வழியில் படித்தேன். சைனிக் பள்ளி தேர்வில் வென்றேன். ராணுவ அதிகாரியாகப் பதவி வகித்தேன்.27 வயதில் விருப்ப ஓய்வுபெற்று கிராமத்துக்கு வந்தேன். ஓய்வூதியம் பெறும் சேவையில் நான் இல்லை. எனவே, ராணுவத்திலிருந்து 6,000 ரூபாய் செட்டில்மென்ட் தொகையைக் கொடுத்தார்கள். அந்தப் பணத்துடன் ஊர் திரும்பினேன். அடுத்து என்ன செய்வது என்று தெரியாது. ஹேமாவதி அணைக்கட்ட எங்கள் நிலத்தை அரசு எடுத்துக் கொண்டிருந்தது. அதற்கு மாற்றாக ஜவகல் கிராமத்தைத் தாண்டி பொட்டல் நிலத்தைக் கொடுத்திருந்தார்கள். ஒரு நாள் அந்த நிலத்தைப் பார்க்கச் சென்றேன். திடீரென அங்கு தங்கி விவசாயம் செய்தால் என்ன என்று யோசனை தோன்றியது. ‘உலகில் பல தொழில்கள் இருக்கின்றன. அதில் உழவுத் தொழிலே உயர்வானது’ என்று கன்னடக் கவிஞர் சர்வக்ஞர் சொன்னது நினைவுக்கு வந்தது. ‘இந்த உலகின் எல்லாத் தொழில்களுமே அந்த ஆதித் தொழிலையே சார்ந்திருக்கின்றன. விவசாயிதான் முதல் மனிதன்’ என எமர்ஸன் சொன்னதும் அந்த நேரத்தில் நினைவுக்கு வந்தது. உடனே, அதற்கான வேலைகளில் இறங்கினேன்.

ஒரு சராசரி மனிதன் சாதனையாளர் ஆனார்’ என்பதுதான், அவரது வாழ்க்கை சொல்லும் பாடம்.

என் தந்தை ராமசாமி ஐயங்கார், பள்ளி ஆசிரியராக இருந்தாலும், விவசாயத்தையும் விரும்பிச் செய்தவர். ஆனால், ‘அந்தப் பொட்டல் நிலத்தில் விவசாயம் செய்யப்போகிறேன்’ என்று சொன்னதைக் கேட்டதும் திடுக்கிட்டுப் போனார். ஆனால், நான் உறுதியாக இருந்தேன். ஒரு நல்ல நாளில் மாட்டு வண்டியில் பொருள்களை ஏற்றிக்கொண்டு, அந்த நிலத்துக்குச் சென்றேன். டென்ட் அடித்துத் தங்கினேன். இடையில் எனக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்தன. என் வருங்கால மனைவி பார்கவியிடம் எல்லாவற்றையும் சொன்னேன். என் தோட்டத்துக்கு அழைத்து வந்து காட்டினேன். அவரின் குடும்பத்தினருக்கு என் மேல் நம்பிக்கை இல்லை. ஆனால், பார்கவி என்னை நம்பினாள். என் கனவில் அவளுக்கு நம்பிக்கை இருந்தது. திருமணம் நடந்தது. அந்தக் காட்டில் புதியதாகக் கட்டிய சிறிய வீட்டில் என் மணவாழ்க்கை தொடங்கியது. அந்தச் சமயத்தில் என் பண்ணைக்கு மின்சார இணைப்பு கிடைக்கவில்லை. தண்ணீர் இறைப்பது கஷ்டமாக இருந்தது. அந்த வேலை செய்யக் கழுதைகளை வாங்கி வந்தேன். ஆனால், அதை எப்படி வேலை வாங்க வேண்டும் எனத் தெரியவில்லை. அந்தக் கழுதைகள் எனக்கு உதவி செய்வதைவிட உபத்திரம் தந்தன. அதை விற்றுவிட்டுத்தான், மறு வேலைபார்த்தேன்.

மண்புழு மன்னாரு : இயற்கை விவசாயத்தைப் போற்று!  ‘சூரரைப் போற்று’ சொல்ல மறந்த கதை!

பகலில் வயலில் வேலை செய்வேன் மாலை நேரத்தில் அடுத்த திட்டங்கள் குறித்துச் சிந்தித்தல், புத்தகங்கள் படித்தல் என்று நேரத்தைக் கழிப்பேன். பால் பண்ணை என்றால் தினமும் வருமானம் கிடைக்கும். கோழிப்பண்ணை, பட்டுப்புழு வளர்ப்பு மூலம் மாத வருமானம் கிடைக்கும். பயிர் விவசாயம் செய்து மூன்று போகம் விளைவித்தால் அதில் நிறைய வருமானம் கிடைக்கும். வாழை நடுவது ஆண்டுக்கு ஒருதடவை நல்ல பலன் தரும். ஏழு ஆண்டுகள் தென்னையை நன்கு பராமரித்தால் சுமார் 75 ஆண்டுகளுக்குக் கவலையே இல்லாமல் இருக்கலாம். கற்பக விருட்சம் என்று தென்னை மரம் புராணங்களில் புகழப்பட்டிருக்கிறது. நீண்ட காலம் வாழக்கூடியது. எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றித் தரக்கூடியது. ஒரு பத்து ஆண்டுக் காலத்தைச் செலவழித்து முழுமையான பண்ணையை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். பால் பண்ணை, கோழிப் பண்ணை, பட்டுப் புழு வளர்த்தல் என எல்லாவற்றையும் செய்தேன். எல்லா விவசாயிகளைப் போலவே நானும் கடனில் விழுந்தேன். நேரம், காலம் பார்க்காமல், கடினமாக உழைத்தேன்.

ஆனால், என்னால் வாங்கிய கடனைத் திருப்பி அடைக்க முடியவில்லை. எங்கோ தவறு நடக்கிறது என்று மண்டைக்குள் ஓடியது. இடுபொருள் செலவுகளைக் குறைக்கும் இயற்கை விவசாயமே அதற்குத் தீர்வு என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினேன். 1984-ம் ஆண்டு அமெரிக்கா ஸ்காலர்ஷிப்புக்கு ரோட்டரி இன்டர்நேஷனல் விண்ணப்பங்களை அனுப்பச் சொல்லியிருந்தது. மருத்துவர், வங்கியாளர், வக்கீல், விவசாயி என நான்கு துறைகளுக்கான அந்த ஸ்காலர்ஷிப்பில் விவசாயியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் உள்ள விவசாயத் தொழில்நுட்பங்களை நேரடியாகப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பயணம் என் வாழ்க்கையில் திருப்புமுனையை உருவாக்கியது. அப்படி என்ன நடந்தது அங்கே?’’

- அதை அடுத்த இதழில் பார்ப்போம்