
மாத்தியோசி
குறைந்த விலையில் விமானச் சேவை வழங்கிய ஏர் டெக்கான் நிறுவனத்தின் தலைவர் ஜி.ஆர் கோபிநாத், தனது வாழ்க்கை கதையை ‘சிம்பிளி ஃபிளை’ (Simply Fly) என்ற நூலில் எழுதியுள்ளார். இதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘சூரரைப் போற்று’ திரைப்படம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் சொல்லப்படாத கோபிநாத்தின் இயற்கை விவசாய அனுபவங்களைக் கடந்த இதழில் எழுதியிருந்தோம். அதன் தொடர்ச்சி, இதோ...
‘‘பகல் முழுக்க வயலில் வேலை செய்வேன்; மாலை நேரத்தில் அடுத்த பருவத்தில் என்ன செய்யலாம் என்று திட்டமிடுவேன். விவசாயம் சம்பந்தமான புத்தகங்களை விரும்பிப் படிப்பேன். குறிப்பாக, இயற்கை விவசாயம் சம்பந்தமான புத்தகங்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

பால் பண்ணை, கோழிப்பண்ணை, பட்டுப் புழு வளர்த்தல் எனப் பலவற்றையும் செய்தேன். அக்கம் பக்கத்து விவசாயிகள் போலவே கடனிலும் ஆழ்ந்தேன். மிகக் கடினமாக உழைத்தேன் என்பது உண்மைதான். ஆனால், என்னால் வாங்கிய கடனைத் திருப்பி அடைக்க முடியவில்லை. எங்கோ தவறு நடக்கிறது என்று தெரிந்தது. செலவுகளைக் குறைக்கும் இயற்கை விவசாயமே அதற்குத் தீர்வு என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினேன்.
1984-ம் ஆண்டு அமெரிக்காவில் ஸ்காலர்ஷிப்புக்கு ரோட்டரி இன்டர்நேஷனல் விண்ணப்பங்களை அனுப்பச் சொல்லியிருந்தது. மருத்துவர், வங்கியாளர், வக்கீல், விவசாயி என நான்கு துறைகளுக்கான அந்த ஸ்காலர்ஷிப்பில் விவசாயியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்தத் திட்டத்தின் ஓர் பகுதியாக அமெரிக்காவில் பின்பற்றப்படும் விவசாயத் தொழில்நுட்பங்களை நேரடியாகப் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பயணம் என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் 6 வாரங்கள் தங்கியிருந்தேன். வெர்மாண்ட், நியூ ஹாம்ஷையருக்குப் போனேன். விவசாயம் குறித்து முக்கியமானவற்றைக் கற்றுக்கொண்டேன். இயற்கை விவசாயம் செய்து வரும், விவசாயி பண்ணைக்குச் சென்றோம். ‘என் பண்ணையில் கிணறு தோண்டி நீர் எடுக்க மாட்டேன். அதோ, பக்கத்தில் ஓடும் ஆற்றின் நீரை மறந்தும் குடிக்கவும் மாட்டேன். என் வயலுக்கும் பயன்படுத்த மாட்டேன். மழை நீரை மட்டுமே குடிக்கவும், பயிரிடவும் பயன்படுத்துகிறேன்’ என்றார்.

முதலில் அவர் கேலியாகப் பேசுகிறார் என்று நினைத்தேன். பண்ணையைச் சுற்றிப்பார்க்கும்போது, உண்மையைத் தெரிந்துகொண்டேன். இந்த விவசாயி இயற்கை விவசாயம் செய்தாலும் பக்கத்தில் உள்ள நிலத்தில் கொட்டப்படும் ரசாயன உரங்களின் நஞ்சுகள் ஆற்றில் கலந்து வருகின்றன; நிலத்தடி நீரிலும் கலந்துவிடுகின்றன. இதனால், ஒட்டுமொத்த நிலமும் விஷமாகிவிடுகிறது. அந்த அமெரிக்கா விவசாயி சொல்லியது நூற்றுக்கு நூறு உண்மை. ஏற்கெனவே, மசானாபு ஃபுகோகாவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ நூலில், இயற்கை விவசாயத்தின் அருமையை அறிந்திருந்தேன் (பல ஆண்டுகள் கழித்து ஜப்பான் சென்றபோது, அவரது பண்ணைக்குச் சென்று சந்தித்துப் பேசியுள்ளேன்). அமெரிக்கா பயணம் என் கண்களைத் திறந்துவிட்டது.
ஊர் திரும்பியதும் இயற்கை விவசாயத்தில் வேகமாக இறங்கினேன். ஒருபோதும், ரசாயனத்தைக் கையில் தொடக்கூடாது என உறுதியாக இருந்தேன். பட்டுப்புழு வளர்ப்பில் சில புதிய வழிமுறைகளைப் பின்பற்றினேன். பொதுவாக விவசாயிகள் மூங்கில் தட்டுகளைப் பட்டுப்புழு வளர்க்கப் பயன்படுத்துவார்கள். எல்லோரும் மூங்கிலையே பயன்படுத்துவதால் அது கிடைப்பது அரிதாக இருந்தது. இதோடு அதன் விலையும் கூடுதலாக இருந்தது. இன்னொன்று மூங்கில் தட்டுகளில் நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டியது அவசியம்.

வழக்கமாகப் புழுக்களை வளர்க்க பயன்படும் மல்பெரி இலைகளைச் சாகுபடி செய்ய விவசாயிகள் பூச்சிக்கொல்லி விஷத்தைப் பயன்படுத்துவார்கள். அது பட்டு உடையை உடுத்துப்பவர்களுக்கும் கேடு தரும். ஆகையால், வைக்கோலைப் பயன்படுத்தித் தட்டுகள் செய்ய முடிவு செய்தேன். இது புதிய முறை அல்ல. பல ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் பயன்படுத்திய முறைதான். அதை மறுகண்டுபிடிப்புச் செய்து, சில அடிப்படை மாற்றங்கள் செய்தேன். ஆரம்பத்தில் நல்ல பலன் கிடைக்கவில்லை. திரும்பத் திரும்ப முயற்சி செய்தேன். செலவு மிக மிகக் குறைவாக இருந்தது. எனவே, எனக்கு லாபமாகவே அமைந்தது. இந்தத் தொழில் நுட்பம் எனக்கு நல்ல பலனைக் கொடுத்தது. பூச்சிக் கொல்லி பயன்படுத்தி, மூங்கில் தட்டுகளில் வளர்க் கப்படும் பட்டு நூலைக் காட்டிலும், எனது பட்டு நூலின் தரமும் கூடியிருந்தது. ரசாயனத்தைப் பயன் படுத்தினால் என்ன கிடைக்குமோ, அதைவிட அதிகமாகவே வருமானம் கிடைத்தது. இதன் மூலம் ஓர் அரிய உண்மையைக் கண்டுகொண்டேன். குறைந்த செலவில் செய்யக்கூடியவை சூழலுக்கு ஏற்றவையாக இருக்கிறது. சூழலுக்கு ஏற்றவையெல்லாம் குறைந்த செலவு கொண்டவையாக இருக்கிறது.
‘‘குறைந்த செலவில் செய்யக்கூடியவை சூழலுக்கு ஏற்றவையாக இருக்கிறது. சூழலுக்கு ஏற்றவையெல்லாம் குறைந்த செலவு கொண்டவையாக இருக்கிறது.’’
நான் மறுகண்டுபிடிப்பு செய்த தொழில்நுட்பம் மெள்ள பரவத்தொடங்கியது. வானொலிகளில் என் பட்டு புழு வளர்ப்பு அனுபவம் பற்றி நிகழ்ச்சிகள் ஒலி பரப்பாகின. வேளாண் பல்கலைக்கழகங்களில் கருத்துரை நிகழ்த்தினேன். பட்டுப்புழு வளர்ப்புக் கருத்தரங்குகளில் பேசினேன். ஒரு விவசாயியாக என் அனுபவங்களைப் பத்திரிகைகளில் எழுத ஆரம் பித்தேன். நாளிதழ்கள், மாத, வார இதழ்களில் என்னைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்தன.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ரோலக்ஸ் வாட்ச் நிறுவனம் ‘ரோலக்ஸ் லாரியேட் விருது’ என்ற பெயரில் சர்வதேச விருது வழங்கி வருகிறது. அப்போது மூன்று துறைகளில் புதுமையான, முன்னோ டியான சாதனைகள் செய்தவர்களுக்கு விருதும் பண முடிப்பும் கொடுக்கிறது. முதலாவதாக, மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்த தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள். இரண்டாவதாக, உலகம் குறித்த நம் புரிதலை மேம்படுத்திய சாகசங்கள், கண்டுபிடிப்புகள். மூன்றாவதாக, உள்ளூர் சுற்றுச் சூழலைப் பாதுகாத்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த உதவிய களப்பணிகள். என் பெயர் மூன்றாவது பிரிவுக்கு நண்பர்கள் மூலம் விண்ணப்பம் அனுப்பப்பட்டது. விண்ணப் பங்களிலிருந்து சிறந்த நபரை இறுதியாகத் தேர்ந்தெடுத்துத் தங்கம் கலந்த ரோலக்ஸ் வாட்ச்சும் பண முடிப்பும் பரிசாக அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள். கடின உழைப்புக்கு எப்போதும் பலன் உண்டு. 1996-ம் ஆண்டுக்கான ரோலக்ஸ் விருது எனக்குத் தரப்பட்டது (இப்போதும் கேப்டன் கையில் இந்த ரோலக்ஸ் வாட்ச்சை பார்க்கலாம்). உண்மையில் விருது, பாராட்டுப் பெறுவதில் எனக்கு ஆர்வம் இல்லை. இயற்கை விவசாயத்தின் நன்மைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த, இது வாய்ப்பாக இருக்கும் என்பதால் ஏற்றுக்கொண்டேன். விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்ச்சைவிட இதுவே எனக்கு மிகவும் மன நிறைவைக் கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும்’’ என்று ஒரு கிராமத்து விவசாயி போல வெளிப் படையாக எல்லாவற்றையும் சொல்லியுள்ளார் கோபிநாத்.
‘‘ஏர் டெக்கான் விமான நிறுவனம் தொடங்கியது முதல் என்னிடம் அதிகமாகக் கேட்கப்படும் கேள்வி இதுதான். ‘குறைந்த கட்டணத்தில் எப்படி விமான நிறுவனத்தை நடத்த முடிந்தது?’
குறைந்த செலவில் நல்ல விளைச்சல் எடுப்பதுதான் இயற்கை விவசாயத்தின் அடி நாதம். அதைத்தான் விமான நிறுவனம் தொடங்கியபோதும் செய்தேன். யாரும் எதிர்பார்க்காத வகையில் விமானக் கட்டணத்தைக் குறைத்து கொடுக்க முடிந்தது. என் முதல் விமானம் வானத்தில் பறந்தபோது, என் பண்ணையில் முதல் முறையாக வாழை குலை தள்ளியபோது ஏற்பட்ட ஆனந்தம்போலவே இருந்தது’’ என ஒரு இயற்கை விவசாயி, விமானம் நிறுவனம் நடத்திய கதை விரிகிறது.