மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சீனாவை மிஞ்சும் சேலம் வெண்பட்டு... கருணை பொங்கும் காஞ்சிப் பட்டு!

மாத்தியோசி
பிரீமியம் ஸ்டோரி
News
மாத்தியோசி

மாத்தியோசி - மண்புழு மன்னாரு

வெளிநாட்டில் வாழும், தமிழகத்தைப் பூர்வீகமாகக்கொண்ட நண்பர் குடும்பத்துடன் தமிழ்நாடு வந்திருந்தார். ‘‘தரமான பட்டு வேட்டி, பட்டுப் புடவைகள் வாங்க வேண்டும். தெரிந்த கடையிருந்தால் சொல்லுங்கள்...’’ என்றார். ``பட்டு வேட்டி எடுக்க சேலம் நகருக்கும், பட்டுப் புடவை எடுக்க காஞ்சிபுரத்துக்கும் போகலாம்’’ என்றேன். இரண்டு ஊர்களும் வெவ்வேறு திசையிலிருக்கின்றன. இரண்டுக்கும் என்ன தொடர்பு என்பதுபோலக் குழப்பமாகப் பார்த்தார் நண்பர். சூடான பனங்கற்கண்டு பால் குடித்தபடி, பட்டு குறித்த விவரங்களை விளக்கினேன்.

``பட்டு வேட்டி உற்பத்தியில், அதிலும் வெண்பட்டு வேட்டி உற்பத்தியில் இந்தியாவிலேயே சேலம்தான் முன்னணியில் இருக்கிறது. பொதுவாக, தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் இயக்குநர் அலுவலகங்கள் சென்னையில்தான் செயல்பட்டுவருகின்றன. ஆனால், பட்டு வளர்ச்சித்துறையின் இயக்குநர் அலுவலகம் சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டிருக்கிறது என்ற தகவல் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பட்டு உற்பத்தியில் கர்நாடகா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாமிடத்திலும் இருக்கின்றன. சேலம் பட்டு வேட்டியில் மயில் கண் இருக்கும். மயில் கண் இருந்தால்தான் அது கம்பீரமாகவும் அழகாகவும் இருக்கும். வேட்டியின் ஒரு சரிகை பச்சை நிறத்திலும், மற்றொரு சரிகை சிவப்பு நிறத்திலும் இருக்கும். அதனுள்ளே சின்ன சின்ன கட்டங்களில் மயில் கண் போன்ற வடிவங்கள் இருக்கும்.

மாத்தியோசி
மாத்தியோசி

பட்டு வேட்டிக்கு, பட்டு நூல் எடுத்தல், சுற்றுதல், முறுக்குதல், சலவை, சாயம், தறியோடு நூலைச் சேர்த்தல், ஒழுங்குபடுத்துதல், நெய்தல் உட்பட 12 வகையான பணிகள் நடைபெறும். இப்படிச் சுழற்சி முறையில் வேலைகள் இருப்பதால், ஒரு வேட்டி தயாரிப்பதற்கு 10 நாள்கள் பிடிக்கும். வழக்கமாக சாதாரண வேட்டிகளில் ஒரே ஒரு நாடா மட்டுமே கோர்ப்பார்கள். ஆனால் இந்த வேட்டியில் மூன்று நாடாக்கள் கோர்க்கப்படும். இவ்வளவு சிரத்தையுடன் நெய்யப்படுவதால் சேலம் பட்டு வேட்டிக்கு புவிசார் அந்தஸ்து கிடைத்திருக்கிறது.

திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பட்டுக்கூடு உற்பத்தி அதிக அளவில் நடைபெறுகிறது. சேலத்தில் ஏழு கூட்டுறவுச் சங்கங்கள் வெண் பட்டு வேட்டிகளைத் தயாரித்துவருகின்றன. ‘‘காவிரி நீரில் சலவை செய்யப்படுவதாலும், பட்டுக்கேற்ற சூழல் காரணமாகவும் சீனப் பட்டு நூலைவிட சேலம் பட்டு நூலுக்கு அதிக வெண்மை கிடைக்கிறது. இங்கு தயாராகும் வேட்டிகள் விற்பனைக்காக சீனாவுக்கே அனுப்பிவைக்கப்படுகின்றன. வேறு பல நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன’’ என்ற தகவலை ஒருமுறை சேலத்தில் பட்டு விற்பனை செய்துவரும் நண்பர் சொன்னார்.

‘‘பட்டுத் துணிகளை விழாக் காலங்களில் ஏன் அணிகிறோம் என்பதற்கு அறிவியல் காரணம் உண்டு. பட்டுத் துணி உரசப்படும்போது உருவாகும் மின் ஆற்றல் அதை அணிபவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.’’

பட்டு வேட்டியில் பட்டு மட்டுமல்ல, வெள்ளியும் தங்கமும் இருக்கின்றன. அதாவது, 40 சதவிகிதம் வெள்ளி, 0.5 சதவிகிதம் தங்கம் என்ற கணக்கீட்டின் அடிப்படையில், காஞ்சிபுரத்திலுள்ள தமிழ்நாடு அரசு ஜரிகை நிறுவனம் சேலத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்குகிறது. ‘‘தேசிய அளவில் வெண்பட்டு உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பட்டு சுற்றுலா மையம் அமைக்கப்படும்’’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது கவனிக்கத்தக்கது. பட்டு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பட்டு வளர்ச்சித்துறை லட்சக்கணக்கில் மானியங்களை அள்ளிக்கொடுக்கிறது. விவரம் தெரிந்த விவசாயிகள் மட்டுமே பட்டு வளர்ப்பில் ஈடுபடுகிறார்கள். திருப்பூர் மாவட்டத்தில் பட்டு வளர்ப்பில் மட்டும் ஈடுபட்டு, மாதம் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் பார்க்கும் ‘பலே’ விவசாயிகள் இருக்கிறார்கள். தங்கள் நிலத்தின் ஒரு பகுதியை மல்பெரி சாகுபடி செய்து, வீட்டுக்கு அருகில் கொட்டகை அமைத்து அதில் பட்டுப்புழுக்களை வளர்க்கலாம். ஏறத்தாழ பால் மாடு வளர்ப்புபோல பட்டுப்புழு வளர்ப்பையும் செய்தால் நிச்சயம் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்’’ என்று சொன்னபோது, வெளிநாட்டு நண்பர், ‘‘காஞ்சிபுரம் பற்றியும் சொல்லுங்கள்...’’ என்றார்.

``பட்டுப் புடவைகளுக்குப் பெயர் பெற்ற ஊர் காஞ்சிபுரம். இங்கே பல கூட்டுறவுச் சங்கங்களில் பட்டுப் புடவை விற்பனை செய்யப்படுகிறது. அசல் பட்டு எது, போலி பட்டு எது என்று கண்டறியப்பட்டு விற்பனையில் கரைகண்ட நண்பர் சொல்லித் தந்த முறை இது...

‘‘பட்டுச்சேலையின் ஓரத்தில் தொங்கும் நூலை வெட்டி அதில் தீ வைத்தால், அது நின்று எரியும். அதுதான் அசல் பட்டு. ஆனால் கலவையான பட்டுச் சேலையின் நூலை வெட்டி அதில் தீ வைத்தால் அதன் நூல் நம் தலைமுடி எரிவதைப்போல சுருங்கிக்கொண்டே செல்லும். இதைவைத்து அறிந்துகொள்ளலாம்’’ என்றார். இப்போது காஞ்சிபுரத்தில் ‘அகிம்சா’ பட்டுப் புடவை உற்பத்தி பிரபலமாகிவருகிறது. ஆனால், பல ஆண்டு காலமாகச் சில ஆன்மிகத் தலைவர்கள் தங்களுக்கு அணிவிக்கப்படும் பட்டுத் துணிகள் ‘அகிம்சா’ முறையில் உற்பத்தி செய்யப்பட்டவைதானா என்று உறுதிசெய்த பிறகு அவற்றை அணிந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். எனவே, சிறிய அளவில் ‘அகிம்சா’ பட்டுத்துணி உற்பத்தி நடந்துவந்தது. இப்போது, வேகமெடுத்திருக்கிறது.

பொதுவாக, பட்டு நூலுக்காகப் பட்டுப்புழுக்களை வெந்­நீ­ரில் போட்­டுக் கொன்­று பட்டு நூல் தயா­ரிப்­பார்­கள். இப்படிச் செய்வதால் நூல் அறுந்துபோகாமல் நீளமாகக் கிடைக்கும். ஆனால், அகிம்சா பட்­டு தயா­ரிக்க பட்­டுப்புழுக்களை நன்றாக வளரவிட்டு, அவை பட்­டாம்பூச்­சிகளாக­ மாறி, நூல் கூண்டை அறுத்து வெளியேறும் வரை காத்­தி­ருந்து நூல் எடுப்பார்கள். புழுக்களைக் கொன்று எடுக்­கும் நூல் துண்டிக்காமல் அப்­ப­டியே இருக்­கும். அதன்மீதுள்ள மெழுகு போன்ற பொருளை நீக்­கினால் போதும். அதைச் சாயம் தோய்த்து நெசவு செய்­ய­லாம். புழுக்கள் பூச்சிகளாக மாறி, தாங்களாகவே கூட்டை அறுத்து வெளி­யே­றும் கூடு­க­ளில் நூல் அறுந்து காணப்படும். முத­லில் கூடு­களைப் பஞ்­சாக்கி, நூல்­கள் தயா­ரித்து, சாயம் சேர்த்து நெசவு செய்யப்படுகிறது. மேலும், ஒரு புடவை நெய்ய ஒரு வாரத்துக்கு மேல் ஆகும். கூடுதல் வேலை என்பதால் விலையும் கூடுதல்தான். பார்வைக்கு சாதாரணப் பட்டைவிட அகிம்சா பட்டின் நிறம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். பட்டுத்துணியின் எடையும்கூடக் கூடுதலாக இருக்கும்.

‘‘பிரபல நடிகை ஒருவர் அகிம்சா பட்டு வேண்டும் என்று கேட்கிறார். எங்குக் கிடைக்கும்?’’ என்று திரைத்துறையிலுள்ள ஒரு மக்கள் தொடர்பாளர் கேட்டிருந்தார். ``அகிம்சா பட்டை காஞ்சிபுரத்தில் நெய்து, கோ-ஆப்டெக்ஸ் நிலையங்களில் விற்பனை செய்கிறார்கள்’’ என்றேன். இப்போது கர்னாடக இசைப் பாடகிகள் பலரும் அகிம்சா பட்டுதான் அணிவதாகச் சொல்கிறார்கள்.

பட்டுத் துணிகளை விழாக் காலங்களில் ஏன் அணிகிறோம் என்பதற்கு அறிவியல் காரணம் உண்டு. பட்டுத் துணி உரசப்படும்போது உருவாகும் மின் ஆற்றல் அதை அணிபவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். அதனால்தான் பட்டு அணிகிறோம்’’ என்று சொல்லி முடித்தேன். ‘‘இந்தத் தகவல்களை வைத்தே ஒரு பிஎச்.டி பட்டம் வாங்கிவிடலாம். இப்போதைக்குப் பட்டு வாங்கிச் செல்கிறோம்’’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார் அந்த வெளிநாட்டு நண்பர்.