மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கவரிமாவுக்கும் கவரிமானுக்கும் என்ன சம்பந்தம்?

மாத்தியோசி
பிரீமியம் ஸ்டோரி
News
மாத்தியோசி

மாத்தியோசி - மண்புழு மன்னாரு

‘மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார்

உயிர் நீப்பர் மானம் வரின்.’

- ன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர் வாழாத கவரிமானைப்போல, மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர் சிலர். கவரிமானைப்போல மனிதர்கள் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்’’ என இலக்கியக் கூட்டத்தில் பேச்சாளர் ஒருவர் பேசி முடித்து, கைத்தட்டல்களை அள்ளினார். `கவரிமா’வுக்கும் `கவரிமானு’க்கும் சம்பந்தமில்லை என்பது கற்றாய்ந்த தமிழறிஞர்களுக்குக்கூட தெரியவில்லையே என நினைத்துக்கொண்டேன். திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ள `கவரிமா’ என்பது `யாக்’ (Yak) என்று அழைக்கப்படும் நீண்ட மயிர்க்கற்றைகளைக் கொண்டது. `கவரி’ என்றால் மயிர். `மா’ என்றால் விலங்கு என்று பொருள். இது இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு மாட்டினம். `கவரிமாதான் மாட்டினத்திலேயே பெரிய விலங்கு’ என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். நன்றாக வளர்ந்த கவரிமா 1,000 கிலோ எடை இருக்கும். இமயமலைப் பகுதிகளிலும், திபெத் பகுதிகளிலும் யாக் மாடுகள் அதிகம் உள்ளன. இமயமலைச் சாரலில் அலைந்து திரிந்தபோது, மஞ்சள் நிறத்திலிருந்த கவரிமா பாலின் தேநீரைச் சுவைத்திருக்கிறேன். மலைப்பகுதிகளில் பொதி சுமக்க கவரிமாவைப் பயன்படுத்துகிறார்கள்.

மரங்கள் குறைவாகக் காணப்படும் திபெத்தியப் பீடபூமியில், கவரிமாவின் காய்ந்த சாணம் ஒரு முக்கியமான எரிபொருள். கவரிமாவின் பாலிலிருந்து பெறப்படும் வெண்ணெய் தேநீர் தயாரிக்கவும், வெண்ணெய்ச் சிற்பங்கள் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. யாக் தேநீரில் ஒருவிதமான மணம் வீசும். சிலருக்கு அந்த மணம் பிடிக்காது. 10 சதவிகிதம் கொழுப்புச்சத்துகொண்ட அந்தப் பாலில் வெண்ணெய் எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. வெண்ணெய் கட்டியா, தங்கக் கட்டியா என்று வித்தியாசம் தெரியாத அளவுக்கு இருக்கும். அதனால்தான் யாக் பாலை, `தங்கத் திரவம்’ என்றும் சொல்கிறார்கள்.

சரி, திருக்குறளுக்கு வருவோம். கவரிமா உடலில் மயிர் கொட்டிவிட்டால், அந்த மாடு அங்கு உயிர் வாழ முடியாது. அதைத்தான் ‘மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா...’ என்று குறிப்பிட்டிருக்கிறார் திருவள்ளுவர்.

கவரிமாவைப்போல கடமாவும் இந்தியாவிலுள்ள மாட்டினங்களில் முக்கியமானது. கவரிமாவை, `கவரிமான்’ என்று அழைப்பது போல, கடமாவை ‘காட்டெருமை’ (Indian Bison) என்று சொல்கிறார்கள். உண்மையில் இது எருமை இனம் கிடையாது; பசுவினம். தமிழ்நாட்டின் மாநில விலங்காக வரையாடு இருப்பதுபோல, நாகாலாந்து, பீகார் மற்றும் கோவாவின் மாநில விலங்காக இந்தக் கடமா இருக்கிறது. நாகாலாந்து பழங்குடி மக்கள், கடமா மாட்டின் கொம்புகளைத் தலையில் வைத்துக்கொண்டு பாரம்பர்ய நடனமாடுவதை ஊடகங்களில் பார்க்கலாம். கடமா (Indian Gaur) காட்டா, ஆமான், காட்டான், காட்டுமாடு, காட்டுப்பசு இவற்றோடு `மரை’ என்ற பெயரும் உண்டு. ஒரு முறை நீலகிரிப் பகுதியிலுள்ள பழங்குடி மக்களைச் சந்திக்கப் போனபோது, கடமா கூட்டத்தை அருகிலிருந்து பார்த்தேன். காட்டிலுள்ள இழை, தழைகளை உண்ணும் சைவப் பிராணியான கடமா மூர்க்க குணம் கொண்டது. மனிதர்களைக் கண்டால் தாக்கிவிடுமாம். `தற்போது நாம் பண்ணைகளில் வளர்க்கும் மாடுகளின் தாய் இனம், இந்தக் கடமா’ என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இது இருக்கும் பகுதிகளில் புலிகள் நடமாட்டம் இருக்கும். புலிகளுக்கு மிகவும் பிடித்தமான உணவில் கடமா மாட்டின் இறைச்சியும் ஒன்று.

`தற்போது நாம் பண்ணைகளில் வளர்க்கும் மாடுகளின் தாய் இனம், இந்தக் கடமா’ என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இது இருக்கும் பகுதிகளில் புலிகள் நடமாட்டம் இருக்கும்.

கடமா தன் கன்றுகளுக்குக் கொடுக்கும் பாலில் மீதியிருந்தால், அதை அப்படியே விடாது. எனவே, உஷாராக இந்தக் கடமா பாறைகளில் தன் மடியை வைத்து அழுத்துமாம். அப்போது மடியிலிருந்து வெளியேறும் பால் பாறைகளில் தேங்கிவிடும். அந்தப் பால் சூரிய ஒளிபட்டு, பாலாடைக்கட்டிபோல இறுகிவிடுமாம். காடுகளுக்குச் செல்பவர்கள், இந்தப் பாலாடைக்கட்டிகளைச் சுவைத்த அனுபவத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

மாத்தியோசி
மாத்தியோசி

அடுத்து சொல்லப்போவதும் மாடுகள் சம்பந்தமான கதைதான். வர்க்கீஸ் குரியன் கொண்டுவந்த ‘வெண்மைப் புரட்சி’மீது நிறைய விமர்சனங்கள் உண்டு. அதே சமயம், அவருடைய உழைப்பில் உருவான `அமுல்’ மாபெரும் சாதனை. குஜராத்தில் ஆயிரக்கணக்கான பால் கூட்டுறவுச் சங்கங்களை ஒருங்கிணைத்து, `அமுல்’ (AMUL- Anand Milk Unit Limited) என்ற பெயரில் ஆரம்பித்தார்.

அந்த அமைப்பு வெற்றிப் பாதையில் செல்லத் தொடங்கியதும், நாடு முழுக்கப் பால் கூட்டுறவுச் சங்கங்களை நிறுவ வர்க்கீஸை கேட்டுக்கொண்டது மத்திய அரசு. அந்தத் திட்டம்தான் `வெண்மைப் புரட்சி’ (Operation Flood) என்று அழைக்கப்பட்டது. அதன் மூலம் மகாராஷ்டிராவில் `ஆரே’, கர்நாடகாவில் `நந்தினி’, ராஜஸ்தானில் `சரஸ்’, பீகாரில் `சுதா’, தமிழ்நாட்டில் `ஆவின்’ ஆகிய பெயர்களில் கூட்டுறவு பால் அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

ஒருமுறை குஜராத்திலுள்ள அமுல் நிறுவனத்துக்குச் சென்றிருந்தபோது, தமிழ்நாட்டிலிருந்து நாம் வந்திருப்பதை அறிந்தவுடன் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள், காரணம், குரியனின் பூர்வீகம் கேரளாவாக இருந்தாலும், அவர் படித்து, வளர்ந்தது தமிழ்நாடு என்பதுதான். அதுமட்டுமல்ல, நாம் சென்றிருந்த சமயத்தில்தான் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அமுல் நிறுவனத்தைவிட்டு வெளியேறியிருந்தார் அந்தப் பால்காரர். அமுல் நிறுவனத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த நம் கைகளில் பால் பவுடரை அள்ளிக் கொடுத்தார் அங்கிருந்த நபர். ‘‘ஆரம்பத்தில் அமுல் நிறுவனத்தின் பால் நன்றாக விற்பனையானது. ஒருகட்டத்தில் பால் விற்பனை குறையத் தொடங்கியது. அதை ஈடுகட்டாவிட்டால், அமுல் வெண்ணெய் போலக் கரைந்துவிடும் என்ற உண்மையைக் குரியன் கண்டுகொண்டார். உடனே களத்தில் இறங்கினார். 1955-ம் ஆண்டு, பால் பவுடர் தயாரிக்கும் வேலைகளை முன்னெடுத்தார்.

பால் பவுடர் தயாரிக்கும் இயந்திரத்தைத் திறந்துவைக்க நேரு வந்தார். அப்போது உலகிலேயே ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டிருந்தனர் குரியன் குழுவினர். அதாவது. அதற்கு முன்பு வரை பசு மாட்டின் பால் மூலம்தான் பால் பவுடர் தயாரிக்கப்பட்டது. முதன்முறையாக அமுல் மூலமாக எருமை மாட்டுப் பாலில் பவுடர் தயாரித்து வெளியிடப்பட்டது. அந்தச் சாதனைக்கு காரணம், குஜராத்தில் எருமை மாடுகளின் எண்ணிக்கை அதிகம் என்பதே.

எருமை வளர்ப்பது, பசு வளர்ப்பதைவிடக் கொஞ்சம் எளிதான வேலை. அதிக பராமரிப்பு தேவைப்படாது. குளிர்காலங்களில் எருமை மாடுகள் கூடுதல் பால் கொடுக்கும். அதனால்தான், எருமை மாடுகளை விவசாயிகள் விரும்பி வளர்க்கின்றனர்.

பாலாடைக்கட்டி, வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம்... எனப் பால் பொருள்கள் தயாரிப்பில் அமுல் இறங்கியது. நிறுவனமாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட விவசாயியாக இருந்தாலும் சரி பாலை விற்பனை செய்வதை பால் பொருள்கள் விற்பனை செய்தால்தான் லாபம் எடுக்க முடியும் என்பதைக் கண்டறிந்து, அதை நடைமுறைக் கல்வியாகவும் போதித்துவந்தார் குரியன். உங்களுக்கு இந்தத் தகவலைச் சொல்வதில் பெருமை கொள்கிறோம்’’ என்றார் அமுல் அலுவலர்.