மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு : உழவே ‘தலை’... உழவர்களைக் கொண்டாடுவோம்!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

மிழ்நாட்டில்தான் நாட்டை ஆள்பவர்கள் முதல் நடிகர்கள் வரை ‘நானும் விவசாயி’தான் என்ற பட்டத்தைச் சூட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். இதற்குக் காரணம், இந்த மண்ணில் விவசாயிதான் உயர்ந்தவர் என்று காலங் காலமாக உயர்த்திப் பிடித்துக் கொண்டாடி வருகிறோம். கடந்த 14 ஆண்டுகளில் பசுமை விகடன் மூலம் ‘டாக்டர் விவசாயி, இன்ஜீனியர் விவசாயி, பேராசிரியர் விவசாயி... என்று பல்துறையினரும் விவசாயிகளாக உருவாகி வருகிறார்கள். ஆனால், பிற மாநிலங்களில் நம்மைப்போல விவசாயிகளைக் கொண்டாடுவது குறைவுதான்.

‘‘சங்க இலக்கியங்கள் போன்று மக்களின் வாழ்நிலையைச் சொன்ன படைப்புகள் இந்தியாவின் பிற மொழிகளில் மட்டுமல்ல, உலகின் வேறெந்த மொழியிலும் இல்லை. இதில் உழவு, உழவர்கள் பற்றிய ஏராளமான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. நாட்டை ஆளும் அரசனைவிட, உழவர்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றியுள்ளனர். இந்த உலகத்தில் உள்ள எல்லோருக்கும் தலைவன் ஒருவர்தான் அது, உழவுத் தொழில் செய்யும் உழவர்கள்தான். நாட்டை ஆளும் மன்னனுக்கும் உணவு கொடுத்துக் காப்பது உழவர்கள்தான். இதனால்தான், ‘சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை’ என்று திருவள்ளுவர் சிறப்பித்துள்ளார். என் பணி காலத்தில் இந்தியாவில் பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளேன். தமிழ்நாட்டைப் போல உழவர்களை உயர்த்திப் பிடித்துள்ள சமூகம் வேறு எங்கும் கிடையாது’’ என்று ‘உழந்தும் உழவே தலை’ என்ற நேரலை நிகழ்ச்சியில் ஒடிசா மாநிலத்திலிருந்து உணர்ச்சி பொங்க பேசினார் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்(ஓய்வு). ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது ‘வனத்துக்குள் திருப்பூர்’ அமைப்பு.

ஆர்.பாலகிருஷ்ணன்
ஆர்.பாலகிருஷ்ணன்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் இவரது ஊர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் படித்தார். இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ் ) தேர்வை (1984) முதன்முதலாக முழுவதுமாகத் தமிழில் எழுதி முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றார். ஒடிசா மாநில அரசிலும் மத்திய அரசிலும் பல்வேறு உயர் பொறுப்புகளில் இருந்தவர், தற்போது, ஒடிசா மாநில முதல்வரின் சிறப்பு ஆலோசகராக உள்ளார். சங்க இலக்கியம், திராவிட இந்தியவியல், திராவிடவியல் குறித்துத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துடன் இணைந்து ‘சங்கச்சுரங்கம்’ என்ற நேரலைத் தொடர் நிகழ்ச்சியில் உரையாற்றிவருகிறார். வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் உழவர்களின் பெருமையைச் சொல்லி மேன்மைப்படுத்தி வருகிறார். இனி, அவர் பேசிய உழந்தும் உழவே தலை உரையைக் கேட்போம்...

‘‘சங்க காலம் தொட்டு, தமிழ்நாட்டில் உழவுத் தொழில் உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றப்படுகிறது. வட மாநிலங்களில் உழவுத் தொழில் செய்தால் சமூகத்தில் கீழானவர் என்ற நிலை உள்ளது. நம் தமிழ் மண்ணில் உழவுதான் உன்னதமானது. மற்ற தொழில்கள் எல்லாம், இதைத் தொழுதுதான் பின் செல்ல வேண்டும் என்ற நிலை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்கிறது. திருக்குறளில் ‘உழந்தும் உழவே தலை’ என்ற வரி இடம் பெற்றுள்ளது. ‘உழந்தும்’ என்றால், ‘துன்பம்’ என்று பொருள். துன்பமாக இருந்தாலும் அந்தத் தொழில்தான் எல்லாவற்றுக்கும் தலை என்று வலியுறுத்திச் சொல்கிறார் திருவள்ளுவர். திருக்குறளில் வேளாண்மை என்ற வார்த்தையை விருந்தோம்பல், பண்பாடு என்ற வகையில் பயன்படுத்துகிறார். உழவு என்பதைச் செயல் என்று பிரிக்கிறார்.

சங்க இலக்கியம் முதல் உழவர்களை மேம்படுத்தி வருகிறோம். திருவள்ளுவருக்கு அடுத்து, உழவர்களைப் பற்றிக் கம்பர் அற்புதமாக எழுதியுள்ளார்.

கம்பர் என்றால் ‘கம்பராமாயணம்’ என்றுதான் பெரும்பாலும் நினைவுக்கு வரும். ஆனால் அவர் எழுதிய ஒன்பது நூல்களுள், உழவர் மரபைப் போற்றி, வேளாண் பொருளாதாரத்தைப் புகழ்ந்துரைக்கும் இரண்டு நூல்கள் உண்டு. 1.ஏர் எழுபது 2. திருக்கை வழக்கம்.

‘ஏர் எழுபது’ என்பது உழவர்கள் சிறப்பையும், உழவுத் தொழிலின் மாண்பையும் பாடுகிறது. ‘திருக்கை வழக்கம்’ என்ற நூல், வேளாண் பெருமக்களின் கொடை குணத்தைச் சிறப்பிக்கிறது. திருக்குறள் வழிநின்று பாராட்டி, ஏர்த்தொழில் பற்றிய நுட்பமான செய்திகளை விரித்துரைக்கிறது.

இந்நூல்கள் உருவானதற்கு ஒரு நிகழ்ச்சியைச் சொல்வதுண்டு. கம்பர், குலோத்துங்கச் சோழன் அரசவையில் இருந்தபோது ஒருநாள், குலோத்துங்கன் சத்தமிட்டுச் சிரித்துவிட்டான். இதைக் கண்ட கம்பர்,

“அரசே! வாய்விட்டு சிரிக்கிறீர்களே... காரணத்தைச் சொன்னால் உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கு பெறலாமே?” என்றார்.

“கம்பரே, நீங்களும் நம் நாட்டு மக்களும் எனக்கு அடிமைகள்தானே என்று நினைத்தேன். சிரிப்பு வந்துவிட்டது” என்று குலோத்துங்கன் சொன்னவுடன் கம்பருக்குக் கடும் கோபம் வந்துவிட்டது.

“என்ன சொன்னீர்? நானும் உங்களுக்கு அடிமை என்றா நினைக்கிறீர்கள்?”

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

‘‘அரசே! நீ புவிச்சக்கரவர்த்தி, நானோ கவிச்சக்கரவர்த்தி. உமக்கு நான் அடிமையல்ல?” என்று உணர்ச்சியுடன் சொல்லிவிட்டு அவையை விட்டுக் கிளம்ப முயன்றார்.

உடனே குலோத்துங்கன், “கம்பரே! நீங்கள் கவிச்சக்கரவர்த்தியாக இருப்பது என் நாட்டில்தான். மற்ற நாட்டில் இவ்வளவு பெருமை உங்களுக்குக் கிடைக்காது” என்று சொன்னார்.

“கொல்லிமலைத் தேன்சொரியும் கொற்றவா

நீ முனிந்தால் இல்லையோ எங்கட்கிடம்?”


என்று சொல்லிவிட்டு, எழுந்தார்.

இதைக்கண்ட குலோத்தங்கன், இன்னும் இன்னும் ஏளனமாகப் பேசினார். “மன்னவனும் நீயோ? வளநாடும் உனதோ?” என்ற பாடலைப் பாடிவிட்டு அவையைவிட்டு வெளியேறினார்.

குலோத்தங்கனின் அவையைவிட்டு வேகமாக வெளியேறினார் கம்பர். நீண்ட தூரம் நடந்த காரணத்தால் களைப்பு ஏற்பட்டது. வயல் வெளியில் தன் மனைவியுடன் உழவர் உணவு அருந்திக் கொண்டிருந்தார். பசியுடன் இருந்த கம்பர் அங்கு சென்று கையை நீட்டினார். உடனே தன் உணவைத் தந்து பசியாறச்செய்தார், அந்த உழவர். தனது பசியையும், தாகத்தையும் தீர்த்த உழவரின் உயர்வான உள்ளத்தை நினைத்து எண்ணி எண்ணி நெகிழ்ந்தார் கம்பர். அதன் வெளிப்பாடாகத்தான் ‘ஏர் எழுபது’ என்ற நூலை எழுதினார்.

‘கார் நடக்கும் படி நடக்கும் காராளர் தம்முடைய

ஏர் நடக்கும் எனில் புகழ்சால் இயலிசை நாடகம் நடக்கும்

சீர் நடக்கும் திறம் நடக்கும் திருவறத்தின் செயல்நடக்கும்

பார் நடக்கும் படை நடக்கும்; பசி நடக்க மாட்டாதே!’


(காரி(மழை) பொழிந்தால் காராளரின்(உழவரின்) ஏர் நடக்கும். உழவுத் தொழில் சிறப்பாக நட‌ந்தால் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழும் தெருவெங்கும் முழங்கும். செல்வம் கொழிக்கும். திருவறத்தின் செயல்களும் நடக்கும். படைச் செயலும் சிறப்பாக நடக்கும். ஆனால், பசி மட்டும் இருக்காது).

இப்படி உழவர்களை உயர்த்திப் பிடித்து ஏர் எழுபதில் எழுதியுள்ளார், கம்பர்...’’ என்று விவசாயிகளைப் பற்றியும் விவசாயத்தின் பெருமையைப் பற்றியும் மணக்க மணக்க பாலகிருஷ்ணன் பேசினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ‘உழவர் கீதம்’ என்ற பாடலை இயற்றி உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இன மக்கள் இடம் பெற்ற வீடியோ வடிவில் பாடலை வெளியிட்டு உழவர்களைக் கொண்டாடியிருக்கிறார்.