மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடப்பாரை கேட்ட கால்நடை மருத்துவர்!

மாத்தியோசி
பிரீமியம் ஸ்டோரி
News
மாத்தியோசி

மாத்தியோசி - மண்புழு மன்னாரு

சியாவிலேயே கால்நடைகளுக்கான முதல் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில்தான் உருவாக்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் உருவாக அடித்தளமிட்டவர்களில் முக்கியமானவர், டாக்டர் வே. ஞானப்பிரகாசம். கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் முதல் பதிவாளராகவும், இரண்டாவது துணைவேந்தராகவும் பணியாற்றியவர். ஓய்வு பெற்றுவிட்டாலும், உலக அளவில் கால்நடை தொடர்பாக நடக்கும் அத்தனை ஆராய்ச்சிகள் குறித்த தகவல்களையும் விரல்நுனியில் வைத்திருப்பார்.

கடப்பாரை கேட்ட கால்நடை மருத்துவர்!

``வட மாநிலங்களைப்போல, தமிழ்நாட்டில் கால்நடை வளர்ப்பு வேகமெடுக்கவில்லை’’ என்று சொல்லிக்கொண்டேயிருப்பார். தமிழக விவசாயிகள் கால்நடை வளர்ப்பு, பால்பண்ணைத் தொழில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருபவர். பல ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இஸ்ரேல் நாட்டுக்குப் பயணம் செய்த அனுபவங்களைப் பயணக்கட்டுரையாக எழுதினார். அதை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

`` ‘வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்’ இங்கே இருந்தன என ஆண்டாள் பாடியிருக்கிறார். ஆனால், அவை எங்கே, அந்தக் கால்நடை வளம் எங்கே...’’ என்று அடிக்கடி பேச்சின் ஊடாகச் சுட்டிக்காட்டுவார். டாக்டர் ஞானப்பிரகாசம் கால்நடை விஞ்ஞானி மட்டுமல்ல; தமிழ் மொழி, பக்தி இலக்கியம், பூகோளம், நிர்வாகம்... என அனைத்திலும் தேர்ந்த பல்துறை அறிஞர். இஸ்ரேல் குறித்து அவர் விவரிக்கத் தொடங்கினால் நம் கண்முன் காட்சிகளாக விரியச் செய்து, நம்மையும் இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லும் வல்லமைகொண்ட கதைசொல்லி அவர். அவரிடம் அடியேன் கற்றது ஏராளம், ஏராளம். அவரின் பயணக் கட்டுரை ‘லாபகரமான பால் பண்ணைக்கு இஸ்ரேல் காட்டும் வழி’ என்ற பெயரில் பாவை பதிப்பகத்தின் மூலம் நூலாக வெளிவந்திருக்கிறது. அதிலிருந்து சில தகவல்களை அசைபோடுவோம்.

‘‘அதிக எடையுடைய பசுக்கள், கருங்கல் அல்லது கான்கிரீட் தரைமீது நிற்க நேர்வதால் பலவிதமான குளம்பு நோய்கள் காலில் ஏற்பட்டு, பல ஆண்டுகள் வாழ வேண்டிய பசுக்கள், ஓரிரு ஆண்டுகளிலேயே இறந்துவிடுகின்றன. கான்கிரீட் தரையால் பல பசுக்கள் பாதிக்கப்படுவதை என்னுடைய கால்நடை மருத்துவத் தொழில் அனுபவத்தில் நேரிலேயே கண்டிருக்கிறேன். அது பற்றி என்னுடைய ‘கால்நடை மருத்துவனின் கால்நடைச் சுவடு’ என்ற புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளேன்.

ஒருநாள் ‘சார், உங்களுக்கு போன்’ என்று தொலைபேசியை என்னிடம் கொடுத்தார் உதவியாளர்.

 இஸ்ரேல் மாட்டுப்பண்ணை...
இஸ்ரேல் மாட்டுப்பண்ணை...

தொலைபேசியில் பேசியவர் மிகப்பெரும் கப்பல் அதிபர் ஒருவரின் தனிச்செயலர் என்று அறிமுகம் செய்துகொண்டார்.

‘சார், எங்க பாஸ் வீட்டுத்தோட்டத்துல சில பசு மாடுங்க இருக்கு. அதுல ஒரு ஃபிரீசியன் பசுவுக்கு ஏதோ பிரச்னை. சரியா நிக்க முடியாம கஷ்டப்படுது. ஒரு மாசமாக நாங்களும் பல டாக்டர்களை அழைச்சுட்டு வந்து காட்டிட்டோம். ஆனா பலன் ஜீரோதான். நேத்திக்கு வந்த டாக்டர்தான் உங்களைக் தொடர்புகொள்ளச் சொன்னார். நீங்க உடனே வந்து பார்க்கணும். கார் எங்கே அனுப்பணும்னு சொன்னீங்கன்னா உடனே அனுப்பறோம்’ ஒரே மூச்சில் சொன்னார் கப்பல் அதிபரின் தனிச்செயலர். சரி என்று மருத்துவம் பார்க்கச் சென்றேன். அங்கே வீட்டுக்குப் பின்புறம் சென்றோம்.

அது மாட்டுக் கொட்டகையாகத் தெரியவில்லை. மாளிகையாகக் காட்சியளித்தது. முழுவதும் கான்கிரீட் தளம். மிகுந்த செலவு செய்து கட்டியிருந்தார்கள்.

குறிப்பிட்ட அந்தப் பசுவைப் பரிசோதித்தேன். அது ஃபிரீசியன் என்ற மேல்நாட்டுக் கலப்பினத்தைச் சேர்ந்தது. மிக விலையுயர்ந்த அப்பசு ஒரு நாளைக்கு 30 லிட்டர் பால் தரக்கூடியது. அந்தப் பசுவின் பின்னங்கால்கள் இரண்டும் வளைந்து காணப்பட்டன. பார்ப்பதற்கு ஒரு தவளையின் உருவத்தை நினைவுபடுத்துவதாக இருந்தது அப்பசுவின் தோற்றம். இது ஒரு அசாதாரண நோய்.

அப்போது அந்தக் கப்பல் அதிபர் தோட்டத்துக்கு வந்தார்.

‘`டாக்டர் எங்க பாஸ் வர்றார். வழக்கமா 10 மணிக்குத்தான் எழுந்திருப்பார். இன்னிக்கு என்னமோ விஷேசமா 7 மணிக்கே வர்றார். நீங்க ட்ரீட்மென்ட் பண்ண வர்றப்போ எழுப்பச் சொன்னார். அதான்...’’ என்று தனிச்செயலர் மெல்லிய குரலில் சொன்னார்.

பரஸ்பர அறிமுகம் முடிந்தது.

‘`என்ன டாக்டர், மாட்டைப் பார்த்தீங்களா... இதுவரைக்கும் மூணு டாக்டர்ஸ் பார்த்துட்டாங்க. ஆனா ஒண்ணும் சரியாகலை. நீங்களாவது சரி பண்ணுவீங்களா?’’ கப்பல் அதிபர் கம்பீரமாகக் கேட்டார்.

‘‘கண்டிப்பாகச் சரி பண்ணிடலாம். கவலைப்படாதீங்க. ஆனா அதுக்கு...’’

‘`என்ன வேணும் சொல்லுங்க?’’

‘`ரெண்டு கடப்பாரையும், நாலு ஆளுங்களும் வேணும்…’’ என்றேன்.

‘`வாட்... கடப்பாரை... வாட் டு யூ மீன், என்ன டாக்டர் ஆச்சு உங்களுக்கு... ஏதாவது காப்சூல் வாங்கிட்டு வரச்சொல்லுவீங்கன்னு பார்த்தா கடப்பாரை கேக்கிறீங்க...’’’ என்று பொரிந்து தள்ளினார் புரியாத கப்பல் அதிபர்.

‘`ஆமா, கடப்பாரை எதுக்கு?’’ கப்பல் அதிபரே மீண்டும் கேட்டார்.

``இந்தக் கான்கிரீட் தளத்தை உடைச்சு தள்ளுறதுக்கு...’’ என்று பொறுமையாகச் சொன்னேன்.

``என்ன டாக்டர் இது... மாட்டைக் காப்பாத்துவீங்கனு பார்த்தா, வீட்டை இடிச்சுத் தள்ளச் சொல்றீங்களே, இதுதான் உங்க வைத்தியமா?’’ கப்பல் அதிபர் கடுப்பில் குதித்தார்.

அந்த மாட்டுக்கு வியாதி என்று எதுவும் இல்லை. வெளிநாட்டுக் கலப்பினப் பசு என்பதால் பாதுகாப்பாக, பத்திரமாகப் பராமரிக்க வேண்டும் என எண்ணி கொட்டகை முழுவதும் கான்கிரீட் தளம் போட்டிருந்தனர். இதுதான் பிரச்னைக்குக் காரணமே.

ஃபிரீசியன் போன்ற வெளிநாட்டுக் கால்நடைகளுக்குக் காலின் குளம்புப் பகுதிகள் மிகவும் மென்மையாக இருக்கும். இந்த வகைக் கால்நடைகளுக்கு மென்மையான தரைதான் உகந்தது. இது புரியாமல் சிலர் இப்படிச் சிமென்ட் தளம் அமைத்துவிடுகின்றனர். கடினமான தரையில் நிற்கும்போது அந்தப் பசுவின் எடை முழுவதையும் தாங்கும் அளவுக்கு அதன் கால் மற்றும் குளம்புப் பகுதிகள் உறுதியானவை அல்ல. ஆகையால் நாளடைவில் அதன் பின்னங்கால்கள் மெள்ள வளையத் தொடங்குகின்றன. கடைசியில் ஒரு தவளையின் உருவத்தைப்போல அந்தப் பசு மாறிவிடும். இத்தகைய பிரச்னைகளைச் சரி செய்ய மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதில்லை. கடினமான சிமென்ட் தளத்தை அகற்றிவிட்டு, மிருதுவான தளம் அமைத்தாலே போதும். மென்மையாக இருக்க ஆற்று மணல் பரப்பினாலே போதும்.

மேற்கண்ட விவரங்களைக் கப்பல் அதிபரிடம் விவரமாகக் கூறினேன்.

சுற்றி நின்ற பணியாளர்கள் வியப்போடும், கூடவே குழப்பத்தோடும் ஒருசேரப் பார்த்தனர். `இவ்வளவு பணம் செலவு செய்து கட்டிய கான்கிரீட் தளத்தை இடிப்பதா...’ என நினைத்தனர்போலும். ஆனால் கப்பல் அதிபர் அப்படி நினைக்கவில்லை. கான்கிரீட் தளத்தை இடித்து அங்கு ஆற்றுமணல் அடிக்க ஆணை பிறப்பித்தார்.

சில நாள்கள் கழித்து அந்தக் கப்பல் அதிபர் தொலைபேசியில் அழைத்தார்.

‘`இப்போ மாடு எப்படி இருக்கு சார்?’’ ஆர்வமாகக் கேட்டேன்

‘`நீங்க சொன்ன மாதிரி செஞ்சதுலருந்து கொஞ்சம் கொஞ்சமா கால் நிமிர்ந்துவிட்டது. இத்தனை நாளா இங்கேயே கெடந்தது அதுக்கு எரிச்சல்போல. காலுக்குத் தெம்பு வந்ததும் இன்னிக்கு கவுத்தை அறுத்துகிட்டு ஓடிப்போச்சு. நம்ப ஆளுங்க மாட்டைப் பிடிக்க போயிருக்காங்க. அதான் உங்ககிட்ட உடனே சொல்லணும்னு தோணிச்சு’’ என்றார் மகிழ்ச்சி பொங்க.

மாத்தியோசி
மாத்தியோசி

மேலை நாடுகளில் ஒரு பழமொழி உண்டு ‘குளம்பில் வலி ஏற்பட்டால் இருபது குடம் பால் கொடுக்கும் பசுக்கூட இரண்டு குவளை பால் கொடுக்கும் பசுவாக ஓர் இரவுக்குள் மாறிவிடும்.’ இதனால், மேலை நாட்டினர் நன்கு தேர்ச்சி பெற்ற கட்டடக் கலைஞர்களைக் கலந்து ஆலோசித்த பிறகுதான் மாட்டுக் கொட்டகை அமைக்கிறார்கள். பால் பண்ணை அமைக்கும் முன் அதை அமைப்பதற்குத் தேவையான இடத்தை விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து தேர்வு செய்கிறார்கள். தேர்வு செய்யப்பட்ட இடத்தின் தட்பவெப்பநிலை, அந்தப் பகுதியில் அடிக்கும் காற்றின் வேகம், ஈரப்பதம், சுற்றுப்புறச் சூழலிலுள்ள ஒலியின் அளவு முதலியவற்றைக் கண்டறிந்த பின் அதற்கேற்ப கட்டடங்களை அமைக்கிறார்கள்.

இப்படி விஞ்ஞானரீதியாக நமது தேவைக்கு ஏற்ப கட்டடங்களை அமைக்காமல், குளிர்பிரதேசப் பகுதியில் வாழும் மேலை நாட்டினர் தங்கள் தேவைக்கேற்ப அமைத்த மாதிரிப் படங்களை அப்படியே இந்தியாவில் காப்பி அடிக்கிறோம்.

இதைத் தனிப்பட்ட பால் பண்ணையாளர்கள் மட்டுமல்ல, மத்திய மாநில அரசு சார்ந்த பால் பண்ணைகளை அமைக்கும்போதுகூடச் செய்கிறார்கள் என்பதுதான் மிக வருந்தத்தக்க செய்தி.

‘‘விஞ்ஞானரீதியக நமது தேவைக்கு ஏற்ப கட்டடங்களை அமைக்காமல், மேலை நாட்டினர் தங்கள் தேவைக்கேற்ப அமைத்த மாதிரிப் படங்களை அப்படியே இந்தியாவில் காப்பி அடிக்கிறோம்.’’

குறிப்பாக, பால் பண்ணைகளை அமைக்கும்போது நம் நாட்டுக்கும், நம் நாட்டின் பூகோளரீதியாக வேறுபட்டுள்ள பிற மாநிலங்களுக்கும் ஏற்றவாறு கட்டடங்களை அமைக்காமல், மேலை நாட்டின் ஏதாவது ஒரு பால் பண்ணையின் மாதிரிப் படத்தைத் தேர்வுசெய்கிறார்கள். இமயம் முதல் குமரி வரை இது போன்றே இருக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு அது நிறைவேற்றப்படுகிறது. அதனால்தான் அரசு அமைத்த பால் பண்ணைகளின் முதலீடு அதிகமாவதோடு வெற்றிகரமாகவும் இயங்குவதில்லை.

இஸ்ரேல் நாட்டில் நம் நாட்டின் நடைமுறை போல் இன்றி ஒவ்வொரு பால் பண்ணை அமைக்கும்போதும் அந்த இடத்துக்கு ஏற்றவாறு, அதே நேரத்தில் தரமாக, மிகக் குறைந்த செலவில், பால் பண்ணை அமைப்பதற்கென்றே சிறப்புப் பயிற்சி பெற்ற கட்டடக் கலைஞர்களின் உதவியோடு பால் பண்ணைகளின் கட்டடங்களை அமைத்துள்ளனர்.’’

டாக்டர் ஞானப்பிரகாசத்தின் கால்நடை ஞானம், நம் எல்லோருக்கும் பாடம்!