மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு : நம்மாழ்வார் சொல்லிய அந்த ‘இயற்கை’ ரகசியம்!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

யற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் 40 ஆண்டு களுக்கும் மேலாக அனு தினமும் இயற்கை வேளாண் மையை மக்களிடம் கொண்டு செல்ல பேசியும் எழுதியும் வந்தார். அதில் அரசியல், விஞ்ஞானம், பொருளாதாரம்... என அத்தனை தகவல்களும் கொட்டிக்கிடக்கும். அதைப் படிப்பவர்களுக்கும் கேட்பவர் களுக்கும் இயற்கையை நோக்கி மேலும் ஒரு அடியை எடுத்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அப்படி ஓர் உரை... இங்கே இடம் பெறுகிறது.

‘‘இந்திய வேளாண்மை ஆறாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது. ஆறாயிரம் ஆண்டுக்காலமாக எத்தனையோ சோதனைகள் செய்து தனது அறிவை இந்தச் சமுதாயம் சேகரித்து வைத்துள்ளது. இந்த அறிவைப் பின்வரும் தலைமுறைக்குத் தொடர்ந்து கைமாற்றி வந்துள்ளது. நிலங்கள் தொடர்ந்து வளமாகியே வந்துள்ளன. கால்நடைகளும் மேம்பட்டு வந்திருக்கின்றன. ஆனால், கடந்த நாற்பதாண்டுகளில், ஆறாயிரம் ஆண்டுக்கால வளர்ச்சி பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளது. நாற்பதாண்டுகளுக்கு முன்பு எந்த இடத்தில் நமது வளர்ச்சிப் பாதையைத் தவற விட்டோம் என நாம் அறிந்துகொள்ள வேண்டும். இன்று உலகம் முழுவதும் உயிரினப்பன்மை குறித்துப் பேசப்படுகிறது. இன்று உயிரினப்பன்மை அழிக்கப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாயிரம் வகை உணவுப் பொருள்களை மக்கள் உண்டார்களாம். ஆனால், இன்று இருபது வகை உணவுகளைத்தான் உண்கிறார்கள் மக்கள். நம்மைப் போன்ற ஏழை நாடுகளில், மக்கள் தமது வருமானத்தில் 80 சதவிகிதப் பணத்தை அரிசிக்காகவே செலவு செய் கிறார்கள். உணவில் பன்முகத்தன்மை இல்லை. எனவே, நோய்க்கு இரையாகின்றனர்.

உணவை உற்பத்தி செய்வது விவசாயத்தின் நோக்கம் என்ற நிலை கடந்த நாற்பதாண்டுகளில் மாறிவிட்டது. எந்தெந்த ஆண்டுகளில் ஒட்டுரக விதைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டனவோ, அந்த ஆண்டு களில் ரசாயன உரம் அதிகமாக விற்பனை யாகியுள்ளது. அதேபோல அந்தந்த ஆண்டுகளில் பூச்சிக்கொல்லிகளும் அதிகம் விற்பனையாகியுள்ளன. இந்த மூன்று பொருள்களுக்கிடையே ஓர் இணைப்பு உண்டு.

1956-ல் வேளாண்மைக் கல்லூரியில் சேர்ந்தேன். என் குடும்பம் உழவர் குடும்பம். இயற்கை முறையில் வேளாண்மை செய்த குடும்பம். மேற்கு வங்கத்தில் உற்பத்தியான ‘அமோனியம் சல்பேட்டைப் போடுங்கள்’ என்று சொன்னார்கள் வேளாண் அலுவலர்கள். இரண்டு மூன்று வருடங்கள் போட்டார்கள் விவசாயிகள். உற்பத்திச் செலவுக்கு விளைச்சல் கட்டுபடியாகவில்லை. வேளாண் அலுவலர்கள் ‘நைட்ரஜன் மட்டும் போட்டால் போதாது சூப்பர் பாஸ்பேட்டும் போடுங்கள்’ என்றனர். இரண்டு மூன்று வருடம் விளைச்சல் அதிகரித்தது. பிறகு ‘இல்லை... இந்த இரண்டோடும் பொட்டாஷையும் சேர்த்துப் போடுங்கள்’ என்றனர். ஆனால், உழவரைப் பொறுத்தவரை கையிலிருக்கும் பணத்துக்குத் தகுந்தபடிதான் உரம் வாங்கி நிலத்திலிடுவார். கொஞ்சம் பணம் இருந்தால் நைட்ரஜன் போடுவார். வேரை வளர்க்கக்கூடியது பாஸ்பேட் என்று விஞ்ஞானம் சொல்கிறது. வேர் பரவலாக வளர்ந்தால் அது சத்துகளை எடுத்து, இலை உணவு தயாரிக்க உதவும். ஆழத்தில் சென்று நீரை எடுத்துக்கொள்ளும். நாற்றங்காலிலேயே போட வேண்டும். ஆனால், உழவரைப் பொறுத்தவரை காசிருக்கும்போதுதான் வாங்கிப் போடுகிறார். அதனால் பயன் இல்லை.

மண்புழு மன்னாரு : நம்மாழ்வார் சொல்லிய அந்த ‘இயற்கை’ ரகசியம்!

பிறகு, விஞ்ஞானிகள் என்ன செய்தார்கள்? இந்த மூன்று உரங்களையும் கலந்து கலப்பு உரம் என்ற பெயரில் உழவர்களுக்குத் தந்தார்கள். ஆனால், விற்பவன் என்ன செய்கிறான்? குளத்தில் இருக்கிற வண்டல்களையெல்லாம் இரவு நேரத்தில் கலந்து விற்பனை செய்கிறான். எனக்கு இவையெல்லாம் எப்படித் தெரியவந்தன? தொடக்கத்தில் அரசுப் பணியிலிருந்தும் பின் தனியாரிடமிருந்தும் பத்து ஆண்டுகளுக்கு மேல் அனுபவப்பட்டுத்தான் தெரிந்துகொண்டேன்.

1985-ம் ஆண்டு இங்கிலாந்து செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கு ஹாலந்துக்காரர் ஐந்து பேரை வைத்துக்கொண்டு இயற்கை வேளாண்மை செய்துகொண்டிருந்தார். அவர் ஒரு புத்தகம் தந்தார். அந்தப் புத்தகத்தில் இந்த விவரம் இருந்தது. முதல் உலகப் போர்க்காலத்தில் துப்பாக்கியில் போட்டு வெடிப்பதற்காக வெடி உப்புத் தயாரித்தார்கள். இது சோடியம் நைட்ரேட். போர் முடியும் தறுவாயில் முதலாளி கவலைப்பட்டார். இனிமேல் வெடி உப்புக்குத் தேவை இருக்காதே. லாபம் வராதே என்பது அவர் கவலை.

‘‘இந்திய வேளாண்மை ஆறாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது. ஆறாயிரம் ஆண்டுக்காலமாக எத்தனையோ சோதனைகள் செய்து தனது அறிவை இந்தச் சமுதாயம் சேகரித்து வைத்துள்ளது.

அப்போது சில விஞ்ஞானிகள் செடி வளர்ச்சிக்கு நைட்ரஜன் தேவை. உங்கள் உப்பை நைட்ரேட்டா மாற்றலாம் என்று அவருக்கு ஆலோசனை சொன்னார்கள். ஆராய்ச்சி செய்தார்கள், 1925-ம் ஆண்டு அம்மோனியம் சல்பேட் வெளிவந்ததும் இரண்டாவது உலகப்போரின்போது இன்னும் அதிக அளவில் பல முதலாளிகள் வெடி உப்புத் தயாரித்தார்கள். போர் முடிந்த பிறகு, நிறைய தொழிற்சாலைகள் அம்மோனியம் சல்பேட் தயாரிக்க ஆரம்பித்தன. இந்தச் சல்பேட்டைத் தங்கள் நாடுகளில் மட்டும் பயன்படுத்தினால் போதாது. அனைத்து வளரும் நாடுகளும் பயன்படுத்துவதற்குத் திட்டம் தயாரித்து பரப்பினர்.

அரசாங்கம், வேளாண் கல்லூரியிலிருந்து படித்து வருபவர்களை இரண்டு பிரிவாக எடுத்துக்கொள்கிறது. அதிக மதிப்பெண் பெறுகிறவர்களை ஆராய்ச்சிப் பிரிவுக்கு எடுத்துக்கொள்கிறது. குறைந்த மதிப்பெண் வாங்குகிறவர்களை விரிவாக்கத்துக்குத் தள்ளுகிறது. விரிவாக்கத்துறையில் வேலை செய்பவர்கள்தாம் ‘உப்பைப் போடு அதிக லாபம் வரும்’ என்று விளம்பரம் செய்தார்கள். லாபத்தின் மேல்தான் ஒவ்வொருவருக்கும் ஆசை. லாபமென்றால் என்னவென்று நமக்குத் தெரியும். குறைந்த விலைக்கு வாங்கிக் கூடுதல் விலைக்கு விற்றால் லாபம் கிட்டும்.

நீங்கள் உப்பைப் போட்டு வேளாண்மை செய்தால் எங்கே லாபம் வரும்? உழவரைக் கேட்டால் பட்டபாட்டுக்குப் பலனில்லை என்கிறார். அவர் லாபம் கேட்கவில்லை. எவ்வளவு உழைப்பை ஈடுபடுத்துகின்றாரோ அந்த அளவுக்குக் கிடைத்தால் போதும் என்கிறார். உழவர் பட்டபாட்டுக்கு மேல் எதையும் கேட்கவில்லை. லாபம் கேட்கவில்லை. எப்படிப் பலன் கிடைக்காமல் போனது?

நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் கிட்டாத வடிவில் இருக்கும் அந்த பாஸ்பரஸைச் செடிக்குக் கிட்டக்கூடிய வடிவில் மாற்ற வேண்டும். அதற்குப் பூமியில் நிறைய உயிரினங்களை வாழ வைத்தால் தானாக அது மாறிவிடுகிறது. அண்மைக்காலத்தில் நம் விஞ்ஞானிகள் பாஸ்போ பாக்டீரியா என்ற உயிர் உரத்தைப் பாக்கெட்டில் அடைத்து விற்கிறார்கள். அதைச் சோற்றுக் கஞ்சியில் கலந்து மணலோடு சேர்த்து நிலத்தில் தூவிவிட்டால் போதும். பூமியில் உள்ள பாஸ்பரஸை அந்தப் பாக்டீரியாவே மாற்றிச் செடிக்குக் கொடுத்துவிடுகிறது. புதிதாக நாம் பாஸ்பரஸ் இட வேண்டியதில்லை. ஏற்கெனவே பாறையாகப் பயன்படாத வடிவத்திலிருக்கிற பாஸ்பரஸைப் பயன்படும் வடிவுக்கு இந்த பாக்டீரியா மாற்றுகிறது. இதற்கு முன் ஆய்வு செய்தவர்கள் விஞ்ஞானிகளாகச் செயல் படவில்லை. விஞ்ஞானிகளின் நாற்காலிகளைத் தான் பிடித்துக்கொண்டார்கள்.

நம் விஞ்ஞானிகள் விவசாயிகளுக்குத் தவறான திசையைக் காண்பித்தார்கள். நெல் அறுவடை செய்தபின் உளுந்து ஏன் பயிரிட வேண்டும்? (உளுந்து பயிரிட்டால், உளுந்துச் செடி காற்றில் உள்ள தழைச்சத்தை இழுத்து நிலத்தை வளமாக மாற்றும். இதனால்தான் நம் முன்னோர்கள் இதை விடாமல் செய்தார்கள்). பருத்திப் பயிரிடு, மிளகாய்ப் பயிரிடு, சோளம் பயிரிடு என்றார்கள். இந்தச் செடிகளில் நுண்ணுயிர்கள் இல்லை. சத்து கிடைக்கவில்லை. ஆகவேதான் உரத்தைப்போடு என்றார்கள். இப்படியாக ஆறாயிரம் ஆண்டுக்காலமாக நம் விவசாயிகள் சேர்த்து வைத்திருந்த அறிவை வழித்து எடுத்துவிட்டார்கள். இதுதான் நமக்குப் பெரிய இழப்பு. இதை மீண்டும், சேகரித்து உழவர்களிடம் சேர்க்க வேண்டும்’’ என்று சொல்லிய நம்மாழ்வார் தன் வாழ்நாள் முழுக்க அந்தப் பணியைத்தான் பசுமை விகடன் இதழுடன் இணைந்து செய்தார்.

‘‘ஊருக்கு ஒருவர் இயற்கை வேளாண்மை செய்தாலும், அந்தப் பண்ணையில் நல்ல விளைச்சல் கிடைக்கிறதே..?’’ என்று ஒரு கூட்டத்தின்போது, ஒருவர் கேள்வி எழுப்பினார்.

‘‘ஊர் முழுக்க ரசாயன உரத்தையும் பூச்சிக்கொல்லி விஷத்தையும் மண்ணில் கொட்டுறாங்கதானே. அதனால, தேனீ, சிலந்தினு நன்மை செய்யும் பூச்சிகளும் உயிர்களும் இயற்கை வேளாண்மை செய்பவரின் பண்ணைக்கு வந்து வாழ ஆரம்பிச்சிடுதுங்க. இதனால இவருக்கு நிறைய விளைச்சல் கிடைக்குது. இதுதான்ய்யா... அந்த இயற்கை ரகசியம்’’ என்று அவர் பாணியில் பதில் சொன்னார்.