
மாத்தியோசி
அண்மையில் மேட்டூர் அணை சம்பந்தமாக திரும்பிய பக்கமெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சரியான நேரத்தில், தண்ணீருக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை திறந்தால் பாதித் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கிடைக்கும். இந்த அணையைக் கட்டுவதற்கு முயற்சி எடுத்தவர்களை இந்த நேரத்தில் நினைத்துப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

காவிரிக்குக் குறுக்கே 1801-ம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இந்த அணையைக் கட்ட முயற்சி எடுத்தபோது, மைசூர் சமஸ்தானத்தின் எதிர்ப்பால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இரண்டாம் முறையாக 1835-ம் ஆண்டு சர் ஆர்தர் காட்டன் என்பவரால் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், மைசூர் சமஸ்தானத்தின் தொடர் எதிர்ப்பால் இம்முயற்சியும் இரண்டாம் முறையாகக் கைவிடப்பட்டது.
இங்கிலாந்தில் பிறந்த ஆர்தர் காட்டன், இந்தியாவில் நீர்ப்பாசன வசதிகள் செய்து தரவும், கால்வாய்கள் அமைக்கவும், அணை கட்டுவதற்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். இதனால், ‘இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை’ எனக் கொண்டாடப்படுகிறார். 1829-இல் காவிரி பாசனப் பகுதிக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஆர்தர் காட்டன், மணல் மேடுகளால் நீரோட்டம் தடைப்பட்டிருந்த கல்லணையில் மணல் போக்கிகளை அமைத்தார். அப்போது, கரிகால் சோழன் கட்டிய கல்லணையின் அடித்தளத்தைக் கண்டு வியந்து, “ஆழம் காண முடியாத ஆற்று மணற்படுகையில் அடித்தளம் அமைக்கும் தொழில்நுட்பத்தைப் பண்டைய தமிழர்கள் வாயிலாக அறிந்துகொண்டேன்” என்று புகழ்ந்து எழுதி வைத்துள்ளார். கல்லணைக்கு ‘கிராண்டு அணைகட்’ (Grand Anicut) என்ற பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.
காவிரி ஆறு முக்கொம்பில் காவிரி, கொள்ளிடம் என இரண்டாகப் பிரிகிறது. கொள்ளிடம் ஆற்றுப்பகுதி தாழ்வாக இருப்பதால், அங்கு நீர் அதிகமாகப் பாய்ந்து காவிரியில் உரிய நீர்வரத்து இல்லாமல் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்ட விவசாயிகளின் துயர் துடைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளும் பொறுப்பை ஆர்தர் காட்டனிடம் வழங்கியது அப்போதைய ஆங்கிலேய அரசு. கல்லணையை முன்மாதிரியாகக் கொண்டு 1835-36-இல் கொள்ளிடத்தின் குறுக்கே மேலணையைக் கட்டினார்.
இதனால் கொள்ளிடம் ஆற்றில் வீணாக நீர் செல்வது தடுக்கப்பட்டது. தவிர கும்பகோணம் அணைக்கரை கீழணை, வெண்ணாறு, வெட்டாறு நீர்ப் பாசனங்களையும் இவர் முறைப்படுத்தினார். ஆந்திராவில் கோதாவரியின் குறுக்கே 1842-57-ம் ஆண்டுகளில் இவர் கட்டிய அணையால் தரிசாகக் கிடந்த 10 லட்சம் ஏக்கர் நிலப் பகுதியில் இன்று முப்போகம் விளைகிறது. கோதாவரி பாயும் பகுதிகளில் ஆர்தர் காட்டனுக்குச் சிலைகள் உள்ளன. ராஜமுந்திரி பகுதி விவசாயிகளின் வீடுகளில் இவரது புகைப்படம் உள்ளதைப் பார்த்திருக்கிறேன்.

நீர்ப்பாசன திட்டங்களில் ஆர்வம் கொண்ட ஆர்தர் காட்டனுக்கு மேட்டூர் அணை கட்டும் வாய்ப்புக் கிடைத்திருந்தால், நிச்சயம் மாற்றியோசித்திருப்பார்.
“எங்கள் மாவட்டத்தில் மேட்டூர் அணை இருந்தாலும், அதன் பயனை முழுமையாக நாங்கள் அனுபவிக்க முடியவில்லை’’ எனச் சொல்லும் சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு அப்போதே ஆர்தர் காட்டன் கட்டாயம் நல்வழிக்காட்டியிருப்பார்.
சரி, அணையைக் கட்டிய கதைக்குள் வருவோம்.
1923-ம் ஆண்டுத் திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவான் பகதூர் சர் சி.பி.ராமசாமி ஐயரிடம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகள், மேட்டூரில் அணை கட்ட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். காரணம் தஞ்சை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர், சி.பி.ராமசாமி. இந்த உரிமையில்தான், கோரிக்கை வைத்தார்கள். ராஜதந்திரியான சி.பி.ராமசாமி, மைசூர் சமஸ்தானத்தின் திவான் பகதூர் விஸ்வேஸ்வரய்யாவிடம் இது பற்றிப் பேசினார். ஆனால், மைசூர் சமஸ்தானம் மசியவில்லை.
இதைத் தந்திரமாகத்தான் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டார் சி.பி.ராமசாமி. காவிரியில் அப்போதெல்லாம் ஆண்டுதோறும் வெள்ளம் வந்து, பயிர்களைச் சேதப்படுத்தும். இதற்கு ஆண்டுக்கு ரூ.30,00,000 நஷ்ட ஈடாக மைசூர் சமஸ்தானம் கொடுக்க வேண்டும் எனத் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் மூலம், தஞ்சாவூர் விவசாயிகள் மைசூர் சமஸ்தானத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள் . (அன்று ஒரு பவுன் விலை ரூ.30-மட்டுமே, இதன்படி கணக்கிட்டால் ரூ.30,00,000க்கு 1 லட்சம் பவுன்) ஆண்டுதோறும் 1 லட்சம் பவுன் கொடுப்பதைவிட அணைகட்ட சம்மதிப்பதே சிறந்தது என மைசூர் சமஸ்தானம் முடிவு செய்தது. இந்தத் தகவலை திவான் பகதூர் சர் சி.பி.ராமசாமி ஐயர் (சென்னையில் இவரது வீட்டுக்கு எதிரில்தான் நடிகர் கமலஹாசன் வீடு உள்ளது.) அப்போதைய சென்னை மாகாண கவர்னரிடம் தெரிவித்தார்.

1924-ம் ஆண்டு மேட்டூர் அணை கட்ட ஆங்கிலேய அரசு பச்சைக் கொடி காட்டியது. தலைமை வடிவமைப்பு மற்றும் கண்காணிப்பு பொறியாளர் எல்லீஸ், நிர்வாகப் பொறியாளர் வெங்கட்ராமையர், முதன்மை தலைமைப் பொறியாளர் முல்லிங்க்ஸ் தலைமையில் 24 பொறியாளர்கள் அடங்கிய குழு அணைகட்டும் பணியைத் தொடங்கியது.
மேட்டூர் அணைகட்டும் பணியில் ஒன்பது ஆண்டுக்காலம் 10,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். 1934-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி கடைசி கல் வைக்கப்பட்டுக் கட்டுமானப் பணி நிறைவுபெற்றது.
அணையைக் கட்டி முடிக்க அப்போது ஆன செலவு ரூ.4.8 கோடி ஆகும். இப்போது, 4,000 கோடி இருந்தாலும், இவ்வளவு சிறப்பாக அணையைக் கட்ட முடியாது.

அப்போதைய சென்னை மாகாண கவர்னர் ஜான் பெடரிக் ஸ்டான்லி, 1934-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி பாசனத்துக்கு நீரைத் திறந்து வைத்து, அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஆளுநர் ஸ்டான்லியின் பெயரையே அணைக்கும் சூட்டி, ஸ்டான்லி நீர்த்தேக்கம் என வைத்தனர். இந்த அணை கட்டப்பட்ட சமயத்தில் இதுதான் உலகிலேயே உயரமான நேர்கோட்டில் அமைந்த நீர்த்தேக்கமாகும்.
கடல்போலக் காட்சியளிக்கும் அளவுக்குத் தண்ணீர் தேக்கப்பட்டது. அணையைக் கட்டிய பொறியாளர் டபிள்யூ.எம்.எல்லீஸ் ராயலை ‘மேட்டூர் அணையின் சிற்பி’ என்று அன்றும் இன்றும் புகழப்படுகிறார் இனி என்றும் புகழப்படுவார். மேட்டூர் அணையின் பூங்காவில் இவருக்குச் சிலையும் உள்ளது.
இந்திய அளவில் பெரிய அணைகளில் ஒன்றான இதன் உச்ச நீர்மட்ட அளவாக 120 அடி வரை நீரைத் தேக்கலாம். அதன் பிறகு ஓடிவரும் நீர் வரத்து யாவும் உபரியாக அணைக்கட்டில் நிற்காமல் தானாகவே வெளியேறிச் செல்லும் அற்புதமான இயற்கையுடன் இணைந்த கட்டுமானப்பணி உடையது. எந்தக் காலத்திலும் அணைக்கோ அணை சார்ந்த கட்டுமான அமைப்புகளுக்கோ ஒருகாலும் ஊறு விளைக்க முடியாத தன்மைகளுடன் அமைக்கப் பட்டிருக்கிறது.
அணையின் நீளம் 5,300 அடி. அணையின் கொள்ளளவு 93.50 டி.எம்.சி. அணையின் உயரம் 214 அடி. அணையின் அகலம் 171 அடி. அணையின் நீர் சேமிப்பு உயரம் 120 அடி. அணையின் நீர்பிடிப்புப் பரப்பளவு 59.25 சதுர மைல், சுமார் 3 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
காவிரிக்கு நன்றி சொல்லவும், எல்லீஸ் கட்டிய அணையைக் காவல் காத்து நிற்பதாகக் கருதப்படும் முனியப்பனுக்குப் பொங்கல் வைக்கச் சேலம் மாவட்ட மக்களில் சிலர் ஆண்டுக்கு ஒரு நாள், மேட்டூர் அணைக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
மேட்டூர் அணைக்குச் செல்வது அந்த மாவட்ட மக்களுக்குப் பொங்கல், தீபாவளிப்போல மகிழ்ச்சி பொங்கும் நல்ல நாள்.