மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு : அஜ்வா பேரீச்சையும் அறிவு கொள்முதலும்!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

‘கிரிக்கெட் ஆட்டக்காரர் தோனி இயற்கை விவசாயம் செய்கிறார்…

கார் விற்பனை சரிந்தது; டிராக்டர் விற்பனை அதிகரித்து வருகிறது…’

மேற்கண்ட இரண்டு செய்திகளும் சொல்லும் தகவல் ஒன்றுதான். உழவுத் தொழிலே எக்காலத்திலும் உன்னதமானது. பெருந்தொற்று நேரத்தில் விவசாயத்தை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. பெரும்பாலான மென்பொருள் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற பச்சைக்கொடி காட்டிவிட்டது. இதனால், ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ என்று இருந்த பலரும் ‘வொர்க் ஃப்ரம் ஃபார்ம்’ என்று மாறிவிட்டார்கள்.

சொந்த ஊரில் பசுமையான வயல்வெளியில் உட்கார்ந்துகொண்டே மென்பொருள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் கிராமத்தில் பகுதி நேரமாக இயற்கை விவசாயம் பார்க்க நிலம் தேடும் வேட்டையில் இறங்கியுள்ளார்கள்.

‘ஆற்றங் கரையின் மரமும் அரசறிய

வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே-ஏற்றம்

உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்

பழுதுண்டு வேறோர் பணிக்கு...’

ஔவையார் எழுதிய நல்வழிப் பாடல்தான், இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது.

நேரடி நெல் விதைப்புப் பயிற்சியின்போது
நேரடி நெல் விதைப்புப் பயிற்சியின்போது

“ஆற்றின் கரையிலேயே செழிப்பாக வளரும் மரமும், அரசன் அறிய பெருமையாக வாழ்கிற வாழ்க்கையும்கூட மாறிவிடும். ஆனால், உழுது, பயிர் செய்து உண்டு வாழும் வாழ்வுக்கு நிகரான வாழ்வு எதுவுமில்லை’’ என ஔவை பாட்டி சொல்லியது, இப்போது மட்டுமல்ல, எப்போதைக்கும் பொருத்தமானது.

இளைஞர்கள், அதுவும் படித்த இளைஞர்கள் விவசாயத்தில் காலடி எடுத்து வைப்பது, வரவேற்கக் கூடியது. ஆனால், விவசாய வித்தைகளை முழுமையாகத் தெரிந்துகொண்டு இறங்கினால், அதன் பலனை விரைவில் காணும் வாய்ப்பு கிடைக்கும்.

‘குறைந்தபட்ச குறைபாடுகள், அதிகபட்ச தரம்’ தொழில் முனைவுகளுக்கும், நிர்வாகத்துக்கும் பயன்படும் சிக்ஸ் சிக்மா (Six Sigma)வில் ஐந்து பெல்ட் வாங்கும் பயிற்சிகள், விவசாயத்துக்கும் பொருந்தும். இன்னும் சொல்லப்போனால், சிக்ஸ் சிக்மாவில் பல வண்ண பெல்ட்டுகளை வாங்குவதைக் காட்டிலும் கடினமான பயிற்சியும் முயற்சியும் இருந்தால் மட்டுமே விவசாயத்தில் வெற்றி நிச்சயம். பிற தொழில்களைப் போல, விவசாயத்தில் எந்தத் தொழில் ரகசியங்களும் கிடையாது. ஓப்பன் சீக்ரெட். திறமை உள்ளவர்கள் நிச்சயம் உயர முடியும். அதுவும், காப்பி அடித்தால் வெகு விரைவில் வெற்றி பெற முடியும்.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

கல்வி கற்கும் காலம் வரை, பிறரை காப்பி அடிப்பது தவறு. உலகம் என்ற பல்கலைக்கழகத்துக்குள் அனுபவப் பாடம் கற்க தொடங்குவதற்கு அடிப்படை தகுதியே காப்பி அடிப்பதுதான்.

ஆம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, அஞ்சாமை… என வாழ்க்கைக்கு உதவும் நல்ல விஷயங்களைப் பிறரைப் பார்த்துப் பின்பற்றி, நம்மை நாமே உயர்த்திக்கொண்டு, மற்றவர்களுக்கும் உயர வழிகாட்டலாம். வாழ்வில் உயர்ந்தவர்களின் கதைகளை உற்றுக்கேட்டால், அவர்கள் சிறப்பாகக் காப்பி அடிப்பவர்களாக இருந்திருப்பார்கள். அதுவும் விவசாயத்தில் காப்பி அடித்தால், பல ஆண்டுகள் உழைப்பும், பல ஆயிரம் (லட்சம்) பணமும்கூட மிச்சமாகும்.

செங்கல்பட்டு அருகில், தண்ணீர் வசதியே இல்லாத மானாவாரி நிலத்தில் மலைவேம்புச் சாகுபடி செய்திருந்தார் ஒருவர். ஆரம்பத்தில் வேகமாக வளர்ந்த மரங்கள், சில ஆண்டுகளில் தழைகூட இல்லாமல் மொட்டை மரமாக நின்றுள்ளன. “மரப்பலகைக்குப் பயன்பட வேண்டிய மலைவேம்புக் கடைசியில் அடுப்பெரிக்கப் பயன்பட்டது பணம் மட்டுமல்ல, பல ஆண்டுகள் உழைப்பும் வீண் என்றாலும், நான் சந்திக்கும் விவசாயிகளிடம் மலைவேம்பு நல்ல பயிர். ஆனால், மானாவாரியில் நடவு செய்யாதீர்கள்… என்று சொல்லிவருகிறேன். இதன் மூலம் என் அனுபவம் மற்றவர்களுக்குப் பாடமாக இருக்கும்’’ என்று அந்த நண்பர் சொன்னார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு பசுமை விகடன் ஏற்பாட்டில், சென்னைக்கு அருகில் உள்ள படப்பை கிராமத்தில் நேரடி நெல் விதைப்புக் கருவி சம்பந்தமான களப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அந்தப் படப்பை பண்ணை ஆனந்த விகடன் குழுமத்தின் தலைவரும் நாடறிந்த பத்திரிகை ஆசிரியருமான நினைவில் வாழும் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களுக்குச் சொந்தமானது.

பகுதி நேர விவசாயியான பாலசுப்ரமணியன்அவர்கள் விவசாயத்தில் அதீத ஆர்வம் கொண்டவர்; பறவை நேசர். அவரைக் காணவும், நேரடி நெல் விதைப்புக் கருவியை வாங்கவும், பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் வந்திருந்தார்கள்.

பயிற்சியில் பாடமெடுக்கும் அமரர் எஸ்.பாலசுப்ரமணியன்
பயிற்சியில் பாடமெடுக்கும் அமரர் எஸ்.பாலசுப்ரமணியன்

காலை 7 மணிக்கெல்லாம், செய்முறை விளக்கப்பயிற்சியைத் தொடங்கினார். பயிற்சி முடிந்தவுடன் விவசாயிகள் அவரிடம் பல கேள்விகளைக் கேட்டனர். அதில் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லும்போது,

“விவசாயம் செய்யும்போது, நிச்சயம் தவறு செய்வோம். நான் கடைப்பிடிக்கும் சூத்திரத்தைச் சொல்கிறேன். உங்களுக்கும் அது பயன்படும். உதாரணமாகக் கத்திரிச் சாகுபடி செய்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். கத்திரிச் சாகுபடி தொடங்கியது முதல் அறுவடை வரை அனைத்து தகவல்களையும் ஒரு நோட்டில் எழுதி வைப்பேன்.

ஒரு வேளை கத்திரிச் சாகுபடியில் கொஞ்சம் கவன குறைவாக இருந்த காரணத்தால், நோய்த் தாக்குதலோ, விளைச்சல் குறைவோ… என ஏதாவது ஏற்பட்டிருந்தால், அதைச் சிவப்பு மையில் எழுதி வைத்துவிடுவேன். என்னைப் பொறுத்தவரை அது நஷ்டம் அல்ல. அறிவுக் கொள்முதல். அடுத்த முறை கத்திரிச் சாகுபடி செய்யும்போது, பழைய தவற்றை மீண்டும் செய்யமாட்டேன்….’’ என்று பாலசுப்ரமணியன் அவர்கள் நெல் வயலின் வரப்பில் நின்றுகொண்டு சொல்லிய அனுபவப் பாடம் எந்தப் பல்கலைக்கழகத்துப் புத்தகத்தில் தேடினாலும் கிடைக்காது.

இளம் ரத்தங்கள் விவசாயத்தில் இறங்கும்போது, புதியவற்றைச் செய்துபார்க்க துடிப்பார்கள். தமிழ்நாட்டில் கால்வாசி மாவட்டங்கள் மழை மறைவு பகுதிகள் (Rain Shadow Area). இங்கெல்லாம், தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் பயிரைத் தேர்வு செய்து சாகுபடி செய்வது நல்லது. அடிப்படையான இந்தத் தகவலை மறந்துவிட்டு வாழ்நாள் சேமிப்பு அத்தனையும் போட்டு பொட்டல் காட்டை வாங்கி, அதில் ‘சோலையை உருவாக்கப் போகிறேன்…’ எனச் சொல்வது நடைமுறையில் எளிதானது அல்ல.

‘நபிகள் நாயகம் சாப்பிட்டதாக நம்பப்படும் ‘அஜ்வா’ பேரீச்சையை வங்காள தேசத்தில் சாகுபடி செய்து ஒரு விவசாயி, கோடிகளில் வருமானம் எடுத்துவருகிறார்.’

‘மருத்துவக் காளான் வளர்த்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால், லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்’ என்பது போன்ற தகவல்கள் கையில் கிடைத்தவுடன், இதை உடனே செய்ய வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படும்.

இதைச் செயல்படுத்திப் பார்க்க, அகலக்கால் வைத்தால், நிச்சயம் சேதாரம் அதிகமாகவே இருக்கும். நம் மண்ணுக்கும், நம்மைச் சுற்றியுள்ள சந்தைக்கும் எது ஏற்றது, என்ன தேவை என்பதை அறிந்துகொள்வது அவசியம்.

ஒரு பயிரைச் சாகுபடி செய்யும் முன்பு, அந்தப் பயிர் சந்தைக்கு வரும்போது, என்ன விலைக்கு விற்பனையாகும் என்ற அடிப்படை தகவல்களைத் திரட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

இன்றைய உலகில் தகவல் (Data)தான் அத்தியாவசியமானது. இதை அதிகமாக வைத்திருப்பவர்களுக்கும், பயன்படுத்துபவர்களுக்கும் மேலும், மேலும் செல்வம் சேரும்.

உங்கள் உள்ளங்கையில் உள்ள ஸ்மார்ட்போனில், இன்னும் கொஞ்சம் ஆழமாகத் தேடினால், நாட்டில் உள்ள சந்தைகளில் எங்கு உங்கள் விளைபொருளுக்குக் கூடுதல் விலைக்கிடைக்கும் என்ற ‘சந்தை புலன் ஆய்வு’ம்கூடச் செய்து, டிஜிட்டல் விவசாயியாக ஜொலிக்கலாம்.