மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு : தமிழ்நாட்டை விரும்பிய தலைக்காவிரி… கைப்பற்றிக்கொண்ட கர்நாடகம்!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

ரு முறை மைசூரில் நடைபெற்ற பயோ-டைனமிக் கருத்தரங்கில் கலந்து கொண்டுவிட்டு, மைசூர் அரண்மனை வாசலில் நின்றுகொண்டிருந்தேன்.

கருத்தரங்கில் கலந்துகொண்ட சில நண்பர்கள், அரண்மனையைச் சுற்றிப் பார்த்த பிறகு, ‘‘மைசூர் வந்துவிட்டு, மைசூர் பாக் வாங்காமல் போனால் எப்படி, உங்களுக்கு மைசூர் பாக் விற்பனை செய்யும் கடை தெரியுமா?’’ என்று கேட்டார்கள்.

``அது மைசூர் பாக் அல்ல. `மைசூர் பாகா.’ இதோ, இந்த அரண்மையில்தான், அந்த இனிப்புப் பண்டம் உருவானது. மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜா உடையாரின் அம்பா விலாஸ் அரண்மனையில்தான் முதன்முதலில் மைசூர் பாகா தயாரிக்கப்பட்டது. ஒருநாள் அரண்மனையின் தலைமை சமையற்காரரான காக்கசுரா மடப்பா அவசர அவசரமாக ராஜாவுக்கான மதிய உணவைத் தயாரித்துக்கொண்டிருந்தபோது, இனிப்புப் பண்டம் சமைக்க தாமதமாகிவிட்டது. மதிய உணவை ராஜா சாப்பிட்டு முடிப்பதற்குள் இனிப்புப் பண்டத்தைச் சமைத்தாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

மண்புழு மன்னாரு : தமிழ்நாட்டை விரும்பிய தலைக்காவிரி… கைப்பற்றிக்கொண்ட கர்நாடகம்!

அப்போது கையில் கிடைத்த கடலை மாவு, நெய் மற்றும் சர்க்கரையை வைத்து சூடான ஒரு கலவையைத் தயாரித்தார் மடப்பா. மைசூர் மகாராஜா உணவைச் சாப்பிட்டு முடிப்பதற்குள் இனிப்புப் பரிமாறப்பட்டது. அதைச் சாப்பிட்டுவிட்டு மெய்ம்மறந்துபோனார் மைசூர் மகாராஜா. `இதற்கு என்ன பெயர்?’ என்று மடப்பாவிடம் கேட்டபோது, உடனடியாக ராஜா கேட்கும் போது ஒரு பெயரைச் சொல்ல வேண்டும் என்ற பதற்றத்தில், ‘மகாராஜா இதற்குப் பெயர் மைசூர் பாகா’ என்றார். ‘பாகா’ என்றால் கன்னடத்தில் ‘சர்க்கரைப்பாகு’ என்று அர்த்தம். அதில் மைசூரையும் இணைத்து ‘மைசூர் பாகா’ என்று பெயர் சூட்டினார் மடப்பா. மகாராஜா, அதன் செய்முறையைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். மைசூர் பாக் மிக எளிமையாக இருக்கவும் பிறருக்கும் கற்றுக்கொடுக்கச் சொன்னார். மைசூர் பாகாவின் புகழ் மளமளவெனப் பரவ ஆரம்பித்தது. ஆனால், மடப்பாவின் கைமணம் வேறு யாருக்கும் வரவில்லை.

ஒருநாள் “நீ ஏன் நம் அரண்மனைக்கு வெளியே இனிப்பு அங்காடி ஒன்றைப் போட கூடாது... நம் மக்களும் அபாரமான மைசூர் பாகாவைச் சுவைப்பார்களே...’ என்று அப்போதைய மைசூர் மகாராஜா ஜெய சாமராஜேந்திர உடையார் இனிப்பான ஆலோசனையை வழங்கினார்.

`மைசூர் பாகா’ மடப்பாவுக்கு மகிழ்ச்சி. 1957-ம் ஆண்டில் மைசூர் அரண்மனைக்கு வெளியே சாயாஜி ராவ் சாலையில் `குரு ஸ்வீட்ஸ்’ இனிப்புக்கடை இனிதே உதயமானது’’ என்ற கதையைச் சொன்னபடியே, அந்த அரண்மனை இனிப்புக்கடைக்கு அழைத்துச் சென்றேன்.

நண்பர்கள், “ஆஹா... என்ன சுவை, என்ன சுவை...’’ என்று ரசித்து ருசித்துச் சாப்பிட்டார்கள். நானும் அதை ருசித்தேன். அந்தச் சமயத்தில் வித்தியாசமான உடை அணிந்த ஒரு குழுவினர், மைசூர் பாகா வாங்க வந்தார்கள். விசாரித்தபோது, குடகு மலையின் பூர்வீகக் குடிகள் என்றனர். நீண்டகாலமாகவே குடகுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த மக்களைப் பார்த்ததுமே `குடகுக்குப் போக வேண்டும்’ என்ற எண்ணம் மீண்டும் எழுந்தது.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

சில மாதங்களுக்கு முன்னர்தான் ஏ.கே.செட்டியார் எழுதிய ‘குடகு’ நூலை வாசித்திருந்தேன். அது முதல் குடகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவல் எழுந்துகொண்டே இருந்தது. குறிப்பாக, தலைக்காவிரியைக் கண்டு தரிசிக்க. பயண நூல்கள் எழுதுவதில் சிறந்த எழுத்தாளரான ஏ.கே.செட்டியார், அந்தக் காலத்திலேயே மகாத்மா காந்தி குறித்த ஆவணப்படத்தை எடுத்தவர்.

மைசூரிலிருந்து குடகு மலை 118 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. இரண்டரை மணி நேரத்தில் மைசூரிலிருந்து குடகு மலைக்குப் போய்விடலாம். `மடிக்கேரி’தான் குடகின் தலைநகர். `குடகு, ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது’ என்கிறது வரலாறு.

குடகு நாட்டு மலை சங்ககாலத்தில் ‘பொன்படு நெடுவரை’ என்று போற்றப்பட்டிருக்கிறது. (ஆவூர் மூலங்கிழார்- புறநானூறு 166). ‘பொன்போலத் தோன்றும் மலை’ என்பது பொருள். மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள குடகு மலையில் மழை பொழிந்தால் காவிரியாற்றில் வெள்ளம் வரும். பொன்படு நெடுவரையில் தோன்றிப் பாய்வதால் காவிரியாற்றுக்குப் ‘பொன்னி’ என்னும் பெயர் உண்டு. இதன் தொடர்ச்சியாகத்தான் நீர் நிலைகளின் அருகில் `பொன்னி அம்மன்’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் தெய்வ வழிபாடு உருவானது.

சிறு வயதில் காவிரி ஆற்று வெள்ளத்திலிருந்து உயிர் பிழைத்துவந்த காரணத்தால்தான் தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனுக்குப் ‘பொன்னியின் செல்வன்’ என்ற பெயர் உருவானது. அமரர் கல்கி தன் `பொன்னியின் செல்வன்’ நாவலில், இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டிருப்பார்.

தலைக்காவிரி
தலைக்காவிரி

செந்தமிழில் நாம் `குடகு’ என்கிறோம். வெள்ளைக்காரர்கள் வாயில் அது `கூர்க்’ (Coorg) என்று மாறி, இப்போது சகலரும் `கூர்க்’ என்றே அழைத்துவருகிறார்கள். இந்தியாவில் முதன்முதலாகக் காபி பயிர் செய்த இடமும் குடகுதான். மெக்காவுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட இஸ்லாமியர் ஒருவர் காபிச் செடியைக் குடகில் கொண்டுவந்து நடவு செய்திருக்கிறார். குடகுப் பகுதியில் விளையும் காபிக் கொட்டைகள் மணம் மிக்கவை. ஆனால், குடகுப் பகுதியில் உள்ளவர்களுக்கு, நம் தமிழ்நாட்டு மக்களைப்போல டிகிரி காபி போட தெரியாது; நன்றாக காபியை விளைவிக்கத்தான் தெரியும்.

பசுமை கொஞ்சும் குடகுக்கு வருபவர்களின் பெரும் விருப்பம் தலைக்காவிரியை தரிசிப்பதுதான். ஒரு சிறிய இடத்தில் உற்பத்தியாகும் காவிரி நதியை மலர் தூவி, ஊண் உருக வணங்கி நிற்பவர்களை அங்கு பார்க்க முடிகிறது. குடகுப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர்களுக்குத் தலைக்காவிரி குலதெய்வம் போன்றது.

இங்கிருந்து பொங்கிப் பெருகித்தான் பொன்னி நதி, தஞ்சைத் தரணியை நெற்களஞ்சியமாக மாற்றியிருக்கிறாள். வரலாறு, பூகோள அடிப்படையில் பார்த்தால் குடகு தமிழ்நாட்டுடன்தான் இணைந்திருக்க வேண்டும். திராவிட மொழிகளின் தாய்மொழியான தமிழிலிருந்து பிரிந்ததுதான் குடகர்கள் பேசும் `துளு’ மொழி.

‘நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்...’ என்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுகிறோம். மனோன்மணியம் பெ.சுந்தரனார் எழுதியவற்றில் சில வரிகளை அரசு நீக்கிவிட்டுத்தான், நமக்குப் பாடக் கொடுத்திருக்கிறார்கள். மூல பாடலில்

“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்

உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல…’’ (இன்னும் சில வரிகள் உள்ளன. இந்த இடத்தில் அது வேண்டாமே...) என்று சுந்தரனார் பாடியிருக்கிறார்.

1834-ம் ஆண்டு, மைசூர் அரசைக் கட்டுப்படுத்திவைத்திருந்த ஆங்கிலேயர்கள் குடகு நாட்டைத் தங்கள் ஆட்சியின் கீழ் இணைத்துக்கொண்டார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டு ஒருமித்த இந்தியா உருவானது. அப்போது தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையில் தனிப்பகுதியாக `துளு’ மொழியின் அடிப்படையில் குடகு இருந்துவந்தது. 1956-ம் ஆண்டில் `மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட வேண்டும்’ என்ற நிலை வலுத்துவந்தது. அப்போது, `குடகுப் பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும்’ என்று மக்களால் கூறப்பட்டது. பிரதமர் நேரு ‘தமிழ்நாடு அல்லது கர்நாடகா என ஏதேனும் ஒரு மாநிலத்தோடு இணைந்துகொள்ளுங்கள்’ என்ற ஆலோசனையை வழங்கினார்.

தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள், `கோலார் தங்க வயல் தமிழ்நாட்டுக்கு வேண்டும்’ என்று போராடினார்கள். ஈ.வே.ரா பெரியார் மட்டும் `குடகுப் பகுதியை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும்’ என்று தொடர்ந்து சொல்லிவந்தார்.

குடகு மக்களும்கூட, கர்நாடகாவைவிட, தமிழ்நாடுதான் தங்களுக்கு ஏற்றது என விருப்பம் தெரிவித்தார்கள். ஆனால், ராஜதந்திரத்துடன் ‘பொறியியல் மேதை’ விஸ்வேஸ்வரய்யா காவிரியைக் கைப்பற்றும் நோக்கில், குடகுப் பகுதியை (அப்போதைய மைசூர் மாநிலம்) கர்நாடக அரசுடன் இணைத்துவிட்டார்.

`500 கிலோமீட்டர் தூரத்திலிருந்த குடகு விஷயத்தில் கோட்டைவிட்டதால், காவிரி நீர் கேட்டு 2,000 கிலோமீட்டர் தூரத்திலுள்ள புதுடெல்லிக்கு ஆண்டுதோறும் செல்லும் வரலாற்றுப் பிழை உருவாகிவிட்டதே…’ என்று நினைத்துக்கொண்டே தலைக்காவிரியில் மூழ்கி எழுந்தேன்.