
மாத்தியோசி
“நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவண்தட் டோரே
தள்ளாதோர்இவண் தள்ளா தோரே” (18: 28-30)
‘நீரைத்தேக்கித் நன்மை செய்தவர்களின் பெயர்தான் புகழ் வடிவில் உலகத்தோடு தளைக்கப்பட்டு நிலைக்கும்’ என்கிறது புறநானூறு.
2002-ம் ஆண்டு பவானிசாகர் அணையிலிருந்து கொடுமுடி வரை இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார், நடைப்பயணம் சென்றார். சிலநாள்கள், அவருடன் நானும் நடந்தேன். இந்த நடைப்பயணம் காலிங்கராயன் கால்வாய் தொடங்கும் இடத்தில் ஆரம்பித்து, கால்வாய் முடியும் கொடிமுடி வரை எனத் திட்டமிடப்பட்டிருந்தது. நம்மாழ்வாருக்கு நடைப்பயணம் மிகவும் பிடித்தமான ஒன்று. பயணங்கள் மூலம் நிறைய கற்றுக்கொள்ளலாம் என்பதே அதற்குக் காரணம். காலிங்கராயன் கால்வாயின் அருமை, பெருமை ஐ.நா சபை வரை சென்றுள்ளது. இதனால், உலகின் பழைமையான கால்வாய்களில் ஒன்றாக அறிவித்துள்ளது ஐ.நா நடைப்பயணத்தில் இயற்கை விவசாயம் மட்டுமல்ல; உணவு அரசியல், கால்நடை… என நிறைய விவாவதிக்கப்படும். ஒரு ஊரில் காலை 7 மணிக்குப் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், இயற்கை விவசாயம் சம்பந்தமாக நம்மாழ்வார் பேசிக்கொண்டிருந்தார். இளைஞர் ஒருவர் ஒலைச்சுவடி ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்து, “ஐயா, எங்கள் தாத்தா இருந்தவரை, இதைப் படித்து ஆடு, மாடுகளுக்கு வைத்தியம் பார்த்துவந்தார். அவருக்கு பின்னாடி, பூஜை அறையில் வைத்துவிட்டோம்’’ என்றார்.
“நம்ம முன்னோர்களோட அறிவு களஞ்சியம்ய்யா இது. இதை ‘மாட்டு வாகடம்’னு சொல்வாங்க. கால்நடை மருத்துவம் இந்தியாவுக்கு வந்து 100 ஆண்டுகள்தான் ஆகுது. ஆனா, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆடு, மாடுகளுக்கு இதை வைச்சுத்தான் மருத்துவம் பார்த்தாங்கய்யா…’’ என நம்மாழ்வார் சொல்லியபோது, எட்டிநின்று கேட்டுக்கொண்டிருந்தவர்கள், ஆர்வத்துடன் அருகில் வந்து நின்றனர். வானகத்தில் வேண்டுமானால், நம்மாழ்வாரின் உடல் விதைக்கப்பட்டிருக்கலாம். அவரது ஆன்மா, நாடு முழுக்கச் சுற்றிச் சுற்றித்தான் வரும். அதுவும் ஈரோடு மீது அந்தத் தாடிக்கார கிழவனுக்குக் கொஞ்சம் கூடுதல் பாசம். ஈரோடு, சத்தியமங்கலம், கொடுமுடி எனத் தன் வழிகாட்டுதலுடன் உருவாகிய பண்ணைகளை வானிலிருந்துகூட வாஞ்சையுடன் பார்த்துக்கொண்டிருக்கலாம். இந்த நடைப்பயணத்தின்போது, காலிங்கராயன் கால்வாய்ப் பகுதி மக்கள் சொல்லிய தகவல்களை, தன்பாணியில் மணக்க மணக்கச் சொல்வார் நம்மாழ்வார். காலிங்கராயன் கால்வாய்ச் சம்பந்தமாக ஏராளமான கதைகள் உலாவுகின்றன. புலவர் ராசு உள்ளிட்டவர்கள் கல்வெட்டு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதியுள்ளார்கள். இனி, காலிங்கராயன் கதைக்குள் செல்வோம்.

தமிழ்நாடு ஒருகாலத்தில் சேர, சோழ, பாண்டிய, தொண்டை, கொங்கு என ஐந்து நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கி.பி 1282-ம் ஆண்டு பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் பிரதிநிதியாகப் பூந்துறையைத் தலைமையிடமாகக் கொண்டு கொங்குநாட்டை ஆட்சி செய்தவர் காலிங்கராயன். இவரது சொந்த ஊர், ஈரோடு அருகில் உள்ள வெள்ளோடு. இவர் வாழ்ந்த பகுதிகள் முழுதும் மேட்டுப்பகுதிகள். பெரும்பாலும் மானாவாரி விவசாயம். சில இடங்களில் கிணற்றுப்பாசனம் இருந்தது. ஆகையால் இங்கு புன்செய்ப் பயிர்கள் மட்டுமே விளைவிக்கப்பட்டுவந்தன.
ஒருமுறை காலிங்கராயன் தஞ்சைப் பகுதியில் வசிக்கும் தன் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அந்தவீட்டின் சமையல்காரன் ‘‘விருந்து சமைக்கப் பழைய அரிசி போடுவதா புதிய அரிசி போடுவதா?’’ எனக் கேட்டிருக்கிறான். ‘‘நெல் விளையாத தேசத்துக்காரர்களுக்கு எந்த அரிசியாய் இருந்தாலென்ன’’ என்று கேலியாகப் பேசியிருக்கிறார்கள். இந்தச் சம்பவம், காலிங்கராயனுக்கு அவமானமாக இருந்துள்ளது. ‘‘எங்கள் வறண்ட பகுதி, தஞ்சைக்குச் சமமாக நெல்லும் வாழையும் விளையும் நிலமாக மாறும் காலம் வரும்…’’ என உணர்ச்சி பொங்க சொல்லிவிட்டு, ஊர் திரும்பியிருக்கிறார். பவானி ஆற்றிலிருந்து மேட்டுப்பகுதியை நோக்கி வாய்க்கால் வெட்டி நீரைக்கொண்டு வருவதுதான் காலிங்கராயனின் திட்டம். ஆனால், மேட்டுப்பகுதியை நோக்கி கால்வாய் வெட்டுவது சாத்தியமில்லை என்று யாரைக் கேட்டாலும் அவ நம்பிக்கையுடன் சொல்லியிருக்கிறார்கள்.
இதே சிந்தனையாக இருந்தவருக்கு ஒரு பாம்பு மேடான பகுதியை நோக்கி வளைந்து நெளிந்து செல்வதுபோலக் கனவு தோன்றியுள்ளது. மறுநாள் காலையில் துள்ளி எழுந்த காலிங்கராயன் கால்வாய் வெட்டும் வேலைகளைத் தொடங்கியுள்ளார். நேர்க்கோட்டில் கால்வாயை வெட்டாமல், வளைவு வளைவாக வெட்டத்தொடங்கியுள்ளார். இதனால், கால்வாய் நீளம் அதிகரித்தது; பாசனம் செய்யும் பரப்பளவும் கூடியது. இன்றும்கூட இதைக் கோண வாய்க்கால் எனச் சொல்பவர்கள் உண்டு. புதுமையான திட்டத்தில் இறங்கியதால், மக்கள் ஆதரவு ஆரம்பத்தில் குறைவாக இருந்துள்ளது. வரி விதித்தும்கூட நிதிப் பற்றாக்குறை. கடைசியில் சொந்த பணத்தைப் போட்டு, கால்வாய் வெட்டும் பணியை வேகப்படுத்தியிருக்கிறார். அப்படியும் கூடுதல் நிதி தேவைப்பட்டுள்ளது. இரண்டு பக்கம் கரை கட்டினால்தானே செலவுகூடும். மண் அமைப்புக்குத் தக்கபடி, கால்வாயின் ஒரு பக்கம் மட்டுமே, மாற்றி மாற்றி கரையை அமைப்போம் என மாற்றியோசித்துள்ளார். அது செயல் வடிவமாக மாறியது. இதனால் கால்வாய்க்கு ‘ஒத்தகரைவாய்க்கால்’ என இன்னொரு பெயர் உண்டு. இந்தக் கால்வாய் பவானிசாகரிலிருந்து கொடுமுடியைத் தாண்டி நொய்யலில் போய் கலக்கிறது. சுமார் 90 கிலோமீட்டர் தூரம் நீண்டு கிடக்குகிறது இந்தக் கால்வாய்.
ஒருநாள் இருள் சூழ்ந்த அதிகாலையில் இறுதிக்கட்ட கால்வாய்ப் பணிகளைப் பார்வையிட காலிங்கராயன் வந்துள்ளார். ‘‘தன்னோட நிலத்துக்குப் பாசனமும் வேணும்னு, ஊர் மக்களுக்கு வரிப்போட்டு கால்வாய் வெட்டுறான் காலிங்கராயன்…’’ என அந்தப் பகுதி மக்கள் பேசுவதைக் காதில் கேட்கிறார். ஒருநொடி அவரது இதயம் நொறுங்கியதுபோல இருந்துள்ளது. கனவிலும் அப்படி ஓர் எண்ணம் காலிங்கராயனுக்குக் கிடையாது. கால்வாயில் தண்ணீர்த் திறந்துவிடுவதற்கு முதல் நாள், ஊர் மக்களையும் அரசு அதிகாரிகளையும் காலிங்கராயன் அழைத்திருக்கிறார். எல்லோரும் வந்தவுடன் இந்தக் கால்வாய் நீரை, நானோ, என்னுடைய பரம்பரையினரோ பயன்படுத்தினால், அவர்கள் குலம் விளங்காமல் போகும்…’’ எனக் கல்வெட்டு சாசனம் எழுதி, அதைக் கால்வாய் கரையில் அமைக்க உத்தரவிடுகிறார். அடுத்த, சில மணி நேரங்களில் காலிங்கராயன் பதவி விலகி, தன் குடும்பத்துடன் பொள்ளாச்சி அருகில் உள்ள ஜமீன் ஊத்துக்குளிக்குச் சென்றுவிடுகிறார். அவர் வெட்டிய கால்வாய் மூலம் வெள்ளமென நீர் திரண்டு ஓடி, மானாவாரி நிலங்களை, நெல்லும் வாழையும் விளைய வைக்கிறது. ‘ஊருக்கு உழைத்த உத்தமன் காலிங்கராயனைப் புரிந்துகொள்ளாமல் போய்விட்டோமே’ என மக்கள் நினைத்து நினைத்து ஏங்குகிறார்கள். சில காலம் கழித்து ஜமீன் ஊத்துக்குளியில் இப்பூவுலகு வாழ்வுக்கு விடைகொடுக்கிறார். ஆனாலும், காலிங்கராயன் கால்வாய்ப் பகுதியில் இன்றும் அவரது புகழ் நிலைத்து நிற்கிறது.
738 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வரலாற்றை, நேற்று நடந்ததுபோல, காலிங்கராயனின் சிறப்புகளை, சொல்லிச் சொல்லி மகிழ்கிறார்கள், அந்தப் பகுதி மக்கள். ‘‘சில ஆண்டுகளுக்கு முன்பு, காலிங்கராயன் வாரிசுகளில் ஒருவருக்கு திருமண வரன் தேடினாங்க. நல்ல குடும்பம் இருக்கு. எங்கள் பகுதிக்கு வாங்கனு அழைச்சேன். ‘எந்த இடம்?’ எனக் கேட்டாங்க. காலிங்கராயன் கால்வாய் கரையில் உள்ள ஊரின் பெயரைச் சொன்னேன். ‘அந்த வரன் வேணாமுங்க. நம்ம குடும்பத்துக்கு. அந்தக் கால்வாய்த் தண்ணீர் ஆகாதுங்க’னு மறுத்துட்டாங்க....’’ எனக் கொடுமுடி டாக்டர் நடராஜன் ஒரு முறை சொன்னார். இன்றும்கூட அவரின் வாரிசுகள் காலிங்கராயன் கால்வாய்ச் செல்லும் பகுதிக்கு, கல்யாணம், காது குத்து என… எந்த விருந்துக்கும்கூடச் செல்வதில்லை.

இந்தக் கால்வாய்த் தண்ணீர் மூலமாக (இப்போது சாயக்கழிவுகள் கலந்து காலிங்கராயன் கால்வாய்க் கழிவுநீர் கால்வாயாக உருமாறுகிறது) 15,743 ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது. பவானிஆற்றிலிருந்து 90 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, கொடுமுடியைத் தாண்டி நொய்யலில் கலக்கிறது கால்வாய். இந்தக் கால்வாய்ப் பாசனத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட தை மாதம் 5-ம் தேதி, பவானியில் உள்ள காலிங்கராயன் அணைக்கட்டில் தொடங்கி் சாத்தம்பூர், சாவடிப்பாயைம்புதூர், பஞ்சலிங்கபுரம், கணபதிபாளையம், தாமரைப்பாளையம், ஆவுடையார்பாறை உள்ளிட்ட 15 கிராமங்களில் ஒவ்வோர் ஆண்டும் விழா நடைபெற்று வருகிறது. நீர்ப்பாசன தொழில்நுட்பத்தின் முன்னோடியான காலிங்கராயனின் பெயர் புறநானூறு சொல்வதுபோல, பூமி உள்ள காலம் வரை நிலைத்து நிற்கும்.