மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு : சந்தனப் பொட்டு வைக்காத சந்தன மலைமக்கள்!

மாத்தியோசி
பிரீமியம் ஸ்டோரி
News
மாத்தியோசி

மாத்தியோசி

ருமுறை மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள் குறித்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருடன் பேசிக்கொண்டிருந்தோம்.

``மேற்குத் தொடர்ச்சி மலையைப்போல கிழக்குத் தொடர்ச்சி மலையும் வளம் நிறைந்தது. ஆனால், இன்னும்கூடச் சின்னக்கல்வராயன், பெரிய கல்வராயன் மலைகளுக்குச் சரியான போக்குவரத்து வசதி இல்லை’’ என்றோம். ‘‘அவ்வளவுதானே... ரொம்ப நல்லதுய்யா. `எங்கெல்லாம் அரசாங்கத்து ஜீப் இன்னும் போகாம இருக்கோ, அங்கெல்லாம் இன்னும் இயற்கை அழிக்கப்படாம இருக்கு; அந்த மக்களுக்கும் அந்த மண்ணுக்கும் இன்னும் பாதிப்பு வரலை’னு நாம புரிஞ்சக்கணும்’’ என்று தன் பாணியில் சொன்னார்.

கருமந்துறையில்...
கருமந்துறையில்...

கல்வராயன் மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் ஒரு பகுதி. பச்சைமலை, ஜவ்வாது மலைகள், சேர்வராயன் மலைகள் ஆகியவற்றுடன் இணைந்துள்ளன. இவை காவிரி ஆற்று வடிநிலத்தை, பாலாற்றின் வடிநிலத்திலிருந்து பிரிக்கும் எல்லைகளாக அமைந்துள்ளன. 1,095 சதுர கி.மீ பரப்பளவுள்ள இந்த மலைகளின் உயரம் 2,000 முதல் 4,000 அடிகள் வரை உள்ளது. இந்த மலையின் வடபகுதி `சின்னக் கல்வராயன்’ என்றும், தென்பகுதி `பெரிய கல்வராயன்’ என்றும் அழைக்கப்படுகின்றன. சின்னக் கல்வராயன் மலைகள் சராசரியாக 2,700 அடி உயரமும், பெரிய கல்வாராயன் மலைகள் சராசரியாக 4,000 அடி உயரமும் கொண்டவை. ஜவ்வாது மலையின் தெற்கு முனையிலிருந்து 40 கி.மீ தொலைவில் கல்வராயன் மலைத்தொடர் அமைந்திருக்கிறது. இது, `காராளன்’ என்று அழைக்கப்படும் மக்களின் பூர்வீக வாழ்விடமாகவும் உள்ளது. இந்த மலையின் தென்மேற்குப் பகுதி சேலம் மாவட்டத்தின் ஆத்தூர் வரையிலும், மேற்குப்பகுதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வரையிலும், வடதிசையில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் வரையிலும் பரந்து விரிந்துள்ளன.

கல்வராயன் மலையின் வடக்கே சாத்தனூர் அணையும், தெற்கே ஆத்தூர் கணவாயும், கிழக்கே மணிமுத்தாறு அணை மற்றும் சித்தேரி மலையும் இருக்கின்றன. இந்த மலையில்தான் கோமுகி உற்பத்தியாகிறது; இந்த ஆற்றின் குறுக்கே கோமுகி அணையும் கட்டப்பட்டிருக்கிறது. பசுமை மாறா காடுகளில் உள்ளதுபோல கல்வராயன் மலையிலும் சந்தனம், தேக்கு, புரசு, நமை, நீர்மருது, புங்கன் போன்ற உயர்ந்து வளரும் 5,000-க்கும் மேற்பட்ட மர இனங்களும், அரிய வகை மூலிகைகளும் பூவினங்களும், சிறு செடிகளும் வளர்ந்து நிற்கின்றன.

இங்கு ஆண்டுக்கு 1,000 மில்லிமீட்டர் வரை மழை அளவு கிடைக்கிறது...’’ இதெல்லாம் அரசு கொடுத்துள்ள புள்ளிவிவரங்கள். பல ஆண்டுகளாக, கல்வராயன் மலையில் வனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுவருகின்றன.

‘‘இயற்கையை அவர்கள் நேசிக்கும் அளவுக்கு வேறு யாரால் நேசிக்க முடியும்... வீட்டு வாசலிலேயே சந்தன மரம் இருந்தாலும், சந்தனப் பொட்டு வெச்சுக்கிற பழக்கம்கூடப் பழங்குடிகளிடம் கிடையாது.’’

இயற்கை எழில் கொஞ்சும் ஆத்தூர்-முல்லைவாடி சாலையில் 15 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது முட்டல் கிராமம். இந்த முல்லைவாடிப் பகுதி மரவள்ளிக்கிழங்குக்குப் பெயர் பெற்றது. இதன் பெயரிலேயே மரவள்ளிக்கிழங்கு ரகம்கூட வெளியிட்டிருக்கிறார்கள். முட்டல் கிராமத்திலிருந்து 3 கி.மீ தொலைவிலுள்ள வனப்பகுதியில் `ஆனைவாரி’ என்ற இடத்தில் ஓர் எழில்மிகு அருவி அமைந்துள்ளது. அந்த அழகான இடம் இன்னும் சினிமாக்காரர்களின் கண்களுக்கு அகப்படவில்லை என்பதுதான் ஆச்சர்யம். ஆனைவாரி அருவிக்கு அருகில் படகுப் போக்குவரத்தும், தங்கும் விடுதிகளும்கூட உள்ளன.

மண்புழு மன்னாரு : சந்தனப் பொட்டு வைக்காத சந்தன மலைமக்கள்!

கல்வராயன் மலைப் பகுதிகளில் இன்னமும் இயற்கை விவசாயம் செய்யும் பழங்குடி மக்கள் இருக்கிறார்கள். `மலையாளி’ என்று சொல்லப்படும் இந்த மக்கள், தங்கள் விளைபொருள்களை ஆத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி பகுதிகளுக்குக் கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். இங்கு விளையும் கறுப்பு நிற பீன்ஸ் அற்புதமான சுவைகொண்டது. இந்த மலையிலுள்ள சிவப்புக் கொய்யாவின் சுவையை ருசித்தால், அதன் மணமும் இனிப்பும் வாழ்நாள் முழுதும் மறக்காது.

கருமந்துறை, நாவலூர் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் சிறுதானியங்கள், பாரம்பர்ய நெல் வகைகள், பயறு வகைகள், வித விதமான காய்கறிகளைப் பயிர் செய்கிறார்கள். சமவெளிப் பகுதிகளில் பாரம்பர்ய விதை கிடைக்காத நேரத்தில், கல்வராயன் மலைப் பகுதி மக்களிடம் விதை வாங்கி வந்து சாகுபடி செய்யும் விவசாயிகளும் உண்டு. இந்த மலையின் சில பகுதிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் மின்சார வசதியே வந்திருக்கிறது!

‘‘உங்கள் மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான் தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கிறேன். இந்தப் பகுதி முழுக்க எனக்குத் தெரியும். பழங்குடி மக்களுக்கு மின்சார வசதி செய்து கொடுப்பதில் பெருமை கொள்கிறேன்’’ என்று எடப்பாடி பழனிசாமி அந்த நேரத்தில் பேசியிருந்தார். அப்போது கருமந்துறை பகுதியிலுள்ள ஒரு விவசாயியின் தோட்டத்துக்குச் சென்று, அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து, ‘‘நானும் விவசாயிதான்; என் நிலத்தில் இப்போதும் விவசாயம் செய்கிறேன்’’ என்று பேசிவிட்டு வந்திருந்தார் முதல்வர் எடப்பாடியார்.

இன்னும் சாலை வசதிகளும், அரசு ஜீப்களும் அவ்வளவாகச் செல்லாத மலைப் பகுதிகளைச் சுற்றிப் பார்த்தோம். அரசு ஜீப் மலைப்பகுதிக்குச் சென்றதால் அங்கு என்னவெல்லாம் நடந்தது என்பதை ஆனந்த விகடன் இதழின் ஆசிரியர் குழுவிலிருந்த த.செ.ஞானவேல் 14 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிரியர் குழுவினரிடம் விவரித்துச் சொன்னவை இன்னும்கூடக் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதை ஆனந்த விகடன் இதழில் ரணங்கள் நிறைந்த கட்டுரையாகவும் அவர் பதிவுசெய்திருந்தார். அதன் சிறு பகுதி இங்கே...

`வீரப்பன், அதிரடிப்படை என்கிற இரண்டு யானைகளின் கீழ் அகப்பட்டுச் சித்ரவதை அனுபவித்த பழங்குடி மக்களின் துயர வாழ்க்கையை, மிக ரணமான மொழிநடையில் ‘சோளகர் தொட்டி’ என்ற நாவலாக்கியிருக்கிறார் வழக்கறிஞர் ச.பாலமுருகன். ஒரு சவரத் தொழிலாளியின் மகன்; சட்டம் படித்தவர்; பிழைப்புக்கு வழி தேடாமல், ஏழை எளிய மக்களின் அவலங்களுக்குத் தீர்வு தேட ஆரம்பித்தார். ‘மக்கள் சிவில் உரிமைக் கழகம்’ என்ற மனித உரிமை அமைப்புடன் தன்னை இணைத்துக்கொண்டு, கடந்த பத்து ஆண்டுகளாக வீரப்பன் ஒளிந்து திரிந்த மலைப் பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் சட்டப் பாதுகாப்புக்காகப் போராடியபோது கிடைத்த அனுபவங்கனை நாவலாக்கியிருக்கிறார். சட்டத்தின் சக்கரங்கள், அந்தப் பழங்குடிகளை எப்படியெல்லாம் நாக்கிப் போட்டுப்போயின என்பதற்கு பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ ஒரு ரத்த சாட்சி!

மாத்தியோசி
மாத்தியோசி

சத்தியமங்கலத்திலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலிருக்கிறது சோளகர் தொட்டி கிராமம். ஜீப் சத்தம் கேட்டதுமே, விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் அலறியடித்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடி ஒளிகின்றனர். ஒரு மூதாட்டி தலையில் அடித்துக்கொண்டு நாசம் செய்ய மறுபடியும் வந்துவிட்டதாகச் சோளகர் மொழியில் அழுது புலம்புகிறார். ஏரியாவே பரபரப்பாகி, அத்தனை பேர் முகங்களிலும் பதற்ற அலைகள். வாகனம் அருகே செல்ல, பாலமுருகனைப் பார்த்ததும் சற்றே ஆசுவாசமாகும் அந்த மக்களின் முகத்தில் ஒரு சின்னப் பிரகாசம் தெரிகிறது.

எல்லோரையும் நலம் விசாரித்துவிட்டு, ஒரு பாறையோரம் ஏறி அமர்கிற பாலமுருகன் பேச ஆரம்பிக்கிறார்... ‘‘வீரப்பன் ஹீரோவா- விஜயகுமார் ஹீரோவா என்கிற பரபரப்பில், புழு பூச்சி மாதிரி நசுக்கப்பட்ட மனுசங்களைப் பத்தி யாருக்குமே தெரியாமப்போச்சு, காலங்காலமா இந்தக் காடுதான் தங்களுக்குத் தெய்வம்னு நினைச்சு இன்னும் கீழிறங்கி வராமல் இயற்கையோடு சேர்ந்து வாழ்ந்துக்கிட்டிருந்தவங்களை நார் நாராகக் கிழிச்சிப் போட்டுடுச்சு இந்த நாகரிக சமூகம்.

பழங்குடிகளின் மனசு சுத்தமானது. அவர்களின் வாழ்க்கை எவ்வளவு இயற்கையானதுங்கறதை அவர்களைப்போல் வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். இயற்கையை அவர்கள் நேசிக்கும் அளவுக்கு வேறு யாரால் நேசிக்க முடியும்... வீட்டு வாசலிலேயே சந்தன மரம் இருந்தாலும், சந்தனப் பொட்டு வெச்சுக்கிற பழக்கம்கூடப் பழங்குடிகளிடம் கிடையாது. (சந்தனப் பொட்டு வைத்தால், சந்தன மரத்தை வெட்ட வேண்டும். மரம் இல்லாவிட்டால், மனிதன் உட்பட யாரும் காட்டில் வசிக்க முடியாது. எனவே, மரத்தை அழித்து பொட்டு வைக்கக் கூடாது என்பது அவர்களின் சூழல் அறிவு.) யானைகளைக் கொன்று தந்தம் எடுத்து, யானை பொம்மை செய்து ஷோ கேஸில் வைக்கும் ரசனை மிக்கவர்கள் நாம்தான்....’’ என நீள்கிறது அந்த நேர்முகம். படிக்கத் தொடங்கியவுடனேயே நமக்கும் தொற்றிக்கொள்கிறது சோளகர் தொட்டியின் வலியும் அந்த மக்களின் இயற்கை நேசமும்.