மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு : பி.பி.டி நெல்லும் பி.எம்.டபுள்யூ விவசாயிகளும்!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

ரடங்குக்கு முன்னர் நடந்த சம்பவம் இது. ‘‘என் குழந்தைகள் அலங்கார மீன் வளர்க்க ஆர்வமாக இருக்காங்க.

நல்ல மீன்கள் வாங்க எங்களுக்கு உதவி செய்ய முடியுமா?” என்று கேட்டார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் நண்பர். ``சரி’’ என்று சென்னை மாநகரை அணைத்துக்கொண்டிருக்கும் கொளத்தூருக்கு வழிகாட்டினேன். குடும்பத்தோடு அங்கு சென்று, விதவிதமாகப் பல வண்ணங்களில் மீன்களை வாங்கியிருக்கிறார். கூடவே, மீன் வளர்ப்புக்குத் தேவையான தொட்டி முதல் உணவு வரை அனைத்தையும் வாங்கியிருக்கிறார்.

சில நாள்கள் கழித்து அலங்கார மீன் நினைவுக்கு வந்தது. உடனே, பேராசிரியர் நண்பருக்கு போன் செய்தேன். ‘‘அந்தக் கதையை ஏன் கேட்கறீங்க... நீங்களே நேரில் வந்து பாருங்க’’ என்றார். அன்று மாலையே அவரது வீட்டுக்குச் சென்றேன். குழந்தைகள் முகத்தில் உற்சாகம் இல்லை. மீன் தொட்டியைக் கழுவி கவிழ்த்துவைத்திருந்தார்கள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. சில மணித் துளிகளுக்குப் பிறகு நண்பரின் மனைவி நடந்தவற்றை விவரித்தார்.

‘‘அலங்கார மீன்கள் வந்தவுடன் குழந்தைகள் ரொம்பக் கொண்டாட்ட மனநிலையில் இருந்தாங்க. எப்பவும் தொட்டியைச் சுத்திச் சுத்தியே வந்தாங்க. ‘மீனுக்குப் பசிக்குமே’னு அவங்க சாப்பிடும்போதெல்லாம் மீன்களுக்கான பாக்கெட் உணவை அள்ளி, தொட்டியில் போட்டாங்க. நன்றாகத்தான் நாங்க மீன்களைப் பராமரிச்சோம். ஆனா, ரெண்டு, மூணு நாள்களுக்குள்ள மீன்களெல்லாம் இறந்து மேலே மிதந்தன. அதனால, குழந்தைகளுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் வருத்தமா இருக்கு’’ என்றார்.

அலங்கார மீன்
அலங்கார மீன்
``அலங்கார மீன் வாங்கும்போது அதை எப்படி வளர்க்க வேண்டும் என்பதைச் சில கடைக்காரர்களே அக்கறையாகச் சொல்வார்கள். அவர்கள் சொல்லாவிட்டாலும் நாம்தான் அந்த விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பெரும்பாலும், முதன்முறையாக அலங்கார மீன் வளர்ப்பவர்களுக்கு ஏற்படும் அனுபவங்கள்தான் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. மீன்களுக்குக் காலை, மாலை இரண்டு வேளை மட்டுமே மீன்களின் அளவுக்குத் தக்கப்படி உணவு அளிக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் தன் பங்குக்கு உணவு போட்டால், நிச்சயம் மீன்கள் இறந்துவிடும். அலங்கார மீன்கள் உணவு இல்லாமல் மூன்று நாள்கள்கூட வாழும். ஆனால், அதிகப்படியான உணவு அவற்றுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும். உங்களுக்கு எப்படி பாதிப்பு ஏற்பட்டது என்பது இப்போது புரிகிறதா என்று கேட்டேன். குழந்தைகள் ‘‘ம்... ம்...’’ என்று தலையாட்டினார்கள்.

கூடவே, ``தினமும் மீன் தொட்டியிலுள்ள கால் பங்கு நீரை வடித்துவிட்டு, புதிய நீர் மாற்ற வேண்டும். காற்று வாங்கிக் கருவி சரியாகச் செயல்படுகிறதா என்று கவனிக்க வேண்டும். தொட்டியில் ஒரு மீன் இறந்துவிட்டால் அதை உடனே அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால், அதன் உடலிலுள்ள கிருமிகள் மற்ற மீன்களுக்கும் பாதகத்தை விளைவிக்கும்.

அலங்கார மீன்கள் குளிர்ச்சியைத் தாங்காது. அதனால்தான் தொட்டியுடன் ஹீட்டரையும் விற்பனை செய்வார்கள். இது வேண்டாம் என்றால், குறைந்தபட்சம் தொட்டியின் மீது, அதிக வெப்பத்தை உமிழும் குண்டு பல்பையாவது எரியவிட வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், அலங்கார மீன்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை. இவை அலங்கார மீன் வளர்ப்புக்கான அடிப்படைத் தகவல்கள். இதற்கான நிபுணத்துவத்தை வளர்க்க வளர்க்க கற்றுக்கொள்வீர்கள்’’ என்று சொல்லி முடிக்கவும், நண்பரின் மனைவி சூடாக வாழைக்காய் பஜ்ஜியை கொடுத்துவிட்டு, புரிந்ததுபோலத் தலையை அசைத்தார்.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

சரி, அடுத்த கதைக்கு வருவோம். இதுவும் மீன் தொடர்பானதுதான். கொஞ்சம் உப்புக் கரிக்கும் மீன். மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள சாந்தோம் பகுதியில், `மத்திய உவர்நீர் மீன் ஆராய்ச்சி நிலையம்’ (Central Institute of Brackishwater Aquaculture) இருக்கிறது. `இந்தியாவிலேயே இங்குதான் இந்த ஆராய்ச்சி நிலையம் இருக்கிறது’ என்று நாம் பெருமைப்பட்டுக்கொண்டாலும், இதை ஆந்திரா, தெலங்கானா விவசாயிகள்தான் அதிகம் பயன்படுத்திக்கொள்கிறார்கள். கொஞ்சமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் விவசாயிகளும் இதன் மூலம் பயன்பெறுகிறார்கள்.

இந்த நிலையத்தில் நடைபெற்ற சர்வதேசக் கருத்தரங்கில் விவசாயத்தைக் காட்டிலும் மீன் வளர்ப்பில் எத்தனை சதவிகிதம் வருமானம் கூடுதலாகக் கிடைக்கிறது என்பதைப் புள்ளிவிவரத்துடன் குறிப்பிட்டார்கள். அசால்ட்டாக மீன் வளர்த்தால்கூட, மொத்த முதலீட்டில் 30 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கிடைக்கும். ஒரு தொழிலில் ஆண்டுக்கு 30 சதவிகித வருமானம் என்பது நிச்சயம் நல்ல லாபம் அல்ல; கொழுத்த லாபம்.

இதனால்தான், ஒரு காலத்தில் பி.பி.டி நெல்லை மீண்டும், மீண்டும் சாகுபடி செய்த ஆந்திர விவசாயிகள் சத்தமில்லாமல் மீன் வளர்ப்புக்கு மாறினார்கள். முன்பெல்லாம் ஆந்திரா பக்கம் போகும்போது, பழைய டி.வி.எஸ் 50-யில் என்னை வரவேற்க வந்த விவசாயிகள், இப்போது பி.எம்.டபுள்யூ காரில் வந்து என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்கள். உபயம்: மத்திய உவர்நீர் மீன் ஆராய்ச்சி நிலையம்.

அந்த நிகழ்ச்சியில் வேட்டி கட்டிய விவசாயிகளும் தென்பட்டார்கள். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயியிடம் பேச்சுக் கொடுத்தேன். ‘‘இருபது ஆண்டுகளுக்கு முன்னரே எங்கள் நிலத்தில் கடல் நீரின் உவர்ப்புப் படர்ந்தது. இதனால், எந்தப் பயிர்களையும் சாகுபடி செய்ய முடியவில்லை. `சரி, இருப்பதை வைத்தே வாழ்வோம்’ என்று உவர்நீர் மீன் வளர்ப்பில் இறங்கினோம். மத்திய உவர்நீர் ஆராய்ச்சி நிலையம் எங்களுக்கு உதவியாக இருந்தது. இந்த நிலையம் வெளியிட்ட குறைந்த உப்பு நீரில் வளரும் ‘வெனமை’ என்ற இறால் ரகத்தை வளர்க்கத் தொடங்கினோம். எங்கள் வாழ்வில் வசந்தம் வீசத் தொடங்கியது. `உவர்நீர் இறால் வளர்ப்பு’, `நன்னீர் இறால் வளர்ப்பு’ என இரண்டு வகைகள் உள்ளன. உவர்நீர் இறால் வளர்ப்பில், ஒவ்வொரு முறை அறுவடை முடிந்ததும், இறால்கள் வளர்க்கப்படும் குளத்திலிருக்கும் நீரை வெளியேற்றிச் சுத்தப்படுத்திவிட்டு, மீண்டும் புதிய நீரை நிரப்ப வேண்டும். ஆனால், நன்னீர் இறால் வளர்ப்பில், குளத்து நீரை மறுசுழற்சி செய்வதற்கான தேவை இல்லை. மழைநீரைச் சேகரித்துக்கூடப் பயன்படுத்தலாம்.

ஒரு ஏக்கர் அளவு குளத்தில் மூன்று டன் இறால் கிடைக்கும். ஆண்டுக்கு இரண்டு முறை அறுவடை செய்யலாம். ஆக, ஆறு டன் கிடைக்கும். ஒரு டன் இறால் குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஏக்கருக்கு 18 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. செலவு போக, 10 லட்சம் ரூபாய் கிடைக்கும். இவ்வளவு பணத்தை நெல் சாகுபடியில் கண்ணால்கூடப் பாத்திருக்க முடியாது’’ என நம்பிக்கை ஒளி கண்களில் மின்னப் பேசினார்.