
மாத்தியோசி
தமிழ்நாட்டைத் தாண்டி அக்கம் பக்கத்து மாநிலங்களில் விவசாயம் சார்ந்த வளர்ச்சி பணிகள் என்னென்ன நடக்கின்றன என்று கவனிப்பது வழக்கம். வாய்ப்பு கிடைத்தால் ஓர் எட்டு நேரில் சென்றும் பார்த்துவிட்டு வருவேன்.
கர்நாடகாவில் சத்தமில்லாமல் ஒருவர் பிரபலமாகிவருகிறார் என்ற தகவல் கிடைத்தது. அந்தச் சமயத்தில் ஒரு வேலையாக கர்நாடக மாநிலம் மாண்டியா வரை சென்றிருந்தேன். இந்தியாவிலேயே கரும்புச் சாகுபடியில் சர்க்கரைச்சத்து (ரெக்கவரி) அதிகமாக உள்ள பகுதி இதுதான். இந்தச் சத்துக்குத் தக்கப்படிதான் சர்க்கரை ஆலைகளில் பணம் கொடுப்பார்கள். இதனால், இங்கு கரும்புச் சாகுபடி அதிகம். பெங்களூருவிலிருந்து மாண்டியா சென்றாலும், மைசூருக்குப் புறப்பட்டாலும் ரயில் பயணத்தைத்தான் தேர்வு செய்வேன். இந்தப் பயணங்களில் மத்தூர் வடையைச் சாப்பிடாமல் வந்தது கிடையாது. கையளவுக்குப் பெரிதாக இருக்கும். மாண்டியா அருகிலுள்ள ஊர்ப் பெயர்தான் மத்தூர். நம் ஊரில் மணப்பாறை முறுக்குபோல மத்தூர் வடை கர்நாடகம் முழுவதும் பிரபலம். தமிழ்நாட்டில் கர்நாடக மாநிலத்தவர் நடத்தும் ஹோட்டல்களில் கட்டாயம் மத்தூர் வடை இருக்கும். இந்த வடைக்கு வயது 100. வடை கதையை வாய்ப்புக் கிடைக்கும்போது விரிவாகச் சொல்கிறேன். இப்போது மைசூருக்குச் செல்வோம்.

‘இந்தியாவின் சிறுதானிய மனிதர்’ (Millet Man of India) என்றும் இவரை அழைக்கிறார்கள். மைசூரைச் சேர்ந்த முனைவர் காதர் வாலி (Dr. Khadar Vali) ஊக்க மருந்து (Steroids) தொடர்பான ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர். சில ஆண்டுகள் மைசூரிலுள்ள மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் (Central Food Technological Research Institute-CFTRI) விஞ்ஞானியாகப் பணியாற்றினார். பிறகு அமெரிக்காவில் வேலை கிடைத்ததும் அங்கு சென்றிருக்கிறார். “சிறுதானியங்கள் பக்கம் என் கவனம் திரும்பியது 1987-ம் ஆண்டு வாக்கில்தான். ‘6 வயது பெண் குழந்தை, பருவம் அடைந்தார்’ என்ற செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. `நாம் உண்பது உணவா, விஷமா...’ என்று நினைக்கத் தோன்றியது. உடனே, அமெரிக்க வேலையை விட்டுவிட்டு, சொந்த ஊருக்கு வந்துவிட்டேன்.
உணவு தொடர்பான ஆராய்ச்சியில் மூழ்கினேன். என் பாட்டி 94 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கிறார். அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க ஆய்வுக்கூடத்துக்கு ஓட வேண்டாம். அவர் சாப்பிட்ட உணவுகளை உற்று கவனித்தால் போதும். கேழ்வரகு, சோளம், கம்பு போன்ற சிறுதானியங்களை உண்டு வளர்ந்த அவர் தேகம் தளராமலிருக்கிறது.
பசுமைப் புரட்சியின்போது நெல் தானியத்தைப் பரப்பினார்கள். அதனால், சத்து நிறைந்த சிறுதானியங்கள் சத்தமில்லாமல் ஒதுங்கத் தொடங்கின. அரிதாகச் சாப்பிட்டுவந்த அரிசி, மூன்று வேளை உணவானது. சிறிது சிறிதாக சிறுதானியத்தைத் தவிர்த்தோம். கண்ட கண்ட உணவுப் பழக்கத்துக்கு அடிமையானோம். கொஞ்சம் கொஞ்சமாக நாம் உண்ணும் உணவே நம்மைத் தின்னத் தொடங்கியது. சர்க்கரைநோய் கிராமத்து மக்களுக்கும் வந்துவிட்டது. சிறுதானியங்கள் மட்டுமே உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இருக்கும்” இதுதான் காதர் வாலி அனைவரிடமும் சொல்லும் பாடம்.
“ஆரம்பத்தில் இவர் சொன்னதை யாருமே கேட்கவில்லை. வெளிநாட்டில் கை நிறைய சம்பளம் தரும் வேலையை உதறிவிட்டு வந்திருக்கிறார். `இவர் சொல்வதில் உண்மை இருக்குமோ...’ என்று சிறிய குழு ஒன்று இவரைப் பின்தொடர ஆரம்பித்தது. வீட்டிலேயே கரும்பலகையை வைத்து எல்லோருக்கும் சிறுதானியப் பாடம் நடத்துவார். ஆனால், இப்போது இவர் வீடிருக்கும் தெருவுக்குள் நுழைவதே கஷ்டமாக இருக்கிறது. உணவு மருத்துவரான இவரைத் தேடி தினமும் நூற்றுக் கணக்கானவர்கள் வருகிறார்கள். சர்க்கரை நோயாளிகள் தொடங்கி புற்றுநோயாளிகள் வரை அனைவரையும் சிறுதானிய உணவைத்தான் உண்ணச் சொல்கிறார். என்ன ஆச்சர்யம்... ஆங்கில மருந்துகளுக்கு அடங்காதவை, சிறுதானியங்களை உண்டவுடன் நீங்கிவிடுவதாகச் சொல்கிறார்கள்’’ என்று ஆச்சர்யத்துடன் சொல்கிறார் மைசூரு வாழ் நண்பர்.

“நாம் உண்ணும் உணவுதான் நம்மை உருவாக்குகிறது. உணவில் நேர்மறை, எதிர்மறை என இரண்டு வகைகள் உண்டு. கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற சிறுதானியங்கள் நேர்மறையானவை. என்னை நாடி வருபவர் களுக்குச் சிறுதானிய உணவுகளையும் அவசியம் ஏற்பட்டால், மூலிகை கஷாயத்தை மட்டுமே கொடுத்துவருகிறேன். விவசாயிகள் வந்தால், `கட்டாயம் சிறுதானியத்தைச் சாகுபடி செய்யுங்கள்’ என்று வலியுறுத்திச் சொல்கிறேன். சிறுதானியச் சாகுபடிக்கு ‘காடு கிரிஷி’ (காடு விவசாயம்) எனப் பெயரிட்டிருக்கிறேன். இயற்கை உரமும், கொஞ்சம் மழை நீரும் கிடைத்தாலே விளைச்சல் கொடுக்கும் கொடைத் தன்மைகொண்டவை நம் சிறுதானியங்கள்’’ என்று மணிக்கணக்கில் பேசுகிறார் காதர் வாலி. இவர் பெயரை கூகுள் ஆண்டவரிடம் சொன்னால் போதும், வண்டி வண்டியாகத் தகவல்கள் கொட்டுகின்றன. ஏராளமான வீடியோக்கள் யூடியூப்பில் உள்ளன.
நிற்க.
தற்போதைய தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் தேசிய ஊரக வளர்ச்சி மையம் (National Institute of Rural Development) உள்ளது. இங்கு 2008-ம் ஆண்டு, சிறுதானியங்கள் தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த மையமும், இந்தியாவில் சிறுதானியச் சாகுபடியை மீட்டெடுத்த தொண்டு நிறுவனமாக டெக்கான் டெவலப்மென்ட் சொசைட்டியும் (Deccan Development Society) இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இந்திய அளவில் சிறுதானிய உற்பத்தியில் சிறந்து விளங்கும் விவசாயிகளும் விஞ்ஞானிகளும் வந்திருந்தார்கள். இரண்டு நாளும் பல விஷயங்கள் விவாதிக்கப் பட்டன.
‘பள்ளிகளில் சிறுதானிய உணவு வழங்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்களை விற்பனை செய்ய வேண்டும்…’ என்றெல்லாம் மத்திய அரசுக்குப் பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டன. அவ்வப்போது, இந்தப் பரிந்துரைகளைத் தூசி தட்டி எடுத்துப் பார்ப்பதையும், சில அறிவிப்புகளை வெளியிடுவதையும் மத்திய அரசு வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

சில விஷயங்களை நடைமுறையில் சாத்தியப்படுத்திக் காட்டியிருக்கிறது டெக்கான் டெவலப்மென்ட் சொசைட்டி. வறட்சியான மேடக் மாவட்டத்தில் சிறுதானியச் சாகுபடி மூலம் விவசாயிகளின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது. இந்த வெற்றிக் கதையை ஐக்கிய நாடுகள் சபையில், சுந்தரத் தெலுங்கில் பேசிவிட்டு வந்திருந்த சிறுதானியங்கள் சாகுபடி செய்யும் பெண் விவசாயிகளையும் சந்தித்துப் பேசினேன்.
இரண்டு நாள் நிகழ்வில் தமிழ்நாட்டின் சார்பாகப் பல ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்துப் பேசியவர் வேறு யாருமல்ல… இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார்தான். இயற்கை எழில் கொஞ்சும் தேசிய ஊரக வளர்ச்சி மைய வளாகத்தில், நம்மாழ்வாருடன் பல கதைகளைப் பேசியபடியே, சிறுதானிய லட்டு, சாமை பிரியாணி, சோள ரொட்டி… விருந்து சாப்பிட்ட நினைவுகளும் இன்னும் பசுமையாக உள்ளன.