மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு : அடிமாடுகள் கொடுக்கும் ஒரு கோடி வருமானம்!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

புத்தர் ஒருமுறை, வயதான புத்த துறவி தங்கியிருந்த குடிலுக்குப் போனார். அந்தத் துறவி, கிழிந்துபோன போர்வையை போர்த்திக்கொண்டிருந்தார். உடனே புத்தர், ‘‘உங்களுக்குப் புதுப் போர்வையைக் கொடுக்கச் சொல்கிறேன்’’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

சில வாரம் கழித்து, அந்த வழியாகச் சென்ற புத்தர், வயதான துறவி தங்கியிருந்த குடிலுக்குள் நுழைந்தார். “போர்வை பயனுள்ளதாக இருக்கிறதா?” “ஆமாம் குருவே” இது துறவியின் பதில். “பழைய போர்வையை என்ன செய்தாய்?” “கிழிசலை வெட்டித் தைத்துப் படுக்கை விரிப்பாக்கிக் கொண்டேன் குருவே!” “முன்பு படுக்கை விரிப்பாக இருந்தது?” “இப்போது தலையணை உறையாக!” “முன்பு தலையணை உறையாக இருந்தது?” “வாயிற்படி அருகில் கால் மிதியாக உள்ளது குருவே. அதன் மீது நடந்துதான் தாங்கள் உள்ளே வந்தீர்கள்” “முன்பு கால்மிதியாக இருந்தது?” “விளக்குத் திரியாக நம் முன் உள்ள தீபத்தில் எரிந்துகொண்டுள்ளது குருவே.’’

இப்படி நம் நாட்டில் எதையும் வீண் என்று தூக்கி எரியும் பழக்கம் இல்லை. இந்த மண்ணில் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கால்நடை வளர்ப்பு உள்ளது. மாடு வளர்ப்பு என்பது பாலுக்காக மட்டும் கிடையாது. அதன் சாணம்தான் அருமையான உரம். மாடுகள் நடமாடும் உரத்தொழிற்சாலைகள் என்பதை மறந்து போனோம். ஆனால், பால் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற வேகத்தில் நம் நாட்டு மாடுகளின் மகிமையை உணராமல், பால் மட்டுமே மதிப்பு வாய்ந்தது என்று போதிக்கப் பட்டது. இதனால், மாடு வளர்ப்புக்கும் விவசாயிகளுக்கும் உள்ள உறவில் விரிசல் விழத் தொடங்கியது.

குஜராத்தில் உருவாக்கப்பட்ட கூட்டுறவு அமுல் பால் பண்ணை வெற்றி பெற்றதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றையெல்லாம், கவனத்தில் கொள்ளாமல், வெளிநாட்டு மாடுகளை இறக்குமதி செய்து, கலப்பினம் செய்யத் தொடங்கினார்கள். இப்படி 1970-ம் ஆண்டு, மாடுகளுக்கும் விவசாயிகளுக்கும் உள்ள உறவை வெட்டி எடுத்தது வெண்மைப் புரட்சித் திட்டம்.

பசுமைப் புரட்சி திட்டத்தைச் செயல் படுத்தும்போது, நடந்த சம்பவங்களை ஓய்வுபெற்ற வேளாண்துறை அலுவலர்கள், கதை கதையாகச் சொல்வார்கள். ‘‘பசுமைப் புரட்சித் திட்டத்தை, அரசு அறிவிச்சிருக்கு. இந்தாங்க யூரியா. இதைப் போட்டா, பயிர் விளைச்சல் நல்லா கிடைக்கும்னு சொன்னோம். ‘யோவ், இப்ப மட்டும் என்ன பயிர் விளைச்சல் கிடைக்கலையா, சும்மா அளந்து விடாத... போங்க, போங்க’னு அடிக்காத குறையா, விரட்டி அனுப்புவாங்க.

ஒரே இடத்துல மட்டும் இது கிடையாது. நாடு முழுக்கவே இதுதான் நிலைமை. அப்பத்தான், எங்க மேல் அதிகாரிங்க ஒரு யோசனை சொன்னாங்க. அதன்படி, ஊர் பக்கத்துல, அதுவும் சாலை ஓரமா உள்ள வயலுக்குப் போய், ராத்திரி நேரத்துல யூரியாவைத் தெளிச்சிட்டு போய்ட்டோம். அடுத்த வாரம் போய்ப் பார்த்தா, நாங்கள் யூரியா வீசின பகுதியெல்லாம் பச்சை, பசேல்னு நெல் பயிர்கள் வளர்ந்து நின்னுச்சு. உடனே, ஊர் மக்களைக் கூப்பிட்டு, பாத்தீங்களா, யூரியா போட்ட நிலத்துல பயிர் எப்படி வளர்ந்திருக்குன்னு ஆசை வார்த்தை சொன்னோம். கொஞ்சம் கொஞ்சமா விவசாயிங்க நாங்க சொல்றதைக் காது கொடுக்க ஆரம்பிச்சாங்க. அதுக்குப் பின்னாடி உள்ள எந்த விபிரீதமும் அவங்களுக்குத் தெரியாது. எப்போ அரசாங்கம் சொல்றதை விவசாயி காது கொடுத்து கேட்க ஆரம்பிச்சானோ, அன்னையிலிருந்து கடன்காரனா உருவாக ஆரம்பிச்சுட்டான்’’ என்று மனசாட்சியுடன் சொல்வார்கள்.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

இதேபோன்ற கதைதான், வெண்மைப் புரட்சியிலும் நடந்தது. நாகப்பட்டினம் மாவட்டம், பாலையூரில் 2008-ம் ஆண்டுப் பசுமை விகடன் ஏற்பாடு செய்திருந்த ‘இனியெல்லாம் இயற்கையே’ என்ற களப்பயிற்சி நினைவில் வாழும் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமையில் நடைபெற்றது. அப்போது, அந்தப் பண்ணையின் உரிமையாளர், ரங்கநாதன் தனது அனுபவங் களைச் சொல்லத்தொடங்கினார்.

‘‘இந்தப் பண்ணையில பெரிய பெரிய பொலி காளைகளைப் பார்த்திருப்பீங்க. அதை ஏன் வளர்க்கிறேன் தெரியுமா, நான் செய்த தப்புக்குப் பரிகாரம் தேடத்தான்...’’ என்று சொன்னவுடன் கனத்த அமைதி நிலவியது. ‘‘சரி, மேல சொல்லுய்யா...’’ என்று நம்மாழ்வார் சொன்னவுடன், தொடர்ந்தார். ‘‘ஆரம்பத்துல கால்நடைப் பராமரிப்புத்துறையில வேலை செய்தேன். அந்த நேரம் பார்த்து வெண்மைப் புரட்சித் திட்டம் கொண்டு வந்தாங்க. மாடு வளர்க்கக்கூடிய விவசாயிகள்கிட்ட போய், ‘உங்க மாட்டுக்குச் சினை ஊசி போடுறோம். அது மூலமா பிறக்கக்கூடிய கன்னுக்குட்டி வளர்ந்தா லிட்டர் லிட்டரா பால் கொடுக்கும்’னு சொன்னோம். ‘தெய்வமா கும்புடறா மாட்டுக்கு யாராவது, சினை ஊசி போடுங்களான்னு...’ ஒரு மீசைக்கார பண்ணையார் எங்களை அடிக்க வந்துட்டாரு. ஒரு கட்டத்துல விவசாயிங்க, எங்களைக் கண்டாவே ஓட ஆரம்பிச்சாங்க.

மேல் அதிகாரிங்க சினை ஊசி போடுங்க... போடுங்கன்னு... அழுத்தம் கொடுத்தாங்க. ‘ஏன், விவசாயிகள் சினை ஊசி போட வரல’னு கூட்டம் போட்டு யோசிச்சோம். ஊர்ல பொலி காளைகள் இருக்கு. குறிப்பா, கோயில் மாடுகள் நிறையா திரியுது. மேய்ச்சலுக்குப் போற பசு மாடுங்க... பருவத்துக்கு வந்தா அங்கேயே, காளையும் மாடும் சேர்ந்திடுது. இதனால, யாருக்கும் செயற்கை முறை கருவூட்டல் தேவைப்படல. வெண்மைப் புரட்சி திட்டத்தோட வில்லன் பொலி காளைகள்தான். அதை விதை நீக்கம் செய்திட்டா, நம்ம திட்டம் வெற்றின்னு கோட்டு சூட்டுப் போட்ட ஒரு அதிகாரி இந்தப் பாதகச் செயலுக்கு யோசனை சொன்னார். ஊர் ஊரா போய்க் காளைகளைப் புடிச்சு, விதை நீக்கம் செய்தோம். இந்தப் பாவப் பணியை ஒரு வருஷம் செய்திருப்போம். அதுக்குள்ள, செயற்கை முறை கருவூட்டல் வேணும்னு விவசாயிங்க, கேட்க ஆரம்பிச்சாங்க. நம்ம திட்டம் வெற்றின்னு... அதிகாரி குதிச்சாங்க. நானும் அதுல ஒரு ஆளுதான். நம்ம நாட்டு மாட்டையும் சீமை மாட்டையும் கலப்பினம் செய்த காரணத்தால, நம்ம நாட்டு மாடுங்க இனம் குறையத் தொடங்கிடுச்சு. கலப்பினம் மூலம் என்ன சீர்கேடுங்க நடந்திருக்குன்னு முழுமையா விசாரணை நடத்தினா, பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியில வரும். என் கையால பல மாடுகளுக்கு விதை நீக்கம் செய்தேன். அந்தப் பாவத்தைப் போக்க, இப்போ, ஒவ்வொரு பண்ணைக்கும் போய், ‘பொலி காளை வளர்க்கிறேன், சினைக்கு மாடுகளைக் கொண்டு வாங்க’ன்னு சொல்லிக்கிட்டிருக்கேன்’’ என்று தன் உரையின் மூலம் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தார்.

ஹோல்ஸ்டீன் ஃபிரீசியன், ஜெர்ஸி... போன்றவை நம் மண்ணுக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவை அல்ல. அங்கு கழித்து ஒதுக்கப்பட்ட மாடுகளை ‘பரிசு’ என்ற பெயரில் கொண்டு வந்துதான், நம் நாட்டில் கலப்பின மாடுகளை உருவாக்கத் தொடங்கினார்கள். வெளி நாட்டிலிருந்து மாடுகளைக் கொண்டு வந்து கலப்பினம் செய்தபோதும் 10 லிட்டருக்கு மேல் பால் கொடுக்கும் கலப்பினப் பசுக்களைப் பார்ப்பது அரிது. இதற்கு நம் இந்தியாவில் உள்ள தார்பார்க்கர், சாகிவால்... மாடுகள் மூலம் கலப்பினத்தை உருவாக்கியிருந்தால், நம் சூழ்நிலைக்கு ஏற்றபடி நல்ல இனங்கள் உருவாக்கியிருக்கும். இதே அளவுக்கும் பாலும் கொடுத்திருக்கும்.

20 ஆண்டுகளுக்கு முன்பு, திருத்தணி அருகில் உள்ள ஒரு பண்ணைக்குச் சென்றிருந்தேன். அதுதான் தமிழ்நாட்டின் கடைசி கிராமம். அந்தப் பக்கம் சென்றால், ஆந்திரா, இந்தப் பக்கம் வந்தால் தமிழ்நாடு. தெலுங்கு கலந்த தமிழில் தன் பண்ணையைச் சுற்றிக் காட்டியபடி பேசினார், செஞ்சாயா நாயுடு. ‘‘பாலுக்காக நான் மாடு வளர்க்கல. இதோட சாணத்தை வெச்சு, மண்புழு உரம், பஞ்சகவ்யா தயாரிச்சு விற்பனை செய்றேன். பால் மூலம் கிடைக்கிற வருமானம் போனஸ்தான். இந்த ரகசியத்தைச் சொன்னா, ஊர்ல எல்லாரும் செஞ்சாயா நாயுடுக்கு கிறுக்கு புடுச்சிடுச்சுன்னு சொல்றான்....’’ என்றார் அப்பாவியாக.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற விழாவுக்குச் சென்றிருந்தேன். தும்பைப்பூ நிறத்தில் வேட்டி சட்டையுடன், நெத்தி நிறையத் திருநீறு பூசியபடி, ஒருவர் அந்தக் கூட்டத்தில் இருந்தார். பெரும்பாலும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இப்படியான மனிதர்களைப் பார்ப்பது அரிது. நண்பர் ஒருவர், அவரை அழைத்து வந்து என்னிடம் அறிமுகப் படுத்தினார்.

‘‘நமக்குக் கும்பகோணம் பக்கத்துல, 10 ஏக்கர் நிலம் இருக்கு. ஒரு கோசாலை வெச்சிருக்கோம். அதுல உள்ள எல்லா மாடுகளும் அடிமாடுகளுக்குப் போறப்ப வழி மறிச்சு பிடிச்சதுதான். 300 மாடுகளுக்கு மேல இருக்கு. ஆரம்பத்துல இது ஒரு சேவையாத்தான் தொடங்கினோம். சேவையை யார் சார் மதிக்கறாங்க. கொஞ்ச நாள்ல மாடுகளுக்குத் தீவனம் வாங்ககூடப் பணமில்லை. சொன்னா, நம்ப மாட்டீங்க. என் பொண்டாட்டி தாலியை அடகு வெச்சு, தீவனம் வாங்கிப்போட்டேன். அதுவும் போதல. அடி மாட்டுக்குப் போயிருந்தாலும், போயிருக்கும். அதைப் பிடிச்சுட்டு வந்து பட்டினி போட்டு கொல்றமேன்னு, பித்துப் பிடிச்சு அலைஞ்சேன். அந்தச் சமயத்துல, என்னோட மச்சினன் ஒரு யோசனை சொன்னார். இந்த மாடுகள் மூலம் கிடைக்கிற, சாணத்தையும் சிறுநீரையும் வெச்சு, பஞ்சகவ்யா தயாரிச்சு விற்கலாம்னு சொன்னார். அதைக் கெட்டிமா புடிச்சிக்கிட்டேன். இன்னைக்கு வரையிலும் அதை விடல. சொன்னா, நம்ப மாட்டீங்க சார். எங்க கோசாலையோட ஒரு வருஷ வருமானம் ஒரு கோடி ரூபாய் சார்’’ என்று சொல்லி முடித்தபோது அவரது கண்ணில் ஒளி தெரிந்தது.