மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு : வேளாண்மைப் படிப்பும் விந்தையான விதிகளும்!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

‘‘அண்ணா நம்ம பையனுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகணும்னு ஆசை. அதுக்கு நீங்கள்தான் வழிகாட்டணும்’’ என்று கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் செல்போனில் பேசினார்.

‘சென்னையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் நிறைய உள்ளன. அதில் சேர்த்துவிடலாம்’ என்றேன்.

‘‘ஏனுங்கண்ணா, பையன் இப்போத்தான் ப்ளஸ் 2 முடிச்சிருக்கான். தமிழ்நாட்டிலேயே சிறந்த ஐ.ஏ.எஸ் கோச்சிங் சென்டர்னா, அது நம்ம கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்தான் பையனோட ஃபிரண்டுங்க சொல்லியிருக்காங்க. அதனால, ஏதாவது அக்ரி படிப்பு முடிச்சிட்டு, நேரா ஐ.ஏ.எஸ் ஆகிடாலமாம். ஆயிரக்கணக்கான பேர், அங்க படிச்சுத்தான், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் வேலையில இருக்கிறதா யூடியூப்ல கூடப் பேசுறாங்கண்ணா...’’ என்றார்.

மண்புழு மன்னாரு : வேளாண்மைப் படிப்பும் விந்தையான விதிகளும்!

இவர் மட்டுமல்ல, வேளாண்மைக் கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் பெரும்பாலானவர்களின் கனவு ஐ.ஏ.எஸ்தான். அதை விரித்துச் சொன்னால் பக்கம் பக்கமாக நீளும். ஒவ்வோர் ஆண்டும், வேளாண் கல்லூரியில் சேர்க்கை நடக்கும்போது, நண்பர்கள் ஆலோசனை கேட்பது வழக்கம். தமிழ்நாட்டில் மற்ற பல்கலைக் கழகங்களைக் காட்டிலும் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நடைமுறைகள் வித்தியாசமானது. இதன் விதிமுறைகள் விந்தையானது. இந்த விதிமுறைகள் மூலம் ஆண்டுதோறும் ஏராளமான மாணவர்களும் பெற்றோர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இதை நான் சொல்வதைவிட, இந்தப் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகவும் தமிழக வேளாண்மைத்துறை ஆணையராகவும் இருந்த மு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் ‘செயலே சிறந்த சொல்’ என்ற தனது நூலில் வாக்குமூலம் போலச் சொல்லியிருக்கிறார், கேளுங்கள்...

‘‘விவசாயப் பட்டப்படிப்புக்கு விவரம் தெரிந்த பெற்றோர் மட்டுமே பிள்ளைகளை அனுப்புவர். நான்காண்டு பட்டப்படிப்பு முடித்ததும் அரசிதழ் தகுதியுள்ள வேலை உறுதி. வங்கிகள், உர கம்பெனிகள், ரிசர்வ் வங்கி, நபார்டு வங்கி என்று பல வேலைகளுக்கும் போகலாம். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தமிழ்நாடு தேர்வாணையத்தால் நடத்தப்படும் டெபுடி கலெக்டர், டிஎஸ்பி போன்ற பதவிகளுக்கான பாடத்திட்டமும் விவசாயக் கல்லூரியில் படிக்கும் பாடத்திட்டமும் ஒன்று என்பதால், பலர் தேர்வுகளில் வெற்றி பெற்று அதிகாரிகளாகிவிடுகிறார்கள்.

‘வேளாண் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் பலவிதமான குளறுபடிகள் உள்ளன. எனவே, ஸ்லைடிங் சிஸ்டம் கொண்டுவரலாம். வருடத்துக்கு இருபது, முப்பது சீட்கள் யாருக்கும் பயன்படாமல் போகாது’ என்றேன். எனது குரல் ஒற்றைக் குரல். நான் வேளாண்மை ஆணையர் பதவியிலிருந்து சேலம் சேகோ சர்வ்க்கு மாற்றப்பட்டவுடன் இதைச் சரி செய்ய வாய்ப்பு அமைந்தது.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ‘ஸ்லைடிங் சிஸ்டம்’ கிடையாது. பத்து வருடங்களுக்கு முன்பு வரை வேளாண்மைக் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு அக்டோபர் மாதத்தில்தான் நடக்குமாம். மற்ற எல்லாக் கல்லூரிகளும் தொடங்கியிருக்கும். அதனால் வேளாண் கல்லூரியில் சேர்ந்தவர்கள் மருத்துவம், கால்நடை கல்லூரிகளுக்குப் போக மாட்டார்கள். வேளாண் கல்லூரிகளில் மதிப்பெண் அடிப்படையிலேயே அமையும். முதல் கவுன்சலிங்கில் அதிக மார்க் எடுப்பவர் தனியார் கல்லூரியில் மாட்டிக்கொள்வதும், மார்க் குறைவாக எடுப்பவர்கள் மூன்றாம் கவுன்சலிங்கில் அரசு கல்லூரிகளில் இடம்பிடிக்கும் அவலநிலையும் ஏற்படாது. இப்போது முந்திரிக்கொட்டைபோல மருத்துவம், கால்நடை மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் கலந்தாய்வுக்கு முன்பே வேளாண்மைக் கலந்தாய்வு நடக்கிறது. ஸ்லைடிங் சிஸ்டமும் கிடையாதா? ஒரு பெற்றோரின் மனக்குமுறலும், நன்றாகப் படிக்கக்கூடிய ஒரு குழந்தையின் இயலாமையும் இவர்களுக்கு எங்கு புரியப் போகிறது?

கவிஞர்கள் மு.முருகேஷ்-அ.வெண்ணிலா தம்பதியரின் மகள்கள் அன்பு பாரதியும் நிலா பாரதியும் திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களில் முதல், இரண்டாம் இடம் எடுத்தார்கள். இரட்டையர் களான நிலா பாரதியின் கட்ஆப் 197.5, அன்பு பாரதியின் கட்ஆப் 196. நிலா பாரதிக்கும் அன்பு பாரதிக்கும் முதல் கவுன்சலிங்கிலேயே இடம் கிடைத்தது.

மண்புழு மன்னாரு : வேளாண்மைப் படிப்பும் விந்தையான விதிகளும்!

நிலா பாரதிக்குத் திருநெல்வேலி அரசு வேளாண் கல்லூரியிலும், அன்புபாரதிக்கு தனியார் கல்லூரியிலும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அன்று இரவே வெண்ணிலா தனது கைபேசியில் டைப் செய்து அனுப்பிய அதிக மதிப்பெண் எடுப்பது தண்டனையா?” என்ற கட்டுரை மறுநாள் தி இந்து தமிழ் நடுப்பக்கத்தில் வந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வெண்ணிலா தன் மகள் பாரதிக்கு அரசு வேளாண்மைக் கல்லூரியில் இடம் கேட்டு வழக்கு போட்டார். வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதி வேளாண்மைப் பல்கலைக் கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். “ஏன் அதிக மதிப்பெண் எடுத்தவரை தனியார் கல்லூரிக்கு அனுப்பினீர்கள்?

இரண்டாம் கவுன்சலிங்போது ஏன் இவருக்கு அரசு கல்லூரியில் சேர முன்னுரிமை அளிக்கவில்லை?” என்றார்.

வேளாண்மைப் பல்கலைக்கழக வழக்கறிஞரால் பதில் சொல்ல முடியவில்லை. “ஏன் நல்ல கருத்துகள் என்று தெரிந்தும் நடைமுறைப்படுத்தவில்லை?”

“அடுத்த ஆண்டு நடைமுறைப் படுத்துகிறோம்.”

“அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தினால் எனது கட்சிக்காரர் அன்பு பாரதிக்கு என்ன பயன்?” என்றார் வழக்கறிஞர் கருணாகரன்.

“பல்கலைக்கழகத் துணை வேந்தரை கலந்துகொண்டு அடுத்த விசாரணையில் தெரிவிக்கிறோம்” என்றார் பல்கலைக்கழக வழக்கறிஞர்.

நீதிபதிகள் இரண்டு மாதத் துக்கு ஒருமுறை மாற்றப் படும்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாற்றப் பட்டார். அடுத்து வந்த நீதியரசர் கிருபாகரனின் முன்பு விசாரணைக்கு வந்தது. பாதிக்கப்பட்டவர்களின் குரலாக மாறிவிட்டார் நீதியரசர். மூன்றாம் கவுன்சலிங் முடிந்து காலியாக உள்ள சீட்களின் எண்ணிக்கையை, அரசுக் கல்லூரி வாரியாகக் கேட்டார். பல்கலைக்கழகம் வெண்ணிலா விடம் சமாதானம் பேசியது. வெண்ணிலா ஏற்கவில்லை. வேறுவழியின்றிக் காலி யிடங்களின் பட்டியல் வக்கீல் கருணாகரனிடம் தரப்பட்டது. 30 சீட்கள் காலியாகயிருந்தன. 30 பிள்ளைகளின் வேளாண்மைக் கனவு தகர்க்கப்பட்டிருக்கிறது. அன்பு பாரதி மதுரை விவசாயக் கல்லூரியைத் தேர்வு செய்தார். மதுரையில் இடம் ஒதுக்க நீதியரசர் கிருபாகரன் ஆணையிட்டார்.

மண்புழு மன்னாரு : வேளாண்மைப் படிப்பும் விந்தையான விதிகளும்!

(அடுத்த ஆண்டு முதல் ஸ்லைடிங் சிஸ்டத்தைப் பல்கலைக்கழகம் நடைமுறைப் படுத்தியது. வேறுவழி?)’’ இப்படி ஆதங்கத் துடன் வேளாண்துறை ஆணையராக இருந்தவரே பதிவு செய்துள்ளார், என்றால் சாதாரண விவசாயிகளின் நிலையைச் சொல்லவே வேண்டியதில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ஒருவர், தன் மகனை ‘வேளாண்மைக் கல்லூரியில்தான் சேர்ப்பேன்’ என்று உறுதியாக இருந்தார். ஆனால், பையனைச் சேர்த்து முடிப்பதற்குள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டார். நன்றாக மார்க் எடுத்திருந்தும், அரசு வேளாண் கல்லூரியில் இடம் கிடைக்குமோ, தரமில்லாத தனியார் கல்லூரியை ஒதுக்கி விடுவார்களோ எனப் பதற்றத்தில் இருந்தார். ஒரு வழியாக அரசு கல்லூரியிலேயே இடமும் கிடைத்தது. ஆனால், பல லட்சம் ரூபாய் பணம் கட்டித்தான் படிக்க வைக்க முடிந்தது. தனது வாழ்நாள் சேமிப்பை எல்லாம் திரட்டித்தான் படிப்புக்குச் செலவழித்தார். அந்த நண்பரைப் போன்ற பாதிக்கப்பட்ட பெற்றோர் களுக்குத் தீர்வு சொல்லும் குரலாகவே, மு.ராஜேந்திரன் அவர்களும் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

‘‘இன்னும் ஒரு பெரும் குளறுபடி களையப்படாமல் உள்ளது. வேளாண்மைப் பட்டப்படிப்பில் இண்டஸ்டிரியல் கோட்டா என்று ஒன்று உள்ளது. விவசாயத் தொழில் சார்ந்த பெரிய நிறுவனங்கள் ஆறு லட்சம் ரூபாய் பல்கலைக்கழகத்துக்கு வழங்கினால் அவர்கள் சொல்லும் மாணவர்களுக்கு வேளாண்மைக் கல்லூரியில் இடம் கிடைக்கும். 120 இடங்கள் கோட்டாவில் உள்ளன. ஒவ்வொரு அரசுக் கல்லூரிக்கும் 10 இடங்கள். விண்ணப் பிப்பவர்களை மதிப்பெண் அடிப்படையில் வரிசைப்படுத்துவார்கள். உதாரணத்துக்குக் கட் ஆப் 190 வந்தால்தான் அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். ஒரு மாணவர் 190 கட் ஆப் எடுத்திருப்பார். அவருக்குக் கட்டாயம் இரண்டாவது கவுன்சலிங்கில் அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்கும். இருந்தாலும் பெற்றோர்களுக்குப் படபடப்பு இரண்டாவது கவுன்சலிங்கில் இடம் கிடைக்குமா, மூன்றாவதில் கிடைக்குமா அல்லது கிடைக்காமலே போய்விடுமோ? இந்தப் பதற்றத்தைப் பல்கலைக்கழகம் பயன்படுத்திக் கொள்கிறது.

இரண்டாம் கவுன்சலிங்குக்கு முன்பு இண்டஸ்ட்ரியல் கோட்டாவிற்கான கலந்தாய்வுக் கூட்டம் நடக்கிறது. 190 கட் ஆப் எடுத்தவர்கள் படபடப்பில் ஆறு லட்சம் ரூபாய் கட்டி திருநெல்வேலியிலோ, மதுரையிலோ சேர்ந்துவிடுவார்கள். இருபது, இருபத்தைந்து நாள்கள் கழித்து இரண்டாம் கவுன்சிலிங் நடக்கும்போது இதே 190 கட் ஆப் எடுத்த மாணவருக்குக் கோவை அரசு கல்லூரியில் இடம் கிடைத்துவிடும். ஆறு லட்சத்தைக் கட்டியவர்கள் கோவை கல்லூரியில் சேர முடியாமல் மதுரையிலும், திருநெல்வேலியிலும் அல்லாடிக் கொண்டிருப்பார்கள். இண்டஸ்ட்ரியல் கோட்டாவை மூன்றாம் கலந்தாய்வோடு சேர்த்து நடத்தினால் இந்தப் பிரச்னை வருமா? இதைச் செய்யமாட்டார்கள். இதற்கும் யாராவது வெண்ணிலா, முருகேஷ் போன்று துணிச்சலான பெற்றோர் வழக்கு தொடர வேண்டும். நீதியரசர் கிருபாகரன்போல மனிதாபிமானமுள்ள நீதியரசர்கள் அதை விசாரிக்க வேண்டும்” என்று அழுத்தமாகத் தனது நூலில் சொல்லியிருக்கிறார்.

இந்தப் பிரச்னைகளுக்கு வேளாண் பல்கலைக்கழகம் மனது வைத்தால் மட்டுமே, தீர்வு கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒற்றைக் கையெழுத்து மூலம் இந்தப் பாதக விதிகளைப் பயனுள்ளதாக மாற்ற முடியும் என்பது பல்கலைக்கழக அதிகாரி களுக்குத் தெரியாமலா இருக்கும்?