
மாத்தியோசி
‘‘கூட்டுப் பண்ணை தொடங்கப் போகிறோம். எங்களுக்கு ஏதாவது வழி காட்டுங்கள்?’’ என நண்பர் ஒருவர் அலைபேசியில் அழைத்துக் கேட்டார். அவருடன் பேசியதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். தமிழ்நாட்டில் கூட்டுப்பண்ணை இரண்டு வகைகளில் செயல்படுகின்றன. முதல் வகை கூட்டுப்பண்ணையைச் சேர்ந்தவர்கள், வேறு வேறு பணிகளில் உள்ளவர்கள்; பணத்தை முதலீடு செய்வார்கள்.
நிலத்தை நிர்வாகம் செய்ய ஆட்களை அமர்த்தியிருப்பார்கள். பங்குச்சந்தையில் நேரடியாக ஈடுபட முடியாதவர்கள், நேரம் இல்லாதவர்கள் பரஸ்பர நிதி என்று அழைக்கப்படும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வார்கள். இந்த நிறுவனத்தின் நிதி மேலாளர் பங்குச்சந்தையில் முதலீடு செய்வார். இதில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை நிர்வாகச் செலவுக்கு எடுத்துக்கொண்டு, மீதி லாபத்தை முதலீடு செய்தவர்களுக்கு வழங்குவார். ஏறத்தாழ இதே வடிவில்தான், முதல்வகை கூட்டுப்பண்ணைகள் செயல்படுகின்றன.

இரண்டாம் வகைக் கூட்டுப்பண்ணை என்பது நிலத்தில் கூட்டாக உழைத்து, அதன் லாப நஷ்டங்களைப் பகிர்ந்துகொள்ளும் முறை. இந்த முறையில் வாழ்பவர்கள், தற்சார்புடன், தத்துவார்த்தமாக இயற்கையுடன் வாழ வேண்டும் என விருப்பம் கொண்டவர்கள்.
கூட்டுப்பண்ணை என்றவுடன் முன்னாள் சோவியத் ரஷ்யா கண்முன் வந்து போகும். கூட்டுப்பண்ணை எப்படி இருக்க வேண்டும் என வரைவு அறிக்கையை லெனின் எழுதி வெளியிட்டுள்ளார். தமிழிலும்கூடச் சிறு புத்தகமாக வெளிவந்துள்ளது. ரஷ்யாவின் கூட்டுப்பண்ணைகள் சிதைந்து போனதற்கு, ரசாயன வேளாண்மை முறையும், முறையான திட்டமிடலும் இல்லாமல் போனதுதான் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
சோவியத் கூட்டுப் பண்ணையில் ஏற்பட்ட படிப்பினைகளை இஸ்ரேல் நாடு உற்றுக் கவனித்தது. அதை எக்காலத்திலும் தன் பண்ணைகளில் செய்யக் கூடாது என முடிவு செய்தது. இஸ்ரேல் விவசாயத்தில் இன்று சாதனை செய்வதற்கு ‘கிபுட்ஸ்’ (Kibbutz) என்ற கூட்டுப் பண்ணை விவசாய முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பலபயிர் சாகுபடி, மதிப்புக்கூட்டல், இயற்கை விவசாயம்... என உலகத்தில் ஏற்படும் மாற்றங்களுக்குத் தக்கபடி, இஸ்ரேல் என்ற குட்டி நாடு தன்னை மாற்றிக்கொண்டது. இதனால்தான், விவசாயத்தில் சாதனை படைத்து வருகிறது. பிற நாடுகளின் தவறு களைக்கூடப் பாடமாகக் கற்றுக்கொண்டு முன்னேறி வருகிறது இஸ்ரேல். கூட்டுப் பண்ணையைப் பற்றித் தெரிந்துகொள்ள இஸ்ரேல் நாட்டுக்குப் போக வேண்டாம். புதுச்சேரி-தமிழ்நாடு எல்லையில் உள்ள ஆரோவில் சர்வதேச நகரத்துக்குப் போனாலே, கூட்டுப்பண்ணையின் சிறப்புகளைத் தெரிந்துகொள்ள முடியும். பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, இந்தப் பண்ணைகளில் தற்சார்பு என்பதை வாழ்வியலாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

அரவிந்தர் சிந்தையில் உதித்து, ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ உதவியுடன் உருவாக்கப்பட்டதுதான் ஆரோவில் (Auroville). இந்தப் பெயருக்குப் ‘பன்னாட்டுக் கிராமம்’ என்று பொருள். ஆரோவில்லுக்குச் சென்றாலே, ஏதோ வெளிநாட்டுக்குச் சென்ற உணர்வு ஏற்படும். உலக நாடுகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும், சாதி, மதம், அரசியல், நாடுகளின் வேறுபாடுகளைக் கடந்து ஒரே சமூகமாக இங்கு வாழ்கின்றனர். இந்த நகரத்தை உருவாக்க 1968-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் நாள் அடிக்கல் நாட்டப்பட்டது. பல பகுதிகளிலிருந்தும், தமிழகம், புதுச்சேரியிலிருந்தும் 5,000 பேர் குழுமினர். அதன் மையத்திலிருந்த பெரிய ஆலமரத் திலிருந்து சிறிது தொலைவில் ஒரு வட்ட வடிவமான மேடையில் தாமரை மொட்டு வடிவத்தில் சலவைக்கல்லால் ஆன ஒரு தாழியில், உலகின் 121 நாடுகளிலிருந்தும் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பிடி மண் எடுத்து வரப்பெற்று, இந்த இடத்தில் ஒரு சேர சேர்க்கப்பட்டது.
வறண்ட செம்மண் நிலத்தை இன்று பசுஞ்சோலையாக மாற்றிக்காட்டி இருக்கிறார்கள். ஆரோ பிருந்தவனம், ஆரோ அன்னம்... என இந்திய இயற்கை விவசாயத்தின் குருபீடமே இங்குதான் உள்ளது. ஆம், இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் இயற்கை வேளாண்மை குருநாதர் பெர்னார்டு கிளார்க் இங்கேதான் வசிக்கிறார்.
‘‘பாண்டிச்சேரி அருகே ஆரோவில் என்ற இடத்தில் உள்ள வேளாண் பண்ணையில் பயிற்சிக்காகப் போயிருந்தேன். அங்குதான் பெர்னார்டு-டி-கிளார்க் என்பவனுடன் அறிமுகம் கிடைத்தது. அவன்தான் எனக்குக் குரு. முதலில் சந்தித்தபோது, ‘உங்களுடன் கொஞ்சம் பேச வேண்டும்’ என்றேன். ‘மதிய உணவுக்குப் பிறகு பேசலாம்’ என்றான். சாப்பிட்டு முடிந்தவுடன், ‘சைக்கிள் ஓட்டத் தெரியுமா?’ என்றான். ‘தெரியும்’ என்றேன். ‘சரி, சைக்கிளை எடு’ என்று சொல்லி, தான் ஒரு சைக்கிளில் ஏறினான். நானும் ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டேன். அந்த உச்சி வெயிலில் மாங்கு மாங்கென்று ஓட்டிக் கொண்டு போனோம். சில மணி நேரத்துக்குப் பிறகு, ஒரு மரத்தடியில் சைக்கிளை நிறுத்தினோம். வியர்வைக் கொட்டியது. சிரித்துக்கொண்டே சொன்னான், ‘நிழல் போர்வை இல்லாத மண்ணுக்கும் இப்படித்தான் வியர்க்கிறது’ என்றான் (செடி, கொடி, தாவரங்கள் இல்லாமல் வெறுமனே கிடக்கும் மண்ணுக்குள் வெப்பம் பாயும். மனிதனுக்குச் சட்டை போல மண்ணுக்கு மூடாக்கு தேவை!). செயலைச் செய்து விஷயத்தைப் புரிய வைப்பதில் கில்லாடி அந்தப் பெர்னார்டு.
அதே ஆரோவில் பண்ணையில் நாடு முழுக்கவுள்ள இயற்கை ஆர்வலர்கள் எல்லாம் ஒன்றுகூடி இயற்கை வேளாண்மையை எப்படி எடுத்துச் செல்வது என்று மாநாடு கூட்டித் திட்டமிட்டார்கள். தென்னிந்தியாவில் பசுமைப் புரட்சியின் பாதிப்புகள் அதிகம் உள்ள பகுதி தமிழ்நாடுதான். அதனால் தமிழ்நாடுதான் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றார்கள். அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறோம்...’’ இது நம்மாழ்வாரின் வரிகள்.

இப்போது, பாரம்பர்ய விதைப் பரவலாக்கும் பணியில் பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. ஆனால், 1980-களிலேயே, நம் மண்ணின் பாரம்பர்ய விதைகளின் மகத்துவத்தைப் பற்றி பெர்னார்டு கிளார்க் பேசத்தொடங்கினார். வெறும் பேச்சுடன் முடித்துக்கொள்ளாமல், விதைச் சேகரிப்பிலும் இறங்கினார். பாரம்பர்ய நெல் விதைகளைச் சேகரித்து, அதைப் பெருக்கி விவசாயிகளுக்குக் கொடுக்கும் பணியினைச் செய்தார்.
தனது கூட்டுப் பண்ணையில் அதற்கான கள வயலையும் உருவாக்கியிருந்தார். இயற்கை விவசாயத்தின் ஆணி வேர் விதை என்பதைப் பெர்னார்டு அறிந்திருந்தார். ஏற்கெனவே இருந்த கூட்டுப்பண்ணை வளர்ந்து, விருட்சமாகி பலருக்கும் பயன்படத் தொடங்கியவுடன், புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் வறண்டு கிடந்த நிலத்தைப் பண்படுத்தி, பசுமை பொங்கும் பூமியாக மாற்றியுள்ளார். இவரின் துணைவியார், தீபிகா காய்கறி விதைகளைச் சேகரித்துப் பரவலாக்கி வருகிறார். விதவிதமான கத்திரி, பல வண்ணங்களில் வெண்டை... என அரிய வகைக் காய்கறி விதை களைச் சேகரித்து, விருப்பம் உள்ளவர்களுக்குக் கொடுத்து வருகிறார். இவரது காய்கறித் தோட்டத்தில் கற்றுக்கொள்ளவும், இன்னும் பல ஆண்டுகள் கழித்துப் பிரபலமாகப்போகும் கரித்துண்டு உரம் தயாரிப்பு பற்றியும் பெர்னார்டுவிடம் பாடம் படிக்கப் பல பகுதிகளிலிருந்தும் வருகிறார்கள்.
‘‘இனம், மொழி, பணம்... எதுவும் இங்கு முக்கியமில்லை. இயற்கை நேசிப்பும் அன்பும்தான் தேவை.’’
அடுத்து சொல்லப்போகும் பண்ணை அறிவு ஜீவிகள் மத்தியில் மட்டுமே பிரபலம். அதிகம் வெளிச்சம்படாத இந்தப் பண்ணைக்கு, கடந்த ஆண்டு சென்றிருந்தோம். ஆரோவில் பகுதிக்கு முதன்முறையாக வந்த நண்பருக்கு, ‘‘இப்படிக் கூட வாழ முடியுமா?’’ என்று அன்று முழுக்க வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார். அப்படி என்னதான் பார்த்தோம்.
அவிரமும் (Aviram) யோரித் ரோசின்னும் (Yorit Rozin) தங்களின் 1 வயது மகளான ஓஷருடன் (Osher) 18 வருடங்களுக்கு முன் ஆரோவில்லுக்கு வந்து சேர்ந்தனர். அவிரம் மனோதத்துவ நிபுணராகவும், பின்னர் வர்த்தகப் பிரதிநிதியாகவும் இருந்தவர். யோரித், இஸ்ரேலில் கட்டடக் கலைஞராகப் பணிபுரிந்தவர். பொருள் தேடும் சராசரி வாழ்க்கை இருவருக்கும் மகிழ்ச்சியைத் தரவில்லை.
‘தமிழ்நாடுதான் இனி தங்கள் நாடு’ என நினைத்து இஸ்ரேலைத் துறந்து ஆரோவில்லைத் தங்களின் வாழ்விடமாக மாற்றிக்கொண்டனர். பல கூட்டுப் பண்ணை களில் உள்ள சமூகக்குழுக்களில் இணைந்து வாழ்ந்தார்கள். இறுதியில் ஆரோவில் நிர்வாகம் கூட்டுப்பண்ணைக்காகக் கொடுத்த 70 ஏக்கர் நிலத்தில் காலடி எடுத்து வைத்தனர். புல்கூட முளைக்க விரும்பாத தரிசு நிலம். ஆனால், அவிரமும் யோரித்தும் தரிசு நிலத்தில் தங்களின் தேடுதலைத் தொடங்கினார்கள். அதன் விளைவாக அரவிந்தர் ஆசிரமத்தின் மூலம் சாதனா காட்டை உருவாக்கினார்கள்.
காடு வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களைத் தங்களுடன் இணைத்துக்கொண்டார்கள். ஆசை, ஆசையாக அந்த நிலத்தில் அவர்கள் நட்ட மரக்கன்றுகள் துளிர்விடவில்லை. மண்ணை உயிர்ப்பிக்கும் வேலையில் இறங்கினார்கள். குளங்கள் வெட்டுவது, மரங்கள் நட புது யுக்திகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மனிதக் கழிவை உரமாக்குவது... என அனைத்து வழிமுறைகளையும் செய்து பார்த்தார்கள். அதில் வெற்றியும் பெற்றார்கள். காடு வளர்ப்பு, சுற்றுச்சூழல் கல்வி, இயற்கை வேளாண்மை... குறித்த பயிற்சிகள் அவ்வப்போது நடந்து வருகின்றன. மத்திய, மாநில அரசின் காடு வளர்ப்புத் திட்டங்களில் அவிரம் ஆலோசகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘‘இயற்கையை விரும்பும் யார் வேண்டுமானாலும், இங்கு வந்து தங்கி இனிமையாக வாழலாம். இங்கு எல்லோரும் சமம். அனைவரும் வேலையைப் பகிர்ந்து கொண்டு, நிலத்தில் விளைவதை வைத்து நலமுடன் வாழ்வோம். இனம், மொழி, பணம்... எதுவும் இங்கு முக்கியமில்லை. இயற்கை நேசிப்பும் அன்பும்தான் இந்தப் பூமிக்கு தேவை’’ என்று சொல்லிவிட்டு, மதிய உணவுக்கு நம்மை அழைத்துச் சென்றார் அவிரம்.
அந்தக் கூட்டுப்பண்ணையில் வாழும் 50-க்கும் மேற்பட்டோர், மதிய உணவு சாப்பிட அமர்ந்திருந்தனர்.தமிழ்நாடு, ஆந்திரா, இஸ்ரேல், இத்தாலி... எனப் பல கலாசாரங்களின் சத்து நிறைந்த உணவு வகைகள் எல்லோருக்கும் பரிமாறப்பட்டன. கூட்டு வாழ்க்கை முறை என்பதால், அன்று சமையல் செய்த நாட்டவர்களின் கைவண்ணம் அதில் தெரிந்தது. அதை மதிய உணவு என்று சொல்ல முடியாது. விருந்து என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். சிறிய இடைவேளைக்குப் பிறகு, கூட்டுப் பண்ணையில் பணிகளைச் செய்ய எல்லோரும் புன்சிரிப்புடன் புறப்பட்டுச் சென்றனர்.