பாலில் பல லட்சங்கள் சம்பாதிக்கும் பெண்களும் சாக்லேட் செய்து சாதிக்கும் ஸ்விட்சர்லாந்தும்!

மாத்தியோசி - மண்புழு மன்னாரு
அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜயந்தி அன்று, காந்திக்குப் பிடித்த ஒன்றைச் செய்ய நினைத்தேன். தீவிர வாசிப்பில் ஆர்வம் கொண்டவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. அதன்படி ‘செயலே சிறந்த சொல்’ என்ற புத்தகத்தைப் படித்தேன். ஒய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மு.ராஜேந்திரன் தன் பணிக்காலத்தில் சந்தித்த அனுபவங்களை அற்புதமாக எழுதியுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், வேளாண்மைத்துறை கமிஷனர்… எனப் பல பதவிகளை வகித்துள்ளார்.
வழக்கமாக ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் கதைதான் வெளியில் அதிகமாகப் பேசப்படுகிறது. ஐ.ஏ.எஸ் தேர்வில் தோல்வி அடைந்து, அதில் என்ன பாடம் கற்றார் என்பதைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
ஐ.ஏ.எஸ் தோல்விக்குப் பின், தமிழ்நாடு தேர்வாணையம் தேர்வு எழுதி அரசுப் பணிக்கு வந்திருக்கிறார். முதலில் திருவள்ளூரில் உள்ள கூட்டுறவு வங்கியின் சார் பதிவாளராகப் பணியில் சேர்கிறார்.
பொதுவாக முதல் நாள், முதல் கையெழுத்து நல்ல நிகழ்ச்சிகள் சம்பந்தமாக இருக்கும். ஆனால், இவருக்கு வந்த முதல் கோப்பு, இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட திரூர் கூட்டுறவு சங்கத்தைக் கலைக்கும்படி வந்தது.
அந்தச் சங்கத்தின் அருமை பெருமைகளைச் சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சியில் இருந்தபோது அறிந்திருக்கிறார். ‘நாட்டின் முதல் கூட்டுறவு சங்கத்தை முதல் கையெழுத்து போட்டு, முடித்து வைப்பதைவிட, அதற்கு உயிர் கொடுப்போம்’ எனக் களத்தில் இறங்குகிறார். அந்தச் சங்கம் காப்பாற்றப்பட்டு, இப்போது வரை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இப்படி ஏராளமான தகவல்கள் நூல் முழுக்கக் கொட்டிக் கிடக்கின்றன.
நிற்க.
பல ஆண்டுகளுக்கு முன்பு திரூர் நெல் ஆராய்ச்சி நிலையத்துக்கு (இதுவும் வரலாற்றுப் புகழ் பெற்றதுதான்) செல்லும்போது, வழியில் இந்தச் சங்கத்தையும் பார்த்திருக்கிறேன்.
1904-ம் ஆண்டு, திரூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து, கூட்டுறவு சங்கத்தைப் பதிவு செய்தவர் வேறு யாருமல்ல ராஜாஜிதான். இதன்பிறகே, இங்கிலாந்தில் 1944-ல் ராக்டெல் என்கிற பகுதியில் 29 நெசவாளர்கள் சேர்ந்து 28 பவுண்ட் மூலதனத்தில் கூட்டுறவு நுகர்வோர் சங்கத்தை உருவாக் கினார்கள்.

நாடு விடுதலைக்குப் பிறகு, விவசாயிகளின் நலனுக்காகக் கூட்டுறவுச் சங்கங்கள் உருவாக்கப் பட்டன. கதர் கிராமத் தொழில், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், மகளிர், பால் உற்பத்தியாளர்கள், கால்நடை வளர்ப்போர், கரும்பு உற்பத்தியாளர்கள், வீட்டுவசதி வாரிய தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் தங்களுடைய நலன், பாதுகாப்பு கருதி தங்களுக்குத் தாங்களே கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி வருகிறார்கள்.
கூட்டுறவு அமைப்பு சிறப்பானது. அதில் அங்கம் வகிப்பவர்களின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளால், ஒட்டுமொத்த அமைப்பும் தேவையற்றது என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. கூட்டுறவு என்று சொன்னவுடன் நாட்டில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் ‘அமுல்’தான் நினைவுக்கு வருகிறது.
குஜராத்தின் கைராவின் (இன்றைய கேடா) சிறுகுறு பால் உற்பத்தியாளர்கள் அப்போதிருந்த ஒரேயொரு பால் நிறுவனமான `போல்சன் டெய்ரி’யின் இடைத்தரகர்களால் அடிமாட்டு விலைக்குப் பாலைக் கொடுத்து வந்தனர்.
அப்போதைய உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபபாய் படேலைப் பாதிக்கப்பட்ட பால் விவசாயிகள் குழு உதவிக்கு அழைத்தது. இதன் பிறகுதான், 1946-ம் ஆண்டு, அமுல் ஆரம்பிக்கப்பட்டது. அமுல் -ஆனந்த் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (Anand Milk Producers Union Iimited -AMUL) என்பதன் சுருக்கம். இது ஆனந்த் என்ற ஊரைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்குகிறது.
இந்த அமைப்பின் வெற்றிக்குப் பிறகே, மற்ற மாவட்டங்களில் பால் உற்பத்திக்கான கூட்டுறவுச் சங்கங்கள் தொடங்கப்பட்டன.
அமுல் வெளியில் தெரிய காரணமாக அமைந்தவர் வர்கீஸ் குரியன்.
திருபுவன்தாஸ் படேல், சர்தார் வல்லபபாய் படேலுடன் இணைந்து இக்கூட்டுறவு கூட்டமைப்பின் வளர்ச்சிக்காகப் பணியமர்த்தப் பட்டவர் சென்னையில் கல்வி பயின்ற, கேரள மாநிலத்தவரான வர்கீஸ் குரியன். தொடக்கத்தில் இத்துறையில் பெரிதும் ஆர்வமில்லாது இருந்தவர், காலப்போக்கில் இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தையானார் என்பது வரலாறு. வெண்மைப் புரட்சியின் அடித்தளமான ஆப்ரேஷன் ஃப்ளட் (Operation Flood) திட்டம் வர்கீஸ் குரியனால் உருவாக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள பால் உற்பத்தியாளர்களை ஒருங்கிணைத்து நியாயமான விலையிலும், இடைத்தரகர்களின் தலையீட்டை நிறுத்தவும் 1970-ம் ஆண்டு நிகழ்த்த முடிவு செய்யப்பட்டது. இந்தியா பால் உற்பத்தியில் முதலிடம் பிடிக்கக் காரணமாய் அமைந்த இயக்கம் அது.

இவர் எழுதிய `I too had a dream’ , `An unfinished dream’ புத்தகங்கள். வெண்மைப் புரட்சியின் அடிப்படை நோக்கத்தை விரிவாகப் பேசுகின்றன. ஆனால், வெண்மைப் புரட்சி ஏற்படுத்திய வலிகளும் நிறைய உள்ளன என்பது தனிக்கதை.
சரி, அமுல் கதைக்கு வருவோம். அமுல் நிறுவனம் இந்தியா முழுமைக்கும் முன்னோடியாக இருந்ததுக்கு அர்ப்பணிப்புக் கொண்ட தலைமையும் சிறந்த நிர்வாகமும் அடித்தளமாக அமைந்தது. இதனால், நாட்டின் முன்னணி நிறுவனமாக உருவானது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வெண்ணெய், நெய், ஐஸ் க்ரீம்… என அதன் சந்தையை விரிவுபடுத்தியுள்ளது அமுல்.
அமுலின் வெற்றியைத் தொடர்ந்து இதே மாதிரியைக் கொண்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இயங்கிவரும் ஆவின் என்ற தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம்கூட அமுலை முன்மாதிரியாகக் கொண்டதுதான். கேரளாவின் மில்மா, கர்நாடகாவின் நந்தினி… என அமுல்தான் அத்தனை பால் நிறுவனங்களுக்கும் வழிகாட்டி. “வர்கீஸ் குரியன் 2006-ம் ஆண்டு அமுல் நிறுவனத்தை விட்டு வெளியில் செல்ல, அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் காரணம். அதனால், வேலையை ராஜினாமா செய்துவிட்டு, உங்கள் சென்னைக்குச் சென்றுவிட்டார்’’ என்று நான் குஜராத் சென்றபோது, அந்த மாநிலத்தின் இயற்கை வேளாண்மைச் செயற்பாட்டாளர் கபில் ஷா ஆதங்கப்பட்டார்.
இந்தியாவில் உள்ள விவசாயி 100 ரூபாய் வருமானம் பெற்றால், அதில் 40 ரூபாய் கால்நடை வளர்ப்பு மூலம் கிடைக்கிறது என நபார்டு வங்கியின் ஆய்வறிக்கை ஆதாரத்துடன் சொல்கிறது. இது குஜராத் மாநிலத்துக்குத்தான் முழுமையாகப் பொருந்தும். இந்த மாநிலத்தில் சுற்றியபோது, கறவை மாடு வளர்க்காத விவசாயிகளைப் பார்ப்பது அரிதாக இருந்தது.
கறவை மாடு மேலாண்மையில் இந்தியாவிலேயே குஜராத் விவசாயிகள் முன்னோடியாக உள்ளார்கள். இதைப் பல பண்ணைகளுக்கு நேரில் சென்றும் பார்த்துள்ளேன்.
இந்த கொரோனா பெருந்தொற்று நேரத்தில் பிற மாநில கூட்டுறவு பால் நிறுவனங்கள், விவசாயிகளிடம் முழுமையாகப் பால் கொள்முதல் செய்து விற்பனை செய்ய விழிபிதுங்கி நிற்கின்றன. ஆனால், அமுல் நிறுவனத்துக்குப் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள், இந்நேரத்தில் பெரிய சாதனையைச் சத்தமில்லாமல் செய்துள்ளார்கள். பனஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த 10 பெண் விவசாயிகள் லட்சக்கணக்கில் பால் மூலம் வருமானம் எடுத்துள்ளார்கள்.
‘‘கூட்டுறவு அமைப்பு சிறப்பானது. அதில் அங்கம் வகிப்பவர்களின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளால், ஒட்டுமொத்த அமைப்பும் தேவையற்றது என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.’’
முதல் இடத்தில் சௌத்ரி நவல்பென் 2,21,595.6 கிலோ பால் விற்பனை மூலம் ரூ.87,95,900.67 வருமானம் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் 2,50,745.4 கிலோ பால் மூலம் ரூ.73,56,615.03 வருமானம் எடுத்துள்ளார் மால்வி கானுபென் ரவ்டாபாய் என்பவர். அடுத்து 2,68,767 கிலோ பால் உற்பத்தி மூலம் சவ்தா ஹன்சாபா ஹிம்மத் சிங் பால் ரூ.72,19,405.52 வருமானம் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். இப்படியாக 10 பெண்கள் லட்சக்கணக்கில் வருமானம் எடுத்துச் சாதனை பெற்றுள்ளார்கள்.
“லட்சக்கணக்கில் வருமானம் பெற்ற பெண் விவசாயிகளை வாழ்த்தி மகிழ்கிறது அமுல் நிறுவனம்’’ என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார், இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ்.சோதி.
அண்மையில் அமுல் ரபோபேங்கின் உலகளாவிய சிறந்த 20 பால் நிறுவனங்களின் பட்டியலில் நுழைந்த முதல் இந்திய பால் நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 5.5 பில்லியன் டாலர் வருடாந்தர வருவாயுடன் அமுல் இந்தப் பட்டியலில் 16-வது இடத்தைப் பெற்றுள்ளது. “குஜராத்திலுள்ள 36 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு இந்தச் செய்தி பெருமை அளிக்கிறது” என்று அமுல் நிறுவனம் கூறியுள்ளது.
22.1 பில்லியன் டாலர் வருவாயுடன் ஸ்விட்சர்லாந்தின் நெஸ்லே நிறுவனம் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு பேராசிரியர் நண்பர், கருத்தரங்கில் கலந்துகொள்ள ஸ்விட்சர்லாந்துக்குச் சென்றார். அதற்கு முன்பு என்னைச் சந்தித்தபோது, “வெளிநாட்டிலிருந்து என்ன வாங்கி வரட்டும்’’ எனக் கேட்டார்.
‘மில்க் சாக்லேட்கள் வாங்கி வாருங்கள்’ என்றேன்.
‘கிண்டல் செய்கிறேன்’ என்று என்னை ஏற இறங்க பார்த்துவிட்டுச் சென்றார். ஸ்விட்சர் லாந்து பயணத்தை முடித்துவிட்டு கை நிறையப் பால் பொருள்களில் செய்த விதவிதமான சாக்லேட்டுகளைக் கொடுத்துவிட்டு, “ஸ்விட்சர்லாந்து போகிறேன் என்று சொல்லியவுடன், எல்லோரும் ‘கைக்கடிகாரம் வாங்கி வாருங்கள்’ என்றார்கள். “நீங்கள் மட்டும்தான், மில்க் சாக்லேட் வேண்டும்” எனக் கேட்டீர்கள். ‘நானும் கிண்டல் செய்கிறீர்கள்’ என்று நினைத்தேன். ஆனால், அங்கு சென்ற போதுதான், நீங்கள் சொல்லியதன் அர்த்தம் புரிந்தது. அந்நாட்டு பால் விவசாயிகளின் திட்டமிட்ட உழைப்பை நிச்சயம் பாராட்ட வேண்டும். சிறிய சிறிய குழுக்களாக (கிளஸ்டர்) விவசாயிகள் சேர்ந்து, தங்கள் பண்ணையில் உற்பத்தியாகும் பால் மூலம் சாக்லேட் செய்து நேரடியாக விற்பனை செய்து, நல்ல லாபம் எடுத்து வருகிறார்கள். இதற்கு அந்நாட்டு அரசும் ஊக்கப்படுத்துகிறது. இதனால், பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் வசதி வாய்ப்புகளுடன் வாழ்கிறார்கள். நம் ஊரிலும் இதுபோல நடக்க வேண்டும்’’ என ஆவலுடன் சொன்னார்.