மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: எம்.எஸ்.சுவாமிநாதன் தமிழ்நாட்டுக்கு ஏன் வந்தார்?

M.S. Swaminathan
பிரீமியம் ஸ்டோரி
News
M.S. Swaminathan

மாத்தியோசி

சிறுக கட்டி பெருக வாழ்’ என்ற பழமொழி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்குப் பொருத்தமாக இருக்கும். எனக்குப் பல ஆண்டுகளாக ஒரு சந்தேகம் இருந்தது. அது அண்மையில் தீர்ந்தது. அதாவது, இவருக்கு இந்தியா மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் தொடர்புகள் உண்டு. அப்படிப்பட்டவர் ஒரு காலத்தில் சீமைக்கருவேலம் முள் செடிகள் முளைத்துக் கிடந்த தரமணிப் பகுதியில் ஏன் தனது ஆராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கினார் என்பதுதான்.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7, 8, 9 தேதிகளில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் விழாக்கோலம் பூண்டிருக்கும். காரணம், ஆகஸ்ட் 7-ம் தேதி சுவாமிநாதனின் பிறந்த நாள். அதுமட்டுமல்ல, அந்த ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கிய நாளும் அதுவே. எனவே ஐ.நா சபை அதிகாரிகள் தொடங்கி, ஆண்டாள் குப்பம் சுயஉதவிக்குழு பெண்கள் வரை பல்வேறு தரப்பினரையும் அப்போது பார்க்க முடியும். சிறுதானியங்கள் சாகுபடிக்கு ஊக்கம், அலையாத்திக் காடுகள் வளர்ப்பு, மலைவாழ் மக்கள் மேம்பாடு என தனது கொள்கை எதிரிகள்கூடப் பாராட்டும் அளவுக்குச் சில விஷயங்களைச் சத்தமில்லாமல் செய்துவருகிறார் எம்.எஸ்.சுவாமிநாதன்.

நிகழ்வில்...
நிகழ்வில்...

அந்தக் காலத்துக் கல்யாணம்போல மூன்று நாள்களுக்கு நிகழ்ச்சிகள் நடக்கும். ‘நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைதல் மற்றும் காலநிலை அறிவியலை வலுப்படுத்துதல்’ (Achieving Sustainable Development Goals and Strengthening Science for Climate Resilience) தலைப்பில் நடைபெற்ற இந்த ஆண்டு நிகழ்வு கொஞ்சம் சுருதி குறைந்ததுபோல இருந்தது. ஆனாலும், அரசின் உயர் பதவியில் இருப்பவர்களுக்கும் வெளிநாட்டுப் பேச்சாளர்களுக்கும் குறைவில்லை.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். சென்னைப் பெருநகர வாகன நெரிசலில் நீந்தி நிகழ்ச்சிக்கு வந்தவர்களை, ‘‘இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களே...’’ என்று வேளாண் விஞ்ஞானியை, ஒரு நொடியில் இசை அமைப்பாளர் என்று முதல்வர் எடப்பாடியார் அழைக்க எல்லோரும் இறுக்கம் குறைந்து சிரித்தார்கள். 94-வயதில் எம்.எஸ்.சுவாமிநாதனின் உடல் தளர்ந்திருந்தாலும் பேச்சும் சிந்தனையும் அப்படியேதான் உள்ளது. முப்பது ஆண்டு களுக்கு முன்பு நடந்த கதையைத் தனக்கே உரித்தான மென்மையான ஆங்கிலத்தில் சொன்னார்.

‘‘பணி ஓய்வுக்குப் பிறகு, புதுடெல்லியில் என் வீட்டிலிருந்தேன். ஒருநாள் இரவு முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த அருணாச்சலம் வந்திருந்தார். ‘நீங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து உங்களின் சேவையைத் தொடர வேண்டும். அதற்குத் தேவையான அத்தனை வசதி களையும் நாங்கள் செய்துகொடுக்கிறோம்’ என்றார். இதே காலகட்டத்தில் கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே மிகப்பெரிய அளவுக்கு நிலமும் நிதியும் கொடுக்கிறோம். பெங்களூருக்கு வாருங்கள் என்று அழைப்புவிடுத்தார். இதை ‘இந்து’ ராம் வசம் சொன்னேன். ‘நீங்கள் தமிழ்நாட்டுக்கு வந்துவிடுங்கள். தேவையான இட வசதியை அரசாங்கத்திடம் கேட்டுப் பெறலாம்’ என்றார். என் மனதில் கடற்கரைப் பகுதியில் உள்ள மக்களுக்கு வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. மிக நீண்ட கடற்கரைப் பரப்புக் கொண்ட தமிழ்நாடு அதற்கு ஏற்றதாக இருந்தது. எனவே, தமிழ்நாட்டுக்குப் புறப்பட்டு வந்தோம். அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி, ஆராய்ச்சி நிறுவனம் தொடங்க இடம் கொடுத்தார். கட்டடங்கள் கட்டி முடித்த போது, முதல்வராக ஜெ.ஜெயலலிதா இருந்தார். அவரது கரங்களால் இந்த நிறுவனத்தைத் தொடங்கி வைத்தவரிடம், இன்னும் 1.5 ஏக்கர் நிலம் இருந்தால் ஆராய்ச்சி பணிகளுக்கு உதவியாக இருக்கும் என்றோம். உடனே 2.5 ஏக்கர் நிலம் கொடுக்க உத்தர விட்டதை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.

எனக்கு உலக உணவு பரிசு (World Food Prize) மூலம் நல்ல தொகை கிடைத்தது. அதை மூலதனமாகக் கொண்டு 1988-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்துக்கு 30 வயது ஆகிறது’’ எனத் தமிழகம் வந்த வரலாற்றைச் சொல்லிமுடித்தார் எம்.எஸ்.சுவாமிநாதன்.

M.S. Swaminathan
M.S. Swaminathan

“எம்.எஸ்.சுவாமிநாதன், தமிழ்நாட்டுக்கு வாருங்கள்” என்று முதலில் அழைத்த முருகப்பா குழுமம், அதே தரமணிப் பகுதியில் முருகப்பா செட்டியார் ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்திவருகிறது. அங்கு இயற்கை விவசாயம் குறித்த ஆராய்ச்சிகளும் பயிற்சிகளும் நடைபெற்று வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சரி... நிகழ்ச்சிக்கு வருவோம்.

பத்திரிகையாளர் ‘இந்து’ என்.ராம் அவர்கள் பேசும்போது, ‘‘இந்த நிறுவனத்தின் வரலாற்றுச் சாட்சியாக உள்ளேன். நிறுவனம் தொடங்க நிலம் கொடுத்த இரண்டு முதல்வர்களும் நம்மிடையே இல்லை. அவர்களின் பரந்த உள்ளத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிலம் 30 ஆண்டுகள் குத்தகைக்குத்தான் அரசு கொடுத்திருந்தது. தற்போது குத்தகைக் காலம் முடிந்துவிட்டது. எனவே, அடுத்த 30 ஆண்டுகள், முடிந்தால் 99 ஆண்டுகளுக்கும்கூடக் குத்தகைக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கோரிக்கை வைத்தார். முதல்வர் பேசும்போது, இந்தக் கோரிக்கைக்குப் பச்சைக்கொடி காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வரலாற்றில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்போலக் கொண்டாடப்பட்டவருமில்லை; விமர்சனங் களுக்கு அடிப்பட்டுக்கொண்டிருப் பவருமில்லை. ஒவ்வொரு முறை பாரத ரத்னா விருது அறிவிக்கும்போதும், நோபல் பரிசு பட்டியல் வெளியாகும்போதும், எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் அந்தச் சமயத்தில் அடிபடுவது வழக்கமாக உள்ளது.

மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன். 1925-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி கும்பகோணத்தில் பிறந்தார். உள்ளூரிலேயே பள்ளிப் படிப்பை முடித்தார்.

திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டத்தையும், கோயம்புத்தூர் வேளாண் பள்ளியில் (இப்போது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்) இளநிலை வேளாண்மை பட்டத்தையும் பெற்றார். பிறகு, பூசாவில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் (Indian Agricultural Research Institute-IARI) முதுநிலை வேளாண்மை பட்டத்தைப் பெற்றார்.

இதற்கிடையில் மத்திய தேர்வாணையத்தின் தேர்வு எழுதி, இந்திய காவல் பணிக்குத் தேர்வு பெற்றார். ஆனால், அதில் சேரவில்லை.

பிறகு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ‘தி ஸ்கூல் ஆஃப் அக்ரிகல்ச்சுரல்’ பிரிவில் ‘டாக்டர்’ பட்டம் பெற்றார். 1954-ம் ஆண்டு, ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் ‘ஆராய்ச்சியாளராக’ சேர்ந்தார். அதன்பின்பு, படிப்படியாக வளர்ந்து இந்தியாவில் பசுமைப் புரட்சி திட்டம் நாடு முழுக்கக் கொண்டு செல்வதில் முழுவீச்சில் செயல்பட்டார். இதன் பிறகு நடந்த கதையை ஊரும் உலகமும் அறியும்.

‘‘என் தந்தை மருத்துவர் என்பதால், நான் மிகச்சிறந்த மருத்துவராக உருவாக வேண்டும் எனக் கனவு கண்டேன். ஆனால், என்னுடன் படித்தவர்கள் பலரும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணிகளுக்குச் சென்றனர். அதற்கான வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. ஆனாலும் அவற்றை நான் ஏற்கவில்லை. அப்போதைய பிரதமர் நேரு, நாட்டில் நிலவும் உணவுப் பஞ்சத்தைப் பற்றிப் பேசியது என் நெஞ்சை உருக்கியது. வேளாண் விஞ்ஞானியாக உருவாக வேண்டும் என்ற விதையை என்னுள் விதைத்தவர் நேரு.

வேளாண் அறிவியலில் உயர்கல்வி முடித்த பிறகு, புதிய ரகப் பயிர்களையும் கூடுதல் மகசூல் தரும் சாகுபடி முறைகளையும் கண்டுபிடிக்க எங்கள் விஞ்ஞானிகள் குழு போராடியது. நாங்கள் உருவாக்கிய உயர் விளைச்சல் ரகங்களை நம் விவசாயிகள் பயிர் செய்தார்கள். ஒரு கோடி டன்னாக இருந்த நம்முடைய உணவு உற்பத்தி இரண்டு கோடி டன்னாக உயர்ந்தது. பிரதமர் இந்திரா காந்திதான் முதலில் அதைக் கோதுமைப் புரட்சி என்றார். கோதுமையுடன் நெல், பயறு வகைகளிலும் கூடுதல் உற்பத்தியைக் கொடுக்கும் ரகங்களை வெளியிட்டிருந்தோம். முதலில் வில்லியம் காட் என்ற அமெரிக்கர் அதைப் ‘பசுமைப் புரட்சி’ என்றார். உண்மையில், புதிய ரகப் பயிர்களிடமோ, நவீன வேளாண் முறையிலோ தவறு இல்லை. தவறு என்பது, மனிதர்களாகிய நாம் அதைப் பயன்படுத்திக்கொண்ட முறையில்தான் இருக்கிறது’’ என ஒருமுறை எம்.எஸ்.சுவாமிநாதன் மனம் திறந்து ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.

‘குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.’

ஒருவருடைய குணங்களை ஆராய்ந்து, குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திருப்பவற்றால் தெளிந்துகொள்ள வேண்டும் என்பதுதான்.இந்தத் திருக்குறளின் பொருள்.