மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு : சர்க்கரை நோய்க்கு ரேஷன் அரிசியும் கரும்பு ரகம் கண்டுபிடித்த விவசாயியும்!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

ரண்டு இனிப்பான தகவல்களைச் சொல்லப்போகிறேன். முதல் இனிப்புத் தகவல் கசப்பானது. ஆம், முன்பெல்லாம், சர்க்கரை நோய் என்ற நீரிழிவு நோய் நகரத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே அதிக அளவு ஏற்பட்டு வந்தது. இப்போது கிராமப்புறங்களிலும் நீண்டு வருகிறது என்கிறது சமீபத்தில் வெளியான ஆராய்ச்சி முடிவு.

தமிழகக் கிராமப்புறங்களில், சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் ஸ்காட்லாந்து டண்டீ பல்கலைக்கழகத்துடன் இணைந்து, நீரிழிவு நோய் தாக்கம் குறித்த ஆய்வு நடத்துகிறது. 2006-ம் ஆண்டு முதல், செங்கல்பட்டு மாவட்டம், சூணாம்பேடு கிராமத்தைச் சுற்றியுள்ள 25 கிராமங்களில் நீரிழிவு நோய் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆபிரகாம் பண்டிதர்
ஆபிரகாம் பண்டிதர்

‘‘சூணாம்பேடு பகுதியில் நீரிழிவு நோய் குறித்து 25 கிராமங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, ஒவ்வொரு வீடாகச் சென்று, இலவச மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, 20 கிராமங்களில், ஆய்வுகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வின்படி, 2006-ம் ஆண்டில், 4.9 விகிதமாக இருந்த நீரிழிவு நோய் பாதிப்பு, தற்போது, 13.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மேலும், ஆரம்ப நிலை நீரிழிவு நோய் பாதிப்பு 18.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதற்கு, அதிகளவு அரிசி உணவு சாப்பிடுவதுதான் காரணமாக உள்ளது. மேலும், போதியளவில், பழங்கள், காய்கறிகள் சாப்பிடாதது... போன்றவை காரணமாக உள்ளன. நீரிழிவு நோயைப் பொறுத்தவரையில், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்தலாம்’’ என டாக்டர் மோகன் நீரிழிவு மையத் தலைவர் டாக்டர் மோகன் ஆராய்ச்சி அறிக்கையில் சொல்லியிருக்கிறார்.

தமிழ்நாடு முழுக்கவே இப்படித்தான் இருக்கிறது. உணவை உற்பத்தி செய்து கொடுப்பவர்களே, நோயில் விழுந்தால் மற்றவர்களின் நிலையைச் சொல்ல வேண்டுமா?

‘‘முன்பெல்லாம் எங்கள் வீட்டில் ஒரு வேளையாவது கேழ்வரகு களி சாப்பிடுவோம். இப்போது சாப்பிடுவதுமில்லை; கேழ்வரகுச் சாகுபடி செய்வதும் குறைந்துவிட்டது’’ என்று திருக்கழுன்றம் ‘சிற்பி’ கீர்த்திவாசன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.

ஒருமுறை கொடுமுடியில் உள்ள ‘பஞ்சகவ்யா சித்தர்’ டாக்டர் நடராஜனைச் சந்திக்க அவரின் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தபடியே உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் சோர்ந்தபடி வந்தார்.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

‘‘உடம்புல சர்க்கரை அளவு அதிகமாயிடுச்சு. இனிப்புப் பொருள் சாப்பிடக் கூடாது. ரேஷன் அரிசி வாங்கிச் சாப்பிடு. கடை அரிசியைத் தொட்டுப்பார்க்காதீங்க…’’ என அவரிடம் மருத்துவ ஆலோசனை சொல்லி அனுப்பி வைத்தார். இதைக்கேட்ட எனக்குத் தலை சுற்றிவிட்டது.

சர்க்கரை நோயாளிகளுக்குப் பாரம்பர்ய அரிசியைச் சாப்பிடச் சொல்வார்கள். ஆனால், நீங்கள் ரேஷன் அரிசியைப் பரிந்துரை செய்கிறீர்களே..? என டாக்டரிடம் கேட்டோம்.

வழக்கம்போல “ஹ... ஹ... ஹ…” எனச் சிரித்துவிட்டு “பாரம்பர்ய அரிசி சாப்பிடறதுதான் நல்லது. ஆனா, இவரைப் போல ஏழைகள் ஒரு கிலோ பாரம்பர்ய அரிசியை 80 ரூபாய்க்கு வாங்கிச் சாப்பிடறது நடக்குற காரியமா. அதனால, அவங்களுக்கு எது சுலபமா கிடைக்குமோ அதைச் சொன்னேன். ரேஷன் அரிசியை பாலீஷ் செய்யாமல், நன்றாக வேக வைத்திருப்பார்கள். இதனால், பழுப்பு நிறத்தில் இருக்கும். இந்த அரிசியைச் சாப்பிடும்போது, மெதுவாகத்தான் ரத்தத்துல சர்க்கரை கலக்கும். கூடவே, ருசி இருக்காது. இதனால நிறைய சாப்பிட முடியாது. அதனால்தான், ரேஷன் அரிசை சாப்பிடச் சொல்றேன். நம்ம பாரம்பர்ய அரிசியும் சிறுதானிய உணவும் சாப்பிட்ட வரைக்கும் உடம்பு இரும்புபோல இருந்துச்சு. ஒட்டு ரகம், வீரிய ரகம் வந்த பிறகு, மண் மட்டும் பாதிக்கப்படல. அந்த மண்ணை நம்பி வாழும் விவசாயிகளும் பாதிக்கப்படுறாங்க. உணவு விஷயத்துல விவசாயிங்க விழிப்பு உணர்வோடு இருக்கணும்’’ என்று அக்கறையுடன் சொன்னார் டாக்டர் நடராஜன்.

அடுத்து, சொல்லப்போகும் தகவல் மருத்துவம், விவசாயம், இசை எனப் பல்துறை வித்தகர் பற்றியது. 100 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூரில் வாழ்ந்த ஆபிரகாம் பண்டிதர் என்ற தமிழரை ஏறத்தாழ மறந்தே போய்விட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி இவரது 101-வது நினைவு தினம் அன்று மூத்த சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு, வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி இவரை மீண்டும் எனக்கு நினைவு படுத்தினார்.

ஆங்கிலேய அரசு அந்தத் தஞ்சை விவசாயிக்கு (ஆபிரகாம் பண்டிதர்) ராவ்சாகேப் என்ற உயரிய பட்டத்தை வழங்கியது.

ஆபிரகாம் பண்டிதரின் வாழ்க்கை திருப்பங்களும் சாதனைகளும் நிறைந்தது. தேர்ந்த இயக்குநர் இவரது வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்கும் அளவுக்குச் சுவை கலந்தது. அப்படி என்ன சாதித்துவிட்டார் என்றுதானே கேட்கிறீர்கள்.

ராஜாக்கள், ஜமீன்தாரர்கள்… எனத் தங்கள் அடிவருடிகளுக்கு மட்டுமே ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்ட ராவ்சாகேப் என்ற உயரிய பட்டம், ஒரு தமிழ்நாட்டு விவசாயிக்கு வேளாண்மைக் கண்டுபிடிப்புகளுக்காகக் கொடுக்கப்பட்டது என்பதை நம்ப முடிகிறதா? ஆம், அதிக சுவைகொண்ட ‘ராஜ கரும்பு’ எனும் புதிய கரும்பு வகையை உருவாக்கியதாலும், இயற்கை முறையில் விவசாயத்தில் (அப்போது ரசாயன உரம் கண்டுபிடிக்கவில்லை) அதிக உற்பத்தியைத் தரும் தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்த தாலும் ஆங்கிலேய அரசு அந்தத் தஞ்சை விவசாயிக்கு ராவ்சாகேப் என்ற உயரிய பட்டத்தை வழங் கியது என்பது வரலாறு.

தமிழ் கற்பிக்கும் ஆசிரியர், வானியல் ஆய்வாளர், சோதிடர், மிகச்சிறந்த சித்த மருத்துவர், மருந்து உற்பத்தி நிபுணர், புத்தகப் பதிப்பாளர், அச்சக உரிமையாளர், புகைப்படக் கலைஞர், சிறந்த பாடலாசிரியர், பன்மொழிப் புலவர், இசைக்கருவி வடிவமைப்பாளர், வேளாண்மை விஞ்ஞானி என்ற பல்துறைகளிலும் புதிய கண்டுபிடிப்புகளுடன் ஆழமான முத்திரை களைப் பதித்திருந்தார்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை என்னும் ஊரில் முத்துச்சாமி - அன்னம்மாள் தம்பதிகளுக்கு மகனாக 2.8.1859- ல் பிறந்தார். ஆபிரகாம் தனது தொடக்கக் கல்வியைச் சுரண்டை எனும் ஊரிலும், அதன் பிறகு, உயர்கல்வியைப் பன்றிகுளம் எனும் ஊரிலும் முடித்தார்.

1882-ல் திருமணம் நடந்தது. இவரின் துணைவியார் ஞானவடிவு பொன்னம்மாள் ஆசிரியப் பயிற்சி பெற்றவர். இருவருக்கும் தஞ்சையில் உள்ள சீமாட்டி நேப்பியர் பெண்கள் பள்ளியில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. இதனால் திண்டுக்கல்லிலிருந்து தஞ்சாவூருக்குக் குடிபெயர்ந்தனர். அப்பள்ளியின் முதல்வர் அருட்திரு.பிளேக், பண்டிதர் மனைவி ஞானவடிவு பொன்னம்மாள் அம்மையாருக்குத் தலைமை ஆசிரியர் பொறுப்பையும் பண்டிதருக்குத் தமிழாசிரியர் பொறுப்பையும் வழங்கினார்.

1890-ம் ஆண்டு ஆசிரியர் பணியிலிருந்து இருவரும் விலகினர். திண்டுக்கல்லில் இருந்தபோது, சித்த மருத்துவ ஆராய்ச்சியில் இவருக்கு ஆர்வம் அதிகரித்தது. ஆசிரியர் பணியால் அதை நிறுத்தி வைத்தார். இப்போது, மீண்டும் கருணானந்தர் சஞ்சீவி மருந்துகளைத் தயாரிக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். ஆரம்பத்தில் இதற்கு வரவேற்பு அதிகம் இல்லை என்றாலும் காலப்போக்கில் ‘கருணானந்தர் சஞ்சீவி மருந்துகள்’ என்ற பெயரில் தயாரித்த கோரசனை மாத்திரை உள்ளிட்ட சித்த மருந்துகள், இங்கு மட்டுமல்லாமல், இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கையில் பணம் வரவு கூடியது. அடுத்த ஆராய்ச்சிக்குத் தாவினார்.

தஞ்சைக்கு அருகில் 100 ஏக்கர் பரப்பு நிலத்தை விலைக்கு வாங்கி அதற்கு ‘கருணானந்தபுரம்’ என்று பெயரிட்டார். அங்கு உருவான தோட்டத்தில் மாங்கன்றுகள், பலாமரங்கள், தென்னைமரங்கள் வளர்க்கப்பட்டன. 1907 முதல் 1914 வரை நடைபெற்ற வேளாண் பொருட்காட்சியில் கருணானந்தபுரத் தோட்டம் பங்குபெற்று 6 தங்கப் பதக்கங்களும், 37 வெள்ளிப் பதக்கங்களும் வென்றது. இந்தச் சமயத்தில்தான் அதிக விளைச்சல் கொடுக்கக்கூடிய ‘ராஜ கரும்பு’ ரகத்தைக் கண்டுபிடித்து, ராவ்சாகேப் பட்டத்தைப் பெற்றார் ஆபிரகாம் பண்டிதர். புதிய பயிர் ரகம் கண்டுபிடிக்கப் பல்கலைக்கழகம் கொடுக்கும் ஏ.பி.சி.டி பட்டங்கள் வேண்டாம். திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் உருவாக்க முடியும் என 100 ஆண்டுகளுக்கு முன்பே வழிகாட்டிவிட்டுச் சென்றுள்ளார். (ராஜ கரும்பு ரகம் இப்போது பயன்பாட்டில் உள்ளதா எனத் தேடிக்கொண்டிருக்கிறோம்.) இந்தியாவில் முதல் மூலிகைத் தோட்டம் அமைத்த பெருமையும் இவரையே சேரும்.

சுமார் 2,000 ராகங்கள் தமிழிசையில் உள்ளன எனத் தமிழ் நூல்கள் குறிப்பிடுவது உண்மை என நிறுவி முடிப்பதற்குள் 1919-ம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று இயற்கையுடன் கலந்துவிட்டார். இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் தமிழிசைக்கு ராகங்கள் மட்டுமல்ல; தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு புதிய பயிர் ரகங்களும் கிடைத்திருக்கும்.