
பிரதான் மந்திரி கிசான் உர்ஜா’னு ஒரு திட்டம் இருக்குது. அந்தத் திட்டத்துல சோலர் மூலமா மின்சாரம் உற்பத்தி செய்யறவங்க, சொந்தத் தேவைக்குப் போக மிச்சமிருக்கிற மின்சாரத்தை அரசாங்கத்துக்கு விற்கலாம்
ஊருக்கு வெளியே, பேருந்து நிறுத்தம் அருகே தோளில் பையுடன் நின்றிருந்தார் வாத்தியார் வெள்ளைச்சாமி. அந்த வழியாக வந்த ஏரோட்டி ஏகாம்பரம் அவரைப் பார்த்து அதிர்ச்சியானார். ‘ஊரே தேர்தல் திருவிழாக் கொண்டாட்டத்துல இருக்கும்போது, இந்த ஆளு எங்கே கிளம்பிட்டாரு...’ தனக்குள் கேட்டபடியே வெள்ளைச்சாமியின் அருகே சென்றார்.
“வாத்தியாரே எங்கே கிளம்பிட்டீங்க... தேர்தல் நேரத்துல எனக்கு ஓட்டுப் போடுவீங்கனு பார்த்தா பொட்டியை கட்டிட்டீங்களே...” என்றார் சோகமாக.
“சென்னைக்குப் போறேன் ஏகாம்பரம். மூணு நாள்தான்... திரும்பி வந்துடுவேன். என்னோட நண்பர் ஒருத்தர் வெளிநாடு போகப்போறாரு. அவரை வழியனுப்பிட்டு, ரெண்டு மூணு நாள் இருந்துட்டு வந்துடுறேன். தேர்தலுக்கு முதல் நாள் வந்துடுவேன்’’ என்றார் சிரித்தபடியே.

“ஒரு பையை இப்படிக் கொண்டாங்க” என்று வாத்தியாரின் பையைக் கையில் வாங்கி வைத்துக்கொண்டார் ஏகாம்பரம். அந்த நேரம் கண்ணம்மாவும் வந்துசேர, களைகட்டியது மாநாடு.
“நீ என்னய்யா... வயல்ல இருந்து இப்பவே வந்துட்டே’’ என ஏரோட்டியைப் பார்த்து வாத்தியார் கேட்க, “அதை ஏன்யா கேக்குறீங்க... நெல் வயல்ல ஆனைக்கொம்பன் தாக்கி, பயிரெல்லாம் போச்சு. அதான் கடையில மருந்து வாங்கிட்டு வந்து தெளிக்கலாம்னு போறேன்’’ என்றார் ஏகாம்பரம். “உண்மைதான்யா, ஆனைக்கொம்பன் பிரச்னை பெரும் பிரச்னையா இருக்குது. இதனால விவசாயிகள் நொந்து போயிருக்காங்க. இதை எப்படிச் சமாளிக்கிறதுன்னு, தேனாம்படுகை பாஸ்கரன்கிற விவசாயி ஒரு யோசனை சொல்லியிருக்காரு.
நடவு செஞ்சதுல இருந்து 30 அல்லது 40 நாளைக்குள்ளதான் இந்த பாதிப்பு ஏற்படுமாம். தூர்கட்டி, சுணை உருவான நெற்பயிர்கள்ல ஆனைக்கொம்பன் தாக்குதல் ஏற்படாது. தண்ணி தேங்கியிருக்கும் வயல்கள்லயும், களைகள் மண்டி நிழல்படர்ந்த வயல்கள்லயும் இந்த பாதிப்பு இருக்குது. தேங்கிக் கிடக்கும் தண்ணியை வடிகட்டி வெளியேத்திட்டாலே போதும். வெயில் வந்ததும் இந்தப் பிரச்னை தானாகச் சரியாகி, மறுபடியும் பயிர் வளர ஆரம்பிச்சிடும். இதனால பெரிய அளவுல பாதிப்பு ஏற்படும்னு விவசாயிகள் பதற வேண்டியதில்லை. பயிரின் வளர்ச்சி வேகம் பத்து நாள்களுக்கு தாமதமாகி, அறுவடை சற்றுத் தள்ளிப்போகும். 10-15 சதவிகிதம் மகசூல் இழப்பு ஏற்படும். இது தெரியாம, ஆனைக்கொம்பனைக் கட்டுப்படுத்த ரசாயனப் பூச்சிக்கொல்லி தெளிச்சோம்னா, ஆனைக்கொம்பன் பூச்சிகள் சாவதோடு தட்டான், சிலந்தி, பொறிவண்டு மாதிரியான நன்மை செய்யும் பூச்சிகளும் செத்துடும். தவளை, நண்டு, நத்தை உள்ளிட்ட உயிரினங்களும் இறந்துடும். ஒரு லிட்டர் வேப்பெண்ணெயில் 25 கிராம் காதி சோப்பைக் கரைச்சு, மறுநாள் அதிலிருந்து ஏக்கருக்கு 250 மி.லி வீதம் கரைசல் எடுத்து, 80 லிட்டர் தண்ணியில கலந்து பயிர்கள் மேல தெளிச்சாப் போதும்னு சொல்லியிருக்காரு’’ என்றார்.

அதைக் கேட்டு சற்றுத் தெம்பானார் ஏரோட்டி. “வாத்தியாரே, நான் மார்க்கெட்ல காய்கறி வாங்கிட்டு வரும்போது, பஸ்ஸுல ஒண்ணு பேசிக்கிட்டாங்க. அது உண்மைதானான்னு சொல்லுங்க...” என்றார் காய்கறி.
“என்னன்னு சொல்லாம `சொல்லுங்க’ன்னு சொன்னா, என்னத்தைச் சொல்றதாம்?” என்று காய்கறியை நக்கல் செய்தார் ஏரோட்டி. “அட இருய்யா... முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக்கிட்டு...’’ என ஏரோட்டியை விரட்டிய காய்கறி, “சோலார் மோட்டாரை இலவசமாகப் போட்டுக்கொடுக்கப் போறாங்களாம். உண்மையா?’’ என்றார் சந்தேகத்துடன்.
அதைக் கேட்டவுடன் ஏரோட்டியின் முகத்திலும் பல்ப் எரிந்தது. “அதுக்கு வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க. ஆனா, இன்னும் அரசு அறிவிக்கலை’’ என்ற வாத்தியார் விளக்கமாகச் சொல்லத் தொடங்கினார். “ ‘பிரதான் மந்திரி கிசான் உர்ஜா’னு ஒரு திட்டம் இருக்குது. அந்தத் திட்டத்துல சோலார் மூலமா மின்சாரம் உற்பத்தி செய்யறவங்க, சொந்தத் தேவைக்குப் போக மிச்சமிருக்கிற மின்சாரத்தை அரசாங்கத்துக்கு விக்கலாம். இப்போ அந்தத் திட்டத்துல, விவசாய நிலங்கள்ல சோலார் மோட்டார் அமைக்கும் திட்டத்தையும் சேர்த்திருக்காங்க. அது மூலமா, 5 ஹெச்.பி, 7.5 ஹெச்.பி மோட்டார் போட்டுக்கலாம். விவசாயத் தேவை போக, மிச்சமிருக்கிற மின்சாரத்தை மின்வாரியம் வாங்கிக்கும். இது மூலமா விவசாயிகளுக்குக் கூடுதலா வருமானம் கிடைக்கும்னு சொல்றாங்க. எரிசக்தி மேம்பாட்டு முகமை, மின்வாரியம் ரெண்டும் சேர்ந்து இதைச் செயல்படுத்துறாங்களாம்.
தமிழ்நாட்டுல ஏற்கெனவே விவசாய மின் இணைப்பு கேட்டு நாலு லட்சம் பேர் விண்ணப்பம் கொடுத்துட்டு காத்திருக்காங்க. அதனால, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசு ஆர்வமா இருக்குனு சொல்றாங்க. இந்தத் திட்டப்படி, சோலார் அமைக்க ஆகும் செலவுல மத்திய அரசு 30 சதவிகிதம், மாநில அரசு 30 சதவிகிதம் கொடுக்கும். மீதியைப் பயனாளி கொடுக்கணும். ஆனா இதை மாத்தி, பயனாளிகளிடம் 10 சதவிகிதம் மட்டும் வாங்கிட்டு சோலார் அமைச்சுக்கொடுக்கலாமா, இல்லைன்னா... அதையும் வாங்காம இலவசமாகவே அமைச்சுக்கொடுக்கலாமானு மாநில அரசு யோசிச்சிகிட்டு இருக்குனு சொல்றாங்க. என்ன முடிவு செய்யறாங்கன்னு தெரியலை. இது தொடர்பான அறிவிப்பு கூடிய சீக்கிரம் வரும். அப்போ என்னன்னு தெரிஞ்சு போகும்’’ என்றார்.

``அய்யா, கரன்ட் பிரச்னை இருந்துகிட்டே இருக்குது. விவசாயிங்க நிலங்கள்ல அரசே சோலார் அமைச்சுக்கொடுத்துட்டு, விவசாயத் தேவை போக மிச்சமிருக்குற கரன்ட்டை எடுத்துக்கலாம்ல... எங்களுக்கும் வருமானம் வரும், அரசாங்கத்துக்கும் பிரச்னை தீர்ந்திடும். அதுக்கு ஆகுற செலவைக்கூட நாங்க கொடுக்கும் கரன்ட் காசுல கழிச்சுக்கலாமே...’’ எனப் பொருளாதார வல்லுநர்போலப் பேசினார் ஏரோட்டி.
‘‘‘பிரதான் மந்திரி கிசான் உர்ஜா’னு ஒரு திட்டம் இருக்குது. அந்தத் திட்டத்துல சோலர் மூலமா மின்சாரம் உற்பத்தி செய்யறவங்க, சொந்தத் தேவைக்குப் போக மிச்சமிருக்கிற மின்சாரத்தை அரசாங்கத்துக்கு விற்கலாம்.’’
“அப்படிச் செய்யலாம்தான்... ஆனா, ஏற்கெனவே நாட்டின் கஜானா காலியாகிட்டு இருக்குன்னு சொல்றாங்க. இந்த நேரத்துல இது சாத்தியமாகுமான்னு தெரியலை’’ என்றார் வாத்தியார்.
“வீட்டுத்தோட்டம் அமைக்க நினைக்கிறவங்களுக்கு, தோட்டக்கலைத்துறை மூலமா விதை, இயற்கை உரம் இலவசமாகக் கொடுக்குறாங்களாம்’’ அடுத்த செய்திக்குத் தாவினார் கண்ணம்மா. தொடர்ந்து பேசியவர், “ஒவ்வொரு வருவாய் கிராமத்துலயும், வீட்டுத் தோட்டம் மூலம் 25 ஏக்கர் காய்கறிகள், அஞ்சு ஏக்கர் பழங்கள் உற்பத்தி இலக்கு நிர்ணயம் செஞ்சிருக்கு தோட்டக்கலைத்துறை. இதுக்காக வெண்டை, கத்திரி, மிளகாய், தக்காளி, பாகல், புடலை, கீரைனு ஏழு வகையான விதைகள், இயற்கை உரம் இலவசமாகத் தர்றாங்களாம். விருப்பமுள்ளவங்க அந்தந்தப் பகுதியில் உள்ள தோட்டக்கலை அலுவலர்களைச் சந்திச்சாப் போதுமாம்’’ என்றார் கண்ணம்மா.
அந்த நேரம் பேருந்து வர, வாத்தியாரை ஏற்றிவிட்டு, அவரவர் வேலைக்குக் கிளம்ப முடிவுக்கு வந்தது மாநாடு.