மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: மின்னணு ஏலத்தில் கலக்கும் ஆனைமலை!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

‘‘பொள்ளாச்சிக்குப் பக்கத்துல ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துல கொப்பரை ஏலம் நடக்கும். அதுல இடைத்தரகர்கள் இல்லாம ஏலம் நடத்துறாங்க.’’

குளத்திலிருந்த தண்ணீரில் மாடுகளைக் குளிப்பாட்டிக்கொண்டிருந்தார் ஏரோட்டி ஏகாம்பரம். அப்போது ஊரிலிருந்து திரும்பி வந்த வாத்தியார் வெள்ளைச்சாமி, “என்னப்பா... தேர்தல்ல ஜெயிச்சு, பிரசிடென்ட் ஆகியிருப்பேனு நினைச்சா, மாட்டைக் குளிப்பாட்டிட்டு இருக்கே...” என்று ஏரோட்டியைப் பார்த்துக் கேட்டார்.

“என்ன வாத்தியாரே செய்யறது... என்கிட்ட காசு பணம் இருந்திருந்தா நானும் ஜெயிச்சிருப்பேன். ஊர்ல நெம்பருக்கு நின்ன ஆளுங்ககூட ஓட்டுக்குப் பணம் கொடுத்தாங்க. ஆனா, நான் கொடுக்கலை. அதனால தோத்துப் போயிட்டேன். மக்கள் பணத்தை வாங்கிட்டு ஓட்டுப் போடுற வரைக்கும் ஜனநாயகம் இருக்காதுய்யா” வெறுப்புடன் சொன்னார் ஏரோட்டி.

மரத்தடி மாநாடு: மின்னணு ஏலத்தில் கலக்கும் ஆனைமலை!

“வெறுப்புல பேசாதப்பா. காசு பணத்தையும் தாண்டி ஒரு சில இடங்கள்ல ஊருக்கு நல்லது செய்யறவங்களை மக்கள் தேர்வு செஞ்சிருக்காங்க” என்றார் வெள்ளைச்சாமி. அந்த நேரம் குளத்துக்கு அந்தப் பக்கமாக வந்து சேர்ந்தார் காய்கறி கண்ணம்மா.

“வாத்தியாரே எப்ப வந்தீங்க... நான் அந்தப் பக்கம் வாறேன்” என்றபடி குளத்தைச் சுற்றியபடி வாத்தியார் இருந்த பகுதிக்கு வர ஆரம்பமானது மாநாடு.

“இந்தத் தடவை உள்ளாட்சியில ஜெயிச்ச ஆளுங்க பலரும் எப்பவும் இல்லாத அளவுக்கு நீர்நிலைகள் பாதுகாப்பு பற்றி யோசிக்க ஆரம்பிச்சிருக்காங்க. சில பேரு பசுமை விகடன் ஆபீஸுக்கே போன் பண்ணி, `நீர்நிலைகளைப் பாதுகாக்க நினைக்கிறோம். எங்களுக்குப் பயிற்சியும், ஆலோசனையும் கொடுங்க’ன்னு கேட்டாங்களாம். இது நல்ல ஆரம்பம். ஆரம்பிச்சிட்டு அப்படியே விட்டுடாம தொடர்ந்து செயல்படுத்தினா, ரொம்ப நல்லா இருக்கும்’’ என்றார் வாத்தியார்.

மாட்டைக் குளிப்பாட்டிய ஏரோட்டி, அதை மேலே இழுத்து வந்தார். “ஏன்யா மாட்டுக்குத் தீவனம் சரியா கொடுக்க மாட்டியா... இளைச்சுப்போய் இருக்குது” ஏரோட்டியை வம்புக்கு இழுத்தார் கண்ணம்மா. “அட போம்மா... சட்டியில இருந்தாத்தானே அகப்பையில வரும்... இப்பதான் மழை பெஞ்சு, பச்சை தெரிய ஆரம்பிச்சிருக்கு. அது மட்டுமில்லாம சீமைப்புல்(கோ.4) போட்டிருந்தேன். இப்போதான் அது தழைச்சுக்கிட்டு இருக்குது. சொசைட்டியில விதைக்கரணை தர்றேன்னு சொல்லியிருக்காங்க. வாங்கி நடவு செஞ்சு, இனிமேதான் மாட்டைத் தேத்தணும்’’ என்றார் ஏரோட்டி.

“சொசைட்டின்னு சொன்னதும்தான் ஞாபகத்துக்கு வருது. `விவசாயத்துக்கு நகை அடமானம்வெச்சு கடன் வாங்கினா வட்டி மானியம் இல்லை’னு சொல்றாங்க. உண்மையா?” என்று கேட்டார் கண்ணம்மா.

‘‘பொள்ளாச்சிக்குப் பக்கத்துல ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துல கொப்பரை ஏலம் நடக்கும். அதுல இடைத்தரகர்கள் இல்லாம ஏலம் நடத்துறாங்க.’’

“இதுவரைக்கும் பயிர்க் கடனுக்கு நகையை அடமானம்வெச்சா, 7 சதவிகித வட்டி போட்டாங்க. அதை ஒரு வருஷத்துக்குள்ள கட்டிட்டா, 3 சதவிகிதம் மானியமாகக் கொடுத்தாங்க. 4 சதவிகித வட்டி கட்டினாப் போதும். ஆனா, பல பணக்காரங்க விவசாயி பேர்ல நகையை வாங்கி, வெளியே அதிக வட்டிக்குக் கொடுக்கிறாங்களாம். அதைக் காரணமாகச் சொல்லி, மத்திய அரசு நகைக்கடனுக்கு மானியம் இல்லைன்னு சொல்லிடுச்சு. இனிமே பயிர்க்கடனா நகையை அடமானம் வெச்சா, எட்டுல இருந்து 9 சதவிகிதத்துக்குள்ள வட்டி இருக்கும்னு அறிவிச்சிட்டாங்க’’ என்றார் வாத்தியார்.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

“அப்படிப் போடு அரிவாளை... சம்சாரியை வாழவிட மாட்டாங்களே. அவசர ஆத்திரத்துக்கு வெளியே வட்டிக்கு வாங்குறதுக்கு பதிலா நகையைவெச்சு பேங்க்ல வாங்கிட்டு இருந்தோம். இப்போ அதுக்கும் வட்டியை அதிகமாக்கிட்டாங்களா... விவசாயி பேங்க்ல நகையை வெக்கப்போனா, ஆயிரத்தெட்டு கேள்வி கேக்குறாங்க. ஆனா, வியாபாரிகளுக்கு மட்டும் விவசாயி பேர்ல எப்படி நகைக்கடன் கொடுக்கிறாங்க. எல்லா இடத்துலயும் முறைகேடு நடக்குது. பாதிக்கப்படுறது என்னவோ சம்சாரிகதான்’’ என்று கொதித்தார் ஏரோட்டி.

“கூல்... கூல்...’’ என ஏரோட்டியை சமாதானப்படுத்திய வாத்தியார், ``பெரும்பாலான இடங்கள்ல முறைகேடு நடக்கறது உண்மைதான். அதுக்காக எல்லா அதிகாரிகளையும் சொல்லக் கூடாது. விவசாயிகளுக்கு நல்லது செய்யற அதிகாரிகளும் இருக்காங்க’’ என்றார்.

“உண்மையிலயே அப்படி இருக்காங்களா அய்யா’’ நக்கலாகக் கேட்டார் காய்கறி.

“நிறைய இடத்துல இருக்காங்கம்மா. உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன் கேளு. பொள்ளாச்சிக்குப் பக்கத்துல ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துல கொப்பரை ஏலம் நடக்கும். அதுல இடைத்தரகர்கள் இல்லாம ஏலம் நடத்துறாங்க. காலையில கொப்பறையைக் கொண்டு வந்து வெச்சிட்டு விவசாயிங்க போயிடலாம். மின்னணு முறையில ஏலம் நடக்குது. ஏலம் போனதும், என்ன விலைக்குப் போயிருக்குனு அவங்க செல்போன் நம்பருக்கு தகவல் போயிடும். பணமும் விவசாயிங்க வங்கிக் கணக்குல சேர்ந்திடும். விற்பனை ஆகும் விலையில, அரசாங்கத்துக்கு ஒரு சதவிகிதம் கொடுத்தால் போதும். இதனால அரசாங்கத்துக்கும் ஒரு வருமானம் கிடைக்குது. போன வருஷம் மட்டும் இதன் மூலமா 9.49 லட்சம் ரூபாய் அரசாங்கத்து வருமானம் கிடைச்சிருக்காம்’’ என்றார் வாத்தியார்.

“நல்லது நடந்தா சரிதான். நான் போய் என் வியாபாரத்தைப் பார்க்கிறேன்’’ என்றபடி காய்கறி கிளம்ப, முடிவுக்கு வந்தது மாநாடு.

வேளாண்துறைக்கு கிரிஷி கர்மான் விருது!

மிழகத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியை அதிகரிக்க, தமிழ்நாடு வேளாண்துறை தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது. இந்த நிலையில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் சாதனை படைக்கும் மாநிலங்களுக்கு மத்திய அரசின் சார்பில் ‘கிரிஷி கர்மான்’ என்ற விருது வழங்கப்பட்டுவருகிறது.

மரத்தடி மாநாடு: மின்னணு ஏலத்தில் கலக்கும் ஆனைமலை!

அந்த வகையில் எண்ணெய் வித்துகள் சாகுபடியில் சாதனை படைத்ததற்காக தமிழகத்துக்கு 2019-ம் ஆண்டுக்கான கிரிஷி கர்மான் விருது வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், தும்கூரில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தமிழக அரசுக்கு இந்த விருதை வழங்கினார். இந்த விருதை மற்றும் வேளாண்துறை அமைச்சகம் சார்பில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் வேளாண்மைத்துறை முதன்மைச் செயலர் ககன்தீப்சிங் பேடி மற்றும் வேளாண் இயக்குநர் தட்சிணாமூர்த்தி ஆகியோரும் கலந்துகொண்டனர். மேலும், தமிழ்நாடு அரசு இந்த விருதை 5-வது முறையாக வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் மத்திய அரசின் வேளாண்மைத்துறை சார்பில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சாதனை படைத்த 28 விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

மரத்தடி மாநாடு: மின்னணு ஏலத்தில் கலக்கும் ஆனைமலை!

ஆஸ்திரேலியாவை அலரவைக்கும் காட்டுத்தீ!

ஸ்திரேலியா நாட்டின் நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் எரிந்துவரும் காட்டுத்தீயால் அப்பகுதியிலுள்ள வானம், ரத்தச் சிவப்பு நிறமாகக் காட்சியளிக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய இந்தக் காட்டுத்தீ, மூன்று மாதங்களைக் கடந்தும் விடாமல் எரிந்துகொண்டே இருக்கிறது. காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், காட்டுத்தீ கட்டுக்கடங்கவில்லை என்கின்றனர், வானிலை ஆய்வாளர்கள்.

மரத்தடி மாநாடு: மின்னணு ஏலத்தில் கலக்கும் ஆனைமலை!

கங்காரு, கோலா கரடி எனப் பல தனித்துவமான காட்டுயிர்களின் சாம்ராஜ்யமான ஆஸ்திரேலியாவை நினைத்து வனவிலங்கு ஆர்வலர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். காட்டுத்தீயில் பல உயிரினங்கள் உடல் கருகி இறந்து வருகின்றன. ஆஸ்திரேலியாவில் அதிகம் வாழும் மஸ்காட் (Mascot) என்று அழைக்கப்படும் கோலாக்கள், நீர் அருந்துவதில்லை. தங்களுக்குத் தேவையான நீரை, யூகலிப்டஸ் இலையிலிருந்தே எடுத்துக்கொள்ளும். ஆனால், குழந்தைகளைப்போல கோலாக்கள் நீர் அருந்தும் காட்சி பார்ப்போரைக் கண்கலங்க வைத்திருக்கிறது. கோலாக்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதற்கு ஏற்பட்டிருக்கும் நிலைகண்டு பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் சிக்கி இதுவரை பல கோடிக்கணக்கிலான உயிரினங்கள் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ‘ஆஸ்திரேலியாவுக்காகப் பிரார்த்திப்போம்’ (பிரே ஃபார் ஆஸ்திரேலியா) என்ற ஹேஸ்டாக் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.