
மரத்தடி மாநாடு
வெயில் கொஞ்சம் தணிந்து, மேகங்கள் சூழ்ந்து மழை பெய்யும் அறிகுறி தென்பட்டது. தோட்டத்துக்குச் செல்லும் வழியிலுள்ள கண்மாய்க்கரையில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். வியாபாரத்தை முடித்து வந்த ‘காய்கறி’ கண்ணம்மா, தோட்டத்துக்கு வந்துகொண்டி ருந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியுடன் சேர்ந்துகொண்டார். இவர்களைப் பார்த்தவுடன் மாடுகளைத் தோட்டத்துப் பக்கம் திருப்பினார், ஏரோட்டி. கண்மாய்க்கரையில் புதர்போல மண்டிக்கிடந்த நாட்டுச் சுண்டைக்காய் செடியிலிருந்து கொஞ்சம் காய்களைப் பறித்த வாத்தியார், சுண்டைக்காயைப் பற்றிப் பேசிக்கொண்டே நடந்தார்.
“சுண்டைக்காய் கொத்துக் கொத்தா இங்க காய்ச்சுக் கிடக்கு. ஆனா, இதோட நன்மைகள் தெரியாததால யாரும் இதைச் சீண்டுறது கிடையாது. கத்திரிக்காய்க் குடும்பத்தைச் சேர்ந்த செடி இது. சித்த மருத்துவத்துல ரொம்ப வருஷமா இதைப் பயன்படுத்திட்டு வர்றாங்க. இதைச் சாப்பிட்டா செரிமான சக்தி அதிகரிக்கும். இரைப்பை, குடல்ல இருக்கிற கிருமிகள், புழுக்கள் அழிஞ்சுடும். இதனால, குடல் சுத்தமாகும். அடிக்கடி சாப்பிட்டா நல்லா பசி எடுக்கும். செரிமானக் கோளாறு இருக்கிறவங்க, மோரில் சுண்டைக்காய் வற்றல் தூளைக் கலந்து குடிக்கலாம். இது மூலத்தையும் சரி செய்யும். பிஞ்சு சுண்டைக்காயுடன் மிளகு சேர்த்துக் குழம்பு வெச்சு சாப்பிட்டுவந்தா சளித்தொல்லை நீங்கும். காய்ச்சல் குணமாகும். அதனாலதான் நம்ம தாத்தன் பாட்டி எல்லாம் அடிக்கடி வத்தக்குழம்பு வெச்சு சாப்பிடுவாங்க. கஞ்சி, கூழ், பழைய சாதத்துக்குச் சுண்டை வற்றலைத் தொட்டுக்குவாங்க. இதுல கால்சியம் சத்தும் அதிகளவில் இருக்கிறதால எலும்புகள், பற்கள் பலப்படும். இப்போ தெரியுதா, நம்ம முன்னோர் உறுதியா இருந்ததுக்குக் காரணம்” என்றார்.

“இந்த விஷயமெல்லாம் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தாம விட்டுட்டாங்க. இப்போதான் கொஞ்சம் விழிப்புணர்வு ஏற்பட்டுக்கிட்டு இருக்கு. அதேபோலச் சுண்டைக்காய் விஷயத்துல கொஞ்சம் கவனமா இருக்கணும். சில விஷச்செடிகள்லயும் சுண்டைக்காய் மாதிரியே காய் காய்க்கும். அது தெரியாமப் பறிச்சுச் சாப்பிட்டா சங்கு தான். ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்ன கோயம்புத்தூர் பக்கம் இதுபோல ஒரு சம்பவம் நடந்திச்சு. திருச்சியிலிருந்து ரோடு போடுற வேலைக்குப் போன சிலர் சுண்டைக்காய்னு ஏதோ காயைச் சாப்பிட்டதுல ரெண்டு பேர் இறந்துட்டாங்க. அதனால, கவனமா இருக்கணும்” என்றார் ஏரோட்டி.
அடுத்த செய்தியை ஆரம்பித்த வாத்தியார், “போன ‘பசுமை விகடன்’ புத்தகத்துல அட்டைப்படக் கட்டுரையா எலுமிச்சைச் சாகுபடி பத்தி ஒரு செய்தி வந்திருந்திச்சு. திருநெல்வேலி கடையத்தைச் சேர்ந்த சண்முகவேலு பத்தின கட்டுரை அது. கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி, சண்முகவேலு வீட்டு முற்றத்தில உட்காந்திருந்தப்போ, ரெண்டு முகமூடித் திருடனுங்க சண்முகவேலுவைத் தாக்கிக் கொள்ளையடிக்க முயற்சி செஞ்சாங்க. அவங்ககிட்ட இருந்து லாகவமாகத் தப்பிச்ச சண்முகவேலு தன் மனைவி செந்தாமரையோடு சேர்ந்து திருடனுங்க ரெண்டு பேரையும் அடிச்சு விரட்டிட்டார். திருடனுங்க அரிவாள் வெச்சிருந்தாலும் இவங்க பயப்படாம பிளாஸ்டிக் நாற்காலியை வெச்சே அடிச்சு விரட்டிட்டாங்க. திருடனுங்க, செந்தாமரை கழுத்திலிருந்த 4 பவுன் தங்கச்சங்கிலியைப் பறிச்சிட்டுப் போயிட்டாங்க. இந்தத் தம்பதிக்கும் திருடனுங்களுக்கும் நடந்த சண்டை சி.சி.டி.வி கேமராவுல பதிவாகியிருக்கு. அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்கள்ல வைரலாகி ரொம்ப வேகமாகப் பரவிடுச்சி. அதைப் பார்த்துப் பலரும் சண்முகவேலு-செந்தாமரை தம்பதியைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவிச்சாங்க. அவங்களுக்கு, சுதந்திர தின விழா அப்போ ‘அதீத துணிவுக்கான முதலமைச்சர் சிறப்பு விருது’ வழங்கப் பட்டிருக்கு. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவங்களுக்கு அந்த விருதைக் கொடுத்ததோடு, தங்கப்பதக்கத்தையும் 2,00,000 ரூபாய்க்கான காசோலையையும் கொடுத்திருக்கார். இப்போ கொள்ளையர்களைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைச்சிருக்காங்க” என்றார்.
“தோட்டத்து வீட்டில் தங்கி இருக்கிறவங்க எப்பவும் கவனமா இருக்கணும். எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்கும்னே தெரியாது. நமக்கு நல்லா அறிமுகமானவங்களே பணத்தாசையில இந்த மாதிரியெல்லாம் செய்றதுக்கு வாய்ப்பிருக்கு” என்றவர், காய்கறி கூடையிலிருந்து ஆளுக்கு ரெண்டு கற்பூரவள்ளி ரக வாழைப்பழங்களை எடுத்துக் கொடுத்தார்.

அதைச் சுவைத்துக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், ஏரோட்டி. “கோயம்புத்தூர் பெரிய நாயக்கன்பாளையம் பகுதியில அடுத்தடுத்து ரெண்டு பேர் யானையால தாக்கப்பட்டு இறந்திருக்காங்க. அதுல ஒருத்தர் டிரைவர். வேலை முடிஞ்சு நடந்து வந்திட்டுருந்தவர் யானையை எதிர்பார்க்கலை. திடீர்னு வந்த யானை அவரைத் தாக்கிடுச்சு. இன்னொருத்தர், வீட்டுக்கு வெளியே வெட்டவெளியில உக்கார்ந்து நண்பரோட பேசிட்டிருந்தப்போ திடீர்னு வந்த யானை தாக்கியதால் இறந்து விட்டார். அந்தப் பகுதியில அடிக்கடி யானைகள் வருதுனு எச்சரிக்கை செஞ்சிட்டே இருக்காங்க வனத்துறை அலுவலர்கள். ஆனாலும், தவிர்க்க முடியாம இந்த மாதிரி விபத்துகள் நடந்திடுது.
சமீபத்துல வனத்துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில ரோந்துபோறப்போ, நடு ராத்திரியில ஒரு ‘குடிமகன்’ போதையில் தள்ளாடிட்டே போயிருக்கார். அவரை எச்சரிச்சு அனுப்பியிருக்காங்க. ‘எவ்வளவு எச்சரிச்சும் மக்கள் கவனமா இருக்கிறதில்லை. நிறைய பேர் வெட்டவெளியில் உக்கார்ந்து மது அருந்துறாங்க. அதுல எவ்வளவு ஆபத்து இருக்குதுனு பார்க்கமாட்டேங்கிறாங்க. ஆறறிவு உள்ள மனிதர்கள்தான் பாதுகாப்பா இருக்கணும். அதை விட்டுட்டு ஐந்தறிவுள்ள விலங்குகள்மேல கொலைப்பழி சுமத்தக் கூடாது. எதிர்பாராத விதமா நடக்கிற விபத்து நம்ம கையில இல்லை. ஆனா, வம்புக்கு நாமளே போய் யானைகிட்ட மாட்டலாமா’னு வனத்துறை அதிகாரிகள் கேக்கிறாங்க” என்றார்.
அடுத்த செய்திக்குத் தாவிய வாத்தியார், “செஞ்சிப் பகுதியில் விவசாயிகள், சம்பா பருவத்தில் வழக்கமா பொன்னி நெல்லைத்தான் நடவுசெய்வாங்க. இப்போ சம்பாப்பருவம்கிற தால, நிறைய விவசாயிகள் பொன்னி ரக விதை நெல்லைத் தேடி வாங்க ஆரம்பிச்சிருக்காங்க. ரெண்டு மூணு வருஷமா நெல் விவசாயம் சரிவர நடக்காததால, விவசாயிகள்கிட்ட பொன்னி ரக விதைநெல் இருப்பு இல்லை. அரசு விற்பனை மையங்கள்லயும் தனியார் மண்டிகள்லயும்தான் விதைநெல் கிடைக்கிது. தேவை அதிகம் இருக்கிறதால, தனியார் மண்டிகள்ல அதிக விலைக்கு விற்பனை செய்றாங்க. ஆகஸ்ட் மாச ஆரம்பத்துல 1 கிலோ விதைநெல் 46 ரூபாய்க்கு விற்பனையானது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா விலை அதிகரிச்சு இப்போ 1 கிலோ 53 ரூபாய்க்கு விற்பனையாகுது. அதுவும் உடனடியாகக் கிடைக்கிறதில்லை. முன்பதிவு செஞ்சு ரெண்டு மூணு நாள் காத்திருந்துதான் வாங்க வேண்டியிருக்கு” என்றார்.
அந்த நேரத்தில் சடசடவென மழை பொழியத்துவங்க அன்றைய மாநாடு அத்தோடு முடிவுக்கு வந்தது.