மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசனத்திட்டம்!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

முந்தும் தெலங்கானா... பின்தங்கும் தமிழ்நாடு...

பால் விலை உயர்த்தப்பட்டாலும் விவசாயிகளுக்கு அதில் பெரிய பலன் ஒன்றும் கிடைத்துவிடப்போவதில்லை என்று எண்ணியவாறே பாலைக் கறந்து கேனில் எடுத்துக்கொண்டு பால் சொசைட்டிக்குப் புறப்பட்டார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அந்த நேரம் பார்த்து ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி, கையில் செய்தித்தாளுடன் ஆஜரானார். இவர்கள் இரண்டு பேரும் வருவதற்கு முன்பே ‘காய்கறி’ கண்ணம்மாவும் மரத்தடிக்கு வந்து சேர்ந்திருந்தார். வழக்கம்போல ஒரு தகவலைச் சொல்லி, அன்றைய மாநாட்டைத் தொடங்கி வைத்தார், வாத்தியார்.

‘‘தமிழகத்தில நெல் கொள்முதல் மற்றும் அரிசி ஒப்படைப்புக் காலத்தை நீட்டிக்க வேண்டும்னு விவசாயிகள் கோரிக்கை வெச்சிருந்தாங்க. அதன்படி, குறுவை அறுவடை காலத்தைக் கணக்கில் வெச்சி நெல் கொள்முதலுக்கு இந்த மாதம் 30-ம் தேதி வரையிலும், அரிசி ஒப்படைப்புக் காலத்தை வரும் அக்டோபர் 31-ம் தேதி வரையிலும் நீட்டிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கு’’ என்றவர், அடுத்த தகவலுக்குத் தாவினார்.

மரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசனத்திட்டம்!

‘‘வேளாண்துறை மூலம் கடலூர், சேலம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, அவிநாசி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 15 இடங்கள்ல உயிர் உர உற்பத்தி மையம் செயல்படுது. இங்க விவசாயிகளுக்கு மானிய விலையில் உரத்தை விற்பனை செய்யறாங்க. அவிநாசியில உள்ள மையம் மூலம் கடந்த நாலு மாசத்துலயே 142 டன் உற்பத்தி நடந்திருக்கு. ஆண்டுக்கு 250 டன் உற்பத்தி செய்யணும்னு அரசு இலக்கு நிர்ணயிச்சிருக்கு. உயிர் உரங்களோட தேவை அதிகமா இருக்கிறதால, உற்பத்தியும் அதிகரிச்சிட்டு வருது. நாட்டுல இயற்கை உரப்பயன்பாடு அதிகம் நடக்கிறதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியா இருக்கு’’ என்றார்.

‘‘எனக்குத் தெரிஞ்ச வேளாண் பொறியியல் துறை அதிகாரி சொன்ன தகவலைச் செல்றேன். ‘நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.1,245 கோடி ஒதுக்கப்பட்டிருக்காம். 5.63 லட்சம் ஏக்கரில் பாசனக் கட்டமைப்புகளை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்காம். ஆனா, எங்க துறை அதிகாரிங்க, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஆர்வம் காட்டல. அதே நேரத்துல தெலங்கானாவுல 90 சதவிகித விவசாயப் பகுதியில நுண்ணீர்ப் பாசனக் கட்டமைப்பு அமைச்சிட்டாங்களாம். இத்திட்டத்துல ஆந்திரா, தெலுங்கானாவைவிடத் தமிழ்நாடு சிறப்பா செயல்படணும்னு அதிகாரிகளுக்கு வேளாண்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி கடுமையான உத்தரவு போட்டிருக்காரு. ஆனா, அதிகாரிங்க ஆர்வமா செய்வாங்களான்னு தெரியல’ன்னு சொன்னார், அந்த அதிகாரி.’’ ``ஆர்வமில்லாத அதிகாரிகளுக்குத் தண்டனை கொடுக்கணும்யா’’ன்னு ஏரோட்டி கோபமாகச் சொல்ல, ‘‘ஆமாம், ஆமாம்...’’ என்று அதை அமோதித்தார் காய்கறி.

‘‘நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.1,245 கோடி ஒதுக்கப்பட்டிருக்காம். 5.63 லட்சம் ஏக்கரில் பாசனக் கட்டமைப்புகளை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கு.’’

‘‘டெல்டா மாவட்டங்களோட பாசனத் தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கு. இந்த நீர், கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகள், கால்வாய்கள் வழியாக 700-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்களுக்குக் கிடைக்குது. இந்த வழித்தடங்கள்ல உள்ள அடைப்புகளை நீக்குவதற்காக 60 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியது மட்டுமல்லாம, குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் 300-க்கும் மேற்பட்ட ஏரிகள், பாசனக்கால்வாய்களைப் புனரமைக்கவும் தனியாக நிதி ஒதுக்கயிருந்தாங்க. பல இடங்கள்ல நீர்வரத்து தொடங்கியதால, அரை அடிக்குத் தூர்வாரி ஆறு அடிக்குத் தூர்வாரியதா ஒப்பந்ததாரர்கள் கணக்கு எழுதிட்டாங்க. அதற்கான தொகையும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கு. இந்தப் பணிகளைக் கண்காணிக்கப் பல மாவட்டங்களிலிருந்தும் நியமிக்கப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட 60 அதிகாரிகள் சரியா பணி செய்யாததுடன் ஒப்பந்்ததாரர்களுக்கு உதவியா இருந்திருக்காங்களாம். தமிழகம் முழுவதும் குடிமராமத்துங்கிற பேர்ல ஆளும்கட்சியினர் ஒப்பந்தம் எடுத்து இதே வேலையைத்தான் செய்றாங்க. இந்தப் பிரச்னை சம்பந்தமா நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்திக்கு நிறைய புகார்கள் போயிருக்காம். விரைவிலேயே இதுசம்பந்தமா விசாரணை நடத்தப்படலாம்னு பேச்சு அடிபடுது’’ என்று வாத்தியார் சொல்லி முடிக்க,

“சொசைட்டில பாலை ஊத்தறதுக்கு நேரமாச்சு. நான் கிளம்பறேன்” என்று ஏரோட்டி கிளம்ப, அன்றைய மாநாடு கலைந்தது.

தமிழக வேளாண் துறைக்கு விருது!

த்திய அரசின் ஆயுஷ் துறை சார்பில், கோவா மாநிலத்தில் அங்ககப் பொருட்காட்சி சமீபத்தில் நடைபெற்றது. இக்கண்காட்சியில், ஆப்பிரிக்க நாடான காங்கோ, இந்தியாவின் சிக்கிம், நாகாலாந்து, மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா, மகாராஷ்டிரா, லட்சத்தீவு உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து எழுபதுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் தமிழ்நாடு அரசு வேளாண்துறை சார்பாகவும் அரங்கு அமைக்கப்பட்டிருந்து. கண்காட்சியில் அங்ககப் பொருள்கள் மட்டுமன்றி, மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள், பேக்கிங் இயந்திரங்களும் இடம்பெற்றிருந்தன.

மரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசனத்திட்டம்!

மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ரமேஷ்வர், தமிழக வேளாண்துறை அரங்கினைப் பார்வையிட்டுச் சிறப்பித்தார். விழாவில் சிறந்த அரங்கிற்கான டிரினிட்டி விருது, தமிழக அரசின் வேளாண் அரங்கிற்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பாரம்பர்ய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், தாமரைச்செல்வன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இதுகுறித்துப் பேசிய வேல்முருகன், “பி.கே.வி.ஒய் எனப்படும் பாரம்பர்ய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இயற்கை விவசாயத்தில் விளைவித்த பொருள்களைக் காட்சிக்கு வைத்திருந்தோம். பாரம்பர்ய நெல் ரகங்கள், உணவுப் பொருள்கள், சிறுதானியங்கள் என்று இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருள்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தோம். இதை விளைவித்ததெல்லாம் இயற்கை விவசாயிகள்தான். இது எங்களுக்கான பெருமை இல்லை; இயற்கை விவசாயிகளுக்கான பெருமை” என்றார் உற்சாகத்துடன்.