மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: நிலங்களுக்குத் தனி அடையாள எண்… மோசடியைத் தவிர்க்க அரசின் திட்டம்!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

வானம் இருட்டிக்கொண்டு மழை பெய்யும் சூழ்நிலை இருந்ததால், ‘காய்கறி’ கண்ணம்மா சீக்கிரமே வியாபாரத்தை முடித்துவிட்டு தோட்டத்துக்கு வந்துவிட்டார்.

வ்வப்போது மழை பெய்து மண் நல்ல ஈரப்பதத்துடன் இருந்ததால், ஏரோட்டி ஏகாம்பரத்துக்குத் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய வேலை இல்லை. ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்துவிட்டக் கையோடு, தோட்டத்தில் தேங்கி நின்ற தண்ணீரை வெளியேற்ற வாய்க்கால் வெட்டிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், தோட்டத்தில் வளரும் நாய்கள், பாசமோடு குரைத்து, வாத்தியார் வெள்ளைச்சாமியின் வருகையைத் தெரிவித்தன. குடை பிடித்தபடி கையில் செய்தித்தாள்களுடன் வந்த வாத்தியார், கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டார். ஏரோட்டியும் காய்கறியும் அவருக்கு எதிரில் அமர்ந்துகொள்ள, ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டை ஆரம்பித்துவைத்தார்.

“தேனி மாவட்டம், வைகை அணைப்பகுதியில் வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிலையம் இருக்கு. இங்க 10 வருஷம் ஆராய்ச்சி செஞ்சு… சம்பா, பின்சம்பா பட்டங்கள்ல விளையக்கூடிய புது நெல் ரகத்தைக் கண்டுபிடிச்சிருக்காங்க. அந்தப் புது ரகத்துக்கு ‘வி.ஜி.டி-1’னு பெயர் வெச்சிருக்காங்க. ஏ.டி.டி- 43 ரக நெல்லையும் சீரகச்சம்பா ரக நெல்லையும் சேர்த்து சந்ததி வழித்தேர்வு மூலம், இந்தச் சன்ன ரக நெல்லை உருவாக்கியிருக்காங்க. இந்த ரகம், நடுத்தர உயரத்தில் செங்குத்தா வளரும். அறுவடைக்குத் தயாராகிற சமயத்தில் சாயாது. இதோட வயது 130 நாள்கள். இதுக்கு நோய் எதிர்ப்புத்திறன் அதிகம். இதன் சராசரி மகசூல் ஒரு ஹெக்டேருக்கு 5,860 கிலோ. திண்டுக்கல், தேனி, திருச்சி, பெரம்பலூர், கரூர், கோயம்புத்தூர், ஈரோடு, தர்மபுரி, வேலூர் மாவட்டங்களுக்கு ஏற்ற ரகம். இது மிதமான வாசனையைக் கொண்டிருப்பதால்… பிரியாணி, குஸ்கா சமைக்க ஏற்றது. ஒரு ஏக்கர் விதைப்புக்கு 10 கிலோ விதைநெல் தேவை” என்றார் வாத்தியார்.

“அப்போ அடுத்த போகத்தில் இந்த ரக விதைநெல்லை வாங்கிட்டு வந்து விதைச்சிப் பார்த்திடுவோம்” என்ற ஏரோட்டி அடுத்த செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.

மரத்தடி மாநாடு: நிலங்களுக்குத் தனி அடையாள எண்… மோசடியைத் தவிர்க்க அரசின் திட்டம்!

“நில விற்பனையில் நடக்கிற மோசடிகளைத் தவிர்க்கிறதுக்காகவும் சுலபமா வரிவசூல் பண்றதுக்காகவும், சர்வே பண்ணின நிலங்களுக்குத் தனி அடையாள எண் கொடுக்கிறதுக்கு மத்திய அரசு முடிவு செஞ்சிருக்கு. நமக்கு ஆதார் எண் கொடுத்திருக்கிறது மாதிரி நிலத்துக்கான அடையாள எண் இது. ஆதார் எண்ணை வங்கிக்கணக்கு, வருங்கால வைப்பு நிதிக்கணக்கு, வருமான வரிக் கணக்கு எண் எல்லாத்தோடும் இணைச்சிருக்கிறதால, ஒருத்தரோட ஆதார் எண்ணை வெச்சே அவரோட எல்லா விவரங்களையும் தெரிஞ்சுக்க முடியும். அதேபோல, நிலத்துக்கான இந்தப் பிரத்யேக எண்ணை வெச்சு… அது அமைஞ்சிருக்கிற மாநிலம், மாவட்டம், கிராமம், உரிமையாளர் பெயர் எல்லாத்தையும் தெரிஞ்சிக்க முடியும். நிலத்துக்கான பிரத்யேக எண்ணை உரிமையாளரின் ஆதார் எண்ணோடு இணைக்கிறதால, குறிப்பிட்ட நிலத்தின் முந்தைய உரிமையாளர்கள், வரி கட்டின விவரங்கள், அந்த நிலத்தின்மீது இருக்கிற கடன்கள் எல்லாத்தையும் தெரிஞ்சிக்க முடியும். இதுமூலமா நில விற்பனையில் எந்த மோசடியும் செய்ய முடியாது. வீட்டுமனைகளுக்கும் இந்த மாதிரி அடையாள எண் கொடுக்கப்போறாங்க. இந்தத்திட்டத்துக்கான ஆரம்பக்கட்ட வேலைகளை மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் ஆரம்பிச்சிருக்கு” என்றார் ஏரோட்டி.

“நல்ல விஷயம்தான். குறைவான விலைக்குக் கிடைக்குதேன்னு எதையும் விசாரிக்காம நான் ஒரு வீட்டுமனையை வாங்கினேன். அதில் வீடு கட்டலாம்னு சொசைட்டியில் கடன் கேட்டுப் போனேன். அப்போதான் அது பஞ்சமி நிலம்னு தெரிய வந்துச்சு. நிலத்த மேல ஏற்கெனவே கேஸ் நடந்துட்டிருக்கிற விஷயமும் அப்போதான் தெரிஞ்சது. உடனே பத்திரப்பதிவு ஆபீஸூக்குப் போய்க் கேட்டேன். அவங்க எங்களுக்குத் தெரியாது. நீங்க கோர்ட்டுல கேஸ் போட்டுப் பார்த்துக்கங்கனு சொல்லிட்டாங்க. அப்புறம் ஊர்ல பஞ்சாயத்துக் கூட்டிதான் எனக்கு வித்தவர்கிட்ட இருந்து பணம் வாங்க முடிஞ்சது. அதுவும் நான் கொடுத்ததில் முக்கால்வாசிப் பணம்தான் திரும்ப வந்தது. நிலம் வாங்குற விஷயத்தில் எப்பவும் ஜாக்கிரதையா இருக்கணும்” என்று கூறியவர் காய்கறி, கூடையிலிருந்து ஒரு பப்பாளிப் பழத்தை எடுத்து நறுக்கி, ஆளுக்கு ஒரு கீற்றைக் கொடுத்தார். அதைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், வாத்தியார்.

“ரபி பருவம் தொடங்குகிறதால நிறைய விவசாயிகள் மக்காச்சோளம் விதைக்கத் தயாராகிட்டு இருக்காங்க. போன வருஷத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழுக்களால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுச்சு. அதை மனசுல வெச்சு சில முன்னேற்பாடுகளை மேற்கொண்டால், படைப்புழுத் தாக்குதல் வராம மக்காச்சோளப் பயிரைக் காப்பத்தலாம்னு வேளாண் விஞ்ஞானிகள் தெரிவிச்சிருக்காங்க.

விவசாயிகள் ஒண்ணுசேர்ந்து, ஒரே நேரத்தில் நிலத்தைத் தயார் செஞ்சு விதைப்பை மேற்கொள்ளணும். விதைக்கிறதுக்கு முன்னாடி ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் ‘பெவேரியா பேசியானா’ங்கிற பூஞ்சணத்தைப் பயன்படுத்தி விதைநேர்த்தி செய்யணும். ஒரு ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம்பிண்ணாக்குங்கிற கணக்கில் தூவிவிட்டு அதுக்கப்புறம்தான் விதைக்கணும். வரப்பு பயிராகத் தட்டைப்பயறு, சூரியகாந்தி, சாமந்தி மாதிரியான பயிர்களை விதைக்கணும். ஒரு ஏக்கருக்கு 10 இனக்கவர்ச்சிப் பொறிகள் வெச்சா, தாய் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து இழுத்து முட்டையிடுறதைத் தடுக்கலாம். பயிர் வளர்கிற சமயத்தில் படைப்புழுக்கள் தென்பட்டால், ஒரு ஹெக்டேருக்கு 2 கிலோ அளவு ‘மெட்டாரைசியம் அனிசோபிலியே’ங்கிற பூஞ்சணத்தைத் தண்ணீரில் கலந்து பயிரின் குருத்துப் பகுதியில் தெளிக்கணும். இந்த விஷயங்களைப் பக்கத்து விவசாயிகள் எல்லோரும் சேர்ந்து ஒரே நேரத்தில் கடைப்பிடிச்சா படைப்புழுத் தாக்குதல்ல இருந்து தப்பிக்கலாம்” என்றார்.

அந்த நேரத்தில் சடசடவென மழை பெய்ய ஆரம்பிக்க, “மேய்ஞ்சிட்டிருக்கிற ஆடு மாடுகளைப் பிடிச்சு கட்டிட்டு வந்துடுறேன்” என்று சொல்லிக்கொண்டே எழுந்து ஓடினார், ஏரோட்டி. அத்தோடு அன்றைய மாநாடும் முடிவுக்கு வந்தது.

வாத்தியார் சொன்ன கொசுறு:

நடமாடும் மதிப்புக்கூட்டும் இயந்திரம்!

ர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில், மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் நடமாடும் காய்கறி மதிப்புக்கூட்டும் இயந்திரத் துவக்க விழா நடந்தது. விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் அன்பழகன், “மாவட்டத்தில் தக்காளி அதிகளவில் விளைகிறது.

விளைச்சல் அதிகமாகும்போது, விலை இல்லாமல் சாலைகளில் தக்காளியைக் கொட்டுகிறார்கள். இதற்குத் தீர்வு காணும் விதமாக, தமிழக அரசு, இந்த நடமாடும் காய்கறி மதிப்புக் கூட்டும் இயந்திரத்தை நிறுவியுள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம், தக்காளியை ஜாம், ஜெல்லி, குளிர்பானம், சட்னி, ஊறுகாய், பேஸ்ட், தக்காளி சாதப்பொடி போன்ற பொருள்களாக மதிப்புக்கூட்டலாம். மேலும், மா, பப்பாளி, கொய்யா, திராட்சை போன்ற பழங்களையும் மதிப்புக்கூட்டலாம். இந்த வாகனம் மாவட்டம் முழுவதும் தினமும் பயணிக்கும். தேவைப்படும் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.