மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு : இனியாவது கிடைக்குமா இலவச மின்சாரம்?

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

இத்தனை நாளாகக் காய்ந்து கிடந்த நிலம் மழையால் குளிர்ந்து கிடந்தது. வயல்களில் விவசாய வேலைகள் களைக்கட்டின. காலை நேரத்தில் ஊரிலுள்ள உழவர்கள் வயலை நோக்கி நடந்து கொண்டிருந்தனர்.

‘காய்கறி’ கண்ணம்மா வாய்க்கால் தண்ணீரில் முகத்தைக் கழுவிவிட்டு வியாபாரத்திற்குப் புறப்பட ஆயத்தமானார். கையில் அன்றைய நாளிதழைச் சுருட்டி பிடித்தபடி வரப்பில் காலாற நடந்து வந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி, மோட்டார் ரூம் அருகே வந்ததும் நின்றார். இருவரையும் பார்த்த ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், மாடுகளுக்குப் புல் அறுத்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு அங்கு வந்து சேர்ந்தார்.

‘‘வாங்க வாத்தியாரையா... உங்களைத்தான் எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருந்தேன். ஒரு சந்தேகம் கேக்கணும்’’ என்றபடி மாநாட்டைத் தொடங்கி வைத்தார் ஏரோட்டி.

‘‘அப்படி என்ன அம்புட்டு முக்கியமான விஷயம்’’ எனக் கேட்டார் வாத்தியார். ‘‘ஐயா, இந்தா ஓடிகிட்டு இருக்குல்ல மோட்டாரு. இதுக்குச் செலவாகுற கரன்டுக்கு மாசா மாசம் பணம் கட்டுறேன். இலவச மின்சாரம் கேட்டு மனுக்கொடுத்து பல வருஷம் ஆச்சு. ஆனா, அதுக்கு வழியே இல்ல. இந்த நிலைமையில இன்னிக்குப் பக்கத்துத் தோட்டக்கார தம்பி ஒரு விஷயம் சொல்லிச்சு. இப்ப காசு கட்டுனா இலவச மின்சாரம் கொடுக்குறாங்களாம். அப்படியா’’ என அப்பாவியாகக் கேட்டார் ஏரோட்டி.

மரத்தடி மாநாடு : இனியாவது கிடைக்குமா இலவச மின்சாரம்?

“அட அதுக்குள்ள விஷயம் உன் வரைக்கும் வந்திடுச்சா. அது உண்மைதான் ஏகாம்பரம். அதாவது இலவச கரன்ட் கேட்டு மனுக்கொடுத்து காத்திட்டு இருக்கிற உன்னை மாதிரி விவசாயிகளுக்காக, இப்ப ஒரு திட்டத்தை அறிவிச்சிருக்குத் தமிழ்நாடு மின்சார வாரியம். ஒரு குறிப்பிட்ட தொகையை அவங்களுக்குக் கட்டிட்டா போதும். அதுக்குப் பிறகு மாசா மாசம் பில் கட்ட வேண்டியதில்லை’’ என வாத்தியார் சொல்லி முடிக்கும் முன்பாக “அதைப்பத்தி விளக்கமா சொல்லுங்கய்யா” என்ற ஏரோட்டி, வரப்பில் அமர்ந்தார்.

‘‘விவசாயத்துக்கு இலவச மின்சாரம் கேட்டுப் பதிவு செஞ்சவங்க, இப்ப விருப்ப கடிதம் கொடுக்கலாம்னு மின்வாரியம் அறிவிச்சிருக்கு. 2000-ம் வருஷம் ஏப்ரல் மாசம் 1-ம் தேதியிலிருந்து 2010-ம் வருஷம் மார்ச் மாசம் 31-ம் தேதி வரைக்கும் விண்ணப்பம் கொடுத்தவங்களுக்குத்தான் இது பொருந்தும். விருப்பக் கடிதத்தோடு யார் பேருக்கு இணைப்பு வேண்டுமோ அவங்களுக்குத்தான் நிலம் சொந்தம்னு உரிமை சான்று, பட்டா, சிட்டா, அடங்கல், தனி வரைபடம், கூட்டு வரைபடம் சேர்த்துக் கொடுக்கணும். அதுலயும், கூட்டு வரைபடத்துல கிணறு, போர்வெல் இருக்கிற இடத்தைக் குறிச்சுக் கொடுக்கணும். பங்கு கிணறா இருந்தா, கூட்டாளிக்கிட்ட ஆட்சேபணை இல்லைன்னு ஒரு கடிதம் வாங்கணும். ஏற்கெனவே விண்ணப்பம் கொடுத்தவங்க இறந்துப் போயிருந்தா, வாரிசுச் சான்றிதழ், மத்த வாரிசுகள்கிட்ட ஓப்புதல், பெயர் மாத்துறதுக்கு விண்ணப்பம் கொடுக்கணும். 3 முதல் 5 ஹெச்.பி மோட்டாரா இருந்தா 2.50 லட்சம், 7.5 ஹெச்.பி மோட்டாருக்கு 2.75 லட்சம், 10 ஹெச்.பி மோட்டாருக்கு 3 லட்சம், 10 முதல் 15 ஹெச்.பி மோட்டாருக்கு 4 லட்சம் ரூபாய்க்கு டி.டி எடுக்கணும். இந்த டி.டியோடு மத்த ஆவணங்களை இணைச்சு, அந்தந்தப் பகுதி, வட்ட மேற்பார்வை மின் பொறியாளர்கிட்ட கொடுக்கணும். இதுக்கு அக்டோபர் 16-ம் தேதியில இருந்து 31-ம் தேதிவரைக்கும்தான் கெடு கொடுத்திருக்காங்க’’ என்றார் வாத்தியார் வெள்ளைச்சாமி.

“நல்ல சேதி சொன்னீங்க... நான் விண்ணப்பம் கொடுக்கத் தேவையானதை ரெடி பண்றேன். இனிமே மாசா மாசம் பில் கட்டுறதுல இருந்து தப்பிச்சேண்டா சாமி” எனக் குதூகலமானார் ஏரோட்டி.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

“ரொம்பக் குதிக்காதய்யா... முதல்ல கொடுக்குறதைக் கொடுத்துட்டுக் கரன்ட் வாங்கு.. அப்பறம் குதிக்கலாம். எங்க மாமனார் இலவச கரன்ட் கேட்டு விண்ணப்பம் கொடுத்தாரு. இப்ப அவரும் இல்லை. அவரு கிணத்துல தண்ணியும் இல்லை. கரன்ட் வாங்கி நாங்க என்ன செய்ய’’ என நக்கல் செய்தார் காய்கறி.

“கவலைப்படாத கண்ணம்மா. உனக்கும் ஒரு செய்தி வெச்சிருக்கேன். உங்க மாமனார் கிணத்தை விடு, உங்க வயல்ல பண்ணைக்குட்டை வெட்டியிருக்கீங்கள்ல அது மூலமா வருமானம் கிடைக்க ஒரு வழியிருக்கு’’ என வாத்தியார் சொல்லவும், ஏரோட்டியின் உற்சாகம் காய்கறிக்கும் தொற்றிக்கொண்டது.

‘‘இனிமே மழைக்காலம். பண்ணைக்குட்டையில தண்ணி சேர்ந்திடும். அதுவும் உங்க மண்ணுல ரொம்ப நாளைக்குத் தண்ணி நிக்கும். அதுனால பண்ணைக்குட்டையில திலேப்பியா மீன்களை வளர்க்கலாம். இந்த ரக மீனை, குறைஞ்ச இடத்துல அதிக எண்ணிக்கையில வளர்க்கலாம். இதுக்கு நல்ல மார்க்கெட் இருக்குறதால, நல்ல லாபம் பார்க்கலாம். இதுல உனக்கு எதாவது சந்தேகம் இருந்தா, மீன் வளர்ச்சித்துறை ஆபீசுக்குப் போனாப் போதும். அந்தந்த மாவட்டத்துல இருக்கிற மீன் வளத்துறை அதிகாரிங்க இதுக்குத் தேவையான உதவிகளைச் செஞ்சுக் கொடுப்பாங்க. கிருஷ்ணகிரி டேம் பக்கத்துல இருக்கிற அரசு மீன் பண்ணையில, வருஷம் முழுவதும் இந்த மீன் குஞ்சுகள் விற்பனைக்குக் கிடைக்குது. அதுனால, பண்ணைக் குட்டையைச் சும்மா வெச்சுக்காம, இந்த வருஷம் மீனை வளர்த்து வருமானம் பார்க்க வழியைப் பாரு’’ என்றார் வாத்தியார்.

“மீன் வளர்க்கலாம்னு நாங்களும் நினைச்சுகிட்டுதான் இருந்தோம். ஆனா, என்ன மீனுன்னுதான் தெரியலை. இப்ப நீங்க சொன்ன மீனையே வாங்கிட்டு வந்து வளக்குறோம்’’ என்றார் காய்கறி.

“இந்த வாய் மட்டும் இல்லைன்னா உன்னை மீன்கூட மதிக்காது” என்ற ஏரோட்டி. “வாத்தியாரே, நம்ம ஊர்ல இன்னமும் சாலையோரம் மலம் கழிக்குறாங்க. இப்ப கொஞ்சம் குறைஞ்சிருக்கு. ஆனாலும் முழுசா சுத்தமாகலை. ஆனா, அதுக்குள்ள இந்தியாவுலயே தமிழ்நாட்லதான் ஊராட்சி பகுதிக சுத்தமா இருக்குன்னு அவார்டு கொடுத்திருக்காங்களே... அது எப்படிய்யா? அவார்டு கொடுத்த மகராசங்களை ஊருக்குள்ள கூப்பிட்டு வந்து காட்டணும்’’ என்றார் காய்கறி.

“பரவாயில்லையே... நீயும் இப்ப நிறைய செய்திகளைத் தெரிஞ்சு வெச்சுருக்குற. மத்திய அரசு சொல்றதுக்கெல்லாம் தலையாட்டுனாதான் ஆட்சியே தொடர வாய்ப்பளிக்குறாங்க. அவார்டு கூடவா தரமாட்டாங்க. அரசியல்ல இதெல்லாம் சகஜமய்யா’’ என்று வாத்தியாரும் சிரித்தார்.

“இன்னிக்கு எல்லோரும் கருத்து சொல்லிட்டீங்க. எனக்கு பேங்க்ல கொஞ்சம் வேலையிருக்கு. நாளைக்குப் பார்க்கலாம்” என்றபடியே வாத்தியார் நடையைக் கட்ட அத்தோடு முடிவுக்கு வந்தது மாநாடு.