
‘‘இந்தக் கவர்மென்ட் ஆபீஸ்ல எந்த வேலைக்குப் போனாலும் அலைய வெக்கிறாங்க. என்னைய மாதிரி ஆளுங்க தெனமும் ஆபீஸரைப் பார்க்க அலைஞ்சா பொழப்பு என்னாகுறது?’’ கொதிப்புடன், ஆவேசமாக வந்தார் காய்கறி கண்ணம்மா.
‘‘என்னாச்சு கண்ணம்மா... காலையிலேயே கறிச்சுக்கொட்டிகிட்டு வர்றே...’’ என்றார் வாத்தியார். ‘‘கவர்மென்ட்ல இருந்து வீடு கட்டிக்கொடுக்குறேன்னு வந்தாங்க. நானும் சந்தோஷமா சரின்னு சொன்னேன். அதுக்குப் பெறகு என்னாச்சுன்னா, பி.டி.ஓகிட்ட கேக்கணும்னு சொல்றாங்க. அவரைப் பார்க்க போனா, இன்னிக்கு நாளைக்குன்னு அலைய வெக்கிறாரு வாத்தியாரே’’ என்றார் அலுப்புடன் காய்கறி.

“திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி மாதிரி எல்லா மாவட்ட கலெக்டர்களும் இருந்துட்டா இந்த மாதிரி பிரச்னையே இருக்காது” என வாத்தியார் சொல்லிக்கொண்டிருக்கும்போதே தூக்குச்சட்டியைத் தோளில் சுமந்தபடியே வந்து சேர்ந்தார் ஏரோட்டி ஏகாம்பரம்.
‘‘வாய்யா... இதுதான் வயலுக்குப் போற நேரமா?’’ எனக் கடிந்துகொண்ட வாத்தியார் தொடர்ந்து பேசினார். ‘‘நம்ம கண்ணம்மா பிரச்னை மாதிரியேதான் திருவண்ணாமலையில நிறைய பேர் நொந்து போயிருக்காங்க. பிரதமர் வீடு கட்டுற திட்டத்துல வீடு கட்ட ஆர்டர் கொடுக்காம இழுத்தடிச்சிருக்காங்க. ஆர்டர் கொடுத்தவங்களுக்குப் பணம் கொடுக்குறதுலயும் இழுபறி இருந்திருக்கு. இந்த விஷயம் கலெக்டர் கவனத்துக்குப் போயிருக்கு. உடனே, ‘ரெண்டு நாள்ல எல்லாருக்கும் ஆர்டர் கொடுக்கணும். இதுல அலைக்கழிப்பு இருக்கக் கூடாது. அப்படிச் செய்யலைன்னா சஸ்பெண்ட் பண்ணிடுவேன். நீங்களா... நானானு பார்த்துக்கலாம். நீங்க பண்ணுற தப்பையெல்லாம் பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது’னு பி.டி.ஓ-க்களை விரட்டிட்டாரு. அதுக்குப் பிறகு மின்னல் வேகத்தில் அங்கே இப்போ வேலை நடந்துகிட்டு இருக்கு’’ என்றார்.
‘‘அந்த மாதிரி மகராசன் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இருந்துட்டா எங்களை மாதிரி ஏழைங்களுக்குச் சிரமம் இருக்காது’’ என்றார் காய்கறி.
‘‘என்ன லேட்டுன்னு கேட்டேன். அதுக்கு பதிலையே காணோம்’’ என ஏரோட்டி பக்கம் திரும்பினார் வாத்தியார்.
‘‘ரெண்டு நாளா மாடு தீவனம் எடுக்காம படுத்திருக்கு. அதுக்குக் கைவைத்தியம் பார்த்துட்டு வர்றதுக்குக் கொஞ்சம் நேரமாயிடுச்சு’’ என்றார் ஏரோட்டி.

‘‘யோவ்... மாடு தீவனம் எடுக்கலைன்னா கவனமா இருக்கணும். இப்படித்தான் சென்னையில ஒரு மாட்டுக்குப் பிரச்னை ஆகிடுச்சு. திருமுல்லைவாயில் பகுதியில முனிரத்தினம்கிறவர் மாடும், உன் மாடு மாதிரியே தீவனம் எடுக்கலை. சாணம், கோமியம் போகலை. அவர் கைவைத்தியம் பார்த்தும் சரியாகலை. இத்தனைக்கும் கன்னு போட்டு 20 நாள் ஆன மாடு. மூச்சுவிடவே ரொம்பத் திணறிப்போச்சு. உடனே வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு போயிருக்காங்க. மனுசனுக்கு செய்யற மாதிரியே எம்.ஆர்.ஐ ஸ்கேன், எக்ஸ்ரே எல்லாம் எடுத்துப் பார்த்த டாக்டருங்க மிரண்டு போயிட்டாங்க. மாடு வயித்துக்குள்ள குப்பைத் தொட்டி மாதிரி குவிஞ்சு கிடந்திருக்கு பிளாஸ்டிக். உடனே ஆபரேஷன் செஞ்சாங்க. ஆறுமணி நேரம் ஆபரேஷன் செஞ்சு, 52 கிலோ பிளாஸ்டிக் குப்பையை மாட்டு வயித்துக்குள்ள இருந்து வெளியே எடுத்திருக்காங்க. அதுக்குப் பிறகு வெல்லம், தவிடு கலந்த மருந்தைக் கொடுத்துச் சரி பண்ணினாங்க. இப்போ மாடு நல்லாயிருக்கு. மாடுக மேயுற இடத்துலல்லாம் இப்போ பிளாஸ்டிக் கிடக்குது. அது புல்லோட சேர்ந்து மாட்டு வயித்துக்குள்ள போயிடுது. நாமதான் கவனமா இருக்கணும்’’ என்றார் வாத்தியார்.
‘‘மனுசப் பயலுகதான் பொறுப்போட நடந்துக்கணும். வாயில்லாத ஜீவனுக்கு என்ன தெரியும்... பிளாஸ்டிக் பயன்படுத்த அரசாங்கம் தடைபோட்டும் இன்னும் பயன்பாடு ஒழியலை. அப்படியே பயன்படுத்தினாலும், அதைக் குப்பைத் தொட்டியில கூடப் போடுறதில்லை’’ மீண்டும் எகிறினார் காய்கறி.
‘‘ஆகஸ்ட் மாசத்துக்கு மேல சாகுபடி செஞ்சிருக்கிற மக்காச் சோளம், பருத்தி மாதிரியான பயிர்களுக்கு வர்ற 31-ம் தேதிக்குள்ளயும், சம்பா பட்ட நெல்லுக்கு நவம்பர் 31-ம் தேதிக்குள்ளயும் இன்ஷூரன்ஸ் எடுக்கணும்னு சொல்றாங்க. அந்த விவரம் கொஞ்சம் சொல்லுங்க வாத்தியாரே...’’ என்று தனது சந்தேகத்தைக் கேட்டார் ஏரோட்டி.
‘‘விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்யணும்னு வேளாண் துறை அறிவிச்சிருக்கு. பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துல அறிவிப்பு செய்யப்பட்ட கிராமங்கள்ல, அறிவிப்பு செய்யப்பட்ட பயிர்களைப் பயிர் செய்யற விவசாயிக, குத்தகை விவசாயிக எல்லாரும் இந்தத் திட்டத்துல இணையலாம். பேங்க், சொசைட்டியில பயிர்க் கடன் வாங்கியிருக்கிற விவசாயிகளை அவங்களே இன்ஷூரன்ஸ் திட்டத்துல சேர்த்து விட்டுடுவாங்க. பயிர்க்கடன் வாங்காத விவசாயிகள் விருப்பமிருந்தா சேரலாம். வறட்சி, வெள்ளம், புயல், மக்காச்சோளப் படைப்புழு மாதிரி பெரிய அளவுல பூச்சித் தாக்குதல் இருந்தா மகசூல் இழப்புக்கு ஏத்த மாதிரி இன்ஷூரன்ஸ் கம்பெனிக பணம் கொடுப்பாங்க. அறுவடைத் தேதியில இருந்து ரெண்டு வாரத்துக்குள்ள விளைபொருள்களைக் காயவெக்கிற நிலையில புயல், வெள்ளம் வந்து பாதிப்பு ஏற்பட்டா அதுக்கும் பணம் கொடுப்பாங்க’’ என்று காப்பீடு திட்டத்தைப் பற்றி விளக்கினார் வாத்தியார்.
‘‘மக்காச்சோளத்துக்கு ஒரு ஏக்கருக்கு 380 ரூபாயும், பருத்திக்கு ஏக்கருக்கு 1,290 ரூபாயும், நெல்லுக்கு 470 ரூபாயும் இன்ஷூரன்ஸ் எடுக்கணும்.’’
‘‘எந்தெந்தப் பயிருக்கு எவ்வளவு பணம் கட்டணும்?’’ என்று கேட்டார் கண்ணம்மா.
‘‘மக்காச்சோளத்துக்கு ஒரு ஏக்கருக்கு 380 ரூபாய், பருத்திக்கு ஏக்கருக்கு 1,290 ரூபாய் கட்டணும். நான் சொன்ன காரணங்களால மகசூல் பாதிச்சா, மக்காச்சோளத்துக்கு ஏக்கருக்கு 25,305 ரூபாயும், பருத்திக்கு 25,800 ரூபாயும் காப்பீட்டுத் தொகையா நிர்ணயிச்சிருக்காங்க. இந்தப் பயிர் சாகுபடி செஞ்சிருக்கிற விவசாயிக, வர்ற 31-ம் தேதிக்குள்ள பயிர் இன்ஷூரன்ஸ் எடுத்துடணும். நெல்லுக்கு ஏக்கருக்கு 470 ரூபாய் கட்டணும். அதுக்குக் கடைசித் தேதி நவம்பர் 31. விவசாயிகள் உரிய ஆவணங்களோட தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், வங்கிகள், பொதுச்சேவை மையங்கள்ல போய் இன்ஷூரன்ஸ் செஞ்சுக்கலாம். இப்போ மக்காச்சோளத்துல படைப்புழுத் தாக்குதல் அதிகமா இருக்குறதால, இன்ஷூரன்ஸ் பண்ணிக்கறது நல்லது’’ என்றார் வெள்ளைச்சாமி.
‘‘திட்டம் நல்லாதான் இருக்கு. ஆனா, இன்ஷூரன்ஸ் பணத்தை பேங்க்ல இருக்குற பழைய கடனுக்கு எடுத்துக்கிறதா சொல்றாங்க. அதுதான் யோசனையா இருக்கு. இந்த அதிகாரிகள்ல சில பேரு விவசாயிகளுக்கு ஒத்தாசையா இருக்காங்க. பல பேரு எதிரி மாதிரிதான் பார்க்குறாங்க. விவசாயிகளை ஏமாத்துறதுல அவங்களுக்கு அப்படி என்னதான் சந்தோஷமோ தெரியலை. பாரம்பர்ய நெல் ரகங்களை இப்பதான் நிறைய விவசாயிக சாகுபடி செய்யறாங்க. இதுக்கும் ஆப்புவெக்கப் புறப்பட்டுட்டாங்க. `மாப்பிள்ளைச் சம்பானு சொன்னதானே விதைக்கிறீங்க... இனிமே ஐ.ஆர்.20, 50னு சொல்ல மாட்டோம். வீரிய ரக மாப்பிள்ளைச் சம்பானு சொல்லுவோம்’னு கிளம்பிட்டாங்க. மாப்பிள்ளைச் சம்பா நெல்லே நல்லாத்தானே இருக்கு. அதை ஏன் மேம்படுத்தணும்னு தெரியலை’’ என்று புலம்பினார் ஏரோட்டி.
‘‘புது ரகமா இருந்தா விதைச்சு, அறுவடை செஞ்சு பார்த்த பிறகு, அதுல பிரச்னை இருந்தா பேசலாம். இப்பப் போயி மாட்டைப் பாரு’’ என ஏரோட்டியை விரட்டினார் வாத்தியார்.
ஏரோட்டி மாட்டை நோக்கி நடக்கத் தொடங்க, அத்தோடு முடிவுக்கு வந்தது அன்றைய மாநாடு.