மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல்!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

‘‘என்ன வாத்தியாரே... புது செல்போனு வாங்கியிருக்கீங்கபோல...’’ கையில் மாடு விரட்டும் குச்சியைக் கையில் பிடித்தபடியே வாத்தியாரை நோக்கி வந்தார் ஏரோட்டி ஏகாம்பரம்.

‘‘இல்லைய்யா... மகன் வெளிநாட்டுல இருக்கான்ல... அவன் அனுப்பினது. ஆமா, உன்னோட பிரசிடென்ட் கனவு என்னாச்சு?’’ என்று வாத்தியார் கேட்டுக் கொண்டிருக்கும்போதே கண்ணம்மாவும் ஆஜராக, களைகட்டியது மாநாடு.

‘‘அது ஒரு பக்கம் அப்படியேதான் இருக்குய்யா... இனிமேல் ஓட்டு வாங்கித்தான் மேயர் பதவிக்கு வரமுடியும்கிறது இல்லை. கட்சித் தலைமையின் ஆசி இருந்தாப் போதும்னு முடிவாகிடுச்சு. இதெல்லாம் நல்லதுக்குத்தானா வாத்தியாரே...” என்று புலம்பினார் ஏரோட்டி ஏகாம்பரம்.

‘‘இது ஏதோ இப்போதான் முதல்முறையா நடக்குற மாதிரி பேசுறே... ஏற்கெனவே இது மாதிரி மறைமுகத் தேர்தல் நடந்துச்சுல்ல... 2006-ம் வருஷம் தி.மு.க ஆட்சியில இருந்தப்போ மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க இப்படித்தான் செஞ்சாங்க. கவுன்சிலர்கள் ஓட்டுப் போட்டுத்தான் மேயரைத் தேர்ந்தெடுத்தாங்க. ஸ்டாலினுக்கு வலது கரமா இருக்குற முன்னாள் சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் இப்படித்தானே தேர்ந்தெடுக்கப்பட்டாரு’’ என்றார் வாத்தியார்.

‘‘அட ஆமாம்ல. அது மறந்துபோச்சே... தி.மு.க ஆட்சியிலேயே செஞ்சுட்டு, `இது ஜனநாயகப் படுகொலை’னு இப்போ ஸ்டாலின் ஏன் அறிக்கை விடுறாரு?’’ என்று வெள்ளந்தியாகக் கேட்டார் கண்ணம்மா.

தென்னை மரம்
தென்னை மரம்

‘‘மறைமுகத் தேர்தல்ல அவங்க ஆதாயம் அடைஞ்சாங்க. மறைமுகத் தேர்தலை மாத்தி, மக்கள் வாக்கு வாங்கித்தான் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களா ஆக முடியும்னு ஜெயலலிதாதான் கொண்டு வந்தாங்க. ஆனா, இப்போ அதே அ.தி.மு.க அரசே அதை மாத்தியிருக்கு. ஆக, ரெண்டு கட்சிகளும் அவங்க அரசியல்ல தெளிவாத்தான் இருக்காங்க. மக்கள்தான் அதைப் புரிஞ்சுகிட்டு தெளிவா இருக்கக் கத்துக்கணும்’’ என்றார் வாத்தியார்.

‘‘எங்க தென்னை மரத்துல சுருள் வெள்ளை ஈ தொல்லை தாங்க முடியலை வாத்தியாரே... அதுக்கு ஏதாவது வழி தெரிஞ்சா சொல்லுங்க’’ என்றார் கண்ணம்மா.

‘‘ஏன் வாத்தியார்தான் சொல்லணுமா... நாங்க சொன்னா கேட்டுக்க மாட்டீங்களா... நான் ஒரு வழி சொல்றேன். பொள்ளாச்சி வட்டாரத்துல இதுதான் பெரிய பிரச்னை. `இதைச் சமாளிக்க ரசாயன மருந்தைப் பயன்படுத்தக் கூடாது’னு அக்ரி ஆபீஸருங்க சொல்லிட்டாங்க. ஆனா, அதுக்கு மாற்று என்ன பண்ணலாம்னு சொல்லலை. இதனால கண்ட மருந்தைத் தெளிச்சுகிட்டிருந்த ரசாயன விவசாயிகளும் இப்போ இயற்கைப் பக்கம் திரும்பிட்டாங்க. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசலைத்தான் இப்போ பயன்படுத்துறாங்களாம். இந்தக் கரைசலை தென்னை ஓலைமேல முழுசா நனையிற மாதிரி தெளிக்கிறாங்களாம். `இதனால இப்போ பிரச்னை கொஞ்சம் மட்டுப்படுது’னு சொல்றாங்க. நீயும் அதையே செஞ்சு பாரும்மா’’ என ஆலோசனை சொன்னார் ஏரோட்டி.

‘‘சிவகங்கை மாவட்டத்துல 1,200 கண்மாய்களை ஜப்பான் நிதியுதவியுடன் சரிசெஞ்சு, கண்காணிச்சு நிலத்தடி நீரை உயர்த்தப் போறாங்களாம். இதுக்காக, கண்மாய்கள்ல ஆய்வுப் பணி நடக்குது.’’

கைத்தட்டி வரவேற்ற வாத்தியார், ‘‘பரவாயில்லையே... நீயும் வர வர உலக விஷயங்களைத் தெரிஞ்சுக்கிறே. இப்படித்தான் இருக்கணும்’’ என்று ஏரோட்டியைப் பாராட்டினார்.

‘‘சரிங்கய்யா...’’ என்ற கண்ணம்மா, ‘‘மழை பெய்ஞ்ச மாதிரியும் இல்லை... காய்ஞ்ச மாதிரியும் இல்லை. `எதிர்பார்த்த மழை கிடைக்கலை’னு பல ஊர்கள்ல விவசாயிகள் வேதனைப்படுறாங்க. அதுலயும், `கைக்குக் கிடைச்சது, வாய்க்குக் கிடைக்கலை’னு வருத்தத்துல இருக்காங்களாம் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள்’’ என்று பீடிகை போட்டார்.

‘‘அவங்களுக்கு என்ன பிரச்னையாம்?’’ என்று ஏரோட்டி கேட்க, அதுக்கு பதில் சொன்ன கண்ணம்மா, ‘‘வைகை அணையில எட்டு வருஷங்களுக்குப் பிறகு, பாசனத்துக்கு தண்ணி திறந்துவிட்டிருக்காங்க. ஆனா, அந்தத் தண்ணியும் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்குப் பயன்படாம போச்சாம். நவம்பர் 9-ம் தேதி தண்ணி திறந்துவிட்டிருக்காங்க.

16-ம் தேதிவரைக்கும் தண்ணி வந்திருக்கு. ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு தண்ணி வர்றதுக்கும், தண்ணியை நிறுத்துறதுக்கும் சரியா இருந்துச்சாம். கண்மாய்ல மூணடி உயரம்தான் தண்ணி நிறைஞ்சுதாம். ஆனா, மூணடிக்கு மேல தண்ணி இருந்தாத்தான் பாசனத்துக்குப் பயன்படுத்த முடியுமாம். இதனால `தண்ணி வந்தும் பயனில்லையே’னு புலம்புறாங்களாம்’’ என்றார் கண்ணம்மா.

‘‘அடப்பாவமே.. விவசாயி பொழப்பு இப்படித்தான். விளைச்சல் இருந்தா விலை கிடைக்காது; விலை இருந்தா விளைச்சல் இருக்காது. அது மாதிரிதான் தண்ணி வந்தும் வேலைக்கு ஆகலை. இதெல்லாம் நம்ம தலையெழுத்து’’ என்றார் ஏரோட்டி.

‘‘தலையெழுத்து ஒண்ணும் இல்லை. ஆட்சி செய்யறவங்க சரியா இருந்தா, தெளிவா திட்டமிட்டா இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. தண்ணி வர்ற வழியில பாதி இடத்துல ஆக்கிரமிப்பு, பார்த்திபனூர் மதகணைக் கசிவு, காருகுடி ரெகுலேட்டர் ஷட்டர் பழுதுனு பல காரணங்களால தண்ணி வர தாமதமாகிடுச்சு. இதையெல்லாம் அரசாங்கம்தானே சரிசெய்யணும்’’ என்று பெருமூச்சுவிட்டார் வாத்தியார்.

அங்கு நிலவிய அமைதியைக் கலைத்து மீண்டும் பேசிய வாத்தியார், ‘‘சிவகங்கை மாவட்டத்துல 1,200 கண்மாய்களை ஜப்பான் நிதியுதவியுடன் சரிசெஞ்சு, கண்காணிச்சு நிலத்தடி நீரை உயர்த்தப் போறாங்களாம். இதுக்காக, கண்மாய்கள்ல ஆய்வுப் பணி நடக்குது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்க மையப் பேராசிரியர் ஜெகதீசன், டோக்கியோ பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியர் கஜிஷா இவங்க ரெண்டு பேர் தலைமையில ஆராய்ச்சி நடந்துகிட்டு இருக்குது. ஒரு வருஷம் நடக்கும் இந்த ஆராய்ச்சி முடிவுல கண்மாய்களைச் சிறப்பா பராமரிக்கறதுக்கான திட்டம் தயாராகுமாம். `200 கோடி ரூபாய் நிதியில அந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்’னு சொல்றாங்க. `சிவகங்கையைத் தொடர்ந்து விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்கள்லயும் இந்தத் திட்டம் செயல்பட வாய்ப்பிருக்கு’னு சொல்றாங்க’’ என்றார்.

‘‘நல்ல திட்டம்தான்... ஆமா, இப்போதான் ஊருல இருக்குற கண்மாய், குளத்தையெல்லாம் குடிமராமத்து பண்றோம்னு 500 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கிச்சே... அது என்ன ஆச்சு’’ என்றார் ஏரோட்டி.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

‘‘உன்னை வடையைத்தானே திங்கச் சொன்னேன்... ஓட்டையை ஏன் எண்ணுறே...’’ என்று சொல்லிச் சிரித்த வாத்தியார், ‘‘குடிமராமத்து சில இடங்கள்ல சிறப்பா நடந்திருக்கு. அரசியல்வாதிகள் தலையீடுனால பல இடங்கள்ல பல் இளிச்சிடுச்சு. இதுக்காகப் பல மாவட்டங்கள்ல விவசாயிகள் கலெக்டர்கிட்ட மனு கொடுத்துகிட்டே இருக்காங்க. ஆனா, ஒண்ணும் நடக்கலை’’ என்றார்.

‘‘அரசியல்வாதிகளுக்கு ஆதாயம் இருக்கிறதால அடிக்கடி தேர்தல் நடத்துறாங்க. ஆனா, நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தேர்தலை நடத்துற எண்ணமே இல்லாம இருக்காங்களே அய்யா’’ என்றார் கண்ணம்மா.

‘‘இந்தச் சங்க தேர்தல் நடந்து, அது செயல்பாட்டுல இருந்திருந்தா, குடிமராமத்து வேலைகளை அந்தச் சங்கம்தான் செய்யணும். சங்கம் செஞ்சா, அரசியல்வாதிகள் எப்படிச் சம்பாதிக்க முடியும்... அது இல்லைன்னுதான் போலியா `நாங்களும் விவசாயச் சங்கம்தான்’னு லெட்டர் பேட் அடிச்சவனெல்லாம் குடிமராமத்துல கும்மியடிக்கிறாங்க. அதுக்கும் இப்போ சவுக்கு எடுத்திருக்கு உயர் நீதிமன்றம். மதுரை எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் ஸ்டாலின், இது தொடர்பா உயர் நீதிமன்றத்துல ஒரு வழக்கு போட்டாரு.

அதுல ஆஜரான பொதுப்பணித்துறை, `பல இடங்கள்ல வி.ஏ.ஓக்கள் ஒத்துழைப்பு இல்லாததாலதான் தாமதமாகுது’னு சொல்லியிருக்கு. அதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தை நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. விரைந்து பணிகளை முடிக்க வேண்டும். ஒத்துழைப்பு இல்லாத வி.ஏ.ஓக்கள்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட கலெக்டர்கள், தலைமைச் செயலாளருக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்’னு சொல்லியிருக்காங்க’’ என்றார் வாத்தியார்.

‘‘ஒவ்வொண்ணுக்கும் நீதிமன்றத்துக்கு போனாத்தான் நாட்டுல வேலை நடக்குது’’ என்று சலித்துக்கொண்ட கண்ணம்மா, கூடையைத் தூக்கிக்கொண்டு நடையைக் கட்ட, முடிவுக்கு வந்தது மாநாடு.

இந்த இதழில் ‘சட்டப்பஞ்சாயத்து’ தொடர் இடம் பெறவில்லை.