மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: மானியத்தில் வெங்காய விதை!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

களத்துமேட்டில் அமர்ந்து கையில் இருந்த காகிதத்தில் எதையோ எழுதிக்கொண்டிருந்தார் வாத்தியார் வெள்ளைச்சாமி.

ந்த வழியாக வந்த ஏரோட்டி ஏகாம்பரத்துக்கு அந்தக் காட்சி வியப்பைத் தந்தது. மாடுகளைக் கட்டிவிட்டு வெள்ளைச்சாமிக்கு அருகில் வந்து அமர்ந்து பேச்சைத் தொடங்கினார் ஏரோட்டி.

‘‘வாத்தியாரே... இந்த வயசுல யாருக்கு கடுதாசி எழுதிக்கிட்டு இருக்கீங்க?’’ என்று கேட்டார் நக்கலுடன். குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்த வெள்ளைச்சாமி, “வாய்யா... இன்னும் ஆளைக் காணோமேனு இருந்தேன்’’ என்றவர், “இது கடுதாசி இல்லைய்யா... குடிமராமத்து சம்பந்தமா தகவல் உரிமை சட்டத்துல ஒரு தகவல் கேட்டு மனு எழுதிக்கிட்டு இருக்கேன்’’ என்றார்.

“என்னத்தைக் கேட்டு என்ன பிரயோசனம்... `கேட்குறதுல பாதித் தகவல் கிடைக்கிறதில்லை’னு புலம்புறாங்க மனு எழுதுறவங்க’’ என எரிச்சலை வெளிப்படுத்தினார் ஏகாம்பரம். “என்னய்யா மூஞ்சியில எள்ளு வெடிக்குது’’ என்றபடியே காய்கறி கண்ணம்மாவும் வந்து சேர்ந்தார்.

“இப்படி வந்து உக்காரு. உன்னைப் பத்திதான் சொல்லிக்கிட்டு இருந்தேன்... `நம்ம கண்ணம்மா இப்போ தங்கம் விக்குது’னு...’’ என்றார் ஏரோட்டி. முகத்தைச் சுளித்த கண்ணம்மா, “தங்கத்துக்கு நான் எங்கேய்யா போறது...’’ என்றார். “அட... நீ வெங்காயம் விக்கிறேல்ல... அதைத்தான் அப்படிச் சொல்றாரு’’ என்றார் வாத்தியார். உடனே ஏரோட்டியை முறைத்தார் கண்ணம்மா. “சும்மா முறைக்காதே. காய்கறி விக்கிற உன்னை மாதிரி வியாபாரிங்களுக்கு நல்ல வியாபாரம், லாபம் கிடைக்குது. ஆனா, விளையவெக்கிற என்னை மாதிரி விவசாயிகளுக்கு ஒண்ணும் கிடைக்கிறதில்லை. விலை கிடைக்குற சமயத்துல நோய் வந்து அழுகிப்போயிடுது. சம்சாரி பொழப்பே இப்படித்தான்.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

‘கல்லைக் கண்டா நாயைக் காணோம்... நாயைக் கண்டா கல்லைக் காணோம்’ கதையாத்தான் இருக்கு. இனி வெங்காயத்தை நடலாமா, வேண்டாமானு யோசிக்க வேண்டியிருக்கு’’ என்று சலித்துக்கொண்டார் ஏரோட்டி.

“உண்மைதான்யா. வருஷா வருஷம் இந்த நேரத்துல விலை அதிகமாகுது. அதுக்கு நாமதானே தயாராகணும்... ஜூன், ஜூலை மாசத்துல வெங்காயத்தை விளைய வெக்கணும். விலை கிடைச்சா விக்கணும். இல்லைன்னா பட்டறை போட்டுச் சேமிக்கணும். இந்த மாதிரி கூடுதல் விலை கிடைக்குற நேரத்துல வித்துடணும்’’ என்ற வாத்தியார் தொடர்ந்து, “இந்தத் தடவை வெங்காய விளைச்சல் குறைஞ்சுபோனதால அதை அதிகரிக்கத் தோட்டக்கலைத்துறை முயற்சி எடுத்திருக்காங்க.

பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், நாமக்கல், கோயம்புத்தூர், திருச்சி, திருப்பூர், திருநெல்வேலி மாதிரி வெங்காயம் சாகுபடி செய்யற மாவட்டங்கள்ல இதைச் செயல்படுத்தப் போறாங்க. அங்கே இருக்கிற தோட்டக்கலைப் பண்ணைகள்ல 45 ஆயிரம் ஏக்கர்ல சாகுபடி செய்யறதுக்குத் தேவையான வெங்காய விதைகள் இருக்காம். அந்த விதைகளை விவசாயிகளுக்கு உடனடியாக விற்பனை செய்யப் போறாங்களாம்.

குழித்தட்டுகள்ல வெங்காய நாற்று தயாரிச்சுக் கொடுக்கவும் திட்டம் போட்டிருக்காங்க. ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகளை 6,000 ரூபாய்க்கு மானிய விலையில கொடுக்கறாங்களாம். விதைகள் தேவைப்படுறவங்க, அந்தந்த மாவட்டங்கள்ல இருக்கிற தோட்டக்கலைப் பண்ணை மேலாளர் இல்லைன்னா தோட்டக்கலைத் துணை இயக்குநர் ஆபீஸ்ல போய் வாங்கிக்கலாம்’’ என்றார்.

‘‘நல்லது நடந்தா சரிதான். நான் போய் ஏவாரத்தைப் பார்க்குறேன்யா’’ என்றபடி கண்ணம்மா கிளம்ப முடிவுக்கு வந்தது மாநாடு.

சத்தீஸ்கர் மாநில முதல்வரைச் சந்தித்த தமிழக விவசாயிகள்!

`இந்தியாவிலேயே சத்தீஸ்கர் மாநிலம்தான் நெல்லுக்கு அதிகமான கொள்முதல் விலை வழங்கி வருகிறது. அதோடு, குறுகியகாலத்தில் அதிக அளவு நெல்லையும் அம்மாநில அரசு கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது’ என்ற செய்தியைச் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது பசுமை விகடன். அதைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகலை நேரடியாகச் சந்தித்து பாராட்டுத் தெரிவித்துவிட்டு வந்திருக்கிறார்கள் தமிழக விவசாயிகள். இது குறித்துப் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், “ ‘இந்தியாவில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 1,750 ரூபாய்தான் வழங்கப்படுகிறது. சத்தீஸ்கர் மாநில அரசு 1,750 ரூபாயோடு 750 ரூபாயைக் கூடுதலாக வழங்கிவருகிறது.

மரத்தடி மாநாடு: மானியத்தில் வெங்காய விதை!

`வேறெந்த மாநிலமும் முன்னெடுக்காத முயற்சியை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள்’ என்று பூபேஷ் பாகலிடம் சொன்னோம். அதற்கு அவர், ‘நானும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். விவசாயிகளின் வலி எனக்குத் தெரியும். இந்தத் தொகையே விவசாயிகளுக்குக் கட்டுப்படி ஆகாதுதான். இருந்தாலும் ஏதோவொரு வகையில் அவர்களுக்கு உதவும் என்று நம்பறேன்’ என்று சொன்னார். சந்திப்புக்கு இரண்டு நிமிடங்கள் நேரமே ஒதுக்கியவர், 22 நிமிடங்கள் எங்களுடன் பேசினார். மிகவும் மகிழ்ச்சியான சந்திப்பாக அது இருந்தது. தமிழக அரசும் நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கினால் நெல் விவசாயிகளுக்குப் பயன் தருவதாக இருக்கும்” என்றார்.