மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு : சொட்டு நீலத்தை வைத்து குரங்குகளை விரட்டலாம்!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

‘‘அப்படி என்னவாம் அந்த நிகழ்ச்சியில விசேஷம்...’’ என்று கேட்டார் ஏகாம்பரம்.

ர்ச் சாவடியில் ஆடுபுலி ஆட்டத்தில் முனைப்பாக இருந்தார்கள் வாத்தியார் வெள்ளைச்சாமியும், ஏரோட்டி ஏகாம்பரமும். அப்போது அங்கு வந்த ஏரோட்டியின் நண்பர்கள் இருவரும் ஆட்டத்தை கவனிக்கத் தொடங்கினர். ஆட்டத்தில் கவனமாக இருந்த வாத்தியாரைப் பார்த்து,

“பட்டணத்துலல்லாம் வீட்டுல இருந்தே வேலை பார்க்கச் சொல்லிட்டாங்களாம். என் தம்பி பையன் போன் பண்ணும்போது சொன்னான் வாத்தியாரே... நமக்கும் அப்படியிருந்தா எப்படியிருக்கும்’’ என்று மாநாட்டைத் தொடங்கி வைத்தார் ஏரோட்டி ஏகாம்பரம்.

‘‘அது ஒண்ணுமில்லைய்யா... கொரோனா வைரஸ் பயத்துல உலகமே உதறலெடுத்துத் திரியுது. பல நாடுகள் தேசியப் பேரிடரா அறிவிச்சிருக்கு. அதனால ஆட்கள் கூட்டம் கூடுறதைக் குறைச்சுக்கச் சொல்லி அரசாங்கம் சொல்லுது. பல கம்பெனிகள்ல ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’னு சொல்லி வீட்டுல இருந்தே வேலை பார்க்கச் சொல்லிட்டாங்க. கம்ப்யூட்டரை அடிப்படையாவெச்சு செய்யுற வேலைகளை வீட்டுல இருந்தும் செய்யலாம். ஆனா, நமக்கு வயலே வீடுதானேய்யா... அப்படிப் பார்த்தா நாம எப்பவுமே வொர்க் ஃப்ரம் ஹோம்தான்’’ என்றார் வாத்தியார்.

ஒருவழியாக ஆட்டத்தை முடித்துவிட்டு இருவரும் நடையைக் கட்டினார்கள். பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்த கண்ணம்மாவும் இவர்களுடன் இணைந்துகொள்ள, மூன்று பேரும் பேசிக்கொண்டே நடந்தார்கள்.

‘‘திண்டுக்கல்ல முதலமைச்சர் மருத்துவக் கல்லூரிக்கு அண்மையில அடிக்கல் நாட்டின நிகழ்ச்சியைப் பத்தித்தான் அந்தம்மா என்கிட்ட அம்புட்டு நேரம் பேசிக்கிட்டு இருந்தாங்க’’ என்றார் கண்ணம்மா.

முதல்வர் நிகழ்ச்சியில் செயற்கைக் கரும்பு வயல், வாழைத்தோட்டம்
முதல்வர் நிகழ்ச்சியில் செயற்கைக் கரும்பு வயல், வாழைத்தோட்டம்

‘‘அப்படி என்னவாம் அந்த நிகழ்ச்சியில விசேஷம்...’’ என்று கேட்டார் ஏகாம்பரம்.

“அது ஒண்ணுமில்லைய்யா... முதலமைச்சருக்கு விவசாயி வேஷத்துல கட்அவுட் வெக்கிறதுதானே இப்போ ஃபேஷன். ஆனா, திண்டுக்கல்காரங்க அதையெல்லாம் தாண்டிப் போயிட்டாங்களாம். அரங்கு நுழைவாயில்ல செயற்கையா வாழைத்தோட்டம், கரும்பு வயல், நெல் வயலை உருவாக்கி அசத்திட்டாங்களாம்’’ என்றார் கண்ணம்மா.

‘‘ஆமா கண்ணம்மா... நானும் கேள்விப்பட்டேன். எளிமையான முதலமைச்சர்னு வெளியிலதான் சொல்லிக்கிறாங்க. அந்த வயலை உருவாக்கவே பல லட்சம் ரூபாய் செலவாச்சாம். நாலு மணி நேரத்துக்காக ஆயிரக்கணக்கான கரும்பு, வாழைகளை வீணாக்கிட்டாங்களாம். எல்லா அரசியல் வியாதிகளும் ஒரே மாதிரிதான் இருக்காங்க’’ என்று வேதனையுடன் சொன்னார் வாத்தியார்.

‘‘போன தடவை நீங்க சொன்ன சேதி ரொம்ப உபயோகமா இருந்துச்சு வாத்தியாரே... இந்தத் தடவை அப்படி ஏதாவது புதுச் செய்தி வெச்சிருக்கீங்களா?’’ என்று கேட்டார் ஏகாம்பரம்.

“கன்னியாகுமரி மாவட்டத்துல மரவள்ளி விவசாயிகளுக்கு குரங்குகள் ரொம்பத் தொல்லைக் கொடுக்குதாம். செடியை உடைச்சுப் போடுறது, கிழங்குகளைப் பிடுங்கிட்டுப் போறதுனு ஒரே தொல்லையாம். குரங்குகளைச் சமாளிக்க அவங்களும் என்னென்னமோ செஞ்சு பார்த்தும் ஒண்ணும் நடக்கலை. இப்போ புதுசா ஒரு டெக்னிக் கண்டுபிடிச்சிருக்காங்களாம். அதாவது, மரவள்ளிச் செடிக்குப் பக்கத்துல வாட்டர் கேன்ல தண்ணியை ஊத்தி, அதுல துணிக்குப் போடுற சொட்டு நீலத்தைக் கலந்து வெச்சிடுறாங்களாம். வயலுக்குள்ள வர்ற குரங்குகள் நீல நிறத்துல இருக்கிற வாட்டர் கேனைப் பார்த்ததும், `நம்மைக் கொல்லுறதுக்கு மனுஷப் பயலுக விஷம்வெச்சிருக்காங்க’னு நினைச்சுக்கிட்டு தலைதெறிக்க ஓடுதுங்களாம். அதனால, இப்போ பிரச்னையில்லாம இருக்காங்களாம் மரவள்ளி விவசாயிங்க’’ என்றார் வாத்தியார்.

“ `இந்த வருஷம் மழைக்காலத்துல மரக்கன்று நடணும். அதுக்குக் கன்றுகளை உற்பத்தி பண்ணிக்கொடு’னு பஞ்சாயத்துத் தலைவர் கேட்டிருக்காரு வாத்தியாரே... என்னென்ன கன்றுகளை உருவாக்கலாம்’’ என்று கேட்டார் ஏகாம்பரம்.

‘‘மரம் நடுறது நல்ல விஷயம்தான். ஆனா, நம்ம ஊர்ல நட்டுட்டு, போட்டோ எடுத்துப் பேப்பர்ல போட்டுட்டு போயிட்டே இருக்காங்களே... இதுவரைக்கும் இந்த அரசியல் வியாதிகள் நட்ட மரங்களை முறையா தண்ணி ஊத்தி பராமரிச்சிருந்தா தமிழ்நாடே வனமா மாறியிருக்கணுமே... இதெல்லாம் சும்மா மக்களை ஏமாத்துற நாடகம். ஒரு சில அமைப்புகள், சில தன்னார்வலர்கள் தவிர இந்த அரசியல்வாதிகள் `மரம் நடுறேன்’னு சொன்னா நம்பாதீங்க. `செடியை நட்டுட்டு, அதுக்கு முறையா தண்ணி ஊத்திப் பராமரிக்க ஏற்பாடு பண்ணுவீங்களா...’னு கேளுங்க. ஓடியே போயிடுவாங்கய்யா’’ என்றார் வாத்தியார்.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

“உண்மைதான் வாத்தியாரே... போன வருஷம் எங்க ஊர்ல சாலையோரம் மரம் நடுறோம்னு நட்டாங்க. அதுக்குப் பிறகு யாரும் கண்டுக்கவேயில்லை. எல்லாம் காய்ஞ்சுபோச்சு. அதுக காயறதைப் பார்க்கும்போது மனசுக்கு கஷ்டமா இருக்கு’’ என்றார் கண்ணம்மா.

“இந்த கொரோனா வந்ததும் நொந்து நூடுல்ஸ் ஆகிட்டாங்க கோழிப்பண்ணைக்காரங்க. `கோழிக்கறி சாப்பிடுறதாலதான் கொரோனா வருது’னு யாரோ கிளப்பிவிட்டுட்டாங்க. ஆனா, அது நிரூபிக்கப்படலை. அதனால கொரோனா வராதுன்னு கால்நடைத்துறை விஞ்ஞானிகளும் அறிக்கை கொடுத்துட்டாங்க. ஆனாலும், பயத்துல அந்தப் பக்கம் போகவே மக்கள் பயப்படுறாங்க. அதனால பெரும் நஷ்டத்துல இருக்காங்க பண்ணைக்காரங்க’’ என்றார் ஏரோட்டி.

“உண்மைதான்யா... பாவம். அதேபோல கொரோனா பாதிப்புனால வணிக நிறுவனங்கள் பேங்க்குல வாங்கின கடனை திருப்பிக் கட்டுறதுக்கு ஆறு மாசம் அவகாசம் கொடுக்கணும்னு அரசாங்கத்துகிட்ட கேக்குறாங்க. அதே மாதிரி, வேளாண் கடனை அடைக்கவும் ஆறு மாசம் அவகாசம் வேணும்னு கோரிக்கை வெச்சிருக்காங்க விவசாயிகள். அரசாங்கம்தான் நல்ல முடிவு எடுக்கணும்’’ என்ற வாத்தியார், அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தார். அத்தோடு முடிந்தது அன்றைய மாநாடு.

இயற்கை விவசாய மாநிலமாகும் பீகார்!

கொரோனா வைரஸ் காரணமாக உலகச் சந்தையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்திய வேளாண்மை மற்றும் விளைபொருள்களுக்கான சந்தை ஆகியவற்றில் தன்னிறைவு அடைவதற்காக இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கத் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு. அதே நேரம், பீகார் மாநில அரசு இயற்கை விவசாயத்தை நோக்கி அடியெடுத்துவைக்கிறது. இயற்கை விவசாய மாநிலமாக மாற்றும் முயற்சியில் முதற்கட்டமாக இயற்கை விவசாயத்துக்காக ரூ.155 கோடி ஒதுக்கியிருக்கிறது பீகார் மாநில அரசு.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள பீகார் மாநில வேளாண்மைத்துறை அமைச்சர் பிரேம்குமார், “இந்த நிதியில் முதற்கட்டமாக 13 மாவட்டங்களை முழுமையாக இயற்கை விவசாயத்துக்கு மாற்ற பீகார் வேளாண்துறை முடிவெடுத்துள்ளது. பக்ஸர் (Buxar) முதல் பாகல்பூர் மாவட்டம்வரை கங்கையின் இருபுறமும் ‘ஆர்கானிக் காரிடார்’ உருவாக்கப்பட்டு வருகிறது. 2020–21-ம் ஆண்டில் 21,000 ஏக்கர் நிலங்களை இயற்கை விவசாயத்துக்கு மாற்றி, அதற்கான சான்றிதழ் வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

மேலும், மாநில அரசின் அறிக்கையின்படி, 23 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட தோட்டக்கலை தயாரிப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு நேரடியாகச் சந்தைப்படுத்தக்கூடிய வகையில் மதிப்புக்கூட்டுதல், விற்பனை என உற்பத்தியின் செயலாக்க அமைப்பை நிறுவுவதற்கு விவசாயிகளுக்கு 90 சதவிகிதம் மானியம் (ரூ.10 லட்சம் வரை) வழங்கப்படும். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க அரசு உறுதி கொடுக்கிறது.

இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பாகல்பூர் வேளாண் அலுவலகத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய ஆலோசகர்களுக்குப் பயிற்சியளிக்கப்படும். மேலும், இயற்கை முறை விவசாயத்துக்கான மானியம் அரசாங்கத்தால் வழங்கப்படும். ஏக்கருக்கு ரூ.11,500 வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுல்தான்கஞ்ச் மற்றும் நாத்னகர் பகுதியைச் சேர்ந்த சுமார் 365 விவசாயிகள் மற்றும் அந்தந்தப் பஞ்சாயத்துகளின் உழவர் ஆலோசகர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்பார்கள்” என்கிறார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பயிற்சி, கருத்தரங்கு தொடர்பான தகவல்கள் வெளியாகும் `தண்டோரா’ பகுதி இந்த இதழில் இடம்பெறவில்லை.