மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு : குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள்!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

இந்த நேரத்துல பெரிய பெரிய கம்பெனிங்க, பிரதமர் நிதிக்குக் கோடிக்கணக்குல பணத்தைக் கொடுக்குறாங்க.

ண் பாதையில் புழுதி பறந்துகொண்டிருந்தது. ``ஊரடங்கு உத்தரவால எல்லாரும் வீட்டுக்குள்ள இருக்கும்போது, யாரு வண்டியோட்டிட்டுப் போறது...” என்று நினைத்தபடியே சைக்கிளை வேகமாக மிதித்தார் வாத்தியார் வெள்ளைச்சாமி.

சற்று நேரத்தில் முன்னே சென்ற மாட்டு வண்டியின் வேகம் குறையவும், அருகே சென்று சைக்கிளை நிறுத்தினார் வாத்தியார். அவரைப் பார்த்து வண்டியும் நின்றது. வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த ஏரோட்டி ஏகாம்பரமும், வண்டி மேலே அமர்ந்திருந்த காய்கறி கண்ணம்மாவும் வாத்தியாரைப் பார்த்துச் சிநேகமாகச் சிரித்தார்கள்.

‘‘அட ஏகாம்பரம்... நம்ம கண்ணம்மா. நீங்கதானா... ஊர்ல இருக்கறவங்கல்லாம் வீட்டுல இருக்கும்போது நீங்க மட்டும் எங்க போயிட்டு வர்றீங்க...’’ என்று விசாரித்தார் வாத்தியார்.

“என்ன செய்யறது வாத்தியாரே... சம்சாரி பொழப்பு சாகுற பொழப்பால்ல இருக்கு... வெயில், மழை, வெள்ளம்னு எது வந்தாலும் முதல்ல பாதிக்குறது எங்களைத்தானே... இப்போ இந்த கொரோனா வந்ததுல ரொம்ப பாதிப்பு என்னை மாதிரி விவசாயிகளுக்குத்தான். விளைஞ்சதை அறுக்க ஆள் கிடைக்கலை. பல இடங்கள்ல மார்க்கெட்டும் இல்லை. என்ன பண்றதுன்னே தெரியலை. எங்க வீட்டு ஆளுங்களே சேர்ந்து நெல் அறுத்து, அடிச்சோம். ஆனா, ஒரு வயலுக்கு மேல அறுக்க முடியலை. களத்துல காய்ஞ்சுக்கிட்டு இருந்த நெல்லை வீட்டுக்குக் கொண்டுவரக்கூட வண்டிக கிடைக்கலை. அதனாலதான் மாட்டு வண்டியில வீட்டுக்கு எடுத்துட்டுப் போறேன்’’ எனப் புலம்பினார் ஏரோட்டி.

“நானும் வயல்ல காய்கறிகளைப் பறிச்சுட்டு நடந்து வந்துக்கிட்டு இருந்தேன்... இவர் வரவும் வண்டியில ஏறிக்கிட்டேன். மொத்தமா வாங்குற கடைகள் இல்லாததால இப்போ ஊர்ல நான் கொண்டு்போற காய்களுக்கு ரொம்ப கிராக்கி’’ என்றார் கண்ணம்மா.

“நீ சொல்றது உண்மைதான்யா... ஆனா, நெல் அறுக்குற மெஷின் வேளாண் பொறியியல்துறையில வாடகைக்குக் கொடுக்குறாங்களே... இந்த நேரத்துல விவசாயிகள் பயன்படுத்திக்கோங்கனு கூப்பிட்டுட்டு இருக்காங்கய்யா’’ என்றார் வாத்தியார்.

“என்னய்யா சொல்றீங்க... ஊரடங்கு உத்தரவால தனியாரே வர்றதுக்கு யோசிக்கிறாங்க... இதுல கவர்ன்மென்ட் ஆளுங்க வர்றாங்களாக்கும்’’ என்று நக்கலாகச் சிரித்தார் ஏரோட்டி.

“இந்த நேரத்துலதான் விவசாயிகளுக்கு உதவணும்னு வேளாண் பொறியியல்துறை வேலை செய்யத் தயாரா இருக்கு. இது சம்பந்தமா நம்ம நீர் மேலாண்மை வல்லுநர் பிரிட்டோ ராஜ் சொன்னாரு. நான் பண்ணைக்குட்டை சம்பந்தமா அவர்கிட்ட ஆலோசனை கேட்கறதுக்காகப் போன் பண்ணினேன். அப்போதான் இந்தத் தகவல்களைச் சொன்னார். அவர் சொன்ன பிறகுதான் இவ்வளவு செளகரியம் இருக்கானு எனக்கே ஆச்சர்யமாகிப் போச்சு’’ என்றார் வாத்தியார்.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

“அப்படி என்ன சொன்னாரு வாத்தியாரே... விளக்கமாத்தான் சொல்லுங்களேன்’’ என்றார் கண்ணம்மா. “சொல்றேன். கேட்டுக்கங்க... வேளாண் பொறியியல்துறை ஒவ்வொரு மாவட்டத்துலயும் இருக்கு. அங்கே நெல் அறுவடை செய்யற மெஷின், டிராக்டர், புல்டோசர், குழியெடுக்குற மெஷின், ரோட்டவேட்டர்னு எல்லாக் கருவிகளையும் வாடகைக்குக் கொடுக்குறாங்க. அதுவும் குறைஞ்ச வாடகையில. தனியார் டிராக்டர் உழவுக்கு ஒரு மணி நேரத்துக்கு 750 ரூபாய் வாங்குறாங்க. ஆனா, வேளாண் பொறியியல் துறையில ஒரு மணி நேரத்துக்கு 350 ரூபாய்தான். நெல் அறுவடை எந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு 2,000 ரூபாயிலிருந்து 3,400 ரூபாய் வரைக்கும் கேக்குறாங்க. ஆனா, கவர்மென்ட் மெஷினுக்கு டயர் இருக்கிற மெஷினா இருந்தா 1,150 ரூபாய், செயின் வீல் இருக்கிற மெஷினா இருந்தா 1,350 ரூபாய்தான் வாடகை. இந்த மாசம் செய்ய வேண்டிய கோடை உழவுக்குக்கூட இதைப் பயன்படுத்திக்கலாம்’’ என்றார் வாத்தியார்.

“இது நல்லா இருக்கே... மெஷின் வாடகைக்கு வேணும்னா யார்கிட்ட கேக்கணும்?’’ வெள்ளந்தியாகக் கேட்டார் ஏரோட்டி. “அந்தந்த மாவட்டத்துல இருக்கும் வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளருக்கு விண்ணப்பம் கொடுக்கணும். விண்ணப்பத்தை வெச்சு, முன்னுரிமை அடிப்படையில மெஷினை வாடகைக்கு அனுப்புவாங்க. நாம எப்போ அறுவடை செய்வோம்னு முன்னாடியே திட்டமிட்டு, பதிவு செஞ்சுக்கலாம். இந்த நேரத்துல விவசாயிகள் கஷ்டப்படக் கூடாதுன்னு அவங்க வேலை பார்த்துட்டுத்தான் இருக்காங்க. நாமதான் பயன்படுத்திக்கணும்’’ என்றார் வாத்தியார்.

‘‘தனியார் டிராக்டர் உழவுக்கு ஒரு மணி நேரத்துக்கு 750 ரூபாய் வாங்குறாங்க. ஆனா, வேளாண் பொறியியல்துறையில ஒரு மணி நேரத்துக்கு 350 ரூபாய்தான்.’’

“இந்த நேரத்துல பெரிய பெரிய கம்பெனிங்க, பிரதமர் நிதிக்குக் கோடிக்கணக்குல பணத்தைக் கொடுக்குறாங்க. விவசாயிகளுக்கும் யாராவது உதவி செஞ்சா நல்லாயிருக்கும்’’ என்றார் ஏரோட்டி. “செய்யாம இல்லை. டாபே டிராக்டர் கம்பெனி சிறு, குறு விவசாயிகளுக்கு மூணு மாசத்துக்கு உழவு, மத்த வேலைகளுக்கு டிராக்டரைக் கொடுக்குது. அதுக்கு வாடகை இல்லை. இலவசம். தமிழ்நாட்டுல எல்லா மாவட்ட விவசாயிகளும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக்கலாம்னு அந்த நிறுவனத்தோட தலைவர் மல்லிகா ஶ்ரீனிவாசன் அறிவிச்சிருக்காங்க. இதுக்காக 4,400 டிராக்டர்கள், 10,500 வேளாண் கருவிகளை அந்த கம்பெனி ஒதுக்கியிருக்குதாம்’’ என்றார் வாத்தியார்.

“பரவாயில்லையே... உண்மையிலயே அந்த கம்பெனியைப் பாராட்டணும். ஆமா, அந்த டிராக்டர் வேணும்னா யாரைத் தொடர்பு கொள்ளணும்’’ என்று கேட்டார் ஏகாம்பரம். “பிரதமரின் கிசான் திட்டத்தில் பயன்பெறும் சிறு, குறு விவசாயிகள் இதில் பயன்பெறலாம். அந்தந்த மாவட்ட வேளாண் இணை இயக்குநர், வட்டார வேளாண் அலுவர்களை அணுகலாம். அவங்க தேவையான உதவியைச் செய்வாங்க’’ என்ற வாத்தியார் தொடர்ந்து, ``அதேபோல `சீக்கிரம் அழுகிப்போகும் விளை பொருள்களை 180 நாள்கள் வரைக்கும் அரசு குளிர்சாதன சேமிப்புக் கிடங்குகள்ல சேமிச்சு வைக்கலாம். 30 நாளுக்கான வாடகைப் பணம் கொடுக்கத் தேவையில்லை’ன்னும் தமிழ்நாடு அரசு அறிவிச்சிருக்கு. இதையெல்லாம் பயன்படுத்திக்கணும்’’ என்றார்.

“கொரோனா உலகத்தையே ஆட்டி வெச்சிருச்சே வாத்தியாரே... இன்னும் எத்தனை நாளைக்கு ஊரடங்குன்னு தெரியலை. இதுல ஒரு சந்தோஷம், மனுசங்களை மட்டும்தான் அது தாக்குமாம். அந்த வகையில ஆடு, மாடுகளைத் தாக்காதுன்னு சொல்றாங்க. அதுதான் சந்தோஷமா இருக்கு’’ என்றார் கண்ணம்மா.

“அப்படித்தான் நிலைமை இருந்துச்சு கண்ணம்மா. ஆனா, அமெரிக்காவுல ஒரு புலியை கொரோனா தாக்கிடுச்சு. அதுனால, விலங்குகளையும் தாக்காதுன்னு சொல்ல முடியாது’’ என்ற வாத்தியார், “முதல்ல நாம ஜாக்கிரதையா இருக்கணும். இப்போக்கூட முகக்கவசம் இல்லாம வெளியே சுத்துறோம்.

இது ரொம்பத் தப்பு. உடனே வீட்டுக்குப் போங்க. கை கால்களைச் சோப்பு போட்டுக் கழுவுங்க. வெளியே போகும்போது முகக்கவசம் இல்லாம போகாதீங்க’’ என்றார்.

‘‘சரிங்க வாத்தியாரே... நாங்க கிளம்புறோம். நீங்களும் பத்திரமா வீடு போய்ச் சேருங்க’’ என்றபடி ஏரோட்டி மாடுகளை உசுப்ப, புழுதியைக் கிளப்பிக்கொண்டு கிளம்பியது வண்டி. அத்துடன் முடிவுக்கு வந்தது மாநாடு.

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பயிற்சி, கருத்தரங்கு தொடர்பான தகவல்கள் வெளியாகும் `தண்டோரா’ மற்றும் வேளாண் விளைபொருள்களை வாங்கவும் விற்கவும் வழிகாட்டும் ‘பசுமை சந்தை’ ஆகிய பகுதிகள் இந்த இதழில் இடம்பெறவில்லை.