மரத்தடி மாநாடு : காய்கறிச் சாகுபடிக்கு ரூ. 2,500 மானியம்! - வேளாண் துறையில் லஞ்ச வேட்டை!

இது நம்புற மாதிரி இல்லையே... உயர் அதிகாரிக பணம் கேட்கலைன்னு சொன்னா, வேற யார் கேட்பாங்க. அவங்க இல்லைன்னா, அவங்களுக்குக் கீழே இருக்க அதிகாரிங்க கேட்டிருப்பாங்க.
மதிய நேரத்தில் வெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. வீட்டுக்குப் பின்பக்கம் தேங்காய் உரித்துக்கொண்டிருந்தார் ஏரோட்டி ஏகாம்பரம்.
வழக்கமாக அங்கு வந்து, மாட்டுச் சாணத்தைச் சேகரித்து வறட்டி தட்டும் கண்ணம்மா, அவரது வேலையில் கவனமாக இருந்தார். அப்போது அங்கு வந்த வாத்தியார் வெள்ளைச்சாமி, “இந்த வேலையெல்லாம் காலையிலேயே செய்ய வேண்டியதுதானே ஏகாம்பரம். இந்த வெயில்ல செஞ்சுகிட்டு இருக்க’’ என்றபடி, தனது குடையைத் தாழ்த்தி, ஏகாம்பரத்தின் மீது வெயில்படாமல் செய்தார்.
“வாங்க வாத்தியாரே... உங்க கண்ணுக்கு ஏகாம்பரம் மட்டும்தான் தெரியுதா? இங்க ஒரு மனுசி இருக்கறது தெரியலையாக்கும்?’’ நக்கலாகக் கேட்டார் காய்கறி கண்ணம்மா. “அடடே கண்ணம்மா, நீயும் இங்கதான் இருக்கியா? நல்லதாப் போச்சு. உங்க ரெண்டு பேர்கிட்டயும் ஒரு விஷயத்தைச் சொல்லணும்னு நினைச்சேன். அதைச் சொல்லிடுறேன். வாங்க அப்படி உக்காந்து பேசலாம்’’ என்றபடி பக்கத்தில் இருந்த மரத்தடியில் போய் அமர்ந்தார். அவர்கள் இருவரும் கைகளைக் கழுவிக்கொண்டு வந்து அமர மாநாடு தொடங்கியது.

“என்னமோ சொல்லணும்னு சொன்னீங்க... அதைச் சொல்லுங்க வாத்தியாரே?’’ பேச்சை ஆரம்பித்தார் ஏரோட்டி. “ ‘காய்கறிப் பயிர்கள் உள்ளிட்ட தோட்டக்கலைத்துறைப் பயிர்களைச் சாகுபடி செய்யுற விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 2,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்’னு தமிழக அரசு அறிவிச்சிருக்கு. நீங்க ரெண்டு பேரும் காய்கறிச் சாகுபடி செய்ற விவசாயிங்க தான. அதனாலதான் உங்ககிட்ட சொல்லணும்னு தோணுச்சு’’ என்றார் வாத்தியார்.
“அட பரவாயில்லையே... இது யானைப்பசிக்குச் சோளப்பொறின்னாலும், இந்த நேரத்துல உதவியா இருக்கும்’’ மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஏகாம்பரம். ‘‘இதை எப்படி வாங்குறது, யார் கொடுப்பாங்க?’’ தனது சந்தேகத்தைக் கேட்டார் கண்ணம்மா.
“இந்த ஊக்கத்தொகையை வாங்க, முதல்ல பதிவு செய்யணும். இதுக்கு உழவன் செயலிக்கு போய் அதுல கேக்குற விவரங்களைப் பதிவு செஞ்சா, உங்களுக்கான ஊக்கத்தொகை வந்து சேர்ந்திடும்னு தமிழ்நாடு வேளாண்மைத்துறையில சொல்றாங்க’’ என்றார் வாத்தியார்.
“வேளாண்மைத்துறைன்னு சொன்னதும்தான் ஞாபகத்துக்கு வருது. போன வாரம் வீட்டுக்கு வந்த எங்க அக்கா ஒரே புலம்பல். அவங்க வீட்டுக்காரர் அக்ரி ஆபீசராத்தான இருக்குறாரு. அவருக்கு இப்ப பதவி உயர்வு வரணுமாம். ஆனா, போடமாட்றாங்களாம். அதுக்கு இத்தனை லட்சம் கொடு, அத்தனை லட்சம் கொடுன்னு பிடுங்குறாங்களாம். அவங்க அவங்க, சர்வீஸ், தகுதி அடிப்படையில வர்ற பதவி உயர்வுக்குக்கூட லட்சக்கணக்குல கொடுக்கணும்னு கேக்குறது அநியாயம் இல்லையா? இப்படிக் காசு கொடுத்தாதான் பதவி உயர்வுன்னு சொன்னா... அதைக்கொடுத்துட்டுப் பதவி உயர்வை வாங்கிட்டு வர்ற அதிகாரி, கொடுத்த காசைச் சம்பாதிக்கத்தான பார்ப்பாங்க. பிறகு எதுக்கு இப்படியொரு துறை? அங்க இருக்க உயர் அதிகாரிகளே இப்படிச் செய்யலாமா?’’ ஆத்திர அனலடித்தது கண்ணம்மாவின் வார்த்தைகளில்.
“உன்னோட கோபம் நியாயம்தான் கண்ணம்மா. ஆனா, தமிழக வேளாண்துறை இயக்குநர், செயலாளர் ரெண்டு பேரும் கடமையை மதிக்குறவங்க. அவங்க யார்கிட்டயும் காசு, பணம் கேக்குறதில்லையாம். அவங்க ரெண்டு பேரும் அரசாங்கம் சொல்ற திட்டங்களைச் சிறப்பா செயல்படுத்திகிட்டு இருக்காங்க. பதவி உயர்வு விஷயத்துல செயலாளர் ரொம்பக் கறார் பேர்வழியாம். ஒருத்தருக்குத் தகுதி அடிப்படையில பதவி உயர்வு கிடைக்கத் தாமதம் ஆகக்கூடாதுன்னு சொல்வாராம். அந்த பைல் என்னாச்சுனு கேட்டுக் கேட்டு வாங்கி உரியவங்களுக்கு, உரிய பதவியை நியாயமான முறையில கொடுத்திடுவாராம். அதனால இயக்குநர், செயலாளர் ரெண்டு பேரும் அவங்க கடமையில நேர்மையா இருக்காங்க. யார்கிட்டயும் பணம் கேக்க மாட்டாங்கனு அக்ரி ஆளுங்க எல்லோருமே சொல்றாங்க’’ என்றார் வாத்தியார்.
“இது நம்புற மாதிரி இல்லையே... உயர் அதிகாரிக பணம் கேட்கலைன்னு சொன்னா, வேற யார் கேட்பாங்க. அவங்க இல்லைன்னா, அவங்களுக்குக் கீழே இருக்க அதிகாரிங்க கேட்டிருப்பாங்க. அப்ப, அந்த லஞ்ச அதிகாரிகளை இவங்க ரெண்டு பேரும் ஏன்னு கேக்கலாம்ல’’ எகத்தாளமாகக் கேட்டார் ஏகாம்பரம்.

“உன்னோட சந்தேகம் சரிதான். அவங்களுக்குக் கீழே இருக்க அதிகாரிகள் கேட்டா, அவங்க நடவடிக்கை எடுப்பாங்க. ஆனா, அவங்களுக்கு மேல இருக்கவங்க செஞ்சா, இவங்க என்ன செய்ய முடியும்? ஒரு காலத்துல வேலைக்குச் சேரும்போதுதான் லஞ்சம் கேட்பாங்க. இப்ப பதவி உயர்வுக்கு லஞ்சம். அப்படி லஞ்சம் கொடுத்தாலும் ஏதாவது ஒரு மூலையில தூக்கிப் போடுவாங்களாம். மறுபடியும் அங்கயிருந்து, எந்த ஊரு கேக்குறாங்களோ அதுக்குத் தனியா லஞ்சம் கொடுக்கணுமாம். 20 துணை இயக்குநர் பட்டியல் தயாராகிடுச்சு. ஆனால், ஏரிக்கரை கோயில்ல இருக்கச் சாமியோட அனுமதி கிடைக்காததால, இன்னும் அப்படியே இருக்காம். ஒருத்தருக்கு 3 முதல் 5 லட்சம் வரை லஞ்சமாம். இப்படித்தான் ஒவ்வொரு பதவி உயர்வுலயும் நடக்குதுன்னு விவசாயத்துறையில இருக்க அத்தனை பேரும் அலறிட்டு இருக்காங்க. இதைப் பத்தி முதலமைச்சர்கிட்டயே பல புகார்கள் போயிடுச்சாம். ஆனாலும் இன்னும் நடவடிக்கைதான் இல்லைனு புலம்புறாங்க’’ என்றார் வாத்தியார்.
“ ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’னு கவுண்டமணி சொல்ற மாதிரிதான் ஆகிப்போச்சு நம்ம நாட்டோட நிலைமை’’ என்றார் ஏரோட்டி. “அட விடுங்கய்யா... நம்ம நாட்டோட தலையெழுத்து அப்படி ஆகிப்போச்சு. இந்தக் கொரோனாவைவிட இந்த அரசியல் வியாதிங்கதான் ரொம்ப மோசமானவங்க போலிருக்கு’’ என்றார் கண்ணம்மா.
“கொரோனான்னு சொன்னதும்தான் ஞாபகத்துக்கு வருது. தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைங்கிற பேர்ல பணத்தைப் பிடுங்குறாங்க. அதுக்கு அரசாங்கமே அனுமதியும் கொடுத்திடுச்சு. ஆனா, சித்த மருத்துவச் சிகிச்சையில அதிக செலவு இல்லாம, இந்த நோயைக் குணப்படுத்த முடியும்னு சித்த மருத்துவர்கள் எல்லோரும் சொல்றாங்க. ஆனால், அரசாங்கம் அதைக் காதுக்கொடுத்துக்கூடக் கேக்கத் தயாரில்லை. ‘கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களை எந்த உயிரிழப்பும் இல்லாமல் சிறப்பாகக் குணப்படுத்துகிறார்’னு சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் வீரபாபுவைச் சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டிய பிறகுதான் அரசு, சித்த மருத்துவத்தையும் அதிகம் பயன்படுத்துது.
இது பயந்து அலறக்கூடிய நோய் இல்லை. அதே நேரம் சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினி மூலமா கைக்கழுவுறது மூணும் கட்டாயம் செய்யணும். அதையும் தாண்டிக் கொரோனா வந்தா, சித்த மருத்துவத்துல சரி பண்ண முடியும்னு செயல்ல நிரூபிச்சுகிட்டு இருக்காரு சித்த மருத்துவர் வீரபாபு’’ என்ற வாத்தியார், இன்னொரு செய்தியையும் சொன்னார். “புதுச்சேரி அரசு 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கு. அதுல நம்மாழ்வார் பேர்ல ‘நம்மாழ்வார் வேளாண் புத்தாக்க திட்டம்’னு ஒரு திட்டத்தை அறிவிச்சிருக்கார் புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி. ஏற்கெனவே இருந்த நேரடி சாகுபடி மானியத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் இதுல இணைய இருக்கு. மானியமும் கூடுதலா இருக்குமாம்” என்று சொல்லி முடித்து எழுந்திருக்கவும் முடிவுக்கு வந்தது மாநாடு.
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பயிற்சி, கருத்தரங்கு தொடர்பான தகவல்கள் வெளியாகும் `தண்டோரா’, வேளாண் விளைபொருள்களை வாங்கவும் விற்கவும் வழிகாட்டும் ‘பசுமை சந்தை’ ஆகிய பகுதிகள் இந்த இதழில் இடம்பெறவில்லை.