மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு : மாடுகளைத் தாக்கும் கழலை நோய் உஷார்!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

இந்தத் தடவை நான் ஒரு தகவல் சொல்றேன் கேளுங்க. இது நாட்டுக்கோழி வளக்குறவங்களுக்கான தகவல்.

யலில் மாடுகளுக்குத் தீவனம் அறுத்துக் கொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அப்போது அங்கு வந்த ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி, ‘‘என்னய்யா கடைவீதி பக்கம் ரெண்டு நாளா ஆளைக் காணோம். நான்கூட வெளியூர் எதுவும் போயிட்டியோனு நினைச்சேன்’’ என்றார்.

‘‘வானம் மப்பும் மந்தாரமுமா இருக்கு. திடீர்னு மழை பெய்யுது. கொஞ்ச நேரத்துல வெயில் அடிக்குது. அதனால மாடு கன்னுகளை விட்டுட்டு எங்கயும் நகர முடியல வாத்தியாரே’’ என்றார் ஏகாம்பரம். அந்த நேரத்தில் காய்கறி கண்ணம்மாவும் வந்து சேர, மாநாடு தொடங்கியது.

‘‘வாத்தியாரே மாட்டுக்குத் தோல்ல புண்ணு மாதிரி வந்திருக்கு. என்னன்னே தெரியல. சிலபேர் அது ஒருவகையான நோய்னு சொல்றாங்க. என்ன பண்றது வாத்தியாரே’’ எனப் புலம்பினார்.

‘‘மனுஷங்களுக்கு கொரோனா வந்த மாதிரி தமிழ்நாட்டுல இப்ப மாடுகளுக்கு ஒரு நோய் பரவிகிட்டு இருக்குதாம். ‘லம்பி ஸ்கின் டிசீஸ்’ (Lumpy Skin Disease)னு அதுக்குப் பேரு. இந்த நோய், மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்கள்ல பரவ ஆரம்பிச்சிருக்காம். இன்னும் பல மாவட்டங்கள்ல பரவ வாய்ப்பு இருக்குனு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சொல்லியிருக்குது. இதைத் தோல் கழலை நோய்னு சொல்றாங்க. இது அம்மை வகை நச்சுயிர்களால உருவாகுதாம்.

மாடு, மான், ஒட்டகச்சிவிங்கியையும் இந்த நோய் தாக்குமாம். இது சிதைந்த தோல்ல 33 நாள்கள், காய்ஞ்ச புண்கள்ல 35 நாள்கள், விந்தணுக்கள்ல 42 நாள்கள், உலர்த்திய மாட்டுத்தோல்ல 18 நாள்கள் உயிர் வாழுமாம். இது ஈ, கொசு மூலமா பரவுமாம்’’ என்றார் வாத்தியார்.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

தீவனம் அறுத்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு நிமிர்ந்த ஏகாம்பரம், “என்ன வாத்தியாரே குண்டு போடுறீங்க. மாடுகளை நோய் தாக்குதா? அந்த ஜீவன்களை வெச்சுதான் என்னைய மாதிரி ரொம்பப் பேர் கஞ்சி குடிச்சிகிட்டு இருக்காங்க. அதுக்கும் ஆப்பு ஆகிடும்போல இருக்கே’’ பதறினார்.

‘‘பதற்றப்படாதய்யா. சொல்றதை முழுசா கேளு. இந்த நோய் தாக்குன மாடுக தீவனம் எடுக்காது. காய்ச்சல் இருக்கும். கண்ணுல நீர் வடியும். மூக்குல சளி ஒழுகும். உடம்பு முழுக்கக் கட்டி மாதிரி கழலை உருவாகும். இதெல்லாம்தான் இந்த நோய்க்கான அறிகுறி’’ என்றார் வாத்தியார்.

‘‘நீங்க சொன்ன அறிகுறியெல்லாம் என் மாட்டுலயும் இருக்கு வாத்தியாரே. அதுக்கு என்ன வைத்தியம் செய்யணும்’’ கலக்கமாகக் கேட்டார் கண்ணம்மா.

‘‘திண்டுக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தோட தலைவர் விஜயராஜன், உதவிப் பேராசிரியர் தாஸ் பிரகாஷ் ரெண்டு பேரும் சில ஆலோசனைகளைச் சொல்லியிருக்காங்க. புதுசா மாடு வாங்குனா அதை உடனே பண்ணையில இருக்க மாடுகளோட சேர்க்காம 45 நாளைக்குத் தனிமைப்படுத்திக் கண்காணிக் கணுமாம். இது மாதிரி தொற்றுகளைத் தடுக்க வருஷம் ஒரு தடவை மாடுகளுக்கு நீத்லிங் தடுப்பூசியைப் போடணுமாம். கன்னுக் குட்டிகளுக்கு இதை 6 மாசத்துக்கு ஒருதடவை போடணுமாம். நோய் தாக்குன மாட்டோட உடம்புல மஞ்சளையும் வேப்பிலையையும் கலந்து தடவலாம். வேப்ப எண்ணெய்யையும் தடவலாம். ஈக்கள், கொசுக்களைக் கட்டுப் படுத்த தேவையான நடவடிக்கை எடுக் கணுமாம். காளை மாட்டுல இந்த நோய் இருந்தா 152 நாள்களுக்கு இயற்கை முறை கருவூட்டலுக்கோ, விந்தணு சேகரிப்புக்கோ பயன்படுத்தக் கூடாது. இந்த நோய் தாக்கி இறந்த மாடுகளைக் குழித்தோண்டு புதைச் சிடணுமாம்’’னு சொல்லியிருக்காங்க. இதுக்கெல்லாம் மேல, இந்த நோய் அறிகுறி இருந்தா கால்நடை மருத்துவர்கிட்ட மாடுகளைக் காட்டிடுறது நல்லது. நீயும் அதைச் செஞ்சிடு கண்ணம்மா’’ என்றார் வாத்தியார்.

‘‘சரிங்க வாத்தியாரே... நான் முதல்ல அதைச் செஞ்சிடுறேன்’’ என்றார் கண்ணம்மா.

‘‘எனக்கும் மாட்டாஸ்பத்திரியில ஒரு வேளை இருக்கு. ஆனா, போக முடியல. பக்கத்து நிலத்துல பிளாட் போட்டுட்டாங்க. அதுல என்னோட நிலத்துல கல்லு ஊனிட்டாங்க. அதனால சர்வே பண்ணி வேலி போட்டுடாலாம்னு பார்க்குறேன். தள்ளிப்போயிட்டே இருக்குது. சர்வேக்குப் பணம் கட்டிட்டேன். ஆனா இன்னும் சர்வேயர் வந்த பாடில்ல’’ நொந்துகொண்டார் ஏகாம்பரம்.

‘‘சாமியைக்கூடச் சட்னு பார்த்துடலாம்... ஆனா, இந்தச் சர்வேயரை அம்புட்டுச் சீக்கிரம் பார்க்க முடியுமா? அவங்களுக்குப் பிளாட் போடுற ரியல் எஸ்டேட்காரங்களுக்கு ஒத்தாசை செய்றதுக்கே நேரம் பத்தலையாம். சில சர்வேயர்ங்க அரசாங்கத்துல சம்பளம் வாங்கிட்டு, ரியல் எஸ்டேட்காரங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும்தான் வேலை பார்த்துட்டு இருக்காங்க’’ என்றார் கண்ணம்மா.

‘‘சரியா சொன்ன கண்ணம்மா. ஆனா, இனிமே அப்படிச் செய்ய முடியாது. அதுக்கும் ஆப்பு வெச்சிடுச்சு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. ‘சர்வேக்குப் பணம் கட்டி 30 நாளைக் குள்ள அளக்கணும். அப்படி அளக்க முடியாதுனு சொன்னா சர்வேயர் சம்பளத்துல 2,500 ரூபாய் பிடிக்கப்படும்’னு அதிரடி உத்தரவு போட்டுட்டாங்க நீதிபதிகள்’’ என்றார் வாத்தியார்.

‘‘சபாஷ். இப்ப சில நாளா அதிரடி தீர்ப்பு சொல்லி, தப்பு செய்றவங்களை விளாச ஆரம்பிச்சிட்டாங்க மதுரை கோர்ட் நீதிபதிங்க. குறிப்பா, விவசாயிகள் பிரச்னையில அக்கறையோடு தீர்ப்பு சொல்றாங்க’’ என்றார் ஏகாம்பரம்.

‘‘இந்தத் தடவை நான் ஒரு தகவல் சொல்றேன் கேளுங்க. இது நாட்டுக்கோழி வளக்குறவங்களுக்கான தகவல். பொதுவா 5 பெட்டைக்கோழிக்கு ஒரு சேவல் என்ற கணக்குலதான் நாட்டுக்கோழிகளை வளர்க் கணுமாம். பத்து பெட்டைக்கு ஒரு சேவல்னு வளர்க்கக் கூடாதாம். இந்த விகிதத்துல இருந்தா குஞ்சு பொரிப்புத் திறன் குறையுமாம்.

அதே மாதிரிக் கோழிகளை அடை வைக்கும்போது காலை நேரத்துல வைக்கக் கூடாதாம். அந்தி சாயுற நேரத்துலதான் வைக்கணுமாம். பகல் நேரத்துல அடை வெச்சா, அடிக்கடி எந்திருச்சு வெளியே போகும். அதனால போதுமான சூடு முட்டைக்குக் கிடைக்காதாம். ஆனா, அந்தி சாயுற நேரத்துல வைக்கும்போது ராத்திரி முழுக்க அடையிலயே உக்காந்து இருக்கும். ஒருநாள் அப்படி இருந்தாலே கோழிக்கு அது பழக்கமாயிடுமாம். பிறகு, அடிக்கடி வெளியே போகாதாம்’’ என்றார் கண்ணம்மா.

‘‘பாருடா... கருத்து கண்ணம்மா ஆகிட்ட’’ என்றார் ஏரோட்டி. ‘‘அட இது என்னோட கருத்து இல்லையா. கால்நடை பராமரிப்புத் துறை முன்னாள் இணை இயக்குநர் மருத்துவர் ஜெகத் நாராயணன் சொன்னதுன்னு வாட்ஸ் அப்ல வந்துச்சு’’ என்றார் கண்ணம்மா.

பேசிக்கொண்டே அறுத்த தீவனத்தைக் கட்டி, மாட்டு வண்டியைத் தயார் செய்து வைத்திருந்தார் ஏகாம்பரம். அனைவரும் வண்டியில் ஏற, கிராமத்தை நோக்கி மாட்டு வண்டி நகரவும் முடிவுக்கு வந்தது மாநாடு.